ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வீட்டுத்தோட்டச் செய்கை | தினகரன் வாரமஞ்சரி

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வீட்டுத்தோட்டச் செய்கை

"எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடுமென எதிர்வுகூறப்படுகின்றது"

பொழுதுபோக்கு நடவடிக்கையாக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்தோட்டச் செய்கையானது, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், மரக்கறிகள், பழங்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் தனக்குக் கைகொடுத்து வருவதாக, வீட்டுத்தோட்டச் செய்கையாளர் ஹபீபா முகைதீன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பின் காத்தான்குடி 2ஆம் குறிச்சியைச் சேர்ந்த 57வயதுடைய ஹபீபா, கடந்த 5வருடங்களாக தனது வீட்டு மொட்டை மாடியில் வீட்டுத்தோட்டச் செய்கை மேற்கொள்கின்றார். அவர் பயன்தரும் மரக்கறிச் செடிகளையும் பழக்கன்றுகளையும் செய்கை பண்ணுவதோடு, அவற்றின் மூலம் பயனடைந்தும் வருகின்றார்.  

தனது வீட்டுத்தோட்டச் செய்கை பற்றியும் அதனால் தான் அடையும் நன்மை பற்றியும் தினகரன் வாரமஞ்சரி வாசகர்களோடு அவர் பகிர்ந்துகொள்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   எனது வீட்டுக் கடமைகளுக்கான நேரம் போக, எஞ்சும்; நேரத்தை ஏதாவதொரு வகையில் பிரயோசனமாக பயன்படுத்த வேண்டுமென்று எண்ணிய நிலையில், வீட்டுத்தோட்டச் செய்கையை ஆரம்பித்தேன். தற்போது அச்செய்கையின் மூலம் நான் மிகவும் பயனடைந்து வருகின்றேன் என்கின்றார் அவர்.  

எமது வீடானது, 50அடி நீளமும் 25அடி அகலமும் கொண்ட வளவினுள் அமைந்துள்ளதோடு, சிறுதுண்டு நிலம் கூட மண்ணுடன் இல்லை. இவ்வாறான நிலையில், எமது வீட்டு மொட்டை மாடியில் வீட்டுத்தோட்டச் செய்கை மேற்கொள்ள உத்தேசித்து, அதில் வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்கின்றேன்.  

வீட்டுத்தோட்டச் செய்கைக்காக பூச்சாடிகள், பிளாஸ்ரிக் பைகள், பிளாஸ்ரிக் பரல்களைப் பயன்படுத்துவதோடு, கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டி உள்ளிட்ட பல்வேறுபட்ட மரக்கறிச் செடிகளையும் மா, பலா, அன்னாசி, வாழை, மாதுளை உள்ளிட்ட பழக்கன்றுகளையும் நாட்டியுள்ளேன்.  

இச்செய்கைக்காக சாதாரணவகை மண்ணைப் பயன்படுத்துவதோடு, பசளையையும் இயற்கையான முறையில் தயாரித்து பயன்படுத்துகின்றேன்.  

அதாவது வீட்டில் நாளாந்தம் நாம் கழிக்கும் மரக்கறிக் கழிவுகள், பிழிந்த தேங்காய் பூ, தேங்காய் தும்பு, மரச் சருகுகள் ஆகியவற்றை சேகரித்து, அவற்றை மண்ணுடன் கலப்பதோடு, மாட்டெரு, ஆட்டெரு ஆகியற்றையும் அம்மண்ணுடன் கலந்து உக்க வைத்து இயற்கை முறையில் பசளை தயாரிக்கின்றேன்.  

இதேவேளை, பயிர்களை பூச்சி, புழுக்கள் அண்டாவண்ணம் அவற்றை பாதுகாப்பதற்காக இயற்கையான முறையில் கிருமிநாசினி தயாரிக்கின்றேன். அதாவது சவர்க்காரம், வேப்பெண்ணெய், பழஞ்சோறு, வெள்ளைப்பூடு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீரில் சுமார் ஒரு வாரத்துக்கு ஊற வைப்பேன். இதன் பின்னர் எல்லாம் சேர்ந்து ஊறிய அத்தண்ணீரை வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கின்றேன்.   நான் தினமும் அதிகாலையில் 4.00மணிக்கு எழுந்து, மத வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் காலை 6.00மணி முதல் 8.00மணிவரை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், மரக்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். அதன் பின்னர் எனது சமையல் உள்ளிட்ட வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு, மீண்டும் மாலை 4.00மணி முதல் 6.00மணிவரை பயிர்களுக்கு பசளை இடுதல், மண் இடுதல், தோட்டத்தை சுத்தம் செய்தல் போன்ற பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவேன்; என்கின்றார் அவர்.  

அத்தோடு, எனது வீட்டுத்தோட்டச் செய்கைக்கு எனது கணவரும் ஒத்தாசையாக இருந்து வருகின்றார் என்கின்றார் அவர்.  

எனது இயற்கையான வீட்டுத்தோட்டச் செய்கை மூலம் கிடைக்கும் மரக்கறிகளிலும் பழங்களிலும் போதியளவானவற்றை எமது உணவுத் தேவைக்கு எடுக்கின்றேன். எஞ்சியவற்றை அயலவர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்தளிப்பதோடு மாத்திரமின்றி, சந்தையிலும் விற்பனை செய்கின்றேன்.  

அத்தோடு, விதைகளை நாட்டி மரக்கறிச் செடிகளையும் உருவாக்கி விற்பனை செய்கின்றேன். இச்செய்கை மூலம் நான் பயனடையும் வகையில், ஓரளவு வருமானமும் கிடைக்கின்றது என்கின்றார் அவர்.  

தற்போது எமது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், வீட்டுத்தோட்டச் செய்கை ஊக்குவிக்கப்படுவது மிகவும் சிறந்ததேயாகும். ஏனெனில், நாம் இயற்கையோடு ஒன்றித்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கையால் நாம் நஞ்சற்ற மரக்கறிகளையும் பழங்களையும் உட்கொள்வதோடு, கொலஸ்ரோல், நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களை எதிர்க்கும் வல்லமையையும் பெற்றுக்கொள்கின்றோம்.  

அத்தோடு, இவ்வீட்டுத்தோட்டச் செய்கையானது, உண்மையில் ஓர் உடற்பயிற்சியாகவும் அமைவதோடு, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது. மகிழ்ச்சியைத் தருகின்றது. எப்போதும் எம்மை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றது. இதை நான் எனது அனுபவபூர்வமாக உணர்கின்றேன் என்கின்றார் அவர்.  

பசுமை நிறைந்த செடி, கொடிகளும் அவற்றின் பல்வேறுபட்ட வண்ணப் பூக்களும், காய்த்துக்குலுங்கும் மரக்கறிகளும் பழங்களும், நாம் அமைதியற்று இருக்கும் சந்தர்ப்பங்களில், மனதுக்கு அமைதியை தருகின்றன.  

அத்தோடு, எமது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஈடுசெய்யும் வகையிலும், பஞ்சம் எம்மை அண்டாத வகையிலும் வீட்டுத்தோட்டம் எமக்கு கைகொடுக்கும்.  

இவை மாத்திரமின்றி, தற்போதைய காலகட்டத்தில் செயற்கை உரத்தையும் கிருமிநாசினியையும் பயன்படுத்தி சந்தைப்படுத்தலை மையமாகக் கொண்டு அதிக இலாபத்துக்காக உற்பத்தி செய்யப்படும் நஞ்சு கலந்த மரக்கறிகளையும் பழங்களையும் நாம் உட்கொள்வதை விட, எமது வீட்டுத்தோட்டத்தில் இயற்கையாக நாம் மேற்கொள்ளும் பயிர்களின் மூலம் கிடைக்கும் மரக்கறிகளையும் பழங்களையும் உட்கொள்வது எமது தேக ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்ததாகும்.  

ஆகவே, பெண்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் வசிக்கும் வீட்டை அண்டிய சிறிய வளாகம் காணப்படும் பட்சத்திலோ அல்லது, வளாகம் இல்லாத பட்சத்திலுமோ உங்களால் வீட்டுத்தோட்டச் செய்கையை சிறிதளவிலாவது செய்ய முடியுமென்பதோடு, எமது நேரத்தையும் பிரயோசனமாக கழிக்க முடியுமென்பதைக் கூறுகின்றேன். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் அல்லது, ஏனைய வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் கூட, தங்களது வசிப்பிடத்தில் ஏதோவொரு வகையில் வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொண்டு பயனடைய முடியும்.   வீட்டுத்தோட்டச் செய்கையினால் எமது அவசர உணவுத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.   பெண்களாகிய நாம் ஒவ்வொருவரும் எம்மையும் எமது குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் பட்சத்தில், தானாகவே ஆரோக்கியமான சமுதாயம் கட்டியெழுப்படும் என்கின்றார் அவர்.  

