அரசின் பங்காளிகளுக்குள் பிரிவு என்பதே கிடையாது! | தினகரன் வாரமஞ்சரி

அரசின் பங்காளிகளுக்குள் பிரிவு என்பதே கிடையாது!

குறுகிய காலத்துக்குள் உருவாகி, தனக்கென தனியானஅடையாளத்துடன், மூன்றில் இரண்டுபெரும்பான்மை பலத்துடன் திகழ்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சி எனப்பெயர் எடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது அண்மையில் ஐந்தாவது வருடபூர்த்தியைக் கொண்டாடியது.

கடந்த ஐந்து வருட காலத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என அக்கட்சி எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் அதற்கு வெற்றிவாகையாகவே அமைந்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் சுதந்திரத்துக்குப் பின்னர் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவே மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் கைப்பற்றி வந்தன.

மூன்றாவது அரசியல் சக்தியாக எந்தவொரு கட்சியும் தலையெடுக்காத நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் உருவான பொதுஜன பெரமுன குறுகிய காலத்துக்குள்ளேயே தனக்கான அடையாளத்தை நிரூபித்து விட்டது என்றே கூற முடியும்.

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்திருந்த பின்னரே இக்கட்சி உருவாக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் அரசாங்கத்தின் தோல்விக்குப் பெறுப்பேற்றுக் கொண்ட தற்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் பொதுஜன பெரமுன உருவானது. இதன் தலைவராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை இதற்குப் பெரும் பலமாக அமைந்தது என்பதே உண்மை.

அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்ட பசில் ராஜபக்ஷ சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு உதாரணமாக இந்தக் கட்சியின் வெற்றிப் படிகளைக் குறிப்பிடலாம். மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் கொண்டிருந்த அபார நம்பிக்கையைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி போட்டியிட்ட முதலாவது தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அதிக உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி தனது வெற்றியை உறுதி செய்தது.

இதன் பின்னர் களம் கண்ட தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் அமைந்தது.  நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மூளையாகச் செயற்பட்ட, சிறந்த நிர்வாகியாக விளங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைக் களமிறக்கியதன் மூலம் வெற்றிக்கு வழிகோலியது பொதுஜன பெரமுன.

அந்த வெற்றிப் பயணம் அதனுடன் நின்று விடாது கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கும் அக்கட்சி சென்றது. இந்த வெற்றிகளுக்கு பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், இதனுடன் பங்காளிகளாக செயற்பட்ட ஏனைய கட்சிகளின் உழைப்பும் இருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி, திஸ்ஸ வித்தாரணவின் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை கைகோர்த்திருந்தன.

இந்தக் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலிலும் தொடர்ந்தது. இவ்வாறான பின்னணியில் தற்போது பொதுஜன பெரமுனவுக்கும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனக் காண்பிப்பதற்கான சில முயற்சிகள் அரசவிரோத சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இருந்தபோதும் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்கவென பொதுஜன பெரமுன உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் ஒருங்கே கைகோர்த்தன.   

இந்த நிலையில் தற்பொழுது கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ அனல்மின்நிலையம் தொடர்பில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விவகாரம் பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் சிறிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டரசாங்கம் எனும் போது உள்முரண்பாடுகள் தோன்றுவது இயல்பு. அது போல முரண்பாடுகள் களையப்படுவதும் இயல்பானதுதான். ஆனால் இன்றைய சிறு முரண்பாடு அரசாங்கத்துக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது என்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த எதிர்க் கட்சித் தரப்பில் கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுவதைக் காண முடிகின்றது. இருந்தபோதும் பங்காளிக் கட்சிகளுடனான உறவில் விரிசல் ஏற்படுவதற்கு பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இது விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், “அரசியல் கட்சி பெரிதாக இருப்பினும், சிறிதாக இருப்பினும் ஒன்றாக ஒரே நோக்கத்திற்காக போராடியவர்களை யாராலும் பிரிக்க முடியாது. அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை. எனவே அன்று இருந்த அனைத்துக் கட்சிகளும் இணைந்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை பாதுகாப்பது பிரதான கட்சியான எமது பொறுப்பு” எனக் கூறியிருந்தார்.

பொரும்பான்மை பலத்துடன் காணப்பட்டாலும் பங்காளிக் கட்சிகளைத் தனித்து  விட்டுச் செயற்பட முடியாது. அனைவரும் இணைந்து இப்பயணத்தைத் தொடர வேண்டும் என்பது அவருடைய இந்தக் கூற்றின் கருத்தாக அமைந்தது.

அதுமாத்திரமன்றி பொதுஜன பெரமுன அரசாங்கம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளின் போது மக்களுக்கு உதவும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

“அரச அதிகாரத்தைப் பெற்று அரச நிறுவனங்களை சரியாக செய்வது போன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்கள் மத்தியில் அரசியல் செய்வதும் அவசியம். அரச அதிகாரத்தின் ஊடாக அமைச்சுக்கள், அரச நிறுவனங்களால் செய்ய முடியாத பல விடயங்கள் உள்ளன. நாம் அரசியலில் இருந்து விலகிய நிலையிலேயே ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இழுத்தடிக்கப்பட்டது.

இன்று, விவசாயிகளின் போராட்டங்கள் இவ்வளவு தீவிரமாக இழுத்தடிக்கப்பட்டதும் அவர்கள் மத்தியில் வேலை செய்யாமையினாலேயே ஆகும். அம்மக்களின் கோரிக்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அரசியலில் இருந்து ஒதுங்க ஒதுங்க, நாம் தோற்கடித்த சக்திகள், சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, பெரும் குழப்பத்தை உருவாக்க, மக்களிடையே ஊடுருவி வருகின்றன. அந்த வகையில் இந்த நாட்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஸ்தாபிக்க வேண்டுமாயின் ஒரு கட்சியாக அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற போதும் மக்கள் மத்தியில் அரசியலில் ஈடுபடுவது அவசியமாகும்.

அரசு அதிகாரிகள் மட்டும் நம் சார்பாக மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையிலுள்ள அரசியலை நடைமுறைப்படுத்துவது உங்கள் பொறுப்பு. தொழிற்சாலை பணியிடங்களிலும், விவசாய நிலங்களிலும் எங்கள் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து நான் நன்கு பழக்கப்பட்டுள்ளேன். இது போன்ற காலங்களில் அரசாங்கம் செய்யாத தவறுகளுக்கும் அரசாங்கத்தையே மக்கள் குறை கூறுவர். நாம் எப்போதும் ஒற்றுமைக்காக பாடுபடும் கட்சியாகும். அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து நாம் பெற்ற மரபு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட கட்சியாகும். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

பொதுஜன பெரமுனவும் அது குறித்து சிந்திக்க வேண்டும். சில கட்சிகளுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கலாம். சிறு கட்சியாக இருக்கக் கூடும். அரசியல் கட்சி பெரியதோ சிறியதோ என்பது முக்கியமல்ல. நோக்கம்தான் முக்கியம். இவர்கள் அனைவரும் எங்களுடன் ஒரே வழியில் செல்பவர்கள். எங்களின் கடினமான காலங்களில் ஒரே அணியில் இருந்தவர்கள். ஒரு குறிக்கோளுக்காக போராடியவர்கள். அவர்கள் எமது ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை. அவர்களும் நம்மோடு ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். எனவே, அந்தக் கட்சிகள் அனைத்தும் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை பேணுவது பிரதான கட்சி என்ற வகையில் எமது பொறுப்பு” என அவர் தனது உரையில் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

ஒரு கட்சியின் தலைவராக, நாட்டை நேசிக்கும் நீண்ட கால அரசியல் அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றியிருந்த இந்த உரை பொதுஜன பெரமுன என்ற கட்சியின் பயணம் சரியாக இருப்பதற்கு வழிகாட்டும் வகையில் அமைந்திருந்ததை அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பின் கீழ் பொதுஜன பெரமுனவின் அரசியல் வெற்றிப் பயணம் தடையெதுவுமின்றித் தொடரும் என்பதையே இன்றைய அரசியல் நிலைவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் இன்றைய சிறிய முரண்பாட்டை எதிரணியினர் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பிரயத்தனப்படுவதையும் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

சம்யுக்தன்

Comments