அகிலத்தாருக்கு அருட்கொடையாய் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் | தினகரன் வாரமஞ்சரி

அகிலத்தாருக்கு அருட்கொடையாய் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

'(நபியே) நாம் உம்மை முழு உலகத்தாருக்கும் அருளாகவன்றி அனுப்பவில்லை' என நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(சூரதுல் அன்பியா:107)

இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்றும் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்துப் படைப்பினங்களுக்கும் அருளாகஅருளப்பட்டவர்கள் என்ற பரந்த கருத்தை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் அனைவர் மீதும் அன்புகொண்டவர். கருனை காட்டுபவர். அனைத்துப் படைப்பினங்களையும் அரவணைத்தவர். ஏன் தன்னை எதிர்த்தவர்களுடனும் நேர்மையாக நடந்துகொண்டவர். இவர்களது வாழ்வில் காணப்பட்ட அன்பின் வெளிப்பாடுகள் சிலதை இங்கு நோக்குவோம்.

தனது உம்மத்தின் மீது காட்டிய அன்பு

இஸ்லாத்தில் இபாதத்திற்கு விஷேட அந்தஸ்துள்ளது. ஏனெனில் இபாதத்கள் மூலமாகத் தான் படைத்த அல்லாஹ்வை நெருங்க முடியும். எவர் அதிகமான இபாதத்களில் ஈடுபடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியாராக மாறி விடுகின்றார்.

எனினும் நபி (ஸல்) அவர்கள் இதில் நடுநிலமையான போக்கையே கடைபிடித்தார்கள். சமூகத்திற்கு சுமையாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பல விடயங்களை சமூகத்திற்கு ஏவாமல் தவிர்ந்துகொண்டார்கள். எனது உம்மத்திற்கு சிரமம் இல்லாதிருந்தால் இதனை நான் கடமையாக்கி இருப்பேன் போன்ற வசனங்களை நாம் அதிகமாக ஹதீஸ்களில் காணலாம்.

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  ' நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு விதியாகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தான் செய்வதற்கு விரும்பிய காரியங்களை விட்டு விடுவார்கள் ' (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).

'நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு சிரமம் குறைந்த கடமைகளையே விரும்பினார்கள்' என்ற ஹதீஸை இமாம் அஹ்மத் பதிவு செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனதுசமூகத்தின் ஏழைகளுக்கு உதவி செய்யுமாறு தனது தோழர்களைப் பணித்தார்கள். அவர்களது உணர்வுகளை மதித்து செயற்படுமாறு வழிகாட்டினார்கள். இதனால் தான் தனது சகோதரனின் முகத்தில் புன்னகைப்பதும் ஸதகா என்று கூறினார்கள்.

பாவங்கள் தனிமனிதனை அழிப்பது போன்று சமூகங்களையும் அழித்துவிடும்.  எனவே பாவங்களின் பாரதூரத்தை விளக்கி, அவற்றை நெருங்க வேண்டாம் என  நபியவர்கள் சமூகத்தை எச்சரிக்கை செய்தார்கள்.

சமூகம்  ஒருஉள்ளத்தை ஒத்தவர்களாக ஒற்றுமையாக வாழவேண்டும். விட்டுக் கொடுத்து, ஒத்துழைத்து வாழ்வதன் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளலலாம்.

இக்கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்  'நான் உங்கள் மீது வறுமையையிட்டு அதிகம் பயப்படவில்லை. உங்கள் முன்னோருக்கு கொடுக்கப்பட்டது போன்று உங்களுக்கும் உலகவசதிகள் தாராளமாக கிடைத்து, அவர்கள் போட்டியிட்டதுபோல்  நீங்களும் போட்டியிட்டு அவர்களைப் போல் அழிந்து விடுவீர்கள் என்றே நான் அதிகம் பயப்படுகின்றேன்' (புஹாரி, முஸ்லிம்).

பெண்கள் மீது காட்டிய கருணை

இயல்பில் பெண்கள் ஆண்களை விட சில விடயங்களில் பலவீனர்களாக உள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டுநாம் பெண்களுடன் நடந்துகொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

உங்களில் சிறந்தவர் தனது மனைவிக்கு சிறந்தவரே. நான் எனது மனைவிக்கு சிறந்தவனாக உள்ளேன்' (திர்மதி, இப்னு ஹிப்பான்) என நபி (ஸல்) அவர்கள் மனைவிகளுடன் சிறந்தமுறையில் வாழுமாறு வாழ்ந்து காட்டினார்கள்.

நீங்கள் உங்கள் மனைவியைவெறுக்கவேண்டாம். நீங்கள் அவளில் விரும்பாதஒருபண்பைக் கண்டால் அவளிடத்தில் நீங்கள் விரும்பும் மற்றொருபண்பையும் கண்டுகொள்வீர்கள் என்ற நபியவர்களின் அருள்வாக்கு முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

இக்கருத்தை அல்குர்ஆன் இவ்வாறு சித்தரிக்கின்றது 'நீங்கள் (உங்கள் மனைவிகளுடன்) பெண்களுடன் சிறந்தமுறையில்  உறவாடுங்கள். அவர்களை நீங்கள் வெறுக்கின்றீர்களாயின் நீங்கள் ஒன்றை வெறுக்கும் போது அவ்விடயத்திலலேயேஅல்லாஹ் நிறைய நன்மைகளை ஆக்கியிருக்கலாம் என்பதை கவனத்திற் கொள்ளுங்கள்' (நிஸா:19).

சமூகத்தில் பராமரிப்பு இல்லாமல் வாழும் ஏழை,விதவைகளின் துயரைப் துடைப்பதற்காக உழைப்பதை ஓர் உயர்ந்த செயலாக நபியவர்கள் கருதினார்கள். 'விதவை,ஏழைகளுக்காக உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போராடும் போராளிக்கு ஒப்பாவான். அல்லது பகலில் நோன்புநோற்று, இரவில் நின்று வணங்குகின்றவனுக்கு ஒப்பாவான்' (புஹாரி, முஸ்லிம்).

வயதில் மூத்தவர்களுக்கு காட்டிய அரவணைப்பு

வயதில் மூத்தவர்கள் இயல்பில் சில பலவீனங்களுடன் வாழ்வார்கள். வாழ்வின் பலகட்டங்களைத் தாண்டி பழுத்த அனுபவங்களுடன் இருப்பார்கள். இவர்களை பராமரிப்பது அவர்களது பிள்ளைகளின் நேரடியான கடமையாகும். இல்லாதபோது அது சமூகக் கடமையாக மாறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இவர்கள் விடயத்தில் அதிகூடிய கரிசனை காட்டினார்கள். அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களுக்கான கௌரவத்தை கொடுத்தார்கள்.

'நரைத்தமுடியுள்ள முஸ்லிம், தீவிரம் இல்லாமலும், அலட்சியம் இல்லாமலும் அல்குர்ஆனை சுமந்தவர்கள் மற்றும் நீதியான ஆட்சியாளனை கண்ணியப்படுத்துவது என்பது அல்லாஹ்வுக்கு செய்யும் கண்ணியமாகும் '(அபுதாவுத்).

வயது முதிர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களை சந்திப்பதற்காக ஒருமுறை வந்தபோது அவருக்கு இடம் கொடுப்பதற்கு அங்கிருந்தவர்கள் சற்று தாமதமாகினர். அப்போதுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யார் எங்களில் சிறுவர்களுக்கு அன்புகாட்டவில்லையோ,பெரியவர்களுக்கு மறியாதை செய்யவில்லையோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல'(திர்மிதி).

மக்கா வெற்றியின் பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹாபாவை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். அப்போது நபியர்கள் அபூபக்கரைப் பார்த்துக் கூறினார்கள் 'நீங்கள் அவர்களை அவர்களது வீட்டிலேயே விட்டிருக்கலாம் தானே,நான் அங்குவந்திருப்பேன்' (அஹ்மத், இப்னு ஹிப்பான்).

முஸ்லிம் அல்லாதவர்கள் மீது காட்டிய இரக்கம்

முஸ்லிம் அல்லாதவர்களும் மனிதர்களே. அவர்களும் இப்புவியில் வாழும் மானுடர்களே. இவர்களையும் நாம் மதிக்கவேண்டும். அவர்களதுமதம்,கிரியைகளைபுரிந்துநாம் வாழவேண்டும்.

அபு ஹ}ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சிலர் கூறினார்கள் 'நீங்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஏன் பிரார்த்தனை செய்யக் கூடாது? அதற்கு நபியவர்கள் கூறினார்கள் 'நான் சபிக்கக்கூடிய ஒருவனாக அனுப்பப்படவில்லை. மாறாக அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்' (முஸ்லிம்).

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  சிலர் நபியவர்களிடம் வந்து கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதரே ஸகீப் கோத்திரத்தின் ஈட்டிகள் எம்மை எரித்துவிட்டன. ஏனவே நீங்கள் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  'யா அல்லாஹ் ஸகீப் கோத்திரத்திற்கு நல்வழியைக் காட்டுவாயாக' (திர்மிதி).

அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி)

Comments