புதிய பாதையில் | தினகரன் வாரமஞ்சரி

புதிய பாதையில்

காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. நித்திரையில் ஆழ்ந்திருந்த மகளை அன்போடு தட்டி எழுப்பினாள் பாத்திமா. ஏதோ சாக்குப் போக்கைச் சொல்லி படுக்கையில் கிடந்தான் அன்வர்.

பாத்திமாவுக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவன் தான் அன்வர். இவர்கள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையில் தாயும், தகப்பனும் கவனம் செலுத்திவந்தார்கள்.

தகப்பன் கூலிக்கு நெசவுவேலை செய்பவர். அவருடைய வருமானத்தில் அளவோடு வாழ்ந்தார்கள். மனைவியும் சில வேலைகளைச் செய்து விற்பனை செய்தாலும் குடும்பச் செலவு மேலதிகமாகவே இருந்தது.

அக்கம் பக்கம் செல்வந்தர்கள் வாழ்ந்தாலும் அவர்களும் சில உதவிகளைச் செய்து வந்தார்கள். அவர்களோடு அன்பாக இருந்து கேட்கும் போதெல்லாம் சிறிய சிறிய வேலைகளைச் செய்து கொடுப்பாள் பாத்திமா.

பிள்ளைகளின் படிப்பை இடை நிறுத்தி விடாமல் தொடர்ந்து கவனம் செலுத்தினார்கள். குடும்பத்தின் வருமான நிலை பிள்ளைகளுக்கு நன்றாகத் தெரிந்தும் அளவோடு செலவுகளை செய்வதை பழக்கத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள். பிள்ளைகளை படிக்க வைக்க ஏற்படும் கஷ்டத்தை பார்த்த பக்கத்துவீட்டுக்காரர்கள் பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி விட்டு ஏதாவது தொழில் செய்ய ஆலோசனைகள் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

மகன் வீட்டுக்கு நேரகாலத்தோடு வந்து சேராமல் பிந்திவருவதை தாய் கண்டித்தாள். அவளுடைய கண்டிப்பை உதாசீனம் செய்யாமல் ஏற்றுக்கொண்டான். மறுத்துப்பேசினால் என்ன நடக்கும்  என்பதும் அவனுக்குத் தெரியும்.

“என்னம்மா நீங்க பேசுறீங்க நண்பனுடைய வீட்டில் படிச்சுப்போட்டு கொஞ்ச நேரம் விளையாடியதால் பிந்திப்போய் விட்டது. இதற்குப் போய் நீங்க பேசிறீங்களே.

‘சரி சரி சாப்பாடு வெச்சிருக்கு போய்ச் சாப்பிடு’

இதையெல்லாம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்த தகப்பன் சற்று கோபமாக இருந்ததையும் பார்த்துவிட்டாள்.

“மகன் படிக்கிற காலத்தில படிச்சுக்க வேணும் அதையெல்லாம் விட்டுப் போட்டு மாட்டாங்கித் தனம் பண்ணிக்கிட்டா எல்லாமே கெட்டுப் போய்விடும். பணக்கார பிள்ளைகள் எப்படியும் வாழட்டும் நாம ஏழையாக இருக்கிறம் ஏதோ கஷ்டப்பட்டு படிச்சுக்கிட்டா ஏதாவது ஒரு உத்தியோகம் கிடைக்குமே!

தகப்பனின் புத்திமதியைக் கேட்டு கண்கலங்கி கடந்துபோன காயங்களை நினைவுபடுத்திப் பார்த்தாள். நண்பர்களின் செயற்பாடுகளையும் கவனித்தான் ஆசிரியர்கள் சொன்ன விடயங்களும் மனதை சிந்திக்க வைத்தது. ஏதோ ஒரு முடிவை எடுக்க எண்ணினான்.

பாத்திமாவின் மகன் படிப்பில் கரிசனை காட்டினாலும் அவனுடைய நடத்தையில் மாற்றங்கள் காணப்பட்டதைப் பற்றி மனைவியிடத்தில் சூசகமான முறையில் சொல்லி வைத்ததை அலட்சியமாக எண்ணாமல் கண்ணோட்டம் விட்டுப் பார்த்த போது உண்மை தெரிய வந்தது.

மகனின் நண்பர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டபோது அவர்களைக் கடிந்து கொண்டு வீட்டுக்கு வர அனுமதிக்காமல் எதை எதையோ சொல்லி அனுப்பிவிட்டதை எண்ணி கவலைப்பட்டு தாயைக் கடிந்து பேசினான் மகன்.

பாடசாலை ஆசிரியர்கள் மகனின் நடத்தை பற்றி எடுத்துச் சொன்னபோது அவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது பெருந்தவறு என்பதை உணர்ந்த பின் ஒப்புக்கொண்டாள்தாய்.

“மகன் நீ படிக்க வேணும் இல்லாட்டி ஏதாவது தொழில் செய்து பணத்தை தரவேணும் இல்லாட்டி வீட்டை விட்டு எங்கேயாவது ஓடிப்போய் விடு” என்று கடிந்து பேசினாள்.
தான் போதைப் பொருள் பாவிப்பதை பெற்றோர்கள் எப்படியோ அறிந்து கொண்டார்கள் இனிமேலும் பெற்றோரை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். அதனை விட்டு விடலாம் என்றால் முடியாமல் இருப்பதையும் எண்ணிக் கவலைப்பட்டான்.
விடுபட்டுக் கொள்ள எண்ணினாலும் நண்பர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்களே என்று கவலைப்பட்டான் அன்வர்.

வழமைபோல் அன்வரைத் தேடி அவனுடைய வீட்டுக்கு நண்பர்கள் வந்திருந்தபோது அவர்களிடத்தில் அன்வரின் தாய் கடினமாகப் பேசினாள்.

“தம்பிமாரே நீங்களெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். படிப்பதில் கவனம் செலுத்தாமல் ஏன்தான் காலத்தைக் கழிக்கிறீங்க”

“நாங்க அன்வரையும் கூட்டிக்கொண்டு படிக்கத்தான் போறம்”

படிக்கப்போறீங்களெண்டு என்ன வேலை செய்கிறீங்க எண்டு தெரிஞ்சுதான் பேசுறன். அன்வர் வரமாட்டான் நீங்க போய்டுங்க”

தாய் பேசியதை அலட்சியப் படுத்திவிட்டு நண்பர்கள் போவதை வேதனையோடு பார்த்தான் அன்வர்.

அன்வரின் நட்பு இனிமேல் சரிவராது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் அவனை விட்டும் தூரமானார்கள். ஏழையாக இருந்து கொண்டு எப்படி எல்லாம் பேசி விட்டாள் அவனுடைய தாய்” என்று அவர்கள்  பேசிக் கொண்டார்கள்.

பொருத்தமற்ற நண்பர்களின் உறவை வெறுத்தான். போதைப்பொருளை அவர்கள் பாவித்தது மட்டுமல்லாமல் தன்னையும் அதற்கு அடிமையாக்கி விட்டார்களே என்று மனம் வருந்தி தன்னுடைய தாய் எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை மனப்பூர்வமாக ஏற்றான். தீய நட்பு தொல்லைகளை உண்டாக்கும் என்னும் முதுமொழியை ஒருகணம் மீட்டான்.

மாலை நேரத்தில் அவனை அழைத்துக் கொண்டு ஓட்டை ஒடிசலாக இருக்கின்ற வீட்டுத்திட்டங்களில் ஒன்று கூடி போதைப் பொருளை பாவித்தவர்களில் அன்வர் மட்டும் ஏழைப் பையன். வசதியற்றவனை எப்படியோ வசப்படுத்தி தங்களுடைய கைக்குள் போட்டுக் கொண்டதால் அன்வர் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

அன்வரின் நடத்தைக் கோலங்களைக் கண்ட பாடசாலை ஆசிரியர்கள் அவன் மீது பரிதாபப்பட்டு அவனுடைய பெற்றோர்களை அழைத்து விடயத்தை எடுத்துச் சொல்லி பாடசாலையின் நன்மதிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு சில நாட்களுக்கு அனுமதி மறுத்தார்கள்.

ஏழைப் பையனாக இருந்தாலும் கல்வியில் மிகுந்த  ஆர்வம் கொண்டவன். மற்றப் பிள்ளைகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருந்தவனை எப்படியாவது வீழத்திவிட வேண்டும் என்று  கீழ்த்தரமான இசயல்களை மறைமுகமாக செய்தார்கள் நண்பர்கள்.
தகப்பன் உடல்வருந்தி உழைத்து வந்த பணத்தை அழித்து விட்டேனே. நண்பர்கள் புத்திமதி சொல்லாமல் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டார்களே என்று வருந்தினான். கவலைப்பட்டான் கண்ணீர் விட்டான். வலிந்து போதைப் பொருளை பாவிக்க பழக்கி விட்டு  நல்லவர்கள்போல பாசாங்கு செய்துவிட்டார்களே என்று கதறினான்.

“என்னடா உன்னை வீட்டுக்கு வரவேணாம் என்று சொன்னது நினைவில்லையா? ஏன்டா வந்தாய் எங்கேயாவது போய் தொலையன்டா”

“தாயின் கடினமான பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை. அசையாமல் நின்றான்”
கூலி வேலை செய்து விட்டு களைப்போடுவந்த தகப்பன் அவனிடம் எதுவும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றார். மனைவியிடம் எதை எதையோ பேசினார். மனைவி விடாப்பிடியாகவே இருந்தாள்.

“வாப்பா இனிமேல் நான் போதைப் பொருள் பாவிக்கமாட்டேன். பாவிக்கின்ற நண்பர்களோடும் சேரமாட்டேன்.

தங்கையின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டான். அவளுக்காகவது என்னை உள்ளே அழைத்துக் கொள்ளுங்கள்.

பெற்ற மனம் பேதைதானே. கண்கலங்கி நின்றவனை கட்டியணைத்து உள்ளே அழைத்தார்கள். இந்த விடயம் எப்படியோ நண்பர்கள் குழாமிற்குத் தெரிய வந்தது. அவர்களை விட்டும் அவன் தூரமானான். கடந்த காலங்களில் செய்த தவறுகளை கிள்ளி எறிந்தான். நண்பர்களின் பசப்பான வார்த்தைகளுக்கு அடிபணியாமல் விளித்துக் கொண்டான்.

பொருத்தமற்ற நண்பர்களை விட்டும் விலகியவனை பெற்றோர்கள் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனுடைய வரவை எதிர்பார்த்த ஆசிரியர்கள் உண்மைநிலை அறிந்து வரவேற்றார்கள். நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.தான் போதைப் பொருள் பாவிப்பதிலிருந்து முற்றாக விலக  உதவிய ஆசிரியர்களை மனதார  வாழ்த்தினான்.

தங்கையின் எதிர்காலம், பெற்றோருக்கு ஏற்பட்ட வலி எல்லாம் சேர்ந்து  அவனை புதிய மனிதாக்கியது. அவனுடைய நற்செயலால் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருந்த நண்பர்கள் கூட தங்களை  மாற்றிக் கொள்ள முன்வந்தார்கள்.

மருதமுனை
ஏ.எம்.எம். அன்வர்

Comments