13ஐ காப்பாற்றிக்கொள்ள ஆரம்பமான போராட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

13ஐ காப்பாற்றிக்கொள்ள ஆரம்பமான போராட்டம்!

இலங்கையில் மாகாணசபை முறைமையைஅறிமுகப்படுத்திய 13வதுதிருத்தச் சட்டமூலம் நடைமுறைக்குகொண்டு வரப்பட்டு பலதசாப்தங்கள் கடந்துள்ள போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோன்று மாகாணங்களுக்குஅதிகாரங்கள் முழுமையாகப்பகிரப்படவில்லை.

குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றமை நாம் கண்டு வருகின்ற அரசியல் வரலாறாக அமைந்துள்ளது.

இருந்த போதும், முழுமையான அதிகாரங்களையும் பகிர வேண்டும் என்ற விடயம் அவ்வப்போது இந்தியாவினாலும், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சிக் காலத்திலெல்லாம் கூட மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

யுத்தம் இடம்பெற்று அவ்வப்போது சிறிது கால இடைவெளிகளில் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலும் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான வழியைக் காணும் பொருட்டு 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற விடயம் பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் 'பிக் பிரதர்' என வர்ணிக்கப்படக் கூடிய இந்தியா அவ்வப்போது இவ்விடயத்தை சுட்டிக்காட்டி வந்துள்ளது. குறிப்பாக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13வது திருத்தத்துக்கும் அப்பால் அல்லது 13பிளஸ் ஊடான அதிகாரப் பகிர்வை வழங்குவது குறித்த பேச்சுக்கள் அரசியல் தளத்தில் அடிபட்ட போதும், எதுவுமே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கவில்லை.

தனிநாடு கோரி போராடிய எல்.ரி.ரி.ஈ யினரின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த கால அரசுகள் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை.

அது மாத்திரமன்றி, இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிரிக்கப்பட்டு இரு மாகாணங்களாக்கப்பட்டது என்பதும் நாம் அறிந்த விடயமாகும்.

மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்ட போது அப்போதிருந்த தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும், தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்கும் அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. பெரும்பாலான தமிழ் அமைப்புக்கள் இந்த மாகாணசபை முறையைப் புறக்கணித்திருந்தன. இருந்த போதும், இந்தியாவின் அழுத்தத்தின் ஊடாக இணைந்த வடக்கு,கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் 1990ஆம் ஆண்டு தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணசபையைக் கலைத்து ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார்.

அன்றிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தவிர ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் இணைந்த வடக்கு,கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மத்திய அரசினால் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி சார்பில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டாலும் யுத்தம் இடம்பெற்ற காரணத்தினால் வடமாகாணசபைக்கான தேர்தலை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013ஆம் ஆண்டு நடத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், 13வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியிருந்தன.

குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதன் முதலாவது கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், ரெலோ தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அதன் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம், தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன் இரண்டாவது கூட்டத்துக்கான ஏற்பாட்டை ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இது விடயத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் இரண்டாவது தடவையும் கூடிய தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஆவணமொன்றைத் தயாரித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்றும் கொழும்பில் கூடிய கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுத்தனர். இந்திய அரசாங்கம் இவ்விடயத்தில் தொடர்ந்தும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால் இலங்கைக்கு எவ்வாறான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது ஒருபுறம் இருக்க, தமிழரசுக் கட்சியைப் புறக்கணிக்கும் விதமாக இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் நோக்க வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவருக்குத் தெரியாமல் இக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பதாக சிரேஷ்ட தலைவர் ஒருவர் விமர்சித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது இவ்விதமிருக்க, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்கள் பகிரப்படும் என இலங்கை அரசாங்கம் பல தடவைகள் இந்தியாவுக்கு உத்தரவாதத்தை வழங்கியுள்ள போதும், இதுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இது குறித்து இவ்வளவு காலமும் அக்கறை செலுத்தாத அரசியல் தலைவர்கள் தற்பொழுது கூடி “13வது திருத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க ஒன்றுகூடியுள்ளோம்” எனக் கூறுவது வேடிக்கையானது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது சுட்டிக் காட்டியிருந்தார்.

'13வது திருத்தத்துடன் நிற்பதாயின் அதன் பின்னர் ஏன் இதுவரை பல உயிர்களை இழந்துள்ளோம்? இப்பொழுது போய் 13வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியாவிடம் கோரி கூட்டம் வைக்கின்றனர். 13வது திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது, இதனைத் திருத்த முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் நாம் சென்று 13வது திருத்தத்தைத் தா என்று கேட்பதா? 13வது திருத்தத்தில் முக்கியமான நல்ல விடயங்கள் இருக்கின்றன. இல்லையென்று நான் கூறவில்லை. மாகாணம் ஒரு அலகாக வந்தது, வடக்கு,கிழக்கை ஒரு அலகாக இயக்கக் கூடிய சாத்தியம், பொலிஸ் அதிகாரங்கள் ஓரளவுக்குக் கொடுக்கப்பட்டன.

13இல் உள்ள நல்ல விடயங்களை வீசுமாறு நாம் கூறவில்லை. அதற்காக 13தான் எங்களது அபிலாசை என தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதுமில்லை. இதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என இந்த அரசாங்கமே கூறியிருக்கும் நிலையில், நாங்களாகவே போய் இந்தப் படுகுழிக்குள் விழ வேண்டிய தேவை இல்லை' என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது இந்த விவகாரத்தில் தமிழ்க் கட்சிகளுக்குள் மாறுபட்ட நிலைப்பாடு இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அதேநேரத்தில், மாகாணசபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படவிருப்பதால் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள அல்லது முதலமைச்சர் கனவுகளுடன் உள்ள ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறான அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபடுகின்றார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் தமக்குக் கிடைத்தால் இந்தியாவின் ஒத்துழைப்பை இதற்குப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கணக்கிட்டு யாராவது இவ்வாறான கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இருந்த போதும், தமது சொந்த அரசியல் காய்நகர்த்தல்களுக்காக தமிழ் மக்களின் அபிலாஷை என ஏதோ ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்படுவது ஏற்புடையதாக அமையாது. இது விடயத்தில் அரசியல் கட்சிகள் சிந்தித்து செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சிகளில் எதனையுமே இணைத்துக் கொண்டு தமிழ்க் கட்சிகளால் வெற்றி காண முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு அரசியலைப் பொறுத்தவரை தமிழ்த் தரப்பும், முஸ்லிம் தரப்பும் எதிரும் புதிருமான இரு துருவங்கள் என்பதை ஒவ்வொருவரும் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதில் முஸ்லிம் அரசியல் தரப்புகள் இட்டிருந்த முட்டுக்கட்டை இதற்கான நல்ல உதாரணம். கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம் மற்றொரு உதாரணம்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்பு மௌனமாக இருந்தால் முஸ்லிம் அரசியல் தரப்பும் மௌனம் காக்கும். தமிழ் அரசியல் தரப்பு விழித்தெழும் போது முஸ்லிம் அரசியல் தரப்பும் விழித்தெழுந்து விடும். அத்துடன் அந்த விவகாரமே பிசுபிசுத்துப் போகும். இதுவே கடந்த கால வரலாறு.

இவ்வாறிருக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்க் கட்சிகளின் இன்றைய ஒற்றுமையானது நீண்ட காலம் நிலைத்திருக்கப் போவதில்லையென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வடக்கு அரசியலும் கிழக்கு அரசியலும் வெவ்வேறானவையாகும். கிழக்கில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வுக்கு அப்பால் வேறு பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் இன்றைய கூட்டு நிலைத்திருக்கப் போவதில்லை என்பதே உண்மை.

சம்யுக்தன்

Comments