கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

கடந்த வாரத்து வீட்டு முடக்கம் (பயணத் தடை என்று நவீனப்பெயர்!) ஒரு விதத்தில் கசப்பாகவும் இன்னொரு விதத்தில் இனிப்புமாகவும் இருந்தபடியால் நானும் எதற்கு மேலதிகமாக வழங்க வேண்டும் என்று ஓய்வெடுத்துக் கொண்டு வாசிப்பிலும் இலக்கியத் தேடலிலும் ஆழ்ந்து போனேன்.  

படிக்கச் சுணங்கிப் போன சில விடயங்களைச் சேகரித்து புரட்டத் தொடங்கிய பொழுது கடந்தாண்டு அக்டோபரில் வந்த நேர்காணல் ஒன்றும் இம்மாதத்தில் வெளியான மற்றொன்றும் “என்னை முதலில் படி” என்று வசப்படுத்திவிட்டன.  

இரண்டும் ஒருவருடையதன்று! இருவர். அதிலும் கடந்தாண்டின் நேர்காணல் கதாநாயகன் 58 ஆண்டுகளுக்கு முன் வாசிப்பை நேசிப்பவராய் அதன்பின் கவிப்புனலுக்குள் புகுந்து ‘இதயராகம்’ பாடுபவருள் ஒருவராகி அப்படியே ஊடகத்துறைக்குத் தாவிக் கொண்ட ஆசாமி.  

அந்த 1977 ஆம் ஆண்டில் அவரை நிருபராக்கி வளர்த்தது தினகரனே! அதற்குப் பக்கபலமாக, தோன்றாத் துணையாக நின்றியியங்கியவர் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விழாவில் (1994) கௌரவிக்கப்பட்டு ‘சமூக அன்பன்’ (அஸ்-ஸெய் கே மில்லத்) விருதைப் பெற்ற ஒரேயொரு தமிழரான கலாசூரி (ஜனாதிபதி விருது) இரத்தினதுரை சிவகுருநாதன்.  

இந்த முன்னை நாள் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர், சட்டத்தரணி, முதுகலைமாணி (எம். ஏ). நான் பதியும் ஊடகவியலாளருக்கு மட்டுமன்று இப்போதைய தினகரன் பொறுப்பாசிரியர் செந்தில் வேலவர் முதற்கொண்டு இந்த சாமான்ய வரையில் ஊடக ஏணியில் ஏற்றி அழகு பார்த்தவர் ஆனந்தம் கொண்டவர்.  

அன்னாரது ஆசிகளாலும் வழிகாட்டல்களாலும் கொழும்பு நிருபராக்கப்பட்ட ஒரு கிராமப்புறப் பையன். பிற்காலத்தில் தனது ஊடகத்துறை வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு வெளிச்சமிடுகையில் யாரை முதலில் முன்னிறுத்தி தன் நன்றிக் கடனைச் செலுத்தி இருக்க வேண்டும்?  

ஒரு சிறுவனும் பதில் சொல்லிவிடுவான். நல்லவேளையாக அந்தக் கலாசூரி அந்த சமூக அன்பன் சிவகுருநாதன் அய்யாவுக்கு இந்த நன்றி கொன்ற செயலை அறிய வாய்ப்பில்லை!  

இருபக்க நேர் காணலில் தன் ஊடகக் குருநாதருக்குக் கொடுத்திருக்கும் இடம் மிகச் சொற்பம். அதுவும் நாலைந்து வரிகள்.  
இதோ, அதை வாசியுங்கள் :  

தமிழகத்தில் இருந்து ஒருவர் வந்திருக்கிறார் பேட்டி கண்டு வா என்று தினகரன் பிரதமர் ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன் ஐயா 1977 ஆம் ஆண்டு என்னை அனுப்பினார்.  
இவ்வளவே!! இவ்வளவே!  

“ இம்புட்டுத் தானா?” எனக் கேட்கும் அபிமானிகளுக்கு நானும் அதைத்தான் பதிலுக்குச் சொல்லுவேன்!  

இம்புட்டுத்தான்!  

இந்த மனிதர் ‘தினகரன்’ சேவைக்குப் பிறகு மற்றொரு இதழிலும் நல்ல குரல் எழுப்பி வளர்ந்து உயர்ந்தார். அவருக்கு அருமை அருமையான சந்தர்ப்பங்களை வழங்கினார் பொறுப்பாசிரியராக இருந்த சிங்க நிகர் மனிதர் ஒருவர்!  
அவர் பற்றியும் பேச்சு மூச்சில்லை. நஹீ! நஹீ (உறுது மொழிப் பிரயோகத்திற்கு மன்னியுங்கள்).  

