ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மீள் எழுச்சி | தினகரன் வாரமஞ்சரி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மீள் எழுச்சி

தலிபான்களின் மீள் எழுச்சிக்கு அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அமைய வாய்ப்புள்ளதாக மேற்குலக ஊடகங்கள் விமர்சிக்கின்றன. இருபது வருட அமெரிக்க ஆக்கிரமிப்பு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க துருப்புக்களால் கடந்த ஏப்ரல் வரையும் அரசாங்க அறிவிப்பின் பிரகாரம் கொல்லப்பட்டோர் 2448 பேர் எனவும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் 3846 பேர் எனவும் ஆப்கானிஸ்தான் இராணுவம் மற்றும் காவல்துறையினர் 66000பேர் எனவும் நேட்டோ படைகள் 1144 பேர் எனவும் ஆப்கான் மக்கள் 44245பேர் எனவும் ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இது மட்டுமன்றி ஏறக்குறைய இரண்டு ரில்லியன் அமெரிக்க டொலர் சொத்திழப்பினை அமெரிக்கா அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இத்தகைய இழப்புக்கு பின்னர் அமெரிக்காவின் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. அதனை அடுத்து தாலிபான்கள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்தனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியும் நாட்டை விட்டுச் தப்பிச் செல்லும் போது கோடிக்கணக்கான பணத்தை கொண்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாராள ஜனநாயகவாதிகளின் கைக்கூலிகளது அநாகரீகமான செயல்கள் வெளியாகிறது. தாலிபான் அந்நாட்டை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan) என அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதும் அமெரிக்காவுடன் பணிபுரிந்தவர்கள் வெளியேறுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் அமெரிக்கா இருபது வருடங்களாக அந்த நாட்டின் மேற்கொண்ட பண்பாட்டு அழிப்புகள் என்பன தெரியவர ஆரம்பித்துள்ளது.இக்கட்டுரையும் அமெரிக்க வெளியேற்றத்திற்கு பின்னரான தலிபானின் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வுகளையும் தேடுவதாக உள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் போது அம்முடிவை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்த கருத்துக்களை முதலில் நோக்குவது பொருத்தமானது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் விடயங்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன். நாங்கள் ஆப்கான் நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று அங்கு செல்லவில்லை. அது எங்கள் பணியல்ல. அந்த நாட்டுக்கு சில குறிக்கோள்களுடன் சென்றோம். அல்கொய்தாவை முறியடிக்கவும் ஒசாமா பில்லேடனை பிடிக்கவும் போர் நடத்தப்பட்டது. அமெரிக்கப்படைகள் வெளியேற எதுவும் தகுந்த நேரம் கிடையாது. எப்போது படைகளை வெளியேற்றினாலும் இதே நிலைதான். ஆப்கான் படைகள் தோற்றுவிட்டன. ஜனாதிபதியும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தலிபான்களை ஆப்கான் அரசும் படைகளும் எதிர்க்காத போது நாம் ஏன் எதிர்க்க வேண்டும். ஆப்கான் படைகள் தங்கள் நாட்டை காக்காத போது அப்படியொரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்கு கிடையாது. வாழ்நாள் முழக்க அமெரிக்க படைகள் ஆப்கானில் போர் செய்ய முடியாது. அமெரிக்கப்படைகள் குடும்பத்தை விட்டுவிட்டு ஆப்கானில் உயிரைக் கொடுத்து போர் புரிய முடியாது. இது நமது தேசிய பாதுகாப்பு பிரச்சினை இல்லை.

ஆப்கான் போர் எனது ஆட்சியோடு முடிவுக்கு வரட்டும். நமது படைகள் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது. என ஒரு விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் வார்த்தைகள் ஒரு வல்லரசு நாட்டின் ஜனாதிபதியின் வார்த்தைகளாக தெரியவில்லை. அமெரிக்காவின் இயலாமையும் அதன் மீது எழுந்துள்ள நெருக்கடியும் ஜோ பைடனது உரையில் தெரிகிறது. கந்தகார் விமான நிலையத்தில் குவிந்திருக்கும் தனது அமெரிக்க பிரஜைகளையும் கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவிற்கு கூலியாட்களாக பணிபுரிந்த ஆப்கான் மக்களையும் மீட்டெடுப்பதிலே அவசரம் காட்டாத ஒர் அமெரிக்காவை ஜோ பைடனது கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்னால் ஆப்கானிஸ்தான் மீது இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர போர் புரிந்த அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும் இராணுவ வலிமையையும் இழந்திருக்கிறது என்பதையும் தலிபான்களின் போர் உத்திகளால் அமெரிக்காவால் நிலைத்திருக்க முடியாது என்பதனையும் அவரது உரை தெளிவுபடுத்துகிறது. ஆப்கானிஸ்தான் வல்லரசுகளின் வீழ்ச்சிக்கான தேசமா என்ற கேள்வியை மீளவொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதரிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திய கொள்கைகளை தவிர்க்க முடியாது ஜோ பைடன் பின்பற்றும் துயரம் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் உலக ஆதிக்கம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. இதனை ஒரு தோல்வியாக காட்டும் உலக ஊடகங்களும் விமர்சனங்களும் வியட்னாம் மற்றும் கியூபாவில் அமெரிக்கா அடைந்த தோல்விகளுடன் ஒப்பிட்டுமளவுக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த முடிவுக்காக ஜோ பைடன் மிக மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகிறார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் இது ஏமாற்றுச் செயல் எனவும் வால்ஸ்ரீட் பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது. சிஎன்என் ஆப்கானிஸ்தானின் தோல்விகரமான பின்வாங்கல் அமெரிக்க ஜனாதிபதிக்கான அரசியல் பேரிழிவு என குறிப்பிட்டுள்ளது.
இதே நேரம் இருபது வருடங்களுக்கு பின்னர் தலிபான்கள் உத்தியோக பூர்வமாக நிகழ்த்திய செய்தியாளர் மகாநாட்டில் அதன் பேச்சாளர் (17.08.2021) ஜபியுல்லா முஹாஜித் கலந்துகொண்டு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அதனை சற்று அவதானித்தல் சிறப்பானது.

