சீனாவின் ஏவுகணைச் சோதனை சீற்றத்தின் உச்சத்தில் அமெரிக்கா | தினகரன் வாரமஞ்சரி

சீனாவின் ஏவுகணைச் சோதனை சீற்றத்தின் உச்சத்தில் அமெரிக்கா

அணு ஆயுதங்களும் அவற்றைக் காவிச் சென்று பேரழிவை அரங்கேற்றும் ஏவுகணைகளுமே வல்லரசுகளின் ஆதிக்க வலு மற்றும் ஆக்கிரமிப்பு நகர்வு என்பனவற்றின் அளவு கோலாக கணிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் நிறைவு காலமான 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க வல்லாதிக்கம் நடாத்திய எதேச்சாதிகார அணுகுண்டுத் தாக்குதலே உலகின் முதலும் இதுவரையான இறுதியுமான அணுகுண்டு பாவனையாகும். ஜப்பானின் பல லட்சம் அப்பாவி மக்களை பலியெடுத்த இந்த அணுகுண்டின் தாக்கம் இன்றுவரை அங்குள்ள மக்களையும அவர்களின் வாரிசுகளையும் அவதியுற வைத்துக் கொண்டிருக்கிறது. 

இன்றைய உலகில் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்கும் நாடுகளான அமெரிக்கா 8000, ரஷ்யா 8500,சீனா அண்ணளவாக 600,இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலா 300என அணுகுண்டுகளை தம்வசம் வைத்திருப்பதாகவும் இவை தவிர இந்தியாவிடம் 150,பாகிஸ்தானிடம் 160, வடகொரியாவிடம் 20அணுகுண்டுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் பயங்கர ஆயுதங்கள், அவற்றை தயாரித்து தம்வசம் வைத்திருக்கும் நாடுகள்,அவை தொடர்பான விபரங்கள் என்பனவற்றை வருடாவருடம் திரட்டி வெளியிடும் சுவீடன் நாட்டின் SIPRI (Stockholm International Peace Research Institute) அமைப்பின் கடந்த வருட தகவல் அறிக்கை இந்த கணக்கீட்டை தெரிவிக்கிறது. நவீன தொழில்நுட்பம் அதி உச்சம் அடைந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையின் அணுகுண்டுகள் யாவும், 1945ம் ஆண்டு அமெரிக்கப்படைகளால் ஜப்பான் மீது வீசப்பட்டவற்றை விட பலநூறு மடங்கு அதிக வலுகொண்டவை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இது தவிர வெளியே அறியப்படா விட்டாலும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை தம் வசம் வைத்திருப்பதாகவும் இவை அமெரிக்காவால் வழங்கப்பட்டிருக்கலாம் அல்லது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலினாலேயே தயாரிக்கப் பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. வடகொரியாவும் பல அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வல்லரசுகளுக்கு பகிரங்கமாகவே சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் ,கொரோனா கிருமிகள் உலகை ஆட்டம் காணவைத்துக் கொண்டிருப்பதையும் தாண்டி, கடந்த (2021) ஓகஸ்ட் மாதத்தில் அணுகுண்டை காவிச் சென்று பேரழிவை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஒன்றை நடாத்தி உள்ளது சீனா, இந்த தகவல் உலகநாடுகள் அனைத்தையும் குறிப்பாக அமெரிக்கா,இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்,இந்தியா போன்றனவற்றை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.  

ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5மடங்கு வேகமானது எனப்படும் சீனாவின் இந்த ஏவுகணை தன்னுடைய சோதனை இலக்கை அடைவதற்கு முன்னர் பூமியை ஒரு முறை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையில் சுற்றிய இந்த ஏவுகணை தன்னுடைய இலக்கை வெற்றிகரமாக தாக்கியது என்றும் இந்த சோதனை அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அமெரிக்காவின் Financial Times பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.  

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் சீனா வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இந்த சோதனை ஓட்டமானது அமெரிக்க அதிகாரிகள் உணர்ந்ததை விட வேகமாக முன்னேறியதை ஆய்வுகள் காட்டுகிறது என்றும் அந்த ஆய்வு செய்தி தெரிவிக்கிறது. சீனா பரிசோதித்த இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது தற்போதிருக்கும் வேறு எந்த ஏவுகணைகளாலும் இடை மறித்து தாக்க முடியாத வலுக்கொண்டது எனவும் அறியப்பட்டுள்ளது. 

