இது இடைப்பட்டியை இறுக்க வேண்டிய காலம் | தினகரன் வாரமஞ்சரி

இது இடைப்பட்டியை இறுக்க வேண்டிய காலம்

'இன்றைய நிலையில் நாட்டில் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமானது. விவசாயிகளுக்கு அத்தியாவசியமான இரசாயன உரங்களையும் கிருமி மற்றும் களை நாசினிகளையும் குறைந்த பட்சம் ஒரு சில மாதங்களுக்காவது மானிய விலையில் பெற்றுத் தருவதன் மூலம் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்குள் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதன் மூலம் உணவு இறக்கமதிக்காக தற்போது கடன் பெற்று செலவிடப்படும் தொகையினைக் குறைக்கலாம்'

 

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது என்ற யதார்த்தத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரிவரப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அரசியல் உறுதிப்பாடு ஏற்படாமல் பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது கடினமானது.

பொருளாதார நெருக்கடி நிலையே அரசியல் நெருக்கடியினைத் தோற்றுவித்த காரணத்தால் இப்போதைக்கு பொருளாதார நெருக்கடிக்கு தற்காலிகமாகவேணும் ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டால் அரசியல் நெருக்கடி தானாகவே தணிந்துவிடும் என கணக்குப்போட்டுக் காய்நகர்த்தப்படுவதாகத் தெரிகிறது.

ஆனால் கள யதார்த்தங்கள் முற்றிலும் மாறாக இருக்கின்றன. அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கான ஆதரவு நாளாந்தம் பெருகிவருகிறது. தனியார்துறை தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி அரசதுறை தொழிற்சங்கங்களும் இதில் இணைந்து கொண்டுள்ளன.

சமூகத்தின் வீ.ஐ.பிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரையிலான பல்வேறு தரப்பினரிடமிருந்தும் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது. அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சிறிய குழுவினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தட்டிக்கழித்துவிட முடியாத ஒரு கட்டத்தைக் கடந்து விட்டதாகவே தெரிகிறது.

சர்வகட்சி அரசாங்கமா அல்லது கூட்டரசாங்கமா என்ற அக்கப்போர் ஒரு புறம். 113 பேரோடு வாருங்கள் என்று ஜனாதிபதி சொல்கிறார். எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் தனக்குக் கீழேயே அமைக்கப்படவேண்டும் என்கிறார் பிரதமர். எந்த அரசாங்கத்திலும் பங்களிக்கப் போவதில்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். ராஜபக்ச முழுக்குடும்பமே பதவிவிலக வேண்டும். இப்போதிருக்கும் 225 பேருமே பிரயோசனமில்லை என்கிறது போராடுந்தரப்பு. இதிலே எதிலும் ஒரு முன்னேற்றமுமின்றி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நாட்டின் நாணய மாற்று வீதம் ஜோராக மேலே சென்று ஒரு டொலருக்கு 359 ரூபா என்ற உத்தியோகபூர்வ மட்டத்தை எட்டியுள்ளது. வெளிச்சந்தையிலே 400 ரூபா மட்டத்தை எட்டுவதாகத் தெரிகிறது. காணுந்தூரத்திற்கு டொலரைக் காவிக்கொண்டு இலங்கைக்கு எவரும் வருவதைக் காணோம்.

IMF இடம் சென்றால் பிரச்சினை தீரும் என்றார்களே இங்குள்ளவர்கள். அங்கு போய் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டு வந்த பின்னரும் பிரச்சினை தீர்வதற்கான எந்தவித அறிகுறியையும் காணோமே என்று பலர் முணுமுணுக்கின்றனர்.

பெற்றோலியப் பொருள் விலைகள் பல தடவைகள் அதிகரிக்கப்பட்டன. கோதுமை, சீனி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தன. எரிவாயு விலைகள் அண்மையில் சுமார் இருமடங்காக அதிகரித்தன.

சில தினங்களுக்கு முன்னர் மின்சாரத்தின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியானது. முக்கிய மருந்து வகைகளின் விலைகளும் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இனி எஞ்சியிருக்கும் நீர்க்கட்டணமும் நிச்சயமாக அதிகரிக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனிமனிதனுடைய நாளாந்த வாழ்வுக்கு எவையெல்லாம் தேவைப்படுமோ அவை அத்தனையும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன. அதிகரிக்காத ஒன்றே ஒன்று என்றால் அது மக்களின் வருமானம் மாத்திரமே.

விளிம்பு நிலையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 1970ஆம் தசாப்தத்தின் முற்பகுதியில் நாடு மோசமான ஒரு பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்தபோது நாட்டில் அப்போது அமுலில் இருந்த உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் பங்கீட்டுத் திட்டத்தின் காரணமாகவே மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

இன்றைய சுழ்நிலையில் அவ்வாறான காத்திரமான ஒரு சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னல் நாட்டில் இல்லை. தற்போது உலக வங்கியின் அவசர உதவியின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களின் தேவைகளுக்கு உதவும் திட்டம் முன்னெடுக்கப்படுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆனால் அது வந்து சேரும் வரையில் மக்கள் எவ்வாறு தாக்குப்பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

டொலர் பற்றாக்குறையால் இறக்குமதிப் பண்ட விலைகள் அதிகரித்து சங்கிலித்தொடராக உள்ளீடுகளின் விலைகளும் வெளியீடுகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பலர் தமது வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக கட்டட நிர்மாணப் பொருள்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளமையால் கட்டட நிர்மாணத்துறை பலத்த சரிவினைச் சந்தித்துள்ளது. அதில் ஈடுபட்டுள்ள பலர் தமது வேலைகளை இழந்துள்ளனர்.

இது போலவே சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களும் மூலப்பொருள் விலையதிகரிப்பு எரிபொருள் விலையதிகரிப்பு போன்ற காரணங்களால் தமது தொழில்களைத் தொடர முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு பல்வேறு தொழில்களும் தேக்க நிலையடைகின்றபோது மக்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதனால் அரசாங்கத்தின் மானியங்களில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்.

இன்றைய நிலையில் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமானது.

விவசாயிகளுக்கு அத்தியாவசியமான இரசாயன உரங்களையும் கிருமி மற்றும் களை நாசினிகளையும் குறைந்த பட்சம் ஒரு சில மாதங்களுக்காவது மானிய விலையில் பெற்றுத் தருவதன் மூலம் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்குள் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதன் மூலம் உணவு இறக்குமதிக்காக தற்போது கடன் பெற்று செலவிடப்படும் தொகையினைக் குறைக்கலாம்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களின் விலைகள் மேலும் அதிகரித்துச் செல்லும் அபாய நிலை காணப்படுவதால் மக்கள் குறைந்தபட்ச உணவையேனும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அல்லாதுவிடின் இலங்கை உணவு நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு சோமாலியாவைப்போன்று உலக உணவுத்திட்டத்தின் உதவியை எதிர்நோக்கி வாழும் நிலை ஏற்படலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பமும் தீவிர சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறும்.

நகர்ப்புறவாசிகள் அத்தியாவசியத் தேவைகள் எல்லாவற்றையுமே பணத்திற்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் தவிர்க்க முடியாதவாறு அவர்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடையும். கிராமப்பகுதிகளில் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றை பயன்படுத்துவதைக் குறைக்கலாம். அத்துடன் தற்காலிகமாகவேனும் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம் தமது வாழ்க்கைச் செலவை ஓரளவுக்கு சமாளிக்க முயலலாம்.

பண்ணைப் பறவைகள், வளர்ப்பு கால்நடை வளர்ப்பு போன்றவற்றை ஆரம்பிப்பதன் மூலம் பால், முட்டை, இறைச்சி போன்ற புரதப்பொருள் உணவு உட்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தலாம். மரக்கறிவகைகள், பழவகைகள் என்பனவற்றின் கிடைப்பனவும் வெகுவாகக் குறைந்து போயுள்ள நிலையில் காணி வசதி உடையவர்கள் சுயதேவைக்காவது அவற்றைப் பயிரிடுவதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இவை இலங்கையர்களால் செய்ய முடியாதவைகளல்ல. 1970கள் 1980களில் இவ்வாறான பொருளாதார முறைமைக்கு பழக்கப்பட்டவர்கள் தாம். இலங்கை முழுவதும் மின்சாரம் இருந்ததில்லை. வீடுகளிலே மின்சாரப் பொருள்கள் இருந்ததில்லை மிக்ஸியும் கிரைண்டரும் சட்டர்லைட் தொலைக்காட்சியும் நேற்று வந்தவைதாம். தாம் வாழ்க்கை முழுவதும் எரிவாயுவில் சமைத்தவர்களுமல்ல. ஆகவே நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நம்மை இயைபாக்கிக் கொள்ள வேண்டிய காலப்பகுதி இது.

Comments