கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

நம்மைப் போலவே பெரும்பான்மைச் சமூகக் கலாபிமானிகளும் நல்ல இசைப் பிரியர்களே. 

இருந்தாலும் இப்பொழுது அதிசய மாறுதல்  இசையைக் கொடுத்தும் ஒதுக்கி வைத்து விட்டு நாடகம் எங்கே அரங்கேறுகிறது என்றுநாளேட்டு விளம்பரங்களைத் தேடுகிறாரகள் .

நாம் அந்தத் துறையைச் சாகடித்து விட்டு இசையில் மூழ்கி இருக்கும்  பொழுது, அவர்கள், டவர் மண்டபம், எல்பின்ஸ்டன் அரங்கு, லயனல் வெண்ட்  தியேட்டர், பொரளை புஞ்சி தியேட்டர் என்று சனி, ஞாயிறு பொழுதுகளில  மட்டுமன்றி கிழமை நாட்களிலும் ஓடுகிறார்கள். 

கொழும்புக்கு வெளியே உள்ள ரசிகர்கள் நேரகாலத்தோடு வீடு போய்ச் சேர 03.30க்கு முதல் காட்சி வைக்கிறார்கள். 

ஒன்று செய்யலாம். நாம் இசை நிகழ்ச்சிகளை மட்டும் தொய்வில்லாமல்  நடத்துகிறோமே அவற்றில் அரை மணி நேரம் அல்லது கால்மணி நேரம் குறுநாடகமொன்றை  அரங்கேற்றி நாடகத்துறையை உயிர்பெறச் செய்தால் குறைந்தா போய்விடுவோம்? 

இங்கே பிரசுரமாகி இருக்கும் நாடக விளம்பரம் இன்று 30ல் பொரளை புஞ்சி  தியேட்டரில் இரு காட்சிகளாக அரங்கேறும் நாடகத்தை அறிமுகப்படுத்துகிறது. 

ஹூம்! பலதடவை பெருமூச்சுகள் தான் விடலாம். 

கசப்பு-2

இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன் இலங்கை ஒலிபரப்புக்  கூட்டுத்தாபன  முஸ்லிம் சேவை வரப்போகிற மார்ச் மாத மகளிர் தினத்தை ஒட்டி நடத்தத்  திட்டமிட்டுள்ள மும்மொழி கவிதை, கதைப்போட்டி பற்றிய சில கசப்புகளை  வழங்கியிருந்தேன். 

என் கசப்பில் முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் ஒருவர் முகநூலிலும்  ஒரேயொரு தமிழ் ஏட்டின் ஞாயிறு அநுபந்தத்திலும் மட்டும் அறிவிப்பு இருந்தது  என்றும் வழங்கி, போட்டி ஆண் - பெண் இருபாலாருக்குமா என்ற தெளிவில்லையே  பரிசு விவரங்களும் அறிவிக்கப்படவில்லையே எனவும் கசந்திருந்தேன். 

இப்பொழுது இன்று அபிமானிகள் சுவைக்கும் கசப்பையும் இனிப்பையும் கடந்த  வியாழன் தயாரித்துக் கொண்டிருந்த பொழுது இரு தமிழ் நாளேடுகளில் மட்டும் முறையே 25லும் 27லிலும் போட்டி விவரங்கள். அப்பாடா!

 ஆனால்.... ஆனால்.... 15  வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமாம் ஆண்கள் எட்டி கூட பார்க்கக்  கூடாதாம்! ஆனாலும் அதிலும் ஒரு நெருடல் 

வெற்றிபெறுவோர்களுக்கான பரிசு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இப்படியும் யாரும் போட்டி நடத்துவார்களா? அதுவும் ஒரு பொறுப்பான இடத்தினர்?   

கசப்பு-3

இந்தக் கிழமையும், 'அபின்' என்ற போதைப் பொருளை கள்ளத்தனமாகக்  கடத்தியும் நல்லதனமாக ஏற்றுமதி செய்தும் அதன் வருவாயில் ஆட்சி நடத்த  முயலும் ஆப்கானிஸ்தான் பற்றிய திடுக்கிடும் தகவல்.

கடந்த வியாழன் உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி "அல்-ஜஸீரா" காலைச் செய்தி ஔிபரப்பபைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது-

வாசித்தவர், ஐ.நா. சபைச் செயல் அதிபர் 'இன்றைய ஆப்கன் ஒரு Frozen Hell  என வர்ணித்து அவசரமான அறிக்கை ஒன்றை விடுத்திருப்பதை விவரித்தார். 

இந்த ஆங்கில வார்த்தையை என் தனிவழி தமிழில் வழங்குவதென்றால் 'உறை நிலையில் ஒரு நரகம்' என்றே அளிப்பேன். 

நிலைமையைப் புரிந்துகொள்க.

இனிப்பு-1

இன்றைய இலங்கை மலையகப் பரம்பரைகளின் பாட்டன் - பாட்டி, அப்பா - அம்மா  என மூன்று தலைமுறை 'பாவப்பட்டவர்கள்் பாலும் தேனும் பருகப் பயணித்து வந்த  பிரசித்திபெற்ற பாலத்தின் இன்றை அழகிய தோற்றம். 104அகவைகளைக் கடந்து  பாம்பன் தூக்குப் பாலம் என்ற கிராமிய வழக்குச் சொல்லுடன் கடலில் கண் சிமிட்டுகிறது. எந்தக் கடல்? புனித தீர்த்தமாட யாத்ரீகர்கள் சென்றடையும்  ராமேஸ்வரக் கடல் - சேது சமுத்திரம் சற்று உன்னிப்பாகக் கவனித்தால்  தொடருந்து (ரயில்) ஒன்று சென்றுகொண்டிருப்பது புரியும். அது பல  நிமிடங்களுக்குக் கடலை ஊடறுத்துப் போகும். பயணிகளின் உற்சாகம் கரை புரண்டு   ஓடும். அந்த அனுபவம் இந்தப் பேனைக்கும் ஏற்பட்டிருக்கிறது. தற்சமயம் 430  கோடி ரூபாயில் இந்திய அரசு இன்னுமின்னும் அழகுபடுத்த முனைந்துள்ளது.  தமிழகத்தின் அழகு அப்பொழுது கூடும். 

பட உதவி தினத்தந்தி 

நன்றி 

இனிப்பு-2

கடந்த வாரத்தில் வழங்கப்பட்ட 'ஜெய்பீம்' இனிப்பில் இன்னும் கொஞ்சம் மிச்ச சொச்சம் இருக்கிறது. 

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் தடவையாக உலகப் புகழ் ஆஸ்கார்  விருது பெறக்கூடிய வாய்ப்புகள் கூடி வந்திருக்கும் நேரத்தில் வேறு பல  வௌிநாட்டுத் திரைப்பட விழாக்களிலும் முதலிடம்! 

அந்த வகையில் நொய்டா எனும் இடத்தில் நடந்த திரைப்பட விழாவிற்குள் நுழைந்த ஜெய்பீம் மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது. 

சிறந்த திரைப்படம் 

சிறந்த நடிகர் 

சிறந்த நடிகை 

சிறந்த திரைப்பட விருது என்பது எல்லோரும் எதிர்பார்ப்பது தான். அதேபோல் சிறந்த நடிகராக சூர்யா தேர்வாகாமல் போவாரா? 

சிறந்த நடிகை தேர்வே யாரும்எ திர்பார்க்காதது. லிஜி மோல் ஜோஸ் என்னும்  பெயர் உடையவர் பெற்றிருக்கிறார். பெயரை உச்சரிக்க  தமிழ்ப்பட ரசிக  சிகாமணிகள் தடுமாற்றம். ஏன் நம் பேனையும் கூடத்தான் 

நடிக - நடிகையருக்குப் பாலாபிஷேகங்கள், பூஜைகள், சிலைகள் வைத்துப்  பழகிய அவர்களுக்கு எந்த சினிமா கவர்ச்சிப் பெயர்களையும் வைக்காமல் சொந்தப்  பெயரிலேயெ வந்து படத்தில் பல தடவை மாமா வோவ் என்று அலறல் போட்டு  பரிதாபத்தைப் பெற்றவர் பெறவேண்டிய விருதுதான் என்கிறார்கள்.  ஜெய்பீம் அவருக்கு 2வது படம். முதலாவது சிவப்பு - பச்சை - மஞ்சள்  இதைப் பார்த்தவர்கள் வெகு சிலரே கேரள (மலையாள) இறக்குமதி. நவநாகரிகக்  குடும்பப் பெண். ஒரு பட்டதாரியும் கூட, திருமணமும் ஆகிவிட்டது. தமிழ்ப்பட  வாலாக்கள் ஜீரணிக்கக் கஷ்டப்படுகிற தகவல்கள் இவை. 

எவ்வாறாயினும் நம் அபிமானிகளுக்கு அவரது அழகான மேக்கப் இல்லை.  படமொன்றை அளித்து மகிழ்கிறேன். ஆனால் படத்தில் இந்த உருவம் இல்லை. முழுக்க   முழுக்க கறுப்பழகி. காட்டுப்புறததில் அழுக்குச் சேலையுடன் அல்லல்படுகிற  ஒடுக்கப்பட்ட சமூகப் பெண். 

மேலும் இனிப்பு வழங்க இடம் போதாதது நிறுத்துகிறேன்.

Comments