இந்த ஏவுகணை சீன அரசுக்குச் சொந்தமான சீன அக்கெடெமி ஆஃப் ஏரோஸ்பேஸ் ஏரோடைனமிக்ஸ் (China Academy of Aerospace Aerodynamics) என்கின்ற சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் திட்டமிடல் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்றினாலேயே உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.  

இந்த சோதனையின் பின்னரான சீனாவின் நகர்வுகளை உலக நாடுகள் குறிப்பாக இந்தியா உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்,எனவும் சமீபத்திய காலங்களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கும் உறவுகளை கருத்தில் கொண்டு இந்தியா இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவின் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷலும்,முன்னாள் விமானப்படை துணை தலைவருமான பூஷன் கோகலே தெரிவித்துள்ளார் .  

இத்தகைய திறன்கொண்ட ஆயுதங்கள் நம்முடைய விண்வெளி சொத்துகளுக்கு அச்சுறுத்துலை தருகின்றன, இதுபோன்ற அதி வேகத்தில் செயல்பட்டு தாக்கி அழிக்கும் சக்திநிறைந்த ஏவுகனைகளுக்கு எதிராக அதே வேகத்தில் பாதுகாப்பு அரண்களை உருவாக்க வேண்டிய தேவை அண்டைநாடுகளுக்கு அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வட கொரியாவும் இதனை ஒத்த அதிவேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சமீபத்தில் புதிதாக உருவாக்கி சோதித்தது குறிப்பிடத்தக்கது. 

அணுக்கரு ஆயுதங்கள் மேலும் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் 1968ம் ஆண்டு அணு ஆயுதப் பரவல்தடுப்பு ஒபந்தம் (Nuclear Non-Proliferation Treaty) ஏற்படுத்தப்பட்டது.189நாடுகள் கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் கையொப்பமிடவில்லை என்பதும் தொடக்கத்தில் வட கொரியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் அதை மீறிய நிலையில் இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்தி விலகிக்கொண்டதும் வரலாறு. .  

இந்த ஒப்பந்தத்தின்படி சீனா,பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்க,ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டன.

இந்த நாடுகள் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே வடகொரியா, தற்போது சீனா என ஏவுகணை சோதனைகளை நடாத்தி உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும் சவால் விட்டுள்ளதுடன் வல்லரசுகளையும் சீற்றமடைய வைத்துள்ளன. 

அணுஆயுதங்கள் என்பன நியாயப்படுத்த முடியாத அழிவை ஏற்படுத்தும் தீமையின் சின்னமாகவும் ஒழுக்க கேடானவையாகவுமே உலகின் சமாதான விரும்பிகளால் பார்க்கப்படுகிறது.

போர்களின் போது பதில் தாக்குதல் என்கிற பெயரில் தொடுக்கப்படும் சுய காவாந்து (Self Defiance) தாக்குதல்கள் கூட நியாயமற்றவையாக அதிக அப்பாவி உயிர்களை பலி கொண்ட வரலாறுகளே பதியப்பட்டுள்ளன.  

எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை கொண்ட பல நாடுகள், நெறி முறை அடிப்படையில் ஏனைய நாடுகள் பயன்படுத்தவே விரும்பாத ஒன்றை அதிகமாக உருவாக்குவதற்கு எந்த வித நியாயமான காரணத்தையும் முன் வைக்கவில்லை முன் வைக்க முடியாது. 

1945ம் ஆண்டு முதன்முதலில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டு பேரழிவை ஏற்ப்படுத்தியத்தை நேரடியாக பார்த்த இந்த உலகம் 1968ம் ஆண்டு வரை அணு ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிந்திக்கவில்லை என்பதும் இது தொடர்பான எந்த ஒரு உடன்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் வருத்தமான விஷயமாகும். 

உலகை கட்டிஆள நினைக்கும், ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற்கொள்ளும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசுகளுக்கு தம்மையும் தமது வலுவையும் தாண்டி ஏனைய நாடுகள் பலம் பெறுவதும், ஆயுத தளபாடங்களை அதிகரிப்பதுவும் பொறுக்க முடியாதது என்பதிலும், அவற்றை சீற்றமடைய வைக்கும் என்பதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. 

கோவை நந்தன் 

Comments