அண்ணலாரின் முன்மாதிரிமிக்க பொருளாதார வாழ்வு | தினகரன் வாரமஞ்சரி

அண்ணலாரின் முன்மாதிரிமிக்க பொருளாதார வாழ்வு

இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நாம் எமது உயிரைவிட  மேலாக நேசிக்கிறோம். அதன் ஒரு வடிவம்தான் அவரது வாழ்க்கை வரலாற்றை (ஸீரா) கற்று எமது வாழ்வை அதற்கேற்ப ஒழுங்கமைத்துக் கொள்வதாகும். இவ்வகையில் மாநபி (ஸல்) அவர்களின் பொருளாதார செயற்பாடுகளை அறிந்துகொள்வது எமது பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றோம்.

அந்த வகையில் வறுமையிலிருந்தும் இருளிலிருந்தும் மக்களை விடுவித்து செல்வம் மற்றும் வெளிச்சத்தின்பால் வழிகாட்டுவதும் இஸ்லாத்தின் நோக்கங்களில் உள்ளதாகும். நபிமார்கள் அனைவரும் சமூகத்தின் தலைவர்களாக இருந்தார்களேயொழிய ஏழைகளாக இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களும் இவ்விடயத்தில் விதிவிலக்காக இருக்கவில்லை. அல்லாஹ் அவரை மூன்று கட்டங்கள் ஊடாக செல்வத்தை கொடுத்து கண்ணியப்படுத்தினான். இது அல்லாஹ்வின் முன்னேற்பாடு தொடர்பான ஒரு விடயமாகும்.

1. தெரிவுக் கட்டம்: பிறப்பதற்கு முன்பிலிருந்து அநாதையாக பிறக்கும் கட்டம் வரை - 'நிச்சயமாக அல்லாஹ் ஆதம் (அலை) நூஹ் (அலை) மற்றும் இப்றாஹீம் (அலை)யின் சந்ததிகள், இம்ரானின் சந்ததிகளை அகிலத்தாருக்காக தெரிவு செய்துள்ளான்' (ஆல இம்ரான் 33,34)

2.புகலிடக் கட்டம்: அநாதையாக பிறந்ததிலிருந்து திருமணம் வரையான கட்டம் - 'நீங்கள் ஓரு அநாதையாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு புகலிடம் அளிக்கவில்லையா?' (ளுஹா 06)

3. செல்வம் நிறைந்த கட்டம்: திருமணம் முதல் மரணம் வரை - '(அதிகமானவர்களை கவனிக்க வேண்டி இருந்தமையால்) ஏழையாக இருந்த உங்களை ஒரு செல்வந்தராக ஆக்கவில்லையா?' (ளுஹா 08)

நபி (ஸல்) அவர்களின் குடும்பம், கோத்திரம், மக்கத்து பூமி அனைத்தும் தெரிவு செய்யப்பட்டு மாநபியை வரவேற்பதற்காக, அவர் பிறக்க முன்பே வம்சாவளியும் பிரதேசமும் தயார்படுத்தப்பட்டது.

இரண்டாவது காலகட்டத்தில் தந்தையின் மூலமாக பெற்ற வாரிசு சொத்துக்கள், பாட்டனார் செய்த செலவுகள், பால்குடி காலத்தில் காணப்பட்ட அருள்கள், சிறிய தந்தையிடம் வளர்ந்தமை, ஆடு மேய்த்தல், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டமை, வெற்றிகரமான வெளிநாட்டு வியாபார பயணங்களை முன்னெடுத்தமை, கதீஜா (ரழி)உடன் திருமணம் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நபியவர்கள் தந்தை, தாய் இருவரையும் இழந்த அநாதையாகவும் (யதீம்) அதிகமானவர்களை பராமரிக்க வேண்டிய நிலையில் ஏழையாகவும் இருந்தார். அல்லாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரம் அவருக்கு புகலிடம் வழங்கப்பட்டு ஒரு செல்வந்தராக மாறிவிட்டார். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு அறிவிப்பில், 'குறைஷியருக்கு ஒரு கடுமையான பஞ்சம் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. இத்துப்போன எழும்புகள், கயிறுகளைக்கூட சாப்பிடும் நிலை உருவானது. குறைஷியர்களில் இந்நிலைமையை தாக்குப்பிடிக்க அல்லாஹ்வின் தூதராலும், அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களாலும் மாத்திமே முடியுமாய் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'எனது சிறிய தந்தையே! உங்களது சகோதரன் அபூ தாலிபுக்கு அதிகமான பிள்ளைகள் காணப்படுகிரார்கள். இது உங்களுக்கு தெரிந்த விடயமாகும். குறைஷியர்களுக்கு ஏற்பட்டுள்ள விடயங்களையும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். நாம் அவரிடம் சென்று சிலரை பொறுப்பேற்றுக்கொள்வோம்' என்றார்கள். பின்னர் இருவரும் அபூ தாலிபிடம் சென்று 'அபூ தாலிபே! உங்களது சமூகத்தின் நிலவரம் உங்களுக்கு தெரியும், அதனை நீங்கள் காண்கிறீர்கள், நீங்களும் அதனை சார்ந்தவராக உள்ளீர்கள், எனவே நாம் உங்களது குடும்ப பொறுப்புகளில் சிலவற்றை சுமக்க விரும்புகிறோம்' என்றார்கள்.

அதற்கவர் 'உக்கைல் என்பவரை விட்டுவிட்டு உங்களுக்கு விருப்பமானவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்கள். அப்போது நபி (ஸல்)அவர்கள், அலி (ரழி)யை எடுத்துக்கொள்ள, அப்பாஸ் (ரழி) அவர்கள், ஜஃபர் (ரழி)யை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் உழைக்கும் வரை தொடர்ந்தும் அப்படியே இருந்தார்கள். (இமாம் ஹைஸமி தனது மஜ்மஃவில் 8/281)

ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்கள் கதீஜா (ரழி)யின் அடிமையாக காணப்பட்டார்கள். அவரை தனக்கு வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் வேண்டிக்கொண்டார்கள். இது திருமணத்தின் பின்னரான ஒரு நிகழ்வாகும். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.  உண்மையில் இஸ்லாத்தின் நோக்கம் இருளிலிருந்து ஒளியின்பால் வழிகாட்டுவது மாத்திரமல்ல. மாற்றமாக வறுமை, இழிவு போன்றவற்றிலிருந்து விடுவித்து கண்ணியமும் மதிப்பும் செல்வமும் உள்ள ஒருவராக மாற்றுவதும்தான். 'அல்லாஹ் அவனிடமிருந்து பாவமன்னிப்பையும் அருள்களையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமாக உதவுபவனாகவும் அறிவுள்ளவனாகவும் இருக்கிறான்'

                        (அல் பகரா 268)

நபி (ஸல்) அவர்கள் பத்துக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து வருமானம் ஈட்டியுள்ளார்கள். அவற்றுள் பெற்றோரிடமிருந்து வாரிசாக பெற்றவைகள், வியாபாரம், கதீஜா (ரழி) மூலமாக வாரிசாக பெற்றவைகள, கனீமத் பொருட்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

