சர்வகட்சி அரசு அமைக்கும் கலந்துரையாடலில் சில கட்சிகளிடம் நேர்மைத்தன்மை கிடையாது! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

சர்வகட்சி அரசு அமைக்கும் கலந்துரையாடலில் சில கட்சிகளிடம் நேர்மைத்தன்மை கிடையாது!

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பானகலந்துரையாடல்களில் சிலகட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர்சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் எம்முடன்விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்ப ட்ட இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சாத்தியமான நன்மைகளை வழங்க ஜனாதிபதி முயற்சித்துள்ளார். இது இடைக்கால வரவுசெலவுத் திட்டம். எனவே, இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு மக்களுக்கு உதவக் கூடிய அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி முயற்சித்ததை நாம் பாராட்டுகிறோம்

கே: பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கட்சியின் பதவிகளில் மாற்றம் இருக்கும் என்று கூறியிருந்தீர்கள். விளக்க முடியுமா?

பதில்: ஆம், பொதுஜன பெரமுன கட்சியின் யாப்பின்படி மிகவும் குறைவான நிர்வாகிகளே உள்ளனர். இப்போது அதன் யாப்பில் திருத்தம் செய்துள்ளோம். முன்பை விட மூன்று மடங்கு கட்சி பதவிகள் இருக்கும். எங்கள் கட்சி மாநாட்டில், கண்டிப்பாக நிறைய புதியவர்கள் பதவிக்கு வருவார்கள்.

கே: அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பலசுற்று விவாதங்களுக்குப் பிறகும் இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியாதுள்ளது. இதற்குக் காரணம் என்ன?

பதில்: ஒரு கட்சியாக, நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு சில கட்சிகள் நிறைவேற்ற முடியாத பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க முயல்கின்றன. வெளிப்படையாக, நேரடியாகச் சொல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள். அவர்களில் எவருக்கும் கலந்துரையாடல்களில் இணைந்து கொள்வதில் உண்மையான எண்ணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜே.வி.பி மட்டும் சர்வகட்சி அரசாங்கத்தில் சேர விரும்பவில்லையென நேரடியாகக் கூறியுள்ளது. ஆனால் மற்றைய கட்சிகள் தாங்கள் இணைவதற்கு தயாராக இருப்பதாகக் கூறி, பின்னர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கின்றன. இதுதான் முக்கிய பிரச்சினை என்று நினைக்கிறேன்.

கே: சர்வகட்சி அரசாங்கம் மேலும் தாமதமானால், உடனடியாக இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உடனடியாக இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் சொன்னது விஷயங்கள் தாமதமாகி வருகின்றன, நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆட்சி அமைக்கும் வரை யாரும் எதுவும் செய்ய விரும்பவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்ன மாதிரியான அரசு மற்றும் கொள்கைகள் இருக்கப் போகின்றன என்பதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அரசாங்கம் ஸ்திரமான நிலையில் உள்ளதா என்பதைப் பார்ப்பார்கள். இந்தச் சூழ்நிலையில், அரசாங்கத்தின் நலன் கருதி, அரசாங்கம் ஸ்திரமாக இருப்பதைக் காட்ட குறைந்த பட்சம் சில இராஜாங்க அமைச்சர்களையாவது நியமிப்பது நல்லது.

கே: பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்த லில் ரணில் விக்கிரமசிங்கவின் வேட்பு மனுவை ஆதரிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருமனதாகத் தீர்மானித்தது எது?

பதில்: சில காரணங்கள் இருந்தன. நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சர்வகட்சி அரசாங்கமே நாட்டுக்கு சிறந்த தீர்வாக அமையும் என நினைத்தோம். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்கள் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாகவே தான் இராஜினாமாச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு ஆசனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பார் என எண்ணினோம்.

மறுபுறம், அவருக்கு ஒரு தலைவராக பணியாற்ற நிறைய அனுபவம் இருந்தது. இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்ட பிறகு, சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கக் கூடிய சிறந்த நபர் அவரென்று நாங்கள் நினைத்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யாரேனும் இருந்தால், அவர் அமைச்சரவையில் தனக்கெனத் தனிநபர்களை வைக்க முயற்சிப்பார். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருவரானால், அவர் தனது பெரும்பான்மையான உறுப்பினர்களை அமைச்சரவையில் வைத்திருக்க விரும்புகிறார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவர் அதிகபட்சமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அமைச்சரவைக்கு ஒருவர் மட்டுமே. எனவே இந்தப் பணியைச் சரியாக நிறைவேற்றக் கூடியவர் அவர்.

கே: பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. இதன் உண்மைத் தன்மையை விளக்க முடியுமா?

பதில் : பல மாவட்டக் கூட்டங்களை நடத்தினோம். கடைசியாக களுத்துறை மாவட்டக் கூட்டத்தை நடத்தினோம். அதற்கு முன்னர் பதுளை மற்றும் இரத்தினபுரி கூட்டங்களை நடத்தினோம். வாரம் முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சரியாக திட்டமிட்டு இருந்தோம். இருப்பினும், நான் அதை மறுமலர்ச்சிக் கூட்டங்கள் என்று அழைக்க விரும்பவில்லை. எங்கள் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன். உண்மையில், அது உண்மையில் செயலிழக்கும் போது நாம் அதை புதுப்பிக்க வேண்டும். எனது கருத்து ஒரு கட்சி என்ற வகையில், நாங்கள் எதற்கும் தாழ்வாக இல்லை, ஆனால் எங்களது கட்சியின் பொறிமுறையை பலப்படுத்த வேண்டும்.

கே: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: முதலில், பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுக்கள் இல்லை. நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாராளுமன்றம் பரிசீலிக்கப்படுகிறது. பாராளுமன்ற முறைமையின் கருத்தின்படி, சுயேச்சைக் குழுக்கள் உருவாக முடியாது. முழு பாராளுமன்ற அமைப்பும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை அடிப்படையாகக் கொண்டது.

கே: இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்துமாறு ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வேறு சில பிரிவினர் விடுத்த கோரிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து தேவையற்ற நன்மைகளைப் பெறலாம் என்று சிலர் நினைக்கலாம். பொருளாதார நெருக்கடி கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், அதன் பிறகு தேர்தலை நடத்துவது குறித்து முடிவு செய்யலாம். எப்படியிருந்தாலும், இந்த நேரத்தில் நாங்கள் தேர்தலை ஊக்குவிக்கவில்லை. எவ்வாறாயினும், ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

அர்ஜூன்

Comments