உருவகக் கதை கலையின் பிதாமகன் சு.வேலுப்பிள்ளை (சு.வே) | தினகரன் வாரமஞ்சரி

உருவகக் கதை கலையின் பிதாமகன் சு.வேலுப்பிள்ளை (சு.வே)

சு.வே. என்றே தமிழிலக்கிய உலகு அறிந்து வைத்திருக்கும் பண்டிதர் சு. வேலுப்பிள்ளை பண்டிதர்களும் படைப்பிலக்கியவாதிகளாக அங்கீகாரம் பெறமுடியும் என நிரூபித்த முன்னோடி. பண்டித மரபில் காலூன்றியபடியே நவீன இலக்கியங்களுடன் நெருக்கமாக உறவுகளைக் கொண்டிருந்தவர். ஈழத்தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் சு.வே.க்குத் தனியான சிறப்பிடம் என்றும் உண்டு. 

‘சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் ஆங்கிலக் கல்வியின் வழியாக தமிழ்ச் சூழலுக்கு வந்தவை. அவற்றை உள்வாங்கிக் கொண்ட மரபு வழிவந்த தமிழாசிரியர்களும் உண்டு. நிராகரித்து ஒதுக்கியவர்களும் உண்டு. 

மரபு வழித் தமிழ் ஆசிரியர்கள் மீது ஆங்கிலக் கல்வி முறை செலுத்திய நேர்முகச் செல்வாக்கினுக்கு ஓர் எடுத்துக்காட்டாளராக விளங்கியவர் சு.வே. (பேராசிரியர் சபா ஜெயராசா) 

நவீன இலக்கிய ரசனையை ஈழத்துத் தமிழார்வலர்கள் மத்தியில் பெருகச் செய்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை. திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் அவரிடம் கல்விபெறும் பெருவாய்ப்புப் பெற்றவர் சு.வே. 

‘பண்டிதமணியின் நன் மாணாக்கர் இருவர் கதைக்கலைப் படைப்பிலும் அதன் உபாசனையிலும் ஆழத் தடம் பதித்தார்கள், ஒருவர் இரசிகமணி கனக செந்திநாதன், மற்றவர் சு.வே. என இலக்கிய உலகம் அழைத்து மகிழும் சு.வேலுப்பிள்ளை பண்டிதமணி வழி யாழ்ப்பாண மண்ணில் விளைந்த செழுமைத் தமிழைப் படைபிலக்கியத்தில் புகுத்திய மூவலர். பண்டித வர்க்கத்தினரைப் படைப்பிலக்கியவாதிகளாக அங்கீகாரம் பெறச் செய்த முன்னோடி. மூதறிஞர் ராஜாஜி மெச்சிதப் புகழ்ந்த உருவகக் கதைக்கலையின் பிதாமகர் (எஸ்.பொ) 

இந்த நவீன இலக்கியம் கருக்கட்டத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு ஆரோக்கியமான களமமைத்துக் கொடுத்த ஈழகேசரியில் 1943ல் ‘கிடைக்காத பலன்’ என்னும் தனது முதல் சிறுகதை மூலம் படைப்பிலக்கியத்துள் கால்பதித்தவர். 

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் 1921ல் பிறந்தவர் சு.வே. அவரது தந்தையார் சுப்பிரமணியமும் தாயார் தையல்நாயகியும் மரபுவழித் திண்ணைப் பாடசாலைகளில் தமிழ் இலக்கணம் கற்றவர்கள். தமிழ் இலக்கணப் படிப்பிலும் இவரது தந்தையார் கொண்டிருந்த ஆர்வமே இவரையும் பற்றிக்கொண்டது. தமிழ்ப் பண்டிதர் படிப்பிலும் ஈடுபடத் தூண்டியது. இலக்கியத் தேடலும் தொடர்ச்சியான வாசிப்பும் அவரை வளர்த்தெடுத்தன. 

ஆசிரியப் பயிர்ச்சிபெற்று ஆசிரியப் பணியேற்ற சுவே., யாழ்ப்பாணத்தில் சுன்னாகம், மானிப்பாய் மலையகத்தின் ஹட்டன், டிக்கோயா போன்ற இடங்களில் ஆசிரியப் பணியாற்றியுள்ளார். 

தமிழ் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் எழுத்தாளர்களாகவும் திகழ்கின்ற ஒரு பாரம்பரியம் நமது இலக்கிய வரலாற்றின் முக்கிய அம்சமாகும். எழுத்துப் பணிகளால் ஆசிரியப் பணியும் ஆசிரியப் பணிகளால் எழுத்துப் பணியும் வளம் பெற்றுள்ளன. 

ஒரு இலக்கியவாதியான ஆசிரியரிடம் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கால நற்பிரஜையாக நல்ல மனிதர்களாக உருவாகும் வாய்ப்புக்கள் அதிகமானதாகவே இருக்கும். மாணவர்கள் இலக்கியம் தெரிந்தவர்களாக வாசிப்பவர்களாக மனிதர்களையும் மற்ற உயிர்களையும் மதிப்பவர்களாகவும் நேசிப்பவர்களாகவும், எதிர்கால இலக்கிய  கர்த்தாக்களாகவும் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம். ஆசிரியப் பணியின் வளமும் அதுதான். அந்தவளம் சு.வே.யிடம் பலமானதாகவே இருந்திருக்கிறது. 

ஹட்டனில் அவரிடம் கல்வி பயின்ற மாணவர் தோட்டத்து உத்தியோகம் வேண்டாமென்று பெற்றோரிடம் கூறிவிட்டு பத்திரிகையில் பணியாற்ற அறுபதுகளில் முன்வந்த ஊடகவியலாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான கார்மேகம் ஒரு சிறிய ஆனால் நேரடியான உதாரணம். 

ஈழகேசரியில் எழுத்தை ஆரம்பித்த சு.வே. சுதந்திரன், மறுமலர்ச்சி, கலைச்செல்வி, வீரகேசரி, தினகரன் எனத் தொடர்ந்து எழுதினார். அவருயை சிறுகதைகள் ‘மண்வாசனை’, ‘பாற் காவடி’ ஆகிய இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 

சு.வே. என்றதும் உருவகக் கதைகளே நினைவுக்கு வரும் அளவுக்கு உருவகக் கதைகளைப் படைத்தவர் அவர்.  

இலக்கிய வடிவங்களில் ஒன்றான உருவகக் கதைகளைப் பற்றிய தரிசனம் தெளிவாகவும் இலகுவாகவும் வாய்ப்பதற்கு உபகாரிகளாய் அமைந்தோருள் சு.வே. மட்டுமே ஈழத்தவர். அவருடைய மணற்கோயில் கதைச் சாதனை ஈழத்து இலக்கியத்துக்குப் பெருமைசேர்க்கும் வரலாறாகும். சிறிய நூல். குறள் நிகர்த்துப் பெருமை சமைத்தது’ (மணற் கோயில் – உருவகக் கதைத் தொகுப்பு – முன்னீடு – எஸ்.பொ) மித்திர பதிப்பகம் சுவேயின் உருவகக் கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. மணற்கோயில் என்னும் பெயரில். இலங்கை அரசின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றியவர் சு.வே. 

மாணவர்களின் வளமானதும் பரவலானதுமான வாசிப்புக்கான கட்டுரை நூல்கள் எழுதி வெளியிட்டமையும் இவருடைய சிறப்பான பணிகளில் ஒன்று. 

நாடகத் துறையிலும் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் பண்டிதர் சு.வே.  கலையரசு சொர்ணலிங்கம், கலைக்கழகத்தலைவர் சு.வித்தியானந்தன் ஆகியோரால் அரங்கியல் செயற்பாடுகளுக்காகப் பாராட்டப்பட்டவர் சுவே. மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்களின் நாடக ஆர்வத்தை நாடகப் போட்டிகள் மூலம் ஊக்குவித்தவர்.    

தெளிவத்தை ஜோசப்

Comments