அமெரிக்க மற்றும் அனைத்து பிராந்திய நாடுகளுக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்றும், வெளிநாட்டு தூதரகங்களும் அவற்றின் பணி நடவடிக்கைகளும் காபூலில் பாதுகாக்கப்படும் என்றும், தலிபான்கள் ஏனைய நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறதெனவும், தெரிவித்ததுடன் "எங்கள் மதக்கொள்கைகளையும் சட்டத்தையும் மதிக்கும் படி அவர்களிடம் கேட்கிறோம். மற்ற நாடுகளைப் போலவே எங்கள் சொந்த விதிகள் சட்டங்கள் வைத்திருக்கும் உரிமை எமக்கு உண்டு " எனக் குறிப்பிட்டார்.தொடர்ந்து குறிப்பிடும் போது பெண் மருத்துவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் ஊடகங்கள் சாதாரணமாக செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர்கள் பாரபட்சமின்றி செயல்படுவதுடன் இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் தேசிய மதிப்பினை மீறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அனைத்து ஆப்கானிஸ்தானியருக்கும் பொது மன்னிப்பு உண்டு எனவும் நாட்டை விட்டு வெளியேறிய தலைவர்கள் நாடு திரும்பவும் தலிபான்களுடன் இணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுப்பதாகவும் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். நாங்கள் வெளிநாட்டவரை வெளியேற்றியுள்ளோம் இதற்காக முழுநாட்டையும் வாழ்த்துகிறேன். இது பெருமைக்குரிய விடயம். அனைவரையும் வாழ்த்துகிறேன். சுதந்திரத்தை தேடுவது ஒவ்வொரு தேசத்தினதும் சட்டபூர்வமான உரிமையாகும்.

நாங்கள் சுதந்திரத்தை இருபது வருடங்களுக்கு பின்னர் அடைந்துள்ளோம். சுதந்திரத்திற்கு பின்னர் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. எவர்மீதும் எங்களுக்கு கோபமில்லை. ஆப்கானிஸ்தான் இனி போர்களமல்ல. நாங்கள் அமைதியாக வாழவிரும்புகிறோம்.என ஒரு நீண்ட செய்தியாளர் மகாநாட்டை நடத்தியுள்ளார்.

இதனைப் பார்க்கும் போது தலிபான்களது அணுகுமுறையில் மாற்றம் நிலவுவதற்கான போக்கு தென்படுவதாக தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி போலல்லாது ஒரு தேசத்தின் தலைமை எவ்வாறு கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமோ அவ்வாறே தலிபான்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கந்தகார் விமான நிலையத்திலும் இரு நாட்டுப்படைகளது நகர்வுகளை அவதானிக்கும் போது அத்தகைய நிலை மேலும் தெளிவாகிறது.

எனவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது நலன்களை அடைந்துள்ளதாக கூறிக் கொண்டாலும் ஏற்பட்டுள்ள தோல்வி இன்னோர் வியட்நாம் அல்லது கியூபா போன்றதல்ல. மாறாக அதன் பிராந்தியக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியாகவே தெரிகிறது. அத்தகைய தோல்வி முழுமையான தோல்வியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது. ஜோ பைடனது வார்த்தைகள் அதனையே வெளிப்படுத்துகிறது. தலிபான்கள் போரிலும் போருக்கு பின்னரான நிலைமைகளை எதிர்கொள்வதிலும் உத்திகளுடன் செயல்படுகிறார்கள்.

அமெரிக்க ஆட்சியாளர்கள் இராணுவ உத்திகளிலும் அரசியலிலும் தோற்றுப் போயுள்ளனர். ஆனால் நீண்டகாலத்தில் அமெரிக்க நாட்டு மக்களுக்கு ஆப்கான் வெளியேற்றம் நன்மையானதாக அமையலாம். காரணம் அது வெற்றிகொள்ளப்பட முடியாத அரசியல் புவியியலையும் புவிசார் அரசியலையும் கொண்டுள்ள தேசமாகும்.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

 

Comments