குறிப்பாக நபிமார்கள் தொழில் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்துக்கு முன்பும் பின்பும் வியாபாரம் செய்ததுடன் உழைப்பையும் ஊக்குவித்துள்ளார்கள். சஹாபாக்கள் தொழில் செய்துள்ளார்கள். 'எனது (மக்கத்து) முஹாஜிர் சகோதரர்கள் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். எனது அன்சாரி (மதீனத்து) சகோதரர்கள் அவர்களது சொத்துக்களில் வேலை (விவசாயம்) செய்தார்கள்... (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வியாபாரம் செய்தமை குறித்து முஷ்ரிக்குகள் ஆச்சரியமாக நோக்கினார்கள் 'இந்த தூதருக்கு என்ன நேர்ந்துள்ளது. இவர் சாப்பிடுகின்றார், சந்தையில் நடமாடுகின்றார்' என்று ஆச்சரியமுற்றார்கள். (அல் புர்கான் 07) மதீனாவில் ஒரு சந்தையை நிறுவினார்கள். அவரது வியாபார அமானிதங்கள் காரணமாக 'அல் அமீன்' (நம்பிக்கையாளன்) என்ற பெயரைப் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி)யை அறிமுகமாக முன்னரும், கதீஜா (ரழி) யுடனும் அவரை திருமணம் முடித்த பின்னரும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒரு வியாபார தூதுகோஷ்டியுடன் வியாபாரம் செய்தார்கள். கொடுப்பதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு இலாபம் கிடைத்தது. பொருளை விற்பனை செய்துவிட்டு இலாபத்தை அப்துல் முத்தலிபின் பிள்ளைகளின் விதவைளுக்கு ஸதகாவாக கொடுத்துவிட்டு கீழ்வருமாறு சொன்னார்கள் 'பெறுமதியை கொடுக்க முடியாத நிலையில் நான் எந்தவொரு பொருளையும் வாங்க மாட்டேன்' என்றார்கள்;. (ஆதாரம்: அபூ தாவூத்)

நபி (ஸல்) அவர்கள் தந்தை அப்துல்லாஹ் மூலமாக 'பரகா' என்ற பெயரையுடைய உம்மு அய்மன் என்ற ஹபஷி பெண், ஐந்து ஒட்டகங்கள், ஒரு தொகுதி ஆடுகள் போன்றவற்றை வாரிசாகப் பெற்றுக்கொண்டார்கள். ஷுக்ரான் அவரது மகன் ஸாலிஹையும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் பத்ரிலும் கலந்துகொண்டார். தாயார் ஆமினா பின்த் வஹப் மூலம் பனூ அலி பள்ளத்தாக்கில் உள்ள பிறந்த வீட்டையும் கதீஜா பின்த் குவைலித் (ரழி) மூலம் ஸபா மற்றும் மர்வா மலைக்கிடையில் இருந்த அவரது வீட்டையும் மற்றும் சில செல்வங்களையும் வாரிசாக பெற்றுக்கொண்டார்கள்.

யுத்தங்களின் விளைவான கனீமத் பொருட்களும் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைக்கப்பெற்றன.

சில அறிஞர்களின் கருத்தின்படி நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகும்போது, சில பொது சொத்துக்கள் (வக்ப்), தரிசு நிலங்கள், விவசாய நிலங்கள், பெற்றோரிடமிருந்து வாரிசாக பெற்ற சில நிலங்கள், யுத்த வெற்றிகளின்போது மதீனாவிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் கிடைத்தவைகள் (அல்பைஉ) போன்ற சொத்துகளை வாரிசாக விட்டுவிட்டு வபாத்தானார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள்.

என்றாலும் பற்றற்ற பணக்காரனாகவும் செலவளிக்கும் செல்வந்தராகவும் நபி (ஸல்) அவர்கள இருந்தார்கள். மாற்றமாக எதுவுமற்ற ஒட்டாண்டியாக இருக்கவில்லை. அவருக்கு கிடைத்த அத்தனை சொத்துக்களையும் சமூக நலனுக்காக செலவு செய்தார்கள்.

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) குறிப்பிடுவது போன்று 'நன்றியுள்ள செல்வந்தராகவும் பொறுமையான ஏழையாகவும்' காணப்பட்டார்கள். எனவே மாநபியின் பொருளாதார வாழ்வை கற்று வாழ்வை மேம்படுத்துவோம்.

அஷ்ஷெய்க்  
யூ.கே. ரமீஸ்  (எம்.ஏ சமூகவியல்)

Comments