புள்ள லெக்கா | தினகரன் வாரமஞ்சரி

புள்ள லெக்கா

தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு, அறைக்கு அறையாய் இரவும் பகலும் பல நாள் தொடராக விட்டுவிட்டு மெய் மறந்து மனங்குழம்பும் நேரங்களில், உற்சாக வேளைகளில் வட திசையிலிருந்து ஒரு குரல். தென் புறத்திலிருந்து எதிர்க்குரல் வயல், வாடி என்று பாடப்பட்டதே இந்த நாட்டார் பாடல்கள். இதன் ஓட்டத்தில் இடையிடையே பண்டைச் சான்றோரின் சொற்றொடர்கள் - குறியிட்டுக் காட்டியும் காட்டாமலும் - கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு கையில் பீடிக்கட்டு, நெருப்புப் பெட்டியும் காதில் பென்சிலும் வாயில் அகடவிகடப் பேச்சுமாய் நடமாடும் தச்சர்கள் (ஓடாவி) தமது கம்மாலைகளில் பணிசெய்யும் போதும் ஓசைக் குரலெழுப்பிக் கவி பாடுவர்...

வட்டக் கடை, கிட்டங்கி, பரண், அருவிக்கரையென்று, மக்கள் கிராமியக் கவி பாடுவதில் கலந்திருந்தனர்; மொத்தத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாகவும் இவை ஒலித்தன. சமூக நீர்மைகளும் உராய்வுகளும் அன்றாட உரை நடையில் சிறைப்பட்டு நம்மைக் கவர்ந்திழுத்தன. வங்காள விரிகுடாக் கரையோரங்களிலும் வயல் பிராந்திய விவசாயிகள் வாழும் நெடிய குடியிருப்புகளின் அகங்களிலும் வரலாற்று எச்சங்களுடன் நாடாரியல் கலந்துள்ளதை தென் கிழக்கின் கிராமங்களுக்குப் பயணம் செய்யும் ஒருவர் எளிதில் கண்டுணரலாம்.

கடலின் முதுகுப் புறத்தில் தோணிகள் ஓட்டிவரும் பொழுதுகளில் கரையின் மீதிருந்து வலைகளில் சிக்கிக் கழுத்துடைந்து, தாவிப் பாயும் மீனினத்தை வளைந்து சாடி இழுத்துவந்து, மாய வித்தைபோல் மல்லடிக்கும் மீனவர் நாவுகளில் முளைத்துப் பறியும் சொல் சிதறல்கள் அடுக்கு மொழியாகி பாணிபோல் வழியும்.

"வண்டழுத சோலையிலே..

மரையழுது போறதுபோல்...

நின்றழுதோம் அல்லாஹ்வே...

நினைவு வந்த நேரமெல்லாம்..

ஏலேலோ ஏலேலோ, ஏலேலோ ஏலேலோ..

கடலினிலே கிளுறு நபி.. ஏலேலோ ஏலேலோ..

கப்பலிலே ஹயாத்து நபி.. ஏலேலோ ஏலேலோ..

கரையினிலே முகைதீன் அலை..ஏலேலோ ஏலேலோ.. "

உணவுப் பண்டங்களும் துணி மணி முதலியனவும் வழிப் பயணத்தின்போது வந்துசேரும். ஆனால் வாணிப நிலையங்கள் பெருமளவில் அன்று காத்தான்குடியில்தான் இருந்தன. கறுப்புடலும் எஃகு நெஞ்சமும் கொண்ட துடுக்கர் செய்கு அப்பாவின் மாட்டுக் கரத்தைதான் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபடுத்தப்பட்ட வாகனம். எங்கள் குடும்பத் தேவைகளுக்கும் அதுவே பயன்பட்டது. இரண்டு ரூபாக் கொடுத்தால் ஒருவரே ஏறலாம். சுற்றி அடைக்கப்பட்ட வண்டியில் எப்போதாவது ஆமைபோல் முகத்தை நீட்டிச் "சரியா" என்பார். வாப்பா 'ம்' என்றதும் கரத்தை ஒல்லியான இருவரையும் ஒரு வில்லங்கம் இல்லாமல் உலுக்கிவிட்டு ஏற்றிக் கொண்டு ஓடும்...

உடுப்பு வரும் கனவில் உம்மா காத்திருப்பார். அதேநாள் பின்னேரம் வந்திறங்கும் வாப்பா வண்டியை விட்டுக் கிழிறங்கும் முன்னே புடவைப் பொதியை உம்மாதான் தூக்குவார்; அப்போது, "உனக்கு ஒன்றுமில்ல புள்ள, என்பதுபோல் செய்கு அப்பாவின்முன் கண்ணைக் காட்டிவிட்டுக் கனைப்பார். புரிந்தும் புரியாதபடி.

"காத்தான் குடிக்குக் கரத்தை கொண்டு போனமச்சான்

சீத்தை இரண்டு முழம் அந்தச் சீமையிலே பஞ்சமாமோ?" என்ற உம்மாவுக்குப்

"பச்சவடச் சிறுவாலும் படம் உள்ள பெனியனும்

நாலு சோடி மயில் குடமும்

நைலக்சும் இருக்குமணி.." என்பார்...

மாலை வேளைகளில் தொழுதுவிட்டு வந்திருக்கும் பூட்டிம்மா, தலையணையைச் செத்தையில் நாட்டி, முதுகை அதனில் ஊன்றிப் பிரார்த்தனைபோல் காலாட்டிக் காலாட்டி பாடும்போது அவர் நினைவில் முக்கி, முகிழ்ந்து எழும் பாடல் பதிவுகள் அபாரமானவை.

