மரம் வளர்ப்போம் | தினகரன் வாரமஞ்சரி

மரம் வளர்ப்போம்

மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும்.  

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா?  

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் : 

தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும். 

எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே! 

மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. மேலும் கப்பல் கட்டுவதற்கும், மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்றன. 

இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.. இவை நம் நாட்டின் செல்வங்கள். அக்காலத்தில் தாத்தா மரம் நட்டால் பேரன் பயனடைவான். இக்காலத்தில் மரத்தினை வைத்தவனே பயனையும் துய்க்க ஆசைப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை.  

செடிகள் வளர்ப்பதற்கு பெரிய இடம் தேவையில்லை. உபயோகமற்ற சின்னச்சின்ன பாத்திரங்களில் செடி வளர்க்க மன அழுத்தம் மறையும். நம் மனது எப்போதும் ஈரமாக, கோபமற்று குளுமையாக இருக்கும். அதோடு நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி.  அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை. (நமக்கும் தான்) மனமிருந்தால் மார்க்கமுண்டு. உபயோகித்துத் தூக்கி எறியும் பெரிய அளவு கோப்பைகளில், குளிர்பான போத்தல்கள், எண்ணெய்க் கொள்கலன் போன்றவற்றில் தற்போது செடி வளர்க்கிறார்கள். உங்களின் சாளரங்களும் பசுமையால் நிறைய செடி வளருங்கள். குருவிகள், காக்கைகளையும் நண்பர்களாக்க வேண்டுமானால் மரம் வளருங்கள். 

வினோ மதிவதனி, 
லுனுகலை பஸார்,  லுனுகலை.   

Comments