கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

இந்த முதல் பத்தி எழுத்து முழுக்கவும் கசப்பாக அல்லாமல் இனிப்புச் சுவையும் கலந்த ஒன்று!.முதலில் இனிப்பை வழங்கி விடுகின்றேன்.

நேற்றைய சனிக்கிழமை, (11.12.2021) நம் காலத்தில் நாம் அறிந்து வியந்து போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மகா கவியின் பிறந்த நாள். அதுவும் 139ஆம் அகவை. அவன் 1882ல் பிறந்தவன்.

அந்த ‘முண்டாசுக்கவி’ பாரதியாருக்கு ஆசை தீர நேற்று பிறந்த நாள் பலரும் வழங்கியிருப்பார்கள்.

என் பேனை கூட “ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்” என வாயார வாழ்த்தி ஓர் ஆய்வுக்கட்டுரையை ‘ஞானம்’ இலக்கிய இதழிலும், நேற்று வெளியான மூத்த ‘தினகரன்’ பக்கத்திலும் பளிச்சிட்டு, மறைக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிணாமத்தைப் பளிச்சிடச் செய்து விட்டது.

இங்கே அந்த ‘முண்டாசுக் கவியின் ஒரு வித்தியாசமான படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவனது உயரத்திற்கு கம்பு ஒன்றைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு யாரையோ அடிக்க வருவது போல் தோற்றம்!அவனைப் பொறுத்தவரையில் உணர்ச்சிமிக்கவன், ஆக்ரோசக்காரன்.

நீண்ட கம்பு ஒன்றை காரணம் இல்லாமல் உயர்த்திப் பிடித்திருக்க மாட்டான்.

என் அனுமானத்தில் தெரிவது “தமிழ் தமிழ் என்று வாய் கிழிய கத்தி, தமிழுக்கு அழுதென்றும் பெயரிட்டு உரக்கக் கூவி த்திரிகிறீர்களே, உங்கள் மத்தியில் நடக்கும் தமிழ்க் கொலைகளுக்கு என்ன பெயர் சொல்லுங்கடா பயல்களா?” என உரக்கச் சத்தமிட்டு கம்பை உயர்த்தி அடிக்கப்போவது போல் இருக்கிறது!

139அகவை பாரதி நிச்சயமாக செய்யக் கூடியவன்தான்.

இங்கே பிரசுரமாகியுள்ள மூன்று படங்களையும், தமிழ் வரிகளையும் படித்து திருத்த முடிந்தால் திருத்தி அந்த முண்டாசு கவியின் ‘தமிழ் ஆத்மா’ சாந்தி அடைய ஏதாவது செய்யப்பாருங்கள்.

கசப்பு-02

கடந்த 04.12.2021சனிக்கிழமைப் பொழுதில் தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருந்த தமிழறிஞர், ஆய்வெழுத்தாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர், பேராசிரியர் காதர் முஹிதீன், திருச்சி நகரப் பள்ளிவாசல்கள் சம்மேளன காஜி சுல்தான் மன்பா மற்றும் குழுவினர் இங்கு நூல் வெளியீட்டு நிகழ்வுகளிலும், ஓரிரு வரவேற்புபசாரங்களிலும், தனிப்பட்ட ரீதியாக சந்தித்து கலந்து சிறப்பித்துச் சென்றிருக்கின்றனர்.

அந்த வகையில் இரு முக்கிய விஐபிக்களின் சந்திப்பில், தமிழகத் தேர்தலில் வாகை சூடி, தமிழ்நாடு சட்டசபையில் ஓர் உறுப்பினராக (MLA) ஜொலிக்கும் எனதினியவரான இளவல், ஆளூர் ஷாநவாஸ், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹதீனுடன் இங்கு வந்திருப்பதாக  கருத்துத் தரும் நிழற்படமும் குறிப்பும் வெளியானது.!

அடக்கன்றாவியே!

தமிழக மழை, வெள்ள கஷ்டத்தில் மக்களுடன் மக்களால் திரியும் ஆரூர் ஷாநவாஸ், இலங்கை மழை, வெள்ளத்துடன் ஐக்கியப்பட வந்து விட்டதாய் கனவு கண்டு அல்லது கற்பனையில் பார்த்து செய்தியும் படமும் போட்ட “மாமனிதன்’ யார் அய்யா?

உண்மையில் இடம்பெற்றிருக்க வேண்டிய படக்குறிப்பு இப்படி:

“இந்திய யூனியன் மு. லீ. தேசியத் தலைவர் காதர் மொய்தீன்,  திருச்சி நகரப் பள்ளி வாசல்கள் சம்மேளன காஜி சுல்தான் மன்பா ஆகியோர்...” என்று இருக்க வேண்டும்.

இவ்வாறான மாபெரும் தவறோ, சறுக்கலோ ஏற்படுவதற்கு நிச்சயமாக நாளேடுகள் பொறுப்பாகாது.

அலைகடலுக்கப்பால் தமிழ்நாட்டின் அத்தனை முகங்களையும் பெயர்களையும், இலங்கைத் தமிழ் ஊடகத்தினர் தெரிந்திருப்பர் என எதிர்பார்க்க இயலாது.

அந்த வகையில், நிழற்படத்தையும் தகவல் குறிப்பையும் எழுதி ஆசிரிய பீடத்தில் ஒப்படைத்த “ஆசாமி” யே முழுப் பொறுப்பு.

எமக்கும் அந்த அறிவு சூனியத்தை அறிந்து வைத்துக்கொள்ள ஆவல்! ஆவல்!

இனிப்பு-1

இலங்கையுடன் நூற்றாண்டு காலத் தொடர்புகள் கொண்ட தமிழக ஊர்களுள் “கீழக்கரை”யும் ஒன்று.

இது, புகழ் பெற்ற இராமேஸ்வரம் சென்றடையும் வழித்தடத்தில் இராமநாதபுரத்தை ஊடறுத்து 12கி.மீ தூரத்தில் உள்ளது.

இந்த ஊரின் கீர்த்தியையும் பெருமையையும் பல கள ஆய்வுகளில் அறிந்து மொத்தமாக ஐந்து தலைப்புகளில் ஐந்து நூல்களை என் பேனை உழ, அறுவடை செய்துள்ளேன். இந்தத் தொகையை எந்தத் தமிழ் நாட்டு எழுத்தாளர்களும் எட்ட இயலவில்லை என்பது வரலாற்றுப் பதிவு.

கடைசியான ஐந்தாவது,

“கீர்த்திமிகு கீழக்கரைக்  கல்வி முன்னோடி” (2015) நூலை அர்ப்பணித்திருக்கிறது ‘அல் –கலம்’ (பேனை) ஒருவருக்கு.

அதன் அர்ப்பணிப்பு வரிகள் சில இவ்வாறு அமைந்திருந்தன.

* “கீர்த்திமிகு கீழை (கீழக்கரை)யில் மாணிக்க மனங்கொண்ட மாமனிதர்களுக்குப் பஞ்சம் இல்லை. ‘அல்- கலம்’ பிடித்து உழுவோருக்கும், அருந்தமிழை நாவுக்குள் நடமாடவிட்டு அரங்குகளில் ஒலிக்கச் செய்வோருக்கும் தமது இதயக் கமலங்களில் தனியிடம் வைத்திருப்பவர்களில் மிகச் சிலருள் ஒரு பெருமகனார் ‘செரந்தீப்’ ஹாஜி பி. ஆர்.எல். சதக் அப்துல் காதர்.

இப்படி, எனது பேனையால் பதியப் பெற்ற ஹாஜி சதக் அப்துல் காதர் பெருந்தகைக்குக் கடந்த 05.12. 2021ல் இலங்கையில், அமெரிக்க தேசிய வணிகப் பல்கலைக்கழகம் ஏற்பாட்டில், சிறந்த சமூகப்பணிகளுக்கான “கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கப்பட்டது.

அன்னார் ஏக காலத்தில் தமிழகத்திலும் இங்கும் புரியும் நற்பணிகள் ஏராளம், ஏராளம்! இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் மிகப்பொருத்தமானதே.

பாராட்டி, வாழ்த்தி மகிழும் நல்லிதயங்களுடன் நமது பேனையும் இணைகிறது. தொய்வின்றி சேவைகள் தொடரவும் விரும்பி நிற்கிறது.

Comments