"குத்து விளக்கெரியக் குமரன் குர் ஆன் ஓதப்

பாலன் விளையாட

ஒரு பாக்கியம்தா ஆண்டவனே.."

"அல்லையிலே பன்புடுங்கி

அலங்காரப் பாயிழைச்சி

படுக்கப் போட்டிருக்கன் - என்ர பாலரசக்

கார் இறைவா.." "பாக்குப் பழுத்திருக்கு

பாளையில பூவிருக்கு

சின்னாரை காய்ச்சிருக்கு

அல்லாஹ் - சிறு வயலில் விளைச்சலை வை.."

குருவிச்சம்பா நெல்லும்

கோழிச் சூடன் குலையும்

பாலும் கலந்து றப்பே

பாத்திஹாவும் ஓதிடுவேன்.."

"சக்கராத்து வேளையில

சள்ளுப்பட்டுப் போகாம

மலக்கல்மெளத்தை அல்லாஹ் நீ

மனமிரங்கச் செய்திடுவாய்.."

கிடுகிடுக்கும் இடி முழக்கம்; மின்னல் வானைப் படமெடுக்கும் பொத்தாலா மைமூன் பொருபொருக்கும் வாய் ஓசை அந்த மரமரப்புக்குள்ளும் விட்டுவிட்டுக் கேட்கும்.

புள்ள லெக்கா புள்ள லெக்கா

உன்ட புருசன் எங்கே போனதுகா

கல் வீட்டுத் திணையில - அவர் கதைத்திருக்கப் போனதுகா..", இந்த மழைக்கும்

இன்னா வார கூதலுக்கும்

சொந்தப் புருஷனென்றால்

சுணங்குவாரோ வாடியிலே.."

முழங்காலைத் தலைக்கு வைத்து உறங்கும் போதிலும் மைமூன் பாடிக் கொண்டிருப்பது கேட்டு இடுக்குகளில் பல்லிகள்கூட இச்சாக் கொட்டும்...

விளையாட்டுகளும் இப்படித்தான். சாந்தமாமா இது எங்களூரில் வாழ்ந்திருந்த ஒருவரின் பெயராகவும் இருந்தது. இலகுவில் வெளியில் வரமாட்டார். அவர் ஆடைகளைக்கூட வெயிலில் உலரவிடுவதில்லை. எல்லாமே வீட்டுக்குள்தான். கடற்கரை வீதி வழியாகப் பதுங்கிச் சென்று படலைத் திறந்து மெல்ல நுழைவார். நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம்; சாந்தமாமா வருவதைக் கண்டதும் இரு பிரிவுகளாகப் பந்தி சேர்வோம்.

"சாந்தமாமா சாந்தமாமா

எங்கே போறாய்?

மண்ணுக்குப் போறன்

மண் என்னத்துக்கு?

ஊடு மொழுக

ஊடு என்னத்துக்கு?

புள்ளப்பொற

புள்ள என்னத்துக்கு?

தண்ணீர் குடத்தில துள்ளிப்பாய.."

கேள்வி பதிலாகப் பாடி முடிந்ததும் கண்ணாடி வளையல்கள் குலுங்கி ஒலிக்க எங்களுடன் தோழிகளும் கை கொட்டி நகைப்பார்கள்.

தலையிலே துளி கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரி மயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நிற்கும் தாஜுன் மாமா சிரித்தாரென்றால் கண்ணும் கன்னங்கரேலென்று நாலு திசையிலும் சுழலும்.

இடது சொக்கிலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மரு.

நாணல் புல்போல நரைத்த கிழவனுக்கு

குங்குமப்பூப்போல குமர்தானோ வாழுறது..? "

"சூட்டட்டை போல

சுடு காட்டுப் பேய் போல

மாட்டட்டை போல

உம்மா - அவரும் ஒரு மாப்பிள்ளையா?",

"கச்சான் அடித்த பின்பு

காட்டில் மரம் நின்றதுபோல்

உச்சியிலே நாலு மயிர்

தலை - ஓரமெல்லாம் தான் வழுக்கை.."

விபரிக்க முடியாத ஓர் உறுத்தல் ஒவ்வோர் உணர்விலும் பட்டது. மேகப் பொதிகள் பரந்து திரண்ரொன்றிக் கும்மிருட்டாய் இறுகி நிற்கும் அந்த இரவில் விளக்கின் நிழல் எண்ணெய் பூசியதுபோல் செத்தையில் நெளிந்தது. எனக்குத் தூக்கமே வரவில்லை. இருந்திருந்துவிட்டு உம்மாவின் வாயில் பறியும் அந்தக் கவிகள்தான் தாஜுன் மாமாவுக்கும் பொருந்துமோ என்று உழன்று கொண்டிருந்தேன். ஏனென்றால் பிறரின் வற்புறுத்தலின் பேரிலேயே பக்கத்து வீட்டு ஆயிசா மாமி மணம் முடிக்கச் சம்மதம் என்றிருந்தார். தாவிக் குதித்துவந்து பம்பரம்போல் சூழலும் மாமி மடியில் தவழ்ந்து கிடந்தவன் நான். அவரின் திருமண நாளன்று காற்றையே காணோம். ஒரே இறுக்கம். தாஜுன் மாமா ஆடிக் குதித்துக் கெக்கலிப்பதுபோல் தெரிந்தார்.

நபீல்

Comments