சூடானின் இராணுவ புரட்சியும் அமெரிக்க-சீன அரசியலும்! | தினகரன் வாரமஞ்சரி

சூடானின் இராணுவ புரட்சியும் அமெரிக்க-சீன அரசியலும்!

ஆபிரிக்க பிராந்தியத்தின் அரசியலில் மிக நீண்டகாலமாக பேசப்பட்ட சூடானின் அரசியலில் மீண்டுமொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சூடானும் தென்சூடானும் மோதிக்கொண்ட நீண்ட காலப்போர் ஆபிரிக்க அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. 30வருட காலம் நிகழ்ந்த யுத்தத்தின் விளைவாக 2011ஆம் ஆண்டில் தென்சூடான் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனாலும் ஆட்சி மாற்றமும் அதிகாரமும் தொடர்ச்சியான இராணுவ பிரசன்னத்தையும் அதிகார ஆட்சியையும் சூடான் கொண்டிருந்தது. தென்சூடானின் பிரிவினை தவிர்க்க முடியாது, இராணுவ ஆட்சியை நோக்கிய இருப்பை உத்தரவாதப்படுத்தியது. இக்கட்டுரையும் சூடானில் ஏற்பட்டுள்ள இராணுவப்புரட்சியையும் அதன் அரசியலையும் தேடுவதாக காணப்படுகிறது.

சூடானின் அரசியல் வரலாறு இராணுவ ஆட்சியினாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சூடானின் சுதந்திரத்திற்கு பின்னர் 1956 முதல் -1972 வரை முதலாவது உள்நாட்டு யுத்தத்தையும் 1983-முதல் 2005 வரை இரண்டாவது உள்நாட்டு யுத்தத்தையும் 2003- முதல் 2010 வரை டார்க்கூர் உள்நாட்டு யுத்தத்தையும் எதிர்கொண்டிருந்தது. இக்காலப்பகுதியில் 1989ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ அதிகாரியான ஓமர் அல் பஷீர் இராணுவ ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றினார். இவரது ஆட்சி 2019ஆம் ஆண்டு வரை முப்பதாண்டுகள் நீடித்திருந்தது. 2019ஆம் ஆண்டு மக்கள் புரட்சி மூலம் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு பொதுமக்கள் - இராணுவம் இணைந்தவோர் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. அத்தகைய கூட்டிணைவான ஆட்சி சூடான் குடியரசின் அரசியலமைப்பு ஆவணங்களுக்கு ஒப்பானதாக வடிவமைக்கப்பட்டதோடு சர்வதேச அங்கீகாரத்தையும் அவ்ஆட்சி பெற்றிருந்தது. சூடானின் இறையாண்மை பொதுமக்கள் - இராணுவ கூட்டுறவான ஆட்சியில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இவ்இடைக்கால அரசாங்கத்தில் அப்தல்லா ஹம்டோக் பிரதமராகவும், ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான்; இராணுவ முகவராகவும் செயற்பட்டனர். இவ்இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் பொதுத்தேர்தல் ஒன்றினூடாக முழுமையாக ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதெனவும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2022ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடாத்தப்படுவதோடு முழுமையான ஜனநாயக ஆட்சியை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனவே சூடானில் ஏற்பட்டுள்ள இராணுவ புரட்சிக்கு பின்னால் எழுந்துள்ள அரசியலையும் அதன் விளைவுகளையும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.

முதலாவது, சூடான் இராணுவம் 2022இல் நிகழவுள்ள பொதுத்தேர்தலை முறியடிப்பதுடன் ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறைக்குரிய வாய்ப்பை முற்றாக முடிவுக்கு கொண்டு வரும் உத்தியுடனேயே செயற்பட்டுள்ளன. அக்டோபர்- 25 அன்று மேற்கொண்ட இராணுவ முயற்சி இடைக்கால அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமன்றி இடைக்காலத்தேர்தல் நடைபெறுவதனூடாக இராணுவத்துக்கு ஏற்படும் ஆபத்துக்களை கருத்திற்கொண்டு செயற்பட்டுள்ளது என்பது அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரை மற்றும் அரச அதிகாரிகளை கைது செய்தமை மட்டுமன்றி அவர்களை விடுதலை செய்துள்ளமையும் ஏனைய அரச அதிகாரிகள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைத்துள்ளமையும் இராணுவம் தனது பிடியை தக்க வைக்கவும் ஐக்கிய நாடுகள் சபையையும் உலக நாடுகளையும் கையாளுகின்ற நோக்கே பிரதமரையும் அவரது குடும்பத்தவர்களையும் விடுதலை செய்ததன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவது, இராணுவத்தின் இப்புரட்சிக்கு அடிப்படையில் இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பற்ற ஆட்சியே காரணமென்றும் நாட்டைக்காப்பாற்ற வலுவான அரசாங்கமொன்று தேவை என்ற எண்ணத்தையும் இராணுவத்தரப்பு முதன்மைப்படுத்தியுள்ளது. இராணுவ ஆதரவு பெற்ற மக்கள் தொகுதியினர் சூடான் தலைநகரில் இடைக்கால அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்ததோடு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தலைமுறை நகரங்களை அரசாங்கம் முற்றுகை இட்டுள்ளமையும் அதனால் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையும் இவ்ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் உள்ள அரசியலாக தெரிகிறது. இராணுவம் திட்டமிட்டே இப்புரட்சியை மேற்கொண்டுள்ளது என்பது தலைநகரில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் தெளிவுபடுத்துகிறது.

