தொடரும் தாய்வான் பாதுகாப்பு வலயத்தின் மீதான சீனாவின் ஊடுருவல் | தினகரன் வாரமஞ்சரி

தொடரும் தாய்வான் பாதுகாப்பு வலயத்தின் மீதான சீனாவின் ஊடுருவல்

சமகால உலக அரசியல் போக்கானது மேற்கு எதிர் கிழக்கு என்ற  நிலையை கொண்டதாக அமைந்துவருகிறது. ஜப்பானில் நடைபெற்ற குவாட் நாடுகளின் நிகழ்வு அத்தகைய முரண்பாட்டை மேலும் அதிகரிப்பதாக அமைந்திருந்தது. சீனாவுக்கும் -ரஷ்யாவுக்கும் எதிரான தீர்மானங்களும் உரைகளும் அதனை வெளிப்படுத்தியதுடன் எச்சரிக்கைகளும் மேற்கு நாட்டுத் தலைவர்களால்

முன்வைக்கப்பட்டது. ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் பல சந்திப்புகளை  மேற்குலகம் கீழைத் தேசத்திற்கு எதிராக மெற்கொண்டுள்ளது. அவை அனைத்தும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றதே அன்றி மேற்குக்கு ஆரோக்கியமான வெற்றியை எட்டக் கூடியதாக அமையவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவே தெரிகிறது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தனது உலகளாவிய ஆதிக்கத்தை பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் போராடிவருகிறது. இக்கட்டுரையும் சீனா தாய்வான் வான்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தேடலாக அமையவுள்ளது.

 

31.04.2022அன்று சீனாவின் 30போர் விமானங்கள் தாய்வானின்  பாதுகாப்பு வான்பரப்புக்குள் பிரவேசித்துள்ளன. அதில் 20க்கு மேற்பட்ட  விமானங்கள் தாக்குதல் விமானங்கள் என தாய்வான் வான்பாதுகாப்பு நிலையம்  அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 23இல் சீனாவின் போர் விமானங்கள் 39இதே  வான்பாதுகாப்பு பிரதேசத்தின் மீது ஊடுருவலை மேற்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும். 2021ஒக்ட்டோபர் 4இல் ஒரே நாளில் 56தடவை ஊடுருவலை  சீனாவின் விமானப்படை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த  வருடம் 969ஊடுருவலும் 2020இல் 580ஊடுருவலையும் சீனாவின் விமானப் படை  தாய்வானின் வான்பாதுகாப்பு பகுதிக்குள் ஊடுருவியுள்ளமை தெரியவருகிறது. 2022  இல் 550வரையான ஊடுருவலை சீனா, தாய்வான் பாதுகாப்பு வான் பரப்பில்  மேற்கொண்டுள்ளது. 

இதுமட்டுமன்றி சீனா தாய்வானுடன் ஒரு போரை மேற்கொள்ள  திட்டமிடுவதாக மேற்கு நாடுகளும் அவற்றின் ஊடகங்களும் அதிகமாக  உரையாடிவருகின்றன. ஆனால் தாய்வானிய மக்களைப் பொறுத்தவரை சீனா தாய்வான் மீது ஒரு  போரை திணிக்காது என நம்புவதாக பிபிசி அண்மையில் எடுத்த புள்ளிவிபரம்  தெரிவிக்கின்றது. உலகம் அச்சமடைய செய்வது போல் அந்த மக்கள் சீனா போரை  நிகழ்த்தும் என கருதவில்லை என்ற பதட்டமற்று தாய்வான் மக்கள் காணப்படுவதாகவும்  தெரியவருகிறது. ஆனால் மேற்குலக நாடுகள் சீனா ஒரு போரை திட்டமிடுவதாகவும்  மேற்கொள்ள தயாராவதாகவும் போர் ஆயுதங்களை பரிசோதிப்பதாகவும்  வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் சீனாவின் இரு தேசம் ஒருநாடு என்ற கொள்கையை  ஏற்றுக்கொண்ட அமெரிக்காவும் தாய்வான் மீதான சீனாவின் அணுகுமுறையை  கண்டித்திருந்ததுடன் தாய்வானுக்கு இராணுவ ரீதியில் உதவுவதாகவும் போர் ஒன்று  ஏற்பட்டால் அமெரிக்கா தாய்வானுக்காக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.  இதனை சற்று விரிவாக நோக்குவது அவசியமானது. 

முதலாவது சீனாவின் ஊடுருவலின் நோக்கம் தாய்வான் மீதான தனது  செல்வாக்கை அதிகரிப்பதற்கும் தாய்வானை கண்காணிப்பதும் நோக்கமாகவுள்ளது.  சீனாவின் புவிசார் அரசியலின் முக்கியத்துவம் கருதி சீனாவுடன் இணைப்பதற்கான  நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. சீனப் புரட்சியை அடுத்து கொமிங்டான்  கட்சியினர் தாய்வானை தமது பிரதேசமாக மாற்றிய போதும் தற்போது சீனர்கள்  தாயவானியர்களாக தம்மை அடையாளப்படுத்துவதில் அதிக ஈடுபாட்டைக்  காட்டுகின்றனர். சீனக்குடியேறிகள் தாய்வானியர்களாக மாற்றப்பட்டுள்ளனர் ஆனால்  சீனாவின் பாதுகாப்பு வலயமாக அமைந்துள்ள தாய்வான் சீனாவுக்கு விரோதமான நாடுகளுடன் கொண்டுள்ள உறவே முரண்பாட்டுக்கான அடிப்படையாகவுள்ளது. தாய்வானின்  வான்பாதுகாப்பின் பலத்தையும் சீனா தனது மேலாதிக்கத்தையும் வெளிப்படுத்தும் நோக்குடனேயே தாய்வான் வான்பரப்பை இலக்குவைத்து நகர்கிறது. அதனை ஒரு தொடர் நிகழ்வாக பதிவு செய்வதிலும் மேற்குலகக் கண்டனத்தை அடுத்து போர்  விமானங்களின் ஊடுருவலையும் சீனா ஒரு வழமையான நடவடிக்கையாக  கையாண்டுவருகிறது. அதாவது இது சீனாவின் பிடி இறுக்கமானது என்பதையே  கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவும் மேற்கும் எடுக்கு நிகழ்தகவுக்குள்  சீனா இயங்காது என்பதை விமானப்படையின் ஊடுருவல் வெளிப்படுத்துகிறது. 

இரண்டாவது, அமெரிக்காவும் மேற்குலகமும் மென் அதிகாரத்தை  அதிகம் முதன்மைப்படுத்தும் சீனா ஒரு போரை நோக்கி நகர்வது இலகுவில்  வீழ்த்துவதற்கு உதவும் எனக் கருதுகிறது. ரஷ்யா போன்று ஒரு போரை நோக்கி  சீனாவை நகர்த்துவதே அமெரிக்காவின் நோக்கமாகும். ஏற்கனவே சீனாவின் பொருளாதார  வளர்ச்சி வேகம் சரிந்துள்ளது. கொவிட் தொற்றின் விளைவினால் சீனப்  பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. அதன் தாக்கம் மேற்கு நாடுகளையும் பாரிய  நெருக்கடிக்குள் தள்ளிவருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிக நெருக்கடியை  எதிர்நோக்கி வருகிறது. ஆனால் மேற்கு ஊடகங்களும் மேற்கை மையப்படுத்திய நிதி  நிறுவனங்களும் சீனாவை நோக்கியே பொருளாதார நெருக்கடியை உரையாடி வருகின்றன.  சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின்  பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி நகர்வதாக குறிப்பிடுகின்றனர். அவ்வாறான  நிலைகட்குள்ளேயே குவாட் அமைப்பை ஒரு பொருளாதார அமைப்பாக மாற்றுவது பற்றிய  உரையாடலை ஜோ பைடன் நிர்வாகம் ஜப்பானிய மகாநாட்டில் ஆரம்பித்திருந்தது. 

