பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு? | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு?

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பில் அராங்கத்தின் பொருளாதார மீட்சிக் கொள்கைத் திட்டமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்...

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொருளாதார வேலைத்திட்டத் தயாரிப்பு விரைவில் பூர்த்தியடைந்ததும் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் குறித்து இதில் பிரஸ்தாபிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சந்திப்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ.டி சில்வா, இரான் விக்கிரமரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருடன் பேராசிரியர் சரித்த ஹேரத் உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், அவர்கள் தமது ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் பிந்திய நிலைவரங்கள் குறித்து அடிக்கடி பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தி வருகிறார். அது மாத்திரமன்றி, உண்மை நிலைமை நாட்டு மக்களுக்கு மறைக்காமல் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள அவர் கசப்பான உண்மை நிலைவரங்களைக் கூறி வருகின்றார்.

அத்துடன், நாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் யாவும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதுடன், இதற்காக பாராளுமன்றம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே பொருளாதார நெடிக்கடியை அரசாங்கம் எதிர்கொள்வது குறித்த வேலைத்திட்டம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது இவ்விதமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் செய்தி முகாமையாளர்களைச் சந்தித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களுக்கு நாட்டு நிலைமை குறித்து தெளிவான விளக்கமளித்திருந்தார்.

குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய சூழல் பற்றி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் பிரதமருடன், பிரதமர் அலுவலகத்தின் பணியாட் தொகுதியின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் ருவான் விஜயவர்த்தன, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட பெற்றோல் தொகுதி இம்மாதம் 22ஆம் திகதியே கிடைக்கவிருப்பதாக இங்கு கூறப்பட்டது.

இருந்தபோதும் அதற்கு முன்னர் வேறு மார்க்கத்தின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய எண்ணெக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அவசரமா 5500மெற்றிக் தொன் டீசலைப் பெற்றுக் கொண்டு அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவிருப்பதாகவும் சாகல ரத்நாயக்க ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார்.

அதேநேரம், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 3700மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய லிற்றோ நிறுவனம் 20மில்லியன் டொலர்களைப் பெற்றிருப்பதாகவும், இதற்கமைய இம்மாதம் 6ஆம் திகதி ஒரு தொகுதி எரிவாயு இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 30,300மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. 10000மெற்றிக்தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக லிற்றோ நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. 

இதற்கமைய விரைவில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படும் என லிற்றோ நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார்.  இதனால் தனியார் வாகனங்களின் போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளது. பொதுப் போக்குவரத்து சாதனங்களை மாத்திரமே மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதால் வீதிகளில் வாகனங்கள் கணிசமாகக் குறைவடைந்துள்ளன. அதேநேரம், பேருந்துகள் மற்றும் ரயில் வண்டிகளில் மக்கள் நெரிசல் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதும் எரிபொருள் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுவதாக அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வைத்தியர்கள், பொலிஸார் மற்றும் கல்வித்துறையினர் எரிபொருள் நிலையங்களுக்குச் சென்று எரிபொருளைப் பெற முயற்சிக்கும் போது அங்கு ஏற்கனவே வரிசையில் நிற்கும் பொது மக்களால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டு முரண்பாடுகள் ஏற்படும் பல்வேறு சம்பவங்களை ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய சேவையில் உள்ளவர்களுக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிரமும் இன்றிப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

மறுபக்கத்தில், எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கறுப்புச் சந்தை வியாபாரங்கள் அதிகரித்துள்ளமை குறித்த முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. திட்டமிட்ட ஒரு சில குழுக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தமது வாகனங்களில் குறிப்பாக முச்சக்கரவண்டிகளில் எரிபொருளை நிரப்பி, பின்னர் அவற்றை வெளியே எடுத்து கறுப்புச் சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யும் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.

இருந்தபோதும் வைத்தியசாலைக்குச் செல்வது போன்ற அவசர தேவைகளுக்காக அதிக விலை கொடுத்து எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இவ்வாறான கறுப்புச் சந்தை செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. அது மாத்திரமன்றி, தனியார் வாகனங்களின் பயன்பாட்டை விட பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கான மாற்றுத் திட்டங்களும் செயற்படுத்தப்பட வேண்டும்.

இதன் ஒரு அங்கமாக பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இதன் ஊடாக தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறான திட்டங்களை அரசாங்கம் கொள்கை ரீதியாக எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். எதிர்காலத்திலாவது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதிருக்க இது வழிவகுக்கும்.

எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் கட்டாருக்குச் சென்று உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்து கொண்டிருந்தார்.

கட்டார் அரசாங்கத்திடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், ஜனாதிபதியும் விரைவில் மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று நேரடியான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் பேச்சுக்களின் ஊடாக விரைவில் கடன் உதவியை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான உதவிகளின் ஊடாக நாட்டை ஓரளவு பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீட்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சம்யுக்தன்

Comments