அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் முன்னோடி கவிஞர் எம். ஏ. நுஃமான் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் முன்னோடி கவிஞர் எம். ஏ. நுஃமான்

சமகால இலங்கைத் தமிழ்க் கவிதையில் இனத்துவ முரண்பாடுகளின் தாக்கம்| என்ற கட்டுரையை எம்.ஏ.நுஃமான் ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழில் எழுதியுள்ளார் (நவம்பர் 2012). அக்கட்டுரையில் அரசியல் எதிர்ப்புக் கவிதைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார், 

“இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அரசியல் எதிர்ப்புக் கவிதைகள் என்றொரு புதிய இலக்கியவகை 1977முதல் தோன்றி வளர்ந்தது. இக்கவிதை வகை 1950களில் எழுதப்பட்ட மொழித்தேசியவாதக் கவிதைகளின் பொருளிலும் வடிவத்திலும் இருந்து பெரிதும் வேறுபட்டது. 

1977இல் யாழ்ப்பாணத்தில் அரச காவலர்களால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு உடனடி எதிர்வினையாக ‘துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும், நேற்றைய மாலையும் இன்றைய காலையும்| என்னும் தலைப்புகளில் நான் இரண்டு கவிதைகள் எழுதினேன். நான் அறிந்தவரை இவைதான் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் 1970க்குப் பிந்திய இரண்டாம் கட்ட அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் முதல் வருகையாகும். முதல் கவிதை அடக்கு முறைக்கு எதிரான குரலையும் இரண்டாவது கவிதை வன்முறையின் அவலத்தையும் வெளிப்படுத்தின. உருவம், உள்ளடக்கம் என்பவற்றைப் பொறுத்தவரை கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் எழுதப்பட்ட மிகப் பெரும்பாலான போர்க்காலக் கவிதைகள் இவ்விரு கவிதைகளின் வெவ்வேறு வகைகள் என்றே சொல்ல வேண்டும். அக்கவிதைகள் இரண்டையும் நான் இங்கு தருகிறேன். 

 

துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும் 

நாளையக் கனவுகள் இன்று கலைந்தன 

நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன 

காக்கி உடையில் 

துப்பாக்கி அரக்கர் 

தாண்டவம் ஆடினர் 

ஒரு பெரும் நகரம் மரணம் அடைந்தது 

வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம் 

ஆயின் எமக்கோ  

மரணமே எமது வாழ்வாய் உள்ளது 

திருவிழாக் காணச் சென்றுகொண்டிருக்கையில் 

படம்பார்க்கச் செல்லும் பாதிவழியில்  

பஸ் நிலையத்தின் வாசலில் நிற்கையில்  

சந்தையில் இருந்து திரும்பி வருகையில் 

எங்களில் யாரும் 

சுடப்பட்டு இறக்கலாம் 

எங்களில் யாரும்  

அடிபட்டு விழலாம் 

உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே 

மனிதனின் விதியா? 

அடக்குமுறைக்கு அடிபணிவதே 

அரசியல் அறமா? 

அதை நாம் எதிர்ப்போம் 

தனிநாடு அல்ல எங்களின் தேவை 

மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள் 

மனிதனுக் குரிய கௌரவம் 

வாழ்க்கைக்கான உத்தரவாதம் 

யார் இதை எமக்கு மறுத்தல் கூடும்?  

மறுப்பவர் யாரும் எம்மெதிர் வருக 

காக்கி உடையில் 

துப்பாக்கி அரக்கர் 

தாண்டவம் ஆடுக 

போராடுவதே மனிதனின் விதியெனில் 

போராட்டத்தில் 

மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே 

நேற்றைய மாலையும் இன்றைய காலையும் 

நேற்று மாலை  

நாங்கள் இங்கிருந்தோம் 

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில் 

வாகன நெரிசலில் 

சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம் 

பூபால சிங்கம் புத்தக நிலைய 

முன்றலில் நின்றோம் 

பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம். 

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப் 

பார்த்தவாறிருந்தோம்.  

பலவித முகங்கள் 

பலவித நிறங்கள்,  

வந்தும் சென்றும்  

ஏறியும் இறங்கியும்  

அகல்வதைக் கண்டோம் 

சந்தைவரையும் நடந்து சென்றோம்  

திருவள்ளுவர் சிலையைக் கடந்து 

தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி 

பண்ணை வெளியிற்

காற்று வாங்கினோம் 

ஷறீகலின்| அருகே 

பெட்டிக் கடையில் 

தேநீர் அருந்தி - சிகரட்

புகைத்தோம் 

ஜாக் லண்டனின் 

ஷவனத்தின் அழைப்பு| 

திரைப்படம் பார்த்தோம் 

தலைமுடி கலைந்து

பறக்கும் காற்றில் 

சைக்கிளில் ஏறி 

வீடு திரும்பினோம் 

இன்று காலை 

இப்படி விடிந்தது.  

நாங்கள் நடந்த

நகரத் தெருக்களில் 

காக்கி உடையில் துவக்குகள்

திரிந்தன 

குண்டுகள் பொழிந்தன 

உடலைத் துளைத்து  

உயிரைக் குடித்தன. 

பஸ்நிலையம் மரணித் திருந்தது 

மனித வாடையை நகரம் இழந்தது  

கடைகள் எரிந்து புகைந்து கிடந்தது 

குண்டு விழுந்த கட்டடமாக 

பழைய சந்தை இடிந்து கிடந்தது 

வீதிகள் தோறும்  

டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன 

இவ்வாறாக 

இன்றைய வாழ்வை 

நாங்கள் இழந்தோம் 

இன்றைய மாலையை 

நாங்கள் இழந்தோம்”  

நுஃமான்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் ஆகஸ்ட் 10, 1944இல் மக்புல் ஆலிமுக்கும் சுலைஹா உம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார்.  

இவர் தனது தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தார். பின்னர் 15ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்றார் (1973). பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றார் (1982). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மூன்றாண்டுகள் மேற்கொண்டார். 

1976-1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1991இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்று பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார்(2001). இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டு பணிபுரிந்து (1988) இலக்கணநூல் ஒன்றை உருவாக்கினார். இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் (1999_-2000), மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007_-2008) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 

நுஃமான் தன் பதினாறம் வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர் 'நெஞ்சமே நெஞ்சுக்கு நேர்” என்ற ஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது. 

நுஃமான் நவீன தமிழ்க் கவிதையின் விமர்சன முன்னோடியாகவும் கருதப்படுகிறார். மார்க்ஸியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இவரது நூல் விமர்சன உலகில் அதிக கவனிப்பைப் பெற்றது. 

நுஃமான் 1969 – 1970இல் 'கவிஞன்” என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தியவர். 

பலஸ்தீனக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்து ஈழத்துக் கவிதைகளின் போக்கில் மாறுதலை ஏற்படுத்தியவர் நுஃமான. இந்த மொழிபெயர்ப்புக்கான காரணத்தை ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் பின்வருமாறு விளக்கியுள்ளார் 

 “1970களின் தொடக்கத்திலிருந்தே பலஸ்தீனக்கவிதைகளை அவ்வப்போது நான் மொழிபெயர்த்து வந்துள்ளேன. பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் எனக்கிருந்த ஈடுபாடு அதற்கொரு முக்கிய காரணம். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சிக்கும் அவர்களது இலக்கிய வெளிப்பாட்டுக்கும் இடையிலான உறவுபற்றிய எனது அக்கறை பிறிதொருகாரணம். 1970களின் இறுதியில் இருந்து ஈழத்தில் இன ஒடுக்குமுறை தீவிரமடைந்த சூழ்நிலையில் பலஸ்தீனக் கவிஞர்களின் உணர்வு நமக்கும் மிகவும் ஏற்புடையதாக அமைந்தமை பிறிதொரு காரணம்.

தமிழில் அரசியல் அல்லது எதிர்ப்புக் கவிதைகள் சரியான வடிவம் பெறாத அன்றைய சூழலில் பலஸ்தீனக்கவிதைகள் எமக்கு ஒரு ஆதர்சமாக அமையலாம் என்று நான் கருதினேன். இவற்றின் விளைவே எனது மொழிபெயர்ப்புக்கவிதைகள்.

1982இல் எனது பலஸ்தீனக்கவிதைகள் தொகுப்பு வெளிவந்தது. 9கவிஞர்களின் 30கவிதைகள் அதில் இடம் பெற்றன.”

(ஞானம் - 2000ஆகஸ்ட்;) 

யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது நுஃமான் எழுதிய கவிதை முக்கியமானது. 

புத்தரின் படுகொலை 

நேற்று என் கனவில் 

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். 

சிவில் உடை அணிந்த 

அரச காவலர் அவரைக் கொன்றனர். 

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே 

அவரது சடலம் குருதியில் கிடந்தது. 

இரவின் இருளில் 

அமைச்சர்கள் வந்தனர். 

‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை 

பின் ஏன் கொன்றீர்?’ 

என்று சினந்தனர். 

“இல்லை ஐயா, 

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை 

இவரைச் சுடாமல் 

ஓர் ஈயினைக் கூடச் 

சுடமுடியாது போயிற்று எம்மால் 

ஆகையினால்தான்..” 

என்றனர் அவர்கள். 

“சரி சரி 

உடனே மறையுங்கள் பிணத்தை” 

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். 

சிவில் உடையாளர் 

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். 

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் 

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் 

சிகாலோகவாத சூத்திரத்தினைக் 

கொழுத்தி எரித்தனர். 

புத்தரின் சடலம் அஸ்தியானது 

தம்ம பதமும்தான் சாம்பரானது. 

தாத்தாமார்களும் பேரர்களும், அழியா நிழல்கள், மழைநாட்கள் வரும் ஆகியன நுஃமானது கவிதைத் தொகுதிகள். இவர், மஹாகவி கவிதைகள், மஹாகவின் ஆறு காவியங்கள், ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியருமாவார். பாரதியின் மொழிச்சிந்தனைகள் - ஒரு மொழியியல் நோக்கு இவரது ஆய்வு நூல்.  எம்.ஏ.நுஃமான் அவர்கள் 2011ஆம் ஆண்டில் விளக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

Comments