உலகுக்கே சவால் விடுக்கும் வகையில் விண்வெளித்துறையில் சாதனை படைக்கும் இந்தியா! | தினகரன் வாரமஞ்சரி

உலகுக்கே சவால் விடுக்கும் வகையில் விண்வெளித்துறையில் சாதனை படைக்கும் இந்தியா!

விண்வெளி ஆய்வில் இந்தியா பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. எதிர்வரும் 2025- ஆம் ஆண்டில் வெள்ளிக் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் ‘மங்கள்யான்’ திட்டத்தை இஸ்ரோ நிறைவேற்றியிருந்தது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2திட்டங்களையும் மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து, வெள்ளிக் கிரகத்தின் மீது இஸ்ரோவின் பார்வை பதிந்துள்ளது. வெள்ளிக் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2025- ஆம் ஆண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்தில் பிரான்ஸும் பங்கேற்கிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் முதல்முறையாக பிரான்ஸ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகின்றது. விண்வெளிக்கு 3இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் ‘ககன்யான்’ திட்டத்திலும் பிரான்ஸ் பணியாற்றி வருகிறது.

இதுஒருபுறமிருக்க, இந்திய விண்வெளித் துறையில் முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.வி ரொக்கெட் மூலம் 2செயற்கைக்கோள்கள் அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தன. இந்தத் திட்டத்துக்கு 75அரசு பாடசாலை மாணவிகள் உதவி செய்துள்ளனர். இது இந்தியாவில் சாதனை ஆகும். விண்வெளித் துறையில் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக இந்தியா சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதனால் விண்வெளித் துறையில் ஆண்டுதோறும் இந்தியாவின் வளர்ச்சி என்பது சிறப்பானதாக உள்ளது.

இந்தியாவில் எடை அதிகமான செயற்கைக்கோள்கள் பி.எல்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரொக்கெட் மூலம் ஏவப்படுகின்றன. இதற்கு மாற்றாக எஸ்.எஸ்.எல்.வி எனும் ரொக்கெட் மூலம் எடை குறைந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி எனும் சிறிய ரொக்கெட் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து 500கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் வகையில் எஸ்.எஸ்.எல்.வி ரொக்கெட் வடிவமைப்புப் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இந்த ரொக்கெட்டில் இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஒ.எஸ்_-02மற்றும் அரசு பாடசாலை மாணவிகள் உருவாக்கிய ஆசாதிசாட் (8கிலோ) செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்த 2செயற்கைக்கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி ரொக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து அண்மையில் விண்ணில் பாய்ந்து சாதனை படைத்தது.

இஸ்ரோவின் இ.ஓ.எஸ் - 02செயற்கைக்கோளானது புவி-சுற்றுச்சூழல் ஆய்வுகள், வானியல், நீரியல், விவசாயம், மண் மற்றும் கடலோர ஆய்வுகளை மேற்கொள்கின்றது. மேலும் வெப்பநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வழங்குகிறது.

மாணவிகள் தயாரித்த அசாதி சாட் செயற்கைக்கோளானது 8கிலோ எடை கொண்டது. இது சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கமராவுடன் தரவுகளை படம்பிடித்து பூமிக்கு அனுப்புகிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் இதுதான். அசாதிசாட் செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75அரசு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்டு விண்வெளிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி இஸ்ரோ சாதித்துள்ளது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலேயே அசாதிசாட் எனும் சிறிய செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. இஸ்ரோவின் அறிவுறுத்தலின்பேரில் தமிழகத்தில் மதுரை திருமங்கலம் அரசு பாடசாலை மாணவிகள் 10பேர் உள்பட மொத்தம் 75அரசு பாடசாலை மாணவிகள் இந்த பணியை சிறப்பாக செய்து முடித்தனர். தற்போது மாணவிகள் தயாரித்த அசாதிசாட் செயற்கைகோள் விண்ணில் சஞ்சரித்து தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்துக்காக 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' மாணவர் குழு உருவாக்கப்பட்டு இஸ்ரோவால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன்மூலம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வம் ஏற்படுவதுடன், அவர்கள் அத்துறையில் சாதிக்க தூண்டுதலும் ஏற்படும். தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் இதுபோன்ற திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இ.ஓ.எஸ் - 02மற்றும் அசாதிசாட் செயற்கைக்கோள்கள் தாழ்புவி சுற்றுப்பாதையில் 500கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்பானது விண்வெளித்துறையில் சாதனைகளைப் படைத்து வருகின்றது.

எஸ்.சாரங்கன்

 

Comments