கசப்பு-2

சரி. ஆசிரியர்கள் ஒருபுறமிருக்க அவரது சொந்த வாழ்க்கையிலும் மிகவும் கை கொடுத்த உற்ற துணையாக இருந்த ஒரு புரவலர் பெயரும் மறந்து போனது. அவர் தொழில் அதிபர், காலம் சென்ற ஃபாயிக் ஹாஜியார்!  
நன்றியுணர்வுகளே மறத்து போனதா இந்தக் காலத்திலே? நீங்களே சொல்லுங்கள் அபிமானிகளே!  

இதுவும் நன்றிகொன்ற ஒரு நேர்காணல் கதைதான்! இந்த நேர்காணல் கதாநாயகி பற்றிய ஒரு பதிவு. ஏற்கெனவே 2018ல் உடன்பிறவாச் சகோதரி திருமதி நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைன் ஆய்வு செய்த ‘மின்னும் தாரகைகள்’ – வரலாற்று நூலில் கண் சிமிட்டுகிறது. பக்கம் 353ல் சில பந்திகளை மட்டும் வழங்குகிறேன் முதலில் :  
*நல்ல பல கவிதைகளை அள்ளித் தந்த நல் கவிதாயினி. கற்கும் காலம் தொட்டே கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் என்பனவற்றில் ஆர்வம் கொண்டவர். இவரை இலக்கிய உலகில் முதன் முதலில் அறிமுகம் செய்தவர் சத்திய எழுத்தாளர் நாகூர் கனி.

1987லில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அகில இலங்கை ரீதியிலான கவிதைப் போட்டியில் முதலாமிடம். 2016ல் டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நடத்திய போட்டியில் 03 ஆம் இடம், அதே 2016ல் இவரது இலக்கியப் பணிக்காக உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பொன் விழா மாநாட்டில் விருது.  

* எழுத்துத் துறைக்குத் துணைபுரிந்த பெற்றோர்கள், கணவர், மகன் ஆகியோருக்கு தன் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறார்.  

- இவ்வாறு சிறப்பாக அந்தக் கவிதாயினி பற்றிய தகவல்கள் நூருல் அய்ன் தொகுத்த 456 பக்க நூலில் காணப்படுகிறது.  

ஆனால் ஏமாற்றம் தரும் சங்கதி, அந்த ஆய்வுத் தொகுப்பில் பதிவாகியுள்ள தகவலின்படி, இவ்வாண்டு இரு இதழ்களிலும் வெளியாகியுள்ள நேர்காணலில் அந்த இருவரும் இல்லாதிருப்பது!

அவரை முதன்முதல் இலக்கியம் நுகரச் செய்த சத்திய எழுத்தாளரையோ, துணையாக வரித்த கணவரையோ கண்டு கொள்ள முடியவில்லை!  

23.05.2021 மித்திரன் வார மலருக்கு அவரை நேர்கண்ட மா. உஷாநந்தினி கேட்கிறார் ஒரு கேள்வி : “உங்களை இத்துறையில் ஊக்கப்படுத்துபவர்கள் யார்?”  

இனிப்பு

இந்தக் கேள்வியிலும் ஒரு நெருடல் ஊக்கப்படுத்தியவர்களா? ஊக்கப்படுத்துபவர்களா?  வளரும் எழுத்தாளரிடம் தான் ஊக்கப்படுத்துவர்கள் யார் என வினவலாம். வளர்ந்து விட்டவர்களிடம் ஊக்கப்படுத்தியவர்கள் யார் என்றே கேட்க வேண்டும்.  

சரி ஏதோ ஒரு அச்சுப்பிழை என்று பொய்ச் சமாதானம் செய்து கொண்டு கவிதாயினியின் பதிலைப் பார்த்தோமானால் “முதலில் தந்தை. இப்போது மகன்” என்று இருக்கிறது.  

அவ்வாறாயின் ஆய்வு நூலுக்கு அளித்த தகவலின்படி முதலில் ஊக்கப்படுத்திய எழுத்தாளர் எங்கே? கைப்பிடித்த கணவனார் எங்கே?  

ஒருவரைக் குறிப்பிடுவதும் குறிப்பிடாமல் விடுவதும் அவரவர் உரிமை. ஆயினும் ஓர் ஆய்வெழுத்தாளரிடம் அவரது நூலுக்கு வழங்கப்பட்ட தகவல், இங்கே மூன்று ஆண்டுகளுக்குப் பின் வந்த நேர்காணல்களில் இல்லாமல் போகலாமா?  