மூன்றாவது, இவ்இராணுவ புரட்சியை அடுத்து அமெரிக்க இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. காரணம் இப்பிராந்தியத்தின் மீதும் சூடானின் எண்ணெய் வயல்கள் மீது சீனாவின் கரிசணை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க சிறப்புத் தூதர் ஜெப்ரி பெல்ட்மேன், பொதுமக்கள் நிர்வாகத்தினருக்கும் இராணுவ தரப்பினருக்கும் இடையிலான உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதற்குரிய அழுத்தங்களை மேற்கொள்ள சூடானுக்கு சென்றிருந்தார். இதனூடாக அமெரிக்கா ஜனநாயத்தை முன்னிறுத்தி சூடானை தனது பிடிக்குள் கொண்டு வர முயலுகிறது. எனினும் ஒப்பந்தம் முழுமைபெற்றுவிட்டது என்ற எண்ணப்பாங்கில் ஒக்டோபர்- 25 அன்று அவர் நகரத்தை விட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் இவ்ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கையை அமெரிக்க புலனாய்வும் இராஜதந்திர தரப்பும் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் ஜெப்ரியுடனான சந்திப்பில் எத்தகைய நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதாக வெளிப்படுத்தவில்லையென்றும் இதுவே அமெரிக்க இராஜதந்திர மட்டத்தின் சீற்றத்தை அதிகரிக்க காரணமென்றும் தெரிய வருகிறது. இதன்விளைவாக அமெரிக்கா 700மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இடைநிறுத்தியுள்ளது.

நான்காவது, இராணுவத்தின் இப்புரட்சியானது சூடானின் பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியதுடன் பொருளாதாரத்திற்கான சர்வதேச நிதி உதவிகள் அனைத்தும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், கிழக்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பு மற்றும் மேற்குலக நன்கொடையாளர்கள் ஆட்சிக்கவிழ்ப்பை கண்டித்ததோடு சூடான் இராணுவத்தை ஜனநாயக ஆட்சிக்கு திரும்புமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐந்தாவது, இராணுவத்தின் புரட்சியைப் பொறுத்து ரஷ்யாவும் சீனாவும் இதுவரை எதிர்ப்பையோ ஆதரவையோ வெளிப்படுத்தவில்லை. ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை கண்டிக்கும் மேற்குநாடுகளின் முயற்சியை ரஷ்யாவும் சீனாவும் தடுத்துள்ளன. இது மறைமுகமாக இராணுவத்தை ஆதரிப்பதை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவை விட சீனாவுக்கு சூடானோடு மாத்திரமின்றி வடஆபிரிக்க நாடுகளோடு பொருளாதார உதவி பலமானதாக அமைந்திருப்பதாலும் மேற்கின் தலையீட்டை தடுப்பதற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் நகர்வுகளை ரஷ்யா, சீனா கையாள திட்டமிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனவே, சூடானில் எழுந்துள்ள இராணுவ புரட்சியானது அமெரிக்காவிற்கே பொதுவான அதிகார அரசியலின் இயல்பாகும். அதனைக் கடந்து சூடானின் அரசியல் மரபில் ஜனநாயகம் மலர்வதென்பது நீண்ட அரசியல் கலாசாரத்தில் தோல்வியாகவே அமைகின்றது. ஆட்சியாளர்களிடம் மாத்திரமின்றி மக்களிடமும் அத்தகைய மனோநிலை காணப்படுகிறது. அதுமட்டுமன்றி உலகளாவிய அரசியலுக்குள் அகப்பட்டிருக்கும் சூடான் கிழக்கு எதிர் மேற்கு ஏகாதிபத்தியங்களால் மோதலுக்கும் இழுபறிக்குள்ளும் இராணுவ கட்டமைப்புக்கும் ஜனநாயக கட்டமைப்புக்குமிடையிலான மோதலாக செயற்படுகின்றது. மியான்மார், இலங்கை போன்ற நாடுகளின் சீன அனுபவங்கள் சூடானில் அதிக முக்கியத்தவத்தையும் சில வேறுபாடுகளையும் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. வெளிப்படையாக கூறுவதானால் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் உலகளாவிய ரீதியில் இராணுவத்தின் மேலெழுகை தவிர்க்க முடியாததாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் மேற்குலக அரசியல் பலவீனமான பக்கங்களையும் சீன, ரஷ்யாவின் கிழக்குல அரசியல் வலுவான சூழலையும் ஏற்படுத்தி வருகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments