ஒரு தாயின் இதயம் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு தாயின் இதயம்

இடி மழை. பெங்காளி வெள்ளைப் புடவையின் சிகப்பு கரையில் நின்று இரண்டு வயதான பாதங்கள் நடந்து செல்கின்றன. தூவானத்தால் ஜன்னலிற்கு அருகில் நிலம் ஈரமாய் இருக்கின்றது. நீரை மிதித்தவுடன் அந்தப் பாதங்கள் நிற்கின்றன. இடப்பக்கம் நடந்து ஒரு சாக்கை காலால் இழுத்து வந்து அங்கு போட்டுவிட்டு, ஜன்னலை இழுத்து சாத்துகின்றன தங்க வளையல்கள் அணிந்த கைகள். ஜன்னலில் அவ் அம்மையாரின் முகத்தின் விம்பத்தைப் பார்க்கின்றோம்.

50வயதிருக்கும். சில நரைத்த முடிகள். விழாவிற்கு செல்வதுபோல் அலங்காரத்துடன் நிற்கின்றார். அதே விம்பத்தில் பின்னால் கதிரையில் அவர் கணவன், கையில் திறன்பேசியைப் பிடித்து இவரை காணொளிப் பதிவு செய்கிறார். ஜன்னலின் திரைச்சீலையை இழுத்து மூடிவிட்டுத் திரும்பி

அம்மையார் “வேலை செய்யுதா?”

கணவன்  “ரெக்கோர்டிங் காட்டுது, சவுண்ட் பிரச்சினை இல்லையானு ஒருக்காப் பார்த்தா சரி“

அப்படியே வரவேற்பறையின் அனைத்து திரைச்சீலைகளையும் சென்று மூடிவிட்டு வந்து கதிரையில் அமர்கிறார்.

திறன்பேசியில் இவர்கள் சில வினாடிகள் முன்பு பேசியது ஒலிக்கின்றது.

கிழியப்போகும் குடையாக
ஜன்னல்கள் காற்றில் ஆடுகின்றன
அவள் நடந்து வருகிறாள்
வாழ்வெனும் நீரில்
நம் வரலாறு எனும்
கணப்பொழுதுக் கவிதையை
எழுதிமுடிப்பதற்கு
காலால் நூலால்
எழுதிமுடிப்பதற்கு
உலகத்தின் கண்களை மூடுகிறாள்
மூட மறுக்கும் சில கண்களின்
இமைகளை
இழுத்துத் தைக்கிறாள்
தாண்டவம் ஆடுகின்றன
மழைத்துளிகள்
ஒரு முழுநிலவு முடிகிறது
பின்னே அவன் கணவன்
விம்பங்களுள் விம்பமாய்
புதைக்கப்பட்டிருக்கிறான்
கையில் திறன்பேசி எனும்
ஊசியைப் பிடித்து
ஒளியெனும் நூலைக்கோர்த்து
கனவையும் நிஜத்தையும்
தைக்க முயல்கிறான்
முட்டாள்
வந்து அமர்கிறாள்
இதழ்கள் விரிக்கும் ஒரு மலரின்
லாவகத்தோடு
இறந்துபோன சிலவினாடிகள்
உயிர்பெறுகின்றன

அ-ம்மையார்  “1990க்குத்தானே சொன்னனீங்க? அவங்களிடம்தான் அம்புலன்ஸ்லையே மெடிக்கல் இக்குப்மென்ட்ஸ் இருக்கும்”

கணவன்  -“ஓம்....ஆனா இன்னொரு பன்னிரண்டு மணித்தியாலம் வெயிட் பண்ணலாமே”

அம்மையார்  - கோபமா “உந்த விசர் கதைய விடுங்கோ, வெள்ளம் வரும் வரைக்கும் பார்த்திட்டு இருக்கிறதுதான் உங்களுக்கு வேலை. டொக்டர் இன்னும் 24மணித்தியாலம்தான் சொல்லி இருக்கார். ரெக்கோர்டிங்கை தொடங்குங்கோ”

கணவன் பொத்தானை அழுத்திவிட்டு திறன்பேசியைப் பிடிக்கிறான். ஆனால் அவன் கைகள் நடுங்குகின்றன.

அம்மைார் -“ஆட்டாமாப் புடிங்களன்...” கோபமாகக் கத்தத்தொடங்கினவள் அவன் கண்ணீரைப் பார்த்துவிட்டு சாந்தம் அடைகிறாள்.

அ-ம்மையார் “இப்பிடிக்கொண்டுவந்து இந்த போட்டோ பிரேம்ல சாத்தி வையுங்கோ”

அந்த புகைப்படத்தில் இந்த அம்மையார் இளமையாக உள்ளார். ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க மகன் இவள் பாதங்களில்  ஏறி நின்று இவள் கைகளைப் பிடித்த வண்ணம் மேலும் கீலும்  சீ சோ ஆடுகிறான். ஒரு நான்கு வயது மதிக்கத் தக்க மகள் இவள் தலையில் பேன் பார்க்கிறாள்.

அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பச்சைக்காரின் கண்ணாடி விம்பத்தில் அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் கணவன் தெரிகிறான்

“தாமதம் வேண்டாம்
தயக்கம் வேண்டாம்
தைரியம்கொள் நெஞ்சே !
தொடங்கலாம்”
உத்தரவு பிறப்பித்தாள்
பிறப்பித்தவளின் விதியை
மாற்றி எழுதுவதற்காய்
பூமி நடுக்கம் கொண்டதோ
அவன் கைகள் ஏன் நடுங்குகின்றன ?
ஒரு நிழற்படத்தில்
நிஜத்தை ஓய்வெடுக்கச் சொன்னாள்
நேரம் நெஞ்சில்
நெடுதூரம் பாய்கின்றது
நினைவலைகள் கரைவந்து
நெஞ்சை முட்டுகின்றன
பால்கேட்டு முலைகளை முட்டும்
மழலைபோல்
தலைவிரி கோலமாய்
காளியா இவள் ?
இல்லை தலைமகளின்
விளையாட்டு மைதானமாய்
மாறியதோ
இவள் சிரம்
சிரம் மட்டுமா
கரம் கால்
இவள் உடல்முழுதுமே
இவள் பிள்ளைகளின்
விளையாட்டு பூமி
புவியீர்ப்பை மிஞ்சும் அன்பு
முத்தப்பசையில்
உயிர்கள் இணையும்
அவனும்
நிழலென
குடைபிடித்து நின்றான்
அ-ம்மையார்  “கண்ணுக்குட்டி இத நான் உனக்காகப் பண்ணல்ல, எனக்காகப் பண்றன்.

இந்த ரெண்டு வருஷமும் நரக வேதனை நான் அனுபவிச்சிட்டன். ஆனா இன்னைக்கு சந்தோஷமாப் போறன்.

கடைசிவரைக்கும் குற்ற உணர்வு என்ற பேச்சுக்கே நீ இடம் கொடுக்கக் கூடாது. என்னோட பயம் அது மட்டும்தான். நீ எனக்கு செய்யக்கூடிய கைமாறு, இந்த பழியத் தூக்கி உன் தலைமேல போட்டுக்காம சந்தோஷமா வாழ்றதுதான்.

அதோட , ராம், அம்மா போய்ட்டன்ற கோபத்தை தங்கச்சிமேல காட்டக் கூடாது. இனிமே அவதான் உன் அம்மா.உனக்கு இப்பிடி ஒரு நிலைமை வந்தாலும் நான் இதைத்தான் செய்வன்.

நீங்க ரெண்டுபெரும்தான் என் வாழ்க்கையோட பொக்கிஷங்க. என் டிகிரி, பீ.எச்.டி, பணம், புகழ் எதுவும் நீங்க தந்த சந்தோஷத்துல கால்பங்கு பெறாது.

சின்ன வாண்டு அப்பம்மா எங்கன்னு கேட்டா உண்மையை சொல்லு இல்லாட்டி அவளே கண்டுபுடிச்சிடுவாள்.

இந்த மருந்துதான் , சோ வலி தெரியாது. உங்க கொப்பர் ஒரு மாதிரி எங்கையோ வாங்கிட்டார். ஆனா மரக்கறி வாங்கிட்டு வார மாறி பழுதாப்போனத வாங்கிட்டு வந்தாரோ தெரியாது.”

கணவரைப் பார்த்து புன்னகைக்கிறாள். கணவன் சுவரில் சாய்ந்து நின்றவண்ணம் கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது.

கடைசி வார்த்தைகள்

மௌனத்தில் மௌனமாய் ஒலிக்கின்றன அந்த வரவேற்பறை முழுதும்
ஒரு மாயசோகம்
கண்களில் விழுந்து
கண்ணீரை வரவைக்கும் தூசிபோல்
நிஜத்திலும் நிஜமாய்
நிரம்பிக்கிடக்கிறது

“நீ ஹொஸ்பிட்டல்ல இருந்த இரண்டு வருசத்துல அவன் ஒரு தரம்கூட வந்து பார்க்கல்ல. அவன் டிவோர்ஸ் தராட்டிப் போறான், நீ அமெரிக்கா ஆஸ்திரேலியா எண்டு எங்கையாவது போய் லிவ்விங் டுகெதர் அப்பிடின்னு சந்தோஷமா இரு.

குழந்தை பெத்துக்கணும் எண்டு நான் உங்கள சொல்லி வளர்க்கல்ல, உங்கள தத்தெடுத்த மாறி நீங்களும் தத்தெடுக்கனும் எண்டுதான் ஆசைப்பட்டன். ஆனா நீ குழந்தை பெத்துக்க, நான் உனக்கு மகளா வந்து பிறக்கனும்”

அம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்கிறது.

“ஆ சொல்ல மறந்திட்டன், பிரிட்ஜ்ல கேசரி கிண்டி வைச்சிருக்கன். மறக்காம சாப்பிடுங்கோ”

கணவன் இவள் முன் வந்து மண்டியிட்டு கட்டித் தழுவி முத்தமிடுகிறான்.

அம்மையார் -“சிவபுராணம் பாடுறீங்களா“

க-ணவன் “எனக்கு முதல் நாலுவரிதான் தெரியும்”

அம்மையார -“என் மேசையோட ரெண்டாவது லார்ச்சி“

கணவன் முதல் நான்கு வரிகளைப் பாடிய வண்ணம் உள்ளே ஓடுகிறான். லார்ச்சியைத் திறந்த வேகத்தில் அது கீழே விழுந்து உடைகிறது.

அதற்குள் இருந்த புத்தகங்களைக் கிளறி சிவபுராணத்தை எடுத்து வாசித்த வண்ணம் வரவேற்பறைக்குள் ஓடி வருகிறான்.

“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” என்ற வரிகளை விம்மி விம்மிப் பாடும்பொழுது அவன் மனைவி கதிரையில் இறந்து கிடப்பதைக் காண்கிறான்.

அம்புலன்ஸ் ஒலி
அசரீரி
“சிவபுராணம் பாடுறீங்களா“
அவள் கடைசி ஆசை
ஓடிச்செல்லுகிறான்
அழியாத அவ் எழுத்துக்களைத் தேடி
தெரிந்த நாலு வரிகளை
முணு முணுத்துக்கொண்டு
இருளில் நடக்கும்
ஒரு குழந்தையின்
பயத்தைப் போக்கும்
பாடல்போல்
மேசையின் ஒரு நெஞ்சறையைக்
கிழித்தெடுத்து
அந் நூலின் பக்கங்கள்
விரல்களை வெட்டும் அளவு
வேகமாய்த் திருப்பி
சிவனின் வரலாற்றைப்
பாடிய வண்ணம் திரும்புகிறான்
அங்கே அவள் பல்லில் கடிபட்டு
சிந்திய மாத்திரைத்  துண்டுகள்
மார்பின் மீது
சில தினங்கள் கழித்து இந்தக் காணொளியை அவள் மகள் மருத்துவமனை அறையில் ஜன்னல் அருகே நின்று பார்க்கிறாள். கண்ணீர் வழிகிறது. தொடர்ந்து அக்காணொளியில் வீட்டு அழைப்புமணி அடிப்பதும், நோயாளர் காவுவண்டி ஊழியர்கள் வந்து அவளின் உடலைக் காவிச்செல்வதும், வெறிச்சோடிப்போன வீடும் பதிவாகியிருக்கின்றன.காலைச் சூரியன் அவள் முகத்தில் வீச கண்களை மூடி அவள் ஒரு கையை மார்பின் மீது வைத்து அந்த இதயம் துடிக்கும்  சத்தத்தைக் கேட்கிறாள்.
மரத்தில் வந்து அமர்கிறது

ஒரு பறவை
அதன் இதயத்துடிப்பு...

(மானிப்பாய்) ரதிதேவி

Comments