பண்டைய இந்திரவிழாவே பொங்கலாக மாறியது | தினகரன் வாரமஞ்சரி

பண்டைய இந்திரவிழாவே பொங்கலாக மாறியது

எல்லா இந்துக்களும், தமிழர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையே. பொங்கல் / மஹரசங்கராந்தி / சூரிய நாராயண விழா /  இந்திர விழா ஆகிய பெயர்களில் எல்லா இடங்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தற்போது தமிழர் கொண்டாடி வருகின்ற இத் தைப்பொங்கல் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிற்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் கொண்டுள்ள விழா தைப்பொங்கல் விழாவாகும்.  

பொங்கல் பற்றி தமிழ் இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. பொங்கல் என்ற சொல்லுக்கு சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை ‘கொதித்து மேலெழல்’ அல்லது ‘செழித்தல்’ என்ற பொருள் உண்டு. அது உணவுப்பொருளின் பெயராக முதன் முதலாக ஒன்பதாம் நூற்றாண்டில் வந்த சீவக சிந்தாமணியில் குறிப்பிட்டுள்ளது. பண்டைக் காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம்.  

சேற்றில் நாற்றை அழுத்தி

நடுவதை நற்றிணையில்  

‘நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த  

நடுநரொடு சேறி ஆயின்...’

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.  

புறநானூற்றின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர்,  

 'அலங்கு செந்நெல்  

 கதிர் வேய்ந்த பாய்  

கரும்பின் கொடிக்கீரை  

சாறு கொண்ட களம் போல..'  

எனக் குறிப்பிடுகின்றார். அதாவது நெல்லோடு வேயப்பட்ட வைக்கோல் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் சொல்லப்படுகிறது.  

தை- என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது. சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர்.  

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)  

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறந்தொகை)  

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)  

‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)  

‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)  

எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றனர். இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை எடுத்துக்காட்டுகின்றன. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுந்த சீவக சிந்தாமணியிலும் பொங்கல் பற்றி வருகிறது.  

‘மதுக்குலாம் அலங்கல் மாலை  

மங்கையர் வளர்த்த செந்தீப்  

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ எனக் கூறுவதன் வாயிலாக பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது சீவக சிந்தாமணி.  

தை முதலாம் திகதி அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இத் தைப்பொங்கல்  விழா கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாக இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு, கனடா, ஐக்கிய ராஜ்யம், அவுஸ்திரேலியா எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே கொண்டாடப்படுகிறது.  

சங்ககாலத்தில் அறுவடை சமயத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதமிருப்பார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. மணிமேகலையின் ஆரம்பமான “விழாவரை காதையில் “இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இப்போது பொங்கல் தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த காலத்தில் இருபத்தி எட்டு நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன.  

சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப் பிரிகிறது. இங்கே. இதில் தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: முல்லை – மாயோன் - திருமால் (விஷ்ணு), குறிஞ்சி – முருகன், (கார்த்திகேயன்), மருதம் – இந்திரன், நெய்தல் – வருணன், பாலை – கொற்றவை (சக்தி) என தான் வழிப்பட்டனர். இந்த மருத நிலம் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும்.  

தை பிறக்கும் போது, தண்ணீர் நன்றாகவே தெளிந்து விடும். இயற்கையையும், நீர் நிலைகளையும் தெய்வமாக நினைத்த அந்நாள் மக்கள், ‘தவத்தை நீராடுதல்’ என்பதை ஒரு தவமாகவே செய்தனர்.  

சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப் பிரிகிறது இங்கே. இதில் தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: முல்லை – மாயோன் - திருமால் (விஷ்ணு), குறிஞ்சி – முருகன், (கார்த்திகேயன்), மருதம் – இந்திரன், நெய்தல் – வருணன், பாலை – கொற்றவை (சக்தி).  

இந்த மருதநிலம் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும்.  

விவசாயத்திற்கு தேவை மழை. அந்த மழையை கொடுப்பது மேகம். அந்த மேகங்களை இயக்கும் கடவுள் இந்திரன்! ஆகவே காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் அடைந்துள்ளது!  

முதன் முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூசை வழிபாடுகள் நடைப்பெற்றன. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர்செழிக்கும் என மக்களின் நம்பிக்கை. பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன் சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளை பொங்கல் படைத்து வழிபட்டனர். பூமியில் உள்ள நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புதுநெல் தை முதல்நாளில் சமையல் செய்யப்பட்டது. இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.  

மறுபுறம் உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் என உழவர்கள் கொண்டாடுகின்றார்கள்  

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,  

வையை! நினக்கு மடை வாய்த்தன்று.  

மையாடல் ஆடல் மழ புலவர்

மாறு எழுந்து,  

பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,  

அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90  

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?  

நீ உரைத்தி, வையை நதி! - பரிபாடல் 11  

தாயும் மகளுமாக பனி நீரில் மூழ்கி எழுந்து, ஆங்கே நதிக்கரையில் ஆதிரையோனுக்குச் செய்யும் ஹோமத்தீயை வலம்வந்து, முன்பிறவியில் செய்த தவப்பயனோ இன்று நாம் இருப்பதும் இந்த வைகையில் குளிப்பதும் என்று வியந்து, கண்ணாடி போலத் தெளிவாகத் தெரியும் நீரே, எம் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நீ தைத்துக் கொள்ளும் வண்ணம் தெளிவாக இருக்கிறாய், தை நீரே, நீ தான் எங்கள் வேண்டுதல்களை வாங்கிக்கொள்ளத் தக்கவள் என்று கூறுவர்  

“நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்” - பரிபாடல் 11.  

மார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி, மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள்.  

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல் நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபும் உண்டு.  

‘பொங்கலோ பொங்கல்  

மாட்டு பொங்கல்  

பட்டி பெருக பால் பானை பொங்க  

நோவும் பிணியும் தெருவோடு போக‘ என்று கூறி  

மாடு, பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளித்து மாட்டுப் பொங்கலை கொண்டாடுவார்கள். பழந்தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிய பொங்களைப் பற்றி வரலாற்றுக்காலங்கள் தொட்டு சான்றாதாரங்கள் உண்டு.  

மேலும் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளை ஆட்சி செய்த ஐரோப்பியர் குறிப்பாக போத்துக்கீசர் பொங்கலின் சிறப்பினை தெளிவு படுத்தியிருக்கின்றனர். கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போத்துக்கீச அறிஞர் தான் எழுதிய ‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலில் பொங்கல் உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறாக தமிழர் திருநாளான பொங்கல் வரலாற்றுக்காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதனைக் காணலாம்.  

தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர். அதாவது சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் உத்தராயண காலம் எனவும், ஆவணி முதல் மார்கழி வரை தென் திசையில் சஞ்சரிக்கும் காலம் தெட்சிணாயணம் எனவும் சொல்லப்படும்.  

பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து வடதிசைக்குத் திரும்புவதாக ஒரு ஐதீகம். வான சாஸ்திரத்தின் படியும், சோதிட சாத்திரத்தின் பிரகாரமும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்கினத்தில் இருந்து மகர லக்கினத்திற்கு வருவதாக்க கூறப்படுகின்றது. இதை மகர சங்கிராந்தி என்பர். இதுவே பொங்கல் தினமாகும். உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு அர்ப்பணம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய ரீதியிலும் முக்கியம் பெறுகின்றது. 

ஆர். மகேஸ்வரன் 
நூலகர் 
பேராதனைப் பல்கலைக்கழகம்     

Comments