ஒரு சாமானியர் உலகை விட்டுப் பிரிந்தாலும் அது கசப்பான சங்கதியே. இனிப்பில் சேர்க்க இயலாது. விதிவிலக்காக இறப்பில் சிறப்பு கண்ட ஒரு படைப்பிலக்கிய மாமன்னரின் மறைவில் தமிழ்நாட்டில் உதயமாகியுள்ள புதிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை வரலாறாகிவிட்டது.

அது கசப்பில் இனிப்பைத் தந்தது. ஆகவே நமது இனிப்பில் இடம்,  
நாட்டுப்புற கரிசல் மண்ணின் இலக்கிய முன்னோடியும் ஏழாம் வகுப்புவரை படித்துவிட்டு ஒரு கௌரவப் பேராசிரியராக எதிர்காலப் பட்டதாரிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த 99 அகவை ‘கி.ரா’! (ராஜ நாராயணன்) பத்து நாட்களுக்கு முன் நிரந்தர ஓய்வுறக்கம் கொண்டதை அறிந்த புதிய தமிழக ஆட்சியினர் முழு அரசு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்ய ஆணை பிறப்பித்தனர்.  

அதன்படி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊருக்கு அருகில் உள்ள அன்னாரின் பிறந்த மண்ணாகிய இடைச் செவல் கிராமத்தில் அவரது சொந்த நிலத்தில் இறுதிச் சடங்குகள், மற்றும் அஞ்சலிகள் (கனிமொழி நா.உ.தலைமையில்) முடிந்த பின்னர் பொலிசார் மூன்று சுற்றுகளாக 21 குண்டுகளை வானத்தில் நோக்கிப் பொழிந்து அரசு மரியாதை செய்தனர்.  

ஆனானப்பட்ட ‘கல்கியார்’ முதற்கொண்டு ‘ஜெயகாந்தனார்’ வரை தங்கள் மறைவில் பெறாத அரச மரியாதையைப் பெற்றவராக கி.ரா திகழ்வது எழுத்தாளர் சமூகத்திற்குக் கிடைத்த ஆகக் கூடிய அரச கௌரவமாக வரலாற்றில் ஓர் ஏடாகிப் போனது.  

இந்த ஏற்பாட்டுக்கு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு அனுசரணையாக இருந்து நாமும் பின்பற்றலாமா? பின்பற்ற மாட்டோமா? அவரது புதிய தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ள பன்னூலாசிரியர் இலக்கிய வித்தகர் ‘இறை அன்பு’ என்கிற என் அபிமானத்திற்குரியவர் என்று கணிக்கிறேன்.  

என் கணிப்புப் பெரும்பாலும் தவறுவதில்லை. (நிழற்பட உதவி : ‘தினத்தந்தி” நன்றி)  
கொரோனா நம்மை தொற்றிக் கொள்ளாமல் எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று ஒவ்வொருவரும் தவிக்கின்ற ஒரு காலகட்டத்தில் சுய கட்டுப்பாடு மூலம் கொரோனா எத்தனை முறை, எவ்வளவு வீரியமாக தாக்க வந்தாலும் காக்க முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டி இருக்கிறார்கள் ஒரு சிறிய கிராமவாசிகள்.  
இந்திய ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜி கொண்டுரு மண்டலத்தில் உள்ள சிறிய கிராமம் துக்கிரிலப்பாடு.

இந்த கிராமத்தை விட்டு வெளியே செல்வதற்கும், வெளியூர் மக்கள் கிராமத்திற்குள் நுழைவதற்கும் இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இங்கு வசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணியாமலோ, கிருமிநாசினியை எடுத்து கொள்ளாமலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதில்லை.  

மேலும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தல் மற்றும் சோடியம் ஹைபோ குளோரைட் கரைசலை தெளித்தல் ஆகிய பணிகளை வாரம் இருமுறை மேற்கொள்கின்றனர். கிராமத்தில் உள்ள வடிகால்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.  

அத்துடன், மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கிராமத்தில் எந்தவொரு திருவிழாவோ விசேஷங்கள், நிகழ்ச்சிகள், சடங்குகள் எதுவும் நடத்த வேண்டாம் என்று இந்த கிராம மக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பக்கத்து கிராமங்களில் வசிக்கும் உறவினர்களின் விசேஷங்களில் கூட இந்த கிராமத்தினர் கலந்து கொள்வதில்லை.  இதுபோல கேரள மாநிலத்தில் இப்படி ஒரு கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments