சீனா - தைவான் போர் நடக்குமானால் அதை எப்படி அமெரிக்கா எதிர்கொள்ளும்? | தினகரன் வாரமஞ்சரி

சீனா - தைவான் போர் நடக்குமானால் அதை எப்படி அமெரிக்கா எதிர்கொள்ளும்?

சீனாவின் புவிசார் அரசியலுக்குள் அமைந்துள்ள தைவான் மீதான முற்றுகைப் போரை சீனா தொடக்கியுள்ளது. அது ஏறக்குறைய போருக்கான முன்னகர்வாகவே தெரிகிறது. அமெரிக்காவின் கடந்த கால அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிந்தாலும் தைவானுடன் ஒரு போரை நிகழ்த்த சீனா முனைவது உலகளாவிய அதிகாரப் போட்டிக்குள் அதன் பின்னடைவாகவே மாற்றலாம் என்ற எதிர்பார்க்கையுடன் அமெரிக்கா நகர்கிறது. அதற்கு வலுவான ஒரு காரணத்தை அமெரிக்காவின் இந்தோ-, பசுபிக் கொமாண்டர் அட்மிரல் பீல் டெவிட்சன் 2027சீனா தைவானை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அதிலும் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததன் பின்னர் சீனா அத்தகைய நடவடிக்கையை முழுமையாகத் திட்டமிட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தைவான் மீதான சீனாவின் போரை வெற்றி கொள்ள திட்டமிடுவதாகவும் அதனை சாத்தியப்படுத்த முடியும் எனவும் அமெரிக்க இராணுவ கட்டமைப்புக்களும் இந்தோ, -பசுபிக் பிரிவும் உறுதியாக கருத்துத் தெரிவித்துவருகின்றன. இக்கட்டுரையும் இப்போரில் அமெரிக்காவின் வாய்ப்புக்களையும் தைவானின் நிலையையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் அமெரிக்கா இப்போரில் வெற்றி கொள்ள முடியும் எனக் கருதுவதற்கான காரணங்களை தேடுவது அவசியமானது. குறிப்பாக பென்டகனும், அமெரிக்க இராணுவ வல்லுனர்களும், இந்தோ, -பசுபிக் அமெரிக்கப் படைப்பிரிவும் தைவான் மீதான சீனாவின் போரை வெற்றி கொள்ள இராணுவ ரீதியான காரணங்களை முன்வைக்கின்றன. அதாவது கடல்படை வலுவில் பலமான நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. அது மட்டுமன்றி தனது கடற்படையில் வலுவான அணுவாயுதத்தைக் காவிச் செல்லும் ஏவுகணைகளை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சீனாவை விட வலுவாக உள்ளது. அதனால் போரை வெற்றி கொள்வது சாத்தியமானதாக அமையும் என அமெரிக்க தரப்பு குறிப்பிடுகிறது. அதேநேரம் சீனா அச்சுறுத்துவதை மட்டுமே கொண்ட நாடு எனவும் அது தொடர்ச்சியாக அச்சுறுத்துவதிலேயே கவனம் கொள்கிறது எனவும் அமெரிக்கத் தரப்பு விவாதிக்க முயலுகிறது.  

அவ்வாறே அமெரிக்காவுக்கும் தைவானுக்குமான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவானதாகவும் பலமானதாகவும் அமைந்துள்ளதுடன் ஆசியாவில் அமெரிக்காவுக்கான அங்கீகாரத்தை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் என அமெரிக்கத் தரப்பு விவாதிக்கிறது. இரு நாட்டுக்குமான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவானதாக அமைந்துள்ளதாகவும் அதன் மூலம் அமெரிக்காவின் இராணுவ வலிமையை தைவான் பிரயோகிக்க முடியும் எனவும் அமெரிக்கத் தரப்பு கருதுகிறது. அதுமட்டுமன்றி சீனா இதுவரை எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதே அன்றி தாக்குதல் திறனோ வலுவோ இல்லாத நிலையே காணப்படுவதாகக் குறிப்பிடுகிறது. இக்கருத்துக்கு ஆதரவாக அமெரிக்க சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஹத்லீன் கிக்ஸ் மற்றும் பிரதி பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜெனரல் மார்க் மல்லி ஆகியோர் ஆதரவாக கருத்துக் கொண்டுள்ளதுடன் இது சீனாவை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கான சிறந்த நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளனர்.  

மேலும் சீனாவின் பொருளாதார வீழ்ச்சி வலுவான காரணமாக அமெரிக்கத் தரப்பு கருதுகிறது. இதனால் சீனா தனது இராணுவத்திற்கான நிதி ஒதுக்கத்தை அதிகரிக்க முடியாது எனவும் தற்போது ஆண்டுக்கு ஆண்டு 6-10சதவீத அதிகரிப்பை மேற்கொண்டு வருகிறது எனவும் இனி வரும் ஆண்டுகளில் அத்தகைய நகர்வுகளை சீனா மேற்கொள்ள முடியாது எனவும் அமெரிக்கத் தரப்பு வாதிடுகிறது. இது நாசி- ஜேர்மனி, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ஏகாதிபத்திய ஜப்பான் போன்ற நிலையை அடையும் எனவும் அத்தரப்பு கருதுகிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது சீனா மிகக் குறைந்தளவு பாதுகாப்புச் செலவீனத்தை கொண்டுள்ளதுடன் இந்தோ, -பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மூன்றாவது நிலையிலேயே சீனாவின் பாதுகாப்புச் செலவீனமும் முக்கியத்துவமும் காணப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. முடிந்த ஆண்டில் மட்டும் இந்தோ-,பசுபிக் பிராந்திய இராணுவ கடற்படைப் பிரிவுக்கு 1.5பில்லியன் நிதியை கணக்கிட முடியாத ஒதுக்கமாக மேற்கொண்டுள்ளது.   

நடப்பாண்டின் (2022) மே மாதத்தில் அமெரிக்க இராணுவ உபாயத்தை இப்பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளது எனவும் குறிப்பாக கப்பல் கட்டுமானத்தையும் கடற்படைத் தாக்குதலுக்கான ஒத்திகைகளையும் நிறைவு செய்துள்ளதாக அமெரிக்காவின் கடற்படைத் தாக்குதல் தளபதியான மைக்கல் டை குறிப்பிட்டுள்ளார். அதாவது நீர்மூழ்கிகள், கப்பலைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பாரிய சுடுகலன்களுடனான பயிற்சியும் தாக்குதல் உத்தியும் கட்டமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார். அதேநேரம் விமானத் தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்திலும் அனைத்து தாக்குதல் உத்திகளும் ஆயுததளபாடங்களும் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கத் தரப்பு கூறுகிறது. இதற்காகவே தனியாக படைப்பிரிவென்றை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கான முழுமையான பயிற்சிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாகவும் அதன் படைப்பிரிவு 2030இல் ஏனைய பிராந்தியங்களிலும் செயல்பட ஆரம்பிக்கும் எனவும் தெரியவருகிறது. இவற்றைவிட புலனாய்வுத் தகவல்களும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளது வழிகாட்டல்களும் தைவான் மீதான சீனாவின் நடவடிக்கையை கையாள அமெரிக்கத் தரப்பு தயாராகியுள்ளதைக் காண முடிகிறது. 

ஆனால் சீனாவின் புவிசார் அரசியலை அமெரிக்கத் தரப்பு அதிகம் கண்டு கொள்ளாத போக்கினை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தைவான் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ள இரு நாடுகளும் ஏறக்குறை 100மைல் இடை வெளியைக் மட்டுமே கொண்டுள்ளது என்பது கவனத்திற்குரியதாகும். அமெரிக்காவிலிருந்து தைவான் 7600மைல் தொலைவில் காணப்பட்டாலும் அமெரிக்காவின் கடற்படை அமைந்துள்ள குவாம் தீவிலிருந்து தைவான் 1700மைல் தொலைவில் உள்ளதென்பதையும் கருத்தில் கொள்வது அவசியமானது. எனவே புவிசார் அரசியலாகவும் சீனாவின் செல்வாக்குப் பிரதேசமாகவும் இப்பகுதி அமைந்திருப்பதனால் அமெரிக்கர்கள் விவாதிப்பது போன்று இலகுவில் தைவான் மீதான சீனப் போரை முறியடிக்க முடியுமென கணக்குப் போட்டுவிட முடியாது. அது மட்டுமன்றி சீனாவின் இராணுவ வலுவுடன் ஒப்பிடும் போது தைவான் பலவீனமாகக் காணப்பட்டாலும் அமெரிக்க இராணுவ பலத்துடனே அமெரிக்க தரப்பின் விவாதம் காணப்படுகிறது. 

சீனாவின் இராணுவ வலுவானது 142க்கு 3எனவும் தைவான் 142க்கு 21எனும் நிலையிலேயே காணப்படுகிறது. படைப்பலத்தில் சீனா ஐந்தாவது இடத்திலும் தைவான் 42வது இடத்திலும் காணப்படுகிறது. அதாவது சீனா படையில் 600மில்லியன் காணப்படும் போது தைவான் 1மில்லியன் படையினரைக் கொண்டுள்ளது. சீனாவின் இராணுவச் செலவானது 230பில்லியனாக காணப்படும் போது தைவான் 16.8பில்லியன் இராணுவச் செலவுக்கு ஒதுக்கியுள்ளமை கவனத்திற்குரியதாகும்.

எனவே தைவான் சீனாவுடன் மோதுவதென்பதை இராணுவ பலத்துடன் ஒப்பிடும் போது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. ஆனால் போர் என்பது இராணுவ பலம் மற்றும் உத்திகள் என்ற அடிப்படையில் மட்டுமன்றி கூட்டுக்களும் அவற்றின் பலமும் கூட்டுப்பாதுகாப்பின் உத்திகளும் பிரதான தீர்மான சக்தியாக அமைந்துவிடுவதைக் காணமுடிகிறது. அமெரிக்காவின் உலகளாவிய போர்கள் அனைத்துமே கூட்டுப் பலத்திலேயே அமைந்திருந்தது. இரண்டாம் உலக போருக்குப் பின்பான அமெரிக்க உத்திகள் அனைத்தும் கூட்டுப்பாதுகாப்பிலேயே தங்கியிருந்தது. நேட்டோ அதன் பிரதான வலுவான அணியாக அமைந்திருந்தது. ஆனால் தைவான் நேட்டோவில் மட்டுமன்றி ஐரோப்பிய பாதுகாப்பு நிலையிலும் இல்லாத ஆசிய நாடு என்ற அடிப்படையில் தைவான் சீன போரை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.  

எனவே அமெரிக்காவின் உத்திகள் அதிகம் இப்போரை தூண்டுவதாக அமைந்துள்ளது என்பதை கடந்த வாரம் அவதானித்திருந்தோம். அதற்கான காரணத்ததையும் போரை வெற்றி கொள்வது பற்றியும் அமெரிக்கா வகுத்திருக்கும் திட்டம் எதுவென்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். ஆனால் சீனாவின் புவிசார் அரசியலையும் சீனாவின் கம்யூனிஸ சர்வாதிகாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்ட காலத்திற்கு இப் போரை நகர்த்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் சீனாவுக்கு ஒரு பாதிப்பினை ஏற்படுத்தலாம் எனக்கருதும் அமெரிக்க விவாதம் சாத்தியமற்றதாக அமைவது மட்டுமல்ல ரஷ்யாவை எதிர்பார்த்தது போல் ஆகிவிட வாய்ப்புள்ளது. ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடியானது ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையினால் ஏற்பட்டதென்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். சீனாவை தோற்கடிப்பதற்கு முன்பு தைவானைப் பாதுகாப்பதுடன் அமெரிக்க பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதே பிரதான தேவையாக எழுந்துள்ளது. தைவானை போருக்காக தூண்டும் அமெரிக்கா உக்ரைன் நிலைக்கு தைவானை கொண்டு செல்வதுடன் சீனாவை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிடுகிறது. ஆனால் சீனா இலங்கைத் தீவை நோக்கி நகர்த்தியிருக்கும் அதிதொழில்நுட்பம் பொருந்திய கப்பலானது அமெரிக்காவின் இந்தோ, -பசுபிக் உபாயத்தை குழப்புவதுடன் தைவான் மீதான போரை முழுமைப்படுத்த முயலுவதைக் காட்டுவதாக தெரிகிறது. மேற்கு-, கிழக்கு அரசியலுக்குள் அகப்பட்டு இரு தீவு நாடுகளும் அதீத அபாயமான நிலையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதில் இலங்கைத் தீவு வெற்றிகரமாக பிழைத்துக் கொண்டாலும் தைவான் தவிர்க்க முடியாது பாரிய அழிவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. காரணம் சீனாவின் முற்றுகைப் போர் பயிற்சியும் தைவானின் எதிர்ப்புணர்வும் அமெரிக்க நலனுக்காக தைவானியர்  பலியிடப்படப் போகின்ற செய்தியை வெளிக்காட்டுவதாகவே தெரிகின்றது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments