சைவ மக்களின் மிகப் பெரிய பண்டிகை தீபாவளித் திருநாள் | தினகரன் வாரமஞ்சரி

சைவ மக்களின் மிகப் பெரிய பண்டிகை தீபாவளித் திருநாள்

பார்வதிதேவி 21 நாட்கள் தவமிருந்து கேதார கெளரி நோன்பை முடித்தவுடன் எம்பெருமான் இடபத்தில் எழுந்தருளி அம்பிகையைத் தன்னில் பாதியாக ஏற்று அரத்தநாகரீசுவர தோற்றம் காட்டி அத்தோற்றத்துடன் இருவரும் பக்தர்களின் இல்லங்கள் தோறும் சென்று அருள் வழங்கும் நாளே தீபாவளித் திருநாளாகும்.  

தீபாவளி எனும் சொல்லின் கருத்து தீபங்களின் வரிசையாகும். ஆவளி என்றால் வாிசை எனப் பொருள் படும். தீபாவளி தினத்தில் வீடுகளில் அலங்காரமாக வாிசைப்படுத்தி தீபங்களை ஏற்றி கொண்டாடும் மிகப் புனிதநாள் இது. தீப ஒளியில் இறைவன் தன் அருளைத் தருகிறார். அவருடைய சக்தியாகிய அம்பிகையும் அவருடன் கூட இருந்து பக்தர்களுக்கு அருளைப் பொழிவது தீப ஒளியே.  

தீபாவளித் திருநாளாகிய இந்தப் புனித நாளிலே உலகம் முழுவதும் அதிகாலையாகிய வைகறைப் பொழுதிலே தண்ணீர் கங்கையாக மாறுகிறது எந்த நாட்டில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. அதிகாலை நீராடி புத்தாடை உடுத்தி சிவாலயம் சென்று எம்பெருமான் எம்பெருமாட்டியைத் தொழுது அன்று முழுவதும் உற்றார் உறவினர் நண்பர்களோடு கூடிக் குலாவி குதுகலித்து ஒருவருக் கொருவர் பரிசில்களை வழங்கி ஆடிப் பாடிக் கொண்டாடி இரவில் வீடுகளிலும் வீதிகளிலும் மின்விளக்குகளாலும் தீபங்களாலும் சோடனை செய்து கொண்டாட வேண்டிய மிகப் பெரிய திருநாளாகும்.  

இறைவனும் இறைவியும் பக்தர்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அருள் கொடுக்கும் இந்தத் திருநாளை தவறாமல் கொண்டாடுவோர்க்கு சகல செல்வங்களும் வந்து சேரும். சகல தெய்வங்களின் அருட்கடாட்சமும் கிடைக்கும். ஊரோடுசேர்ந்து ஊரை அலங்கரிது கொண்டாடுவது ஊருக்கே பல நன்மைகள் உண்டாகும்.  

வடநாட்டில் பெரிய கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள். 

இம்முறை இலங்கையில் கண்டிமாநகரில் அலங்கார வளைவுகளும் தோரணங்களுமாக அலங்கரித்து கொண்டாடுகின்றார்கள். அடுத்த வருடம் கொழும்பிலும் சென்னையிலும் பெரிதாக செய்வதற்காக உலக சைவத் திருச்சபை ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 

இதைப் போன்ற மிகச் சிறந்த புனித நாள் இந்த உலகில் இல்லை. உலக நாயகனாம் சிவபெருமான் தன் தேவியாகிய உமையை தன்னில் பாதியாக தான்பாதி உமைபாதியாக உமை பங்கனாக அர்த்தநாரியாக உருப் பெற்ற நாள் உமாபதியாக இல்லங்கள் தோறும் சென்று தன் பக்தர்களுக்கு அருள் தரும் இந்தபொன்னான நாளை இராவணேசுவரன் இலங்கையை ஆண்டபோது இலங்கை முழுவதும் குதுகலமாகக் கொண்டாடப் பட்டது. மக்கள் தேவர்களைப் போன்று சகல செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தார்கள். மீண்டும் நாம் இந்தப் பொன்னான நாளை குதூகலமாக கொண்டாடி உமைபங்கனின் பரிபூரண அருளைப் பெற்று தேவர்களைப் போன்று வாழ்வோமாக. 

அன்பே சிவம் அதுவே நலம்!

தியாகு

Comments