சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்துக்கு கட்டியம் கூறும் தலிபான்களுடனான சந்திப்பு | தினகரன் வாரமஞ்சரி

சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்துக்கு கட்டியம் கூறும் தலிபான்களுடனான சந்திப்பு

இஸ்லாமிய அரசியல் பரப்பில் அமெரிக்காவிற்கான செல்வாக்கில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்காலத்திலிருந்து படிப்படியாக மேற்காசிய உட்பட இஸ்லாமிய அரசியலில் செலுத்தி வந்த ஆதிக்கம் குறைவடைய தொடங்கியது. அத்தகைய சரிவை தடுக்கும் உபாயம் ஏதும் அற்றவராக பின்வந்த அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் காணப்படுகின்றார். அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேற்றம் என்பது அந்தப் பிராந்தியம் நோக்கிய மேற்குலக ஆதிக்கம் முடிபுக்கு வருவதாகவே தெரிகிறது. ஆனால் இவ்வாறு பல வருடங்களாக மேற்கு இப்பிராந்தியத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ள போதும் முழுமையாக பின்வாங்கும் நிலையை எடுக்கத் தயங்குவதையும் குறிப்பிட்டாக வேண்டும். தற்போதைய நிலை மேற்கின் தயக்கத்தையும் கடந்ததாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாது இப்பிராந்தியம் மீது சீனாவும் ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தர முனைகின்றன. ரஷ்யா ஏற்கனவே புவிசார் அரசியலைப் பொறுத்து இஸ்லாமிய நாடுகளுடன்  நெருக்கமான நட்புறவை பலமாக்கியுள்ளது. அதனையே பின்பற்ற முனையும் சீனா ஆப்கானிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இக்கட்டுரையும் சீனா-, தலிபான சந்திப்பு பற்றிய தேடலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

27.07.2021 அன்று தலீபான் அமைப்பின்  ஸ்தாபகரில் ஒருவரும் அதன் தலைமையில் ஒருவருமான முல்லா அப்துல் ஹானி பாதர்  தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளது. இக்குழு சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இச்சந்திப்பைப் பொறுத்து தலிபான செய்தி தொடர்பாளர் முகமது நஜீம் குறிப்பிடுகையில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசியல் இராணுவ நிலை குறித்தும் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பிலும் மற்றும் அரசியல் பொருளாதார நிலை குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டதோடு ஆப்கானிஸ்தான் நிலத்தை சீனா உட்பட எந்த நாட்டுக்கு எதிராகவும் யாரும் பயன்படுத்த அனுமதிக்க ப் போவதில்லை என  சீனாவுக்கு உறுதியளிக்கப்பட்டதாவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைக்கு பதிலளித்த சீனா ஆப்கானிஸ்தானில் சீனா நேரடியாக தலையிடாது எனவும்,  தலிபான்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதாகவும் சமாதான பூர்வமாக பிரச்சினையை தீர்க்க சீனா உதவுவதாக உறுதியளித்துள்ளது எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் நேட்டோப் படைகளின் வெளியேற்றம் தலிபான்களுக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது. ஏறக்குறைய நகரங்களை விட கிராமங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்த தலிபான்கள் தற்போது நகரங்களையும் நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அண்மையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தொழுகையில் ஈடுபட்டிருந்த பள்ளிவாசலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் தலிபான்கள் நகரத்தை எட்டிவிட்டனர் என்ற செய்தியைத் தந்துள்ளது. அதே நேரம் தலிபான்களது வருகையினால் ஏற்பட்ட சண்டையில் அதிக பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் அதில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதி டெபோரா லயோன்ஸ் தெரிவித்துள்ளார். 2021 இல் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வன்முறையில் 1659பேர் கொல்லப்பட்டனர் எனவும் 3254 பேர் காயமடைந்தனர் எனவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 468 குழந்தைகளும் 219 பெண்களும் அடங்குகிறார்கள். இத்தகைய உயிரிழப்புக்கு தலிபான்கள் (39%) ஐ.எஸ் அமைப்பினர்(9%) அரச படைகள் (23%) மற்றும் அரச படைகளுக்கு ஆதரவான ஆயுதக்குழுக்கள் (2%) என்போர் காரணம் எனவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் தலிபான் மீதான அமெரிக்க தாக்குதல் இதனைவிட அதிக மக்களை பலியெடுத்ததென்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறான சூழலில் சீனா -தலிபான் நெருக்கம் அதிகரித்துவருவதற்கான காரணங்கள் பற்றிய தேடல் அவசியமானது. அதனை விரிவாக நோக்குவோம்.

முதலாவது, சீனாவைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் தரைவழியாக பாதுகாப்பு சார்ந்து அதிக நெருக்கடியை எதிர்கொள்வதோடு  ஆப்கானிஸ்தான் உலகளாவிய ரீதியில் கேந்திர நிலையத்திலுள்ளதை கருத்தில் கொள்கிறது. அதனால் ரஷ்யா, சீனா மட்டுமல்ல மத்திய ஆசியா,  தென்னாசியா,  மேற்காசியா ஆகிய பிராந்தியங்கள் ஆப்கானிஸ்தான் நிலப்பகுதியினால் அதிக நெருக்கடிகளை எதிர் கொள்கின்ற பிராந்தியங்களாக  உள்ளன. அது மட்டுமன்றி சோவியத் யூனியன் மற்றும் தற்போதைய அமெரிக்க நெருக்கடிக்கும் ஆப்கானிஸ்தான் மீதான படைக்குவிப்பு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது என்ற அனுபவத்தையும் கொண்டுள்ளது. இதனால் தலிபான்களுடனான உறவை நிதானித்து,  அதே நேரம் அந்நிலத்தின் முக்கியத்துவம் கருதி கையாள சீனா முனைகிறது.

இரண்டாவது சீனாவின் உலகளாவிய ஆதிக்க போட்டியென்பது அமெரிக்காவுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. அதனால் அமெரிக்காவுக்கு எதிரான தலிபான அணியினை அரவணைப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான துரும்பாக தலிபான்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ள ஓர் இஸ்லாமிய ஆயுத அமைப்புடன் சீனா வெளிப்படையாக உரையாடுவது தனித்துவமானது. அதற்கான முக்கியத்துவம் இஸ்லாமிய அமைப்புக்களுடனான நெருக்கத்தை காட்டிலும் அமெரிக்காவுக்கு எதிரான நகர்வுகளுக்கு தலிபான்கள் உதவக் கூடிய பிரிவினர் என சீனா கணிக்கிறது.

மூன்றாவது சீனாவின் கம்யூனிஸ சிந்தனையும் தனது ஜின்ஜாங் மாகாணத்திலுள்ள உய்கர் முஸ்லிம்கள் தொடர்பாக பின்பற்றும் கொள்கை தொடர்பில் ஏற்பட்டுவரும் விமர்சனமும் இஸ்லாத்திற்கு எதிரான நாடு என்ற வடிவத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அதனை முறியடிக்க வேண்டுமாயின் இஸ்லாமிய நாடுகளுடனும் அதன் வழி இயங்கும் அமைப்புக்களுடனும் நெருக்கமான உறவை கொள்ள வேண்டியது அவசியமானது. அது மட்டுமன்றி  துர்கிஸ்தான் வழியாக கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் நேரடியாக சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தலிபான் போன்ற அமைப்புக்களுடனான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் சீனாவில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய நெருக்கடியை கையாளலாம் எனக்கருதுகிறது.

நான்காவது சீனாவின் உலகளாவிய ஆதிக்கப் போட்டி இவ்வாறான அமைப்புகளை கையாளுவதன் மூலம் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. அதாவது உலக வல்லரசுக்கு இருக்க வேண்டிய பிரதான இயல்பாக ஆயுதக் குழுக்களையும் அமைப்புக்களையும் கையாளுவதாகும். அதனை தலிபானிலிருந்து ஆரம்பிக்க திட்டமிடுகிறது சீனா. ஆனால் தலிபானுக்கு எதிரான அமைப்புக்களை  சீனாவுக்கு எதிராக செயல்பட தூண்டப்படுகின்ற நிலை தவிர்க்க முடியாததாகும். ஆனால் புவியியல் ரீதியாகவே சீனா தனது தாய் நிலத்தையும் தனது கொள்கைகளையும் பாதுகாக்க திட்டமிடுகின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஐந்தாவது, தலிபான் அமைப்பினைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு எதிரான கூட்டுடன் இணைவது மட்டுமன்றி எதிர்கால உலகளாவிய வல்லரசுடன் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமானது என கருதுகின்றன.

சீனா அடுத்துவரும் வல்லரசு என்பதில் மாற்றுக் கருத்தற்ற உலகச்சூழல் நிலவுகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு தலிபான் இயங்க ஆரம்பித்துள்ளது. அது மட்டுமன்றி அதன் பயங்கரவாத முகத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் ஆட்சியை வழி நடத்தும் சக்தியாக மாற்றமடைவதற்கு திட்டமிடுகிறது.

ஆறாவது தலிபான் அமைப்பினர் வெளிப்படையாகவே சர்வதேச அங்கீகாரம் தமது அமைப்புக்கு கிடைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் தமது தலைவர்கள் தடையின்றி உலக நாடுகளில் சுதந்திரமாக பயணிக்கவும் அமைப்பின் மீதும் தலைமைகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் செயல்படுகின்றனர். எனவே தலிபான்களைப் பொறுத்தவரை தமது அமைப்பினை சர்வதேச மட்டத்தில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற நிலையிலிருந்து விடுவிப்பது பிரதான நோக்கமாகவுள்ளது.

எனவே சீனா தனது உலக வல்லரசு திட்டத்தையும் தாய் நிலம் மீதான இஸ்லாமியரது தவறான கணிப்பீடுகளையும் சரி செய்யத்திட்டமிட்டுள்ளது. அதற்கான இராஜதந்திர நகர்வாகவே தலிபானுடனான சந்திப்பினை நிகழ்த்தியுள்ளது. அதனையும் மிக தந்திரமாக கையாண்டுள்ளது. அமெரிக்காவை இஸ்லாமிய  நாடுகளிலிருந்து முற்றாகவே துடைத்தெறியும் உபாயத்தை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா அமெரிக்காவை வெளிப்பவடையாக எதிர்த்து வரும் நிலையில் தற்போது சீனாவும் வெளிப்படையாக பிற பிராந்தியங்களில் எதிர் கொள்ளத் தயாராகி விட்டது. இதற்கான நகர்வுகளை சீனா மேற்காசியப் பரப்பில் தொடங்கவுள்ளதாகவே தெரிகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

 

Comments