கலாநிதி எஸ்.எம்.ஹூசைன்

தற்போது எமது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சிக்கல் காரணமாகவும் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவைத் தொடர்ந்து எதிர்பார்த்தளவு அறுவடை கிடைக்காமை காரணமாகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடுமென எதிர்வுகூறப்படுகின்றது. இந்நிலையில், இதன் தாக்கத்தை குறைக்கும் நோக்குடன் வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுவதாக, அம்மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.ஹூசைன் தெரிவித்துள்ளார்.  

'ஒன்றாக நடுவோம், நாட்டை வெல்வோம்' எனும் தொனிப்பொருளின் கீழ், உணவுப் பயிர் உற்பத்திக்கான தேசிய போராட்டம் -2022எனும் திட்டமானது, விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பயிரிடப்படக்கூடிய ஆனால், இதுவரையில்; பயிரிடப்படாத நிலங்களில் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதோடு, தத்தமது வீட்டுத்தோட்டங்களிலும்;; உச்சபட்சளவில் உணவுப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க ஊக்குவித்தல் எமது வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.  

குறுகியகால மற்றும் நீண்டகால குறிக்கோளுடனும் தொழில்நுட்பப் பங்களிப்புடனும் விவசாயச் சூழல் தொகுதிக்கு பொருத்தமான ஒரு விஞ்ஞான ரீதியான முன்னெடுப்பானது, கிராம அலுவலகர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில், நாடளாவிய அவசர வேலைத்திட்டமாக அரச மற்றும் அரசசார்புடைய, அரசசார்பற்ற அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் விவசாயத் திணைக்களம் முன்னெடுக்கின்றது. இதன் மூலம் உணவு மற்றும் போஷனை பாதுகாப்பை உறுதிசெய்வது எமது அடிப்படை நோக்கங்களில் மற்றுமொரு அம்சமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.  

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ், வீட்டுத்தோட்டச் செய்கையை முன்னெடுக்கின்ற 177இ403பேர் உள்ளனர்.  

இந்நிலையில், 'நிலைபேறான விவசாயக் கலாசாரம் மற்றும் சேதன விவசாயத்தை ஊக்குவித்தல்' எனும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதியுதவியுடன் இம்மாகாணத்தில் 11இ050பேர் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அம்பாறையில் 530கிராம அலுவலகர் பிரிவுகளில் 5,300பேரும், மட்டக்களப்பில் 345கிராம அலுவலகர் பிரிவுகளில் 3,450பேரும்;, திருகோணமலையில் 230கிராம அலுவலகர் பிரிவுகளில் 2,300பேரும் உள்ளனர்.   'பசுமை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ், சமுர்த்தி திட்டத்தினூடாக 165,473சமுர்த்திப் பயனாளிகள் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அம்பாறையில் 103,000பேரும், மட்டக்களப்பில் 44,473பேரும், திருகோணமலையில் 18,000பேரும் உள்ளனர்.  

உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் 'காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தினூடாக 880பேர் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அம்பாறையில் 260பேரும், மட்டக்களப்பில் 300பேரும், திருகோணமலையில் 320பேரும் உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.  

கிழக்கு மாகாணத்தில் பெருமளவான ஆண்கள் கடற்றொழிலிலும், வயல் விவசாயத்திலும் ஈடுபடுவதால், வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வம் காட்டுவது சற்றுக் குறைவாகவுள்ளது. ஆயினும், இம்மாகாணப் பெண்களை பொறுத்தவரையில், 90சதவீதமானோர் வீட்டுத்தோட்டச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.   வீட்டுத்தோட்டச் செய்கையின் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்பது எமது பிரதான நோக்கமாகக் காணப்படுவதால், இரசாயனப் பசளை பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, சேதனப்பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் எம்மால் அறிமுகப்படுத்தப்படுகின்றன.  

தமது வீடுகளில் அன்றாடம் கழிக்கும் உக்கக்கூடிய கழிவுகளை பயன்படுத்தி சேதனப்பசளை தயாரிப்பை ஊக்குவிக்கின்றோம். அத்தோடு, ஓரளவு இட வசதியுள்ளவர்களுக்கு, முறையாக கூட்டுப்பசளை தயாரிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதால், குவியல்முறை கூட்டுப்பசளை தயாரிப்பை சிபாரிசு செய்கின்றோம்.   