மூன்றாவது, தாய்வான்- சீனப் போர் சீனாவை வீழ்த்துவது மட்டுமல்ல  அமெரிக்கப் பொருளாதாரத்தையும் நிமிர்வடையச் செய்யும் என அமெரிக்க  புலனாய்வுத் துறைகள் கருதுகின்றன. உலகளாவிய ரீதியில் நாடுகளது புலனாய்வுத்  துறையினர் தனித்து இராணுவத் தேவைக்கானவை மட்டுமல்ல. அவை பொருளாதார  வாய்ப்புக்களை உருவாக்கவும் அதனால் இலாபத்தை ஈட்டுவது பற்றியுமே  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரஷ்ய -உக்ரையின் போர் அமெரிக்காவின்  இராணுவ ஆயுத தளபாடங்களின் சந்தைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது. உலகளாவிய  ரீதியில் 39சதவீதமான ஆயுத விற்பனையைச் மேற்கொள்ளும் நாடாக அமெரிக்காவே  காணப்படுகிறது. மேற்கு நாடுகளுக்குள்ளும் அமெரிக்காவே 57சதவீதமான ஆயுத  ஏற்றுமதி மேற்கொள்ளும் நாடாக உள்ளது. ரஷ்ய உலகளாவிய ரீதியில் 19சதவீதம்  மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. கொவிட் காலப்பகுதியில் அமெரிக்க ஆயுத ஏற்றுமதி  37சதவீதமாக உள்ளதென SIPRI எனும் இராணுவ ஆய்வு நூல் குறிப்பிடுகின்றது.  அமெரிக்க ஏற்றுமதியில் 47சதவீதம் மேற்காசியாவை நோக்கியதாகவே அமைந்துள்ளது.  சவுதி அரேபியா மட்டும் 24சதவீதமான ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து  பெறுகிறது. தற்போது 96நாடுகளுக்கு அமெரிக்கா தனது இராணுவ ஆயுத தளபாடங்களை  ஏற்றுமதி செய்கிறது. இதில் இஸ்ரேல், தென் கொரியா போன்று தற்போது உக்ரைனும்  அமெரிக்காவின் ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்யும் நாடாக மாறியுள்ளது. இதனை  மேலும் அதிகரிப்பதே அமெரிக்கா உலகளாவிய ரீதியில் Grate OR Big போர்களை  உருவாக்க முனைகிறது. அதனை நோக்கமாகக் கொண்டே தாய்வானை ஊக்குவிக்கிறது.  உக்ரைன் போன்று தைய்வான் போரும் அமெரிக்காவின் ஆயுத தளபாட ஏற்றுமதிக்கான  வாய்ப்பினை அதிகரிக்கும்.  

நான்காவது, அமெரிக்கா சீனாவினது இராணுவ வலிமையை தடுக்கவும்  அதன் மூலம் தனது மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள இராணுவத்  தளங்களை பாதுகாக்கவும் முனைகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பிரதான இராணுவத்  தளங்களான Guam, Okinava  போன்றவற்றை பாதுகாப்பதே முக்கிய நோக்கமாக  அமைந்துள்ளது. தாய்வானுடனான அமெரிக்க நட்புறவு மட்டுமல்ல சீனாவின் இராணுவ  ஆதிக்கம் தாய்வானில் சாத்தியமாகுமாக இருந்தால் அமெரிக்கத் தளங்களுக்கான  பாதுகாப்பும் போக்குவரத்தும் ஆபத்தானதாகவும் நெருக்கடி மிக்கதாகவும்  அமையும் என அமெரிக்கா கருதுகிறது. இதுவே தென் சீனக்கடலையும் தாய்வானைபற்றிய  கரிசனையும்  அமெரிக்காவுக்கு அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமாகும்.  அதனுடன் மேற்கு நாடுகளின் காலனித்துவத்திற்குள் அகப்பட்டுள்ள மேற்குப்  பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவுகளுக்கு சீனாவின் தாய்வான் மீதான  எழுச்சியால் ஆபத்து நிகழும் என்பதை அந்த நாடுகள் கருதுகின்றன. அவை தமது  பிடியிலிருந்து சீனாவின் பிடிக்குள் அகப்பட்டுவிடும் என்பதே அத்தகைய  அச்சமாகும். 

எனவே அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தாய்வான் மீதான சீனாவின்  போரை ஊக்குவிப்பதுடன் அதில் சீனாவை தோற்கடிக்க முடியுமெனவும் கருதுகின்றன. ஆனால் தாய்வானை தனது தாய் நிலம் எனக்கருதும் சீனா அதனை சீனாவுடன் இணைத்துக்  கொள்வதே அதன் பாதுகாப்புக்கு சாதகமானது என்பதை எண்ணமாகக் கொண்டுள்ளது. ஹெங்கொங் தொடர்பான சீனாவின் கொள்கையையும் தாய்வான் பொறுத்து அளவீடு செய்ய வேண்டும் என்பதையும் கவனம் கொள்வது அவசியமானது.

கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments