இயற்கையை மீண்டும் உருவாக்கம் செய்த பசுமை பெண்மணி வாங்கரி மாத்தாய் | தினகரன் வாரமஞ்சரி

இயற்கையை மீண்டும் உருவாக்கம் செய்த பசுமை பெண்மணி வாங்கரி மாத்தாய்

எந்த அளவு பூமியை நாம் அழிவுக்கு ஆட்படுத்துகிறோமோ அந்த அளவு அழிவு நமக்கும் ஏற்படுகிறது. களங்கமான நீர், மாசுபடுத்தப்பட்ட காற்று, கடும் உலோக மாசு ஏறிய உணவு, மாசடைந்த மண் என நம் சூழல் அமையும்போது நம்மை நாமே அழிவுக்கு ஆட்படுத்துகிறோம். 

ஆபிரிக்க கண்டத்தில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்ற பெண் வாங்கரி மாத்தாய் (Wangari Maathai) ஆவார். அமைதி என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்ற கண்ணோட்டத்தில் சுற்றுச்சூழலுக்காக இவர் ஆற்றிய பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் கென்யா நாட்டில் 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 1அன்று பிறந்தார். கென்யாவிலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் ஆவார். நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். இவர் தனது பேராசிரியர் பதவியை துறந்துவிட்டு பசுமை இணைப்பு இயக்கம் எனும் இயக்கத்தைத் துவக்கினார். 

ஆபிரிக்காவில் அழிந்த காடுகளை மீண்டும் உருவாக்குவது, காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பது என்ற நோக்கத்துடன் செயல்பட்டார். 30ஆண்டுகளில் 3கோடி மரக்கன்றுகளை நட்டு நாட்டை பசுமையாக்கினார். வனங்களை தனியாருக்கு விற்பதை தடுத்து நிறுத்த பல போராட்டங்களை நடத்தினார். உகூரு என்னும் பூங்காவை அழித்து 62அடுக்குகள் கொண்ட மாடி கட்டுவதை தடுக்க மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்டவர். பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

உலகளவில் பிரபலமான ஒரு சுற்றுச்சூழல் போராளியாக விளங்கியவர். ஜனநாயக ஆட்சி முறைக்காவும் போராடிய இவர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 25அன்று இயற்கை எய்தினார். 

சோ. வினோஜ்குமார்

Comments