அதாவது, தாவரங்களினதும் விலங்குகளினதும்; கழிவுகளை பயன்படுத்தி, குவியல்முறை மூலம் கூட்டுப்பசளை தயாரிப்பை முன்னெடுக்க முடியும். முன்னர்; கூட்டுப்பசளை தயாரிப்புக்கு சுமார் 3மாதங்கள் பிடித்திருந்தாலும்;, தற்போது தொழில்நுட்ப வசதி காணப்படுவதால், சுமார் ஒன்றரை மாதங்களில் குவியல்முறை கூட்டுப்பசளை தயாரிப்பை மேற்கொள்ள முடியும்.  

தற்போது கூட்டுப்பசளை உக்கலை விரைவுபடுத்துவதற்காக, விவசாயத் திணைக்களங்கள் ஊடாக ஒவ்வொரு கமநல சேவைப் பிரிவுகளுக்கும் துண்டாக்கும் இயந்திரங்கள் (Chopper Machine) வழங்கப்பட்டுள்ளன. இவ்வியந்திரத்தை பயன்படுத்தி பாரிய இலைகள், தடிகள், விலங்குக் கழிவுகளை சிறுசிறு துகள்களாக்கி சுமார் ஒன்றரை மாதங்களில் கூட்டுப்பசளையை பயனாளிகள் தயாரிக்க முடியுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.  

பயிர்களில் பூச்சி, புழுக்களின் தாக்கம் காணப்படுவது இயல்பாயினும், ஆரோக்கியமான நாற்றுகளை பயிரிடுவதால், பூச்சி, புழுக்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.  

அத்தோடு, இயற்கைமுறை பீடைநாசினியை பயன்படுத்துமாறு பயனாளிகளுக்கு அறிவுறுத்துகின்றோம். பூச்சி, புழுக்களை விரட்டுவதற்காக வேப்பிலை, ஐந்திலை கரைத்தல், வெள்ளைப்பூடு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அதை தண்ணீரில் ஊறவைத்து, அதை வடிகட்டிய திரவத்தை பயிர்களுக்கு தெளிக்குமாறு அறிவுறுத்துகின்றோம்.  

ஒளிப் பொறிமுறையைப் பயன்படுத்தி பூச்சி, புழுக்களை கவர்ந்து, அவற்றை அழிக்க முடியுமென்பதையும் அறிவுறுத்துகின்றோம்.  

மேலும், பயிர்களை பயனாளிகள் தினமும் அவதானிக்க வேண்டுமென்பதோடு, பூச்சி, புழுக்கள் தாக்கப்பட்ட பயிர் பகுதிகளை அகற்றி, அவற்றை ஆழமாக நிலத்தில் புதைக்க வேண்டும் அல்லது, எரிக்க வேண்டுமென்று அறிவுறுத்துவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.  

தேசிய மற்றும் பாரம்பரிய மரக்கறி, பழ விதைகளை பயன்படுத்தி, தமக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு, அவ்விதைகளை தொடர்ச்சியாக அடுத்தடுத்த போகங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வழிகாட்டல்களும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.  

விவசாயனப் போதனா ஆசிரியர் பிரிவுகளில் பயிர் சிகிச்சை முகாம்கள் எம்மால் நடத்தப்படுவதோடு, அம்முகாம்களில் பயனாளிகள் கலந்துகொண்டு, பயிர் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.   அத்தோடு, சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.         

தற்போது எமது நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் போக்குவரத்துச் சீரின்மையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து மரக்கறிகளையும் பழங்களையும் எமது மாகாணத்துக்கு கொண்டுவருவதில் சிரமம் காணப்படுகின்றது.   இந்நிலையில், வீட்டுத்தோட்டச் செய்கை ஊக்குவிப்பினால், புதியதும் போஷாக்கானதுமான மரக்கறிகளையும் பழங்களையும் எமது மாகாண மக்கள் தேவையானளவில் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.   எமது மக்கள் போஷாக்குமிக்க உணவை பெற்று சுகதேகியாக வாழ வேண்டுமென்பது விவசாயத் திணைக்களத்தின் நோக்கமாக உள்ளதால், நிலைபேறான வீட்டுத்தோட்டச் செய்கையை பயனாளிகள் மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

ஆர்.சுகந்தினி  

Comments