மத்தியவங்கி முறைமைக்கு மாற்றாக நாணயசபை முறையை கொண்டு வரலாம் | தினகரன் வாரமஞ்சரி

மத்தியவங்கி முறைமைக்கு மாற்றாக நாணயசபை முறையை கொண்டு வரலாம்

 மத்திய வங்கியின் சுதந்திரம் (central bank independence) மிக மோசமாக மீறப்பட்டிருக்கிறது. குறித்த காலத்தில் பதவியில் இருக்கும்அரசாங்கம் தமது அரசியல் பிரபலம் கருதி அதிக செலவினங்களை மேற்கொள்ளும்போது மத்திய வங்கியே அதற்கான நிதி வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டியுள்ளது.

 

இலங்கை ரூபாவின் உள்நாட்டுப் பெறுமதியும் வெளிநாட்டுப் பெறுமதியும் மிகக் குறுகியகால இடைவெளியில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளன. நாட்டில் உள்நாட்டுப் பணவீக்கம் 50 சதவீதத்தை விட அதிகம் என்று வெளிநாட்டு நாணயவியல் அறிஞர் ஒருவர் கூறுகிறார்.

அண்மைக்காலம் வரை 203 ரூபாவுக்கு கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த டொலரின் உத்தியோகபூர்வ பெறுமதி வார இறுதியில் 370 ரூபாவை எட்டியிருந்தது. இவ்வாறு முன்னொருபோதும் இலங்கை ரூபாவின் பெறுமதி தேய்வடைந்து சென்றதில்லை. நாட்டில் கையாளப்பட்ட விவேகபூர்வமற்ற பணக்கொள்கையும் அரசிறைக் கொள்கையும் ஒருங்கிணைந்து இவ்வாறானதொரு மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் பிரபலமான பாதீட்டுக்கொள்கைகளும் பாதீட்டு இடைவெளியை நிரப்பீடு செய்வதற்காக அரச பிணையங்களைப் பயன்படுத்தி ரூபாவை கட்டுப்பாடற்ற விதத்தில் அச்சிட்டு வெளியிட்டமையும் நாட்டின் வெளிநாட்டுச் ஒதுக்குகளில் கணிசமான வெளியேற்றத்தை ஏற்படுத்தின.

இன்றைய சூழலில் ஒதுக்குகள் இல்லை என்னும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா மட்டும் கைகொடுக்காமல் விட்டிருக்குமாயின் நாட்டின் நாளாந்த மக்கள் வாழ்க்கை இதைவிட மோசமானதாக இருந்திருக்கும். இன்றும் கூட தமிழ் நாட்டு அரசு இலங்கை மக்களின் அவலத்தை தணிக்கும் விதத்தில் பண உதவிகளையும் பொருளுதவிகளையும் செய்ய முன்வந்துள்ளமை தமிழ்நாட்டை கேவலமாக சித்தரித்த தென்னிலங்கை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அழுத்தங்களுக்கு உட்பட்டுவரும் நிலையில் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெறுமதிகளை நிலைப்படுத்துவதற்கு மத்தியவங்கி நாணயசபை (currency board) என்ற முறைமையினைக் கொண்டுவர வேண்டும் என ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கைதேர்ந்த நாணயவியல் நிபுணரான ஸ்டீவ் ஹென்கி (Steve Hanke) கூறுகிறார். இலங்கைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நாடுகளில் கூட இந்த முறைமை சிறப்பாகச் செயற்பட்டு நெருக்கடியிலிருந்து மீட்சி பெற உதவியதாக அவர் கூறுகிறார்.

இதே கருத்தையே இலங்கை மத்திய வங்கியின் முன்னைநாள் பிரதி ஆளுநராக இருந்த விஜயவர்தனவும் வழிமொழிகிறார். உண்மையில் 1950இல் இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட முன்பு 1884 தொடக்கம் 1950 வரை இலங்கையில் நாணய சபை முறைமையே நடைமுறையில் இருந்ததாகவும் சிறப்பாகச் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த முறைமையின் கீழ் மத்திய வங்கியால் தான் விரும்பியபடி அல்லது அரசாங்கம் விரும்புகின்றபடி கையை வீசி உள்நாட்டு நாணயத்தை அச்சிட்டு வெளியிட முடியாது. நுாறு சதவீதம் சொத்து ஒதுக்குகளை அடிப்படையாகக் கொண்டே நாணயத்தை அச்சிட்டு வெளியிட முடியும்.

உதாரணமாக, முதலில் உள்நாட்டு நாணயத்தை வெளிநாட்டு கடினநாணயம் ஒன்றுடன் நிலையான விதத்தில் இணைக்க வேண்டும். பின்னர் அந்த நாணயத்தில் மத்திய வங்கியில் உள்ள ஒதுக்குகளின் பெறுமதிக்கு ஏற்ப உள்நாட்டு நாணயத்தை அச்சிட்டு வெளியிட வேண்டும். குறித்த வெளிநாட்டு நாணயம் நாட்டுக்கு உள்வரும் போதும் வெளிச் செல்லும் போதும் ஏற்படும் தேறிய மாற்றங்களுக்கேற்ப நாணய ஒகுக்குகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு நாணயத்தின் அச்சடிப்பு இடம்பெறும்.

