நல்லூரிலும் இனிமேல் தமிழில் பூசை நடக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

நல்லூரிலும் இனிமேல் தமிழில் பூசை நடக்குமா?

பிராமணர் என்றும் சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்ற மாயைக்குள் மூழ்கியிருப்பதே சைவ வழிபாட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு காரணம். மக்களிடம் உள்ள இந்த மாயை எப்போது நீங்குகிறதோ அன்று தான் மாற்றம் ஏற்படும்.அன்று நல்லூரிலும் தமிழ் கேட்கும் என தமிழ் மொழியில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளும் பிரதாப் என்பவர் தெரிவித்தார்.  

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தற்போது யாழ்ப்பாணம் உட்பட நாடு மூழுவதும் பல ஆலயங்களில் பூசைகளையும், குடமுழுக்கினையும் தமிழில் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பல வாழ்வியல் சடங்குகளையும் தமிழ் மொழியில் செய்துவருகின்றார்.  

இந்நிலையில் தமிழில் பூசை செய்வது தொடர்பாக அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டவை வருமாறு,  

கேள்வி : நீங்கள் எவ்வளவு காலமாக தமிழில் பூசை செய்கிறீர்கள் ?  

பதில் : தமிழ் மொழி மீது கொண்ட காதலால் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து தீட்சை பெற்று தமிழில் பூஜை செய்துவருகிறேன். செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்திவேல் முருகனாரிடம் பூசை முறைகளை கற்று இதனை மேற்கொண்டு வருகின்றேன்.  

கேள்வி : நீங்கள் இதுவரை எத்தனை குடமுழுக்கு செய்துள்ளீர்கள் ?  

பதில் : நாடுமுழுதும் 11குடமுழுக்கு செய்துள்ளேன். இது தவிர வாழ்வியல் சடங்குகள் பலவும் செய்துள்ளேன்.  

கேள்வி : பூசைகளை தமிழில் செய்வதற்கும் சமஸ்கிருதத்தில் செய்வதற்கிடையே என்ன வித்தியாசம் ?  

பதில் : என் தாயை தாய் என்று அழைப்பதற்கும் மம்மி என்று பிற மொழியில் அழைப்பதற்கும் வித்தியாசம் உண்டு. என் தாயை தாய் என்று அழைப்பதற்கே நான் விரும்புகிறேனே தவிர பதப்படுத்தப்பட்ட பிணம் என்று (மம்மி) அழைக்க விரும்பவில்லை.  

கேள்வி : சமஸ்கிருதத்தில் வழிபாடுகளுக்கு மந்திரங்கள் உள்ளது போன்று தமிழிலுள்ளனவா ?  

பதில் : ஒவ்வொரு தெய்வ வழிபாட்டுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை திருமுறைகள் பல உள்ளன. அதனை தொகுத்து செய்கிறோம். அது போன்று 14வாழ்வியல் சடங்குகளுக்கு எனவும், குடமுழுக்குக்கு எனவும் தனித்தனியாக மு.பெ.சத்திவேல் தொகுத்து தந்துள்ளார்.  

கேள்வி : உதாரணமாக பெயர் கூறி அர்ச்சனை செய்வதாயின் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் உள்ளன. அது போன்று தமிழில் என்ன கூறி அர்ச்சனை செய்வீர்கள் ?  

பதில் : உங்களது பெயர் நட்சத்திரங்களை கூறுங்கள்?  

ரோகினி நச்சத்திரம் .... எனும் திருப்பெயருடைய அனைத்து களவாய்களும் நீங்கப்பெற்று பேரானந்த பெருவாழ்வு வாழவே இன்மையிலும் மறுமையிலும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்,   தீர்க்க ஆயுளும் பெற்று பெருவாழ்வு வாழவே துதிவாணி வீரம் விஜயம் சந்தானம் துணிவு தனம் அரிதாண்யம் சௌபாக்கியம் அறிவு அழகு புதிதாய் பெரும் அறம் குலம் நோயின்மை ஊன்வயது பதினாறு பேறும் பெருவாய் மதுரை பராபரனே என்றும், அதேபோன்று அபிராமி அந்தாதியில், கரையாத கல்வியும் குறையாத வயதுமோர்   கவடுவாயாத நட்பும் கண்ணாத வழமையும்   குன்றாத வழமையும், கழு, பிணி இல்லாத உடலும்   சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், அன்பகலாத கணவனும் ...... என வாழ்த்துப்பாக்களும் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே பூசை செய்கிறோம்.  

கேள்வி : சமஸ்கிருத மந்திரத்துக்கு சக்தியிருப்பதாகவும், அதிலும் காந்த சக்தியிருப்பதாகவும் கூறப்படுகிறதே ?  

பதில் : அப்படி கூறுவதற்கு அந்த மொழி விளங்க வேண்டுமே! அந்த மொழியில் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாத போது அதற்கு சக்தியுள்ளது என்று எப்படி கூறுவீர்கள்?. ஆனால் தமிழ் மொழியில் நாம் சிவன் என்கிறோம், எழுந்தருளி என்கிறோம், வந்தருளி என்கிறோம். அது மக்களுக்கு விளங்குகிறது. ஆனால் சமஸ்கிருதம் அப்படியில்லையே.  

அத்துடன் சமஸ்கிருதம் பேச்சு மொழியும் அல்ல. அதற்கு எழுத்து வடிவமும் பாளி மொழியில் தான் உள்ளது. இல்லாத ஒரு மொழி எமக்கு வேண்டாம்.  

கேள்வி : இலங்கையில் நல்லூர் போன்ற பெரிய ஆலயங்களில் ஏன் இப்போதும் சமஸ்கிருதத்தில் தானே பூசை செய்கிறார்கள் ?  

பதில் : பிராமணர் என்றும், தெய்வீக மொழி சமஸ்கிருதம் என்றும் மாயைக்குள் முழ்கிவிட்டோம். எப்போதுமே நாம் முற்றத்து மல்லிகையை மணப்பதில்லையே!  

எம் மொழிக்கு எம் தேசத்திலேயே சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. பலர் இது தொடர்பாக புரிதல் இல்லாமல் இருக்கின்றார்கள். எப்போது புரிதல் ஏற்படுகிறதோ அன்று நல்லூரிலும் தமிழ் கேட்கும்.  

கேள்வி : சமஸ்கிருத முறையிலான பூசைக்கும் தமிழ் மொழியிலான பூசைக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா?  

பதில் : இல்லை. பெரும்பாலும் இரண்டிலும் மு​ைறமையில் ஒன்றாகவே உள்ளது.  

கேள்வி : தமிழ் மொழியிலான வழிபாட்டு முறையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா ?  

பதில் : ஆம். இதுவரை எதிர்ப்பு ஏற்படவில்லை. எம்மோடு இணைந்து அவர்களும் திருமுறைகளை ஓதி வழிபடுகிறார்கள்.  

கேள்வி : அனைத்து சைவ ஆலயங்களிலும் தமிழ் மொழியில் பூசை செய்யும் நிலை ஏற்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?  

பதில் : மக்கள் மத்தியில் புரிதல் வர வேண்டும். என் மொழியில் நான் வழிபட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். என் மொழி புரியாதவன் எப்படி தெய்வமாவான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.  

கேள்வி : பூசை செய்வதற்கு எவ்வளவு கால பயிற்சி வழங்கப்படுகிறது? என்ன முறைகளில் அவை அளிக்கப்படுகின்றன?.  

பதில் : பத்து நாட்களுக்கு அனுட்டான முறைகள், தமிழ் வழிபாட்டு முறை என்றால் என்ன என்பது தொடர்பாக அடிப்படை பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதன் பின்னர் 2மாத வதிவிட பயிற்சி. ஆறு மாதங்களின் பின்னர் வாழ்வியல் சடங்கு தொடர்பாக பயிற்சியும், ஒரு வருடத்தின் பின்பு குடமுழுக்கு தொடர்பான பயிற்சியும் வழங்கப்படுகிறது.  

கேள்வி : தமிழ் மொழி பூசை வழிபாட்டுக்கு என புதிதாக மந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? அல்லது அவை எங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன?  

பதில் : நாயன்மார்கள் உருவாக்கிய தேவாரங்கள், திருமுறைகள் என்பவற்றிலிருந்தே அவை எடுக்கப்பட்டுள்ளன. மு.பெ.சத்திவேல் தேவராங்களிலிருந்து சில வரிகளை பிரித்தெடுத்து மந்திரங்களாக தொகுத்துள்ளார் திருமந்திரங்களிலும் மந்திரங்கள் உள்ளன.    

சந்தித்து பேசியவர் ரி.விரூஷன்   

Comments