நாட்டின் வெளிநாட்டு சொத்து ஒதுக்குகள் என்பதற்குள் வேறுநாடுகளின் அரசாங்கங்கள் வெளியிடும் பிணையங்கள் இருக்கலாம். ஆனால் உள்நாட்டு அரசாங்கத்தின் பிணைமுறிகளை இதில் உள்ளடக்க முடியாது. அதாவது இலங்கை அரசாங்கம் இப்போது செய்வதைப்போல பிணைமுறிகளை மத்திய வங்கிக்கு வழங்கி பணத்தை அச்சிட்டு வெளியிட முடியாது.

இலங்கை வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களில் மிகைநிலையொன்று ஏற்பட்டால் உள்நாட்டுப் பணத்தை அச்சிட முடியும். ஏற்றுமதிகளை அதிகரித்தல் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளல் வெளிநாட்டில் இருந்து வரும் மானியங்கள் உள்ளிட்ட ஏனைய பண உள்வருகைகள் அதிகரித்தாலேயன்றி நாட்டின் பண அச்சடிப்பின் மூலம் மத்திய வங்கியிடமிருந்து கடனைப்பெற்று தங்களின் கனவுத் திட்டங்களையும் வெள்ளை யானைகளையும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதிப்படுத்த முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், அரசாங்கத்திற்கு அரசிறை நிதி ஒழுக்கம் (fiscal discipline) பற்றிக் கற்பிப்பதற்கு இதைவிட சிறந்த கருவி இருக்க முடியாதென மேலே குறித்த நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் நாணயமாற்று வீதம் அமெரிக்க டொலர் போன்ற ஒரு கடின நாணயத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் அதன் பெறுமதியில் நிலைபேறுடைய தன்மை உருவாகும். வணிகர்களும் நிச்சயத்தன்மையுடன் தமது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பணநிரம்பல் கட்டுப்படுத்தப்படுவதால் பணவீக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிங்கப்பூர் போன்ற நாடுகள் நாணயசபை முறைமையினையே பின்பற்றின. இதன் மூலம் நாட்டின் நிதித்துறையில் ஏற்படும் தளம்பல்களைக் கட்டுப்படத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களின் அழுத்தங்கள் இன்றி சுயமாக நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க மத்தியவங்கி முறைமையே சிறப்பானது என அப்போதிருந்த அரசியல்வாதிகள் நினைத்தபடியினாலேயே புகழ்பெற்ற மத்திய வங்கியாளரான ஜோன் எக்ஸ்டரின் (John Exter) வழிகாட்டலுடன் 1950இல் இலங்கை மத்திய வங்கி தாபிக்கப்பட்டது. ஆனால் இலங்கை ரூபாவின் உள்நாட்டுப் பெறுமதியும் வெளிநாட்டுப் பெறுமதியும் தொடர்ந்தும் தளம்பல்களை எதிர்நோக்கியது.

குறிப்பாக 1977இன் பின்னர் இந்தத் தளம்பல்கள் மிகத் தீவிரமானதாக அமைந்ததுடன் மத்திய வங்கி ஒரு சுயாதீனமான நிறுவனமான தனது நாணயக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியாமல் போனது. அரசியல் தலையீடுகள் காரணமாக பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயற்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிலும் மத்திய வங்கியின் ஆளுநா் அரசியல் நியமனமாக இருக்கிறபடியினால் தாளத்திற்கு ஆடும் ஒருவரே தலைமைப்பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதை காண முடிகிறது.

மத்திய வங்கியின் சுதந்திரம் (central bank independence) மிக மோசமாக மீறப்பட்டிருக்கிறது. குறித்த காலத்தில் பதவியில் இருக்கும் அரசாங்கம் தமது அரசியல் பிரபலம் கருதி அதிக செலவினங்களை மேற்கொள்ளும் போது மத்திய வங்கியே அதற்கான நிதி வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டியுள்ளது. பிழையெனத் தெரிந்து அதிகாரிகள் குரலெழுப்பினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்திருக்கிறது. கடந்த காலத்தில் அச்சட்டு வெளியிடப்பட்ட நாணயத்தின் அளவு இதற்கு நல்லதோர் உதாரணம்.

இன்றைய நிலையில் ரூபாவின் பெறுமதி இதைவிட மிக மோசமாக தேய்ந்து செல்லும் அபாயநிலையில் ரூபாவின் பெறுமதியை நிலைப்படுத்தி பொருளாதார சரிவை தடுத்து நிறுத்த வேண்டுமானால் நாணய சபை முறைமைக்கு மாறுவது புத்திசாலித்தனமானது. நாட்டின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது இறைமை பாதிக்கப்படுகிறது என்று வழமையான புலம்பல்கள் எழும். ஆனால் உள்நாட்டுத் தீர்வுகள் (home grown solutions) ஒவ்வொன்றாகத் தோல்வியடைந்துவரும் கையறுநிலையில் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகர்வது நல்லது.

Comments