ஜெயலலிதாவுக்காக அழுதவர்கள் விவசாயிகளுக்காக அழுகிறார்கள்; உள்ளத்தை உருக்கும் இன்னொரு பாட்டு | தினகரன் வாரமஞ்சரி

ஜெயலலிதாவுக்காக அழுதவர்கள் விவசாயிகளுக்காக அழுகிறார்கள்; உள்ளத்தை உருக்கும் இன்னொரு பாட்டு

-அந்தணன் சண்முகம்-

இலங்கையில் கண்ணீர் துளி விழுந்தால், தமிழ்நாட்டின் இதயங்கள் தடதடக்கும் என்பதை காலம் பலமுறை உணர்த்திவிட்டது. இது ‘கவலை மாற்று காலம்’ போலிருக்கிறது! இங்கே நடக்கும் ஒவ்வொரு துக்க நிகழ்வுக்கும் உள்ளம் உருகி கவிதை வடிக்கிறார் பொத்துவில் அஸ்மின். இலங்கையை சேர்ந்த இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக உருவாக்கிய அஞ்சலி பாடல்தான் இப்போது அவரது நினைவிடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘வானமே இடித்ததம்மா’ என்ற அந்தப்பாடலை இப்போது கேட்டாலும், மண்டைக்குள் ஒரு சூறாவளி இறங்கி மனம் கொள்ளாத கவலையை கொட்டிவிட்டு போகும்.
இசையமைப்பாளர் வர்ஷனின் அற்புதமான குரலும், அஸ்மினின் கவர்ந்திழுக்கும் வரிகளும், இவர்கள் இருவரையும் போயஸ் கார்டனுக்கே வரவழைத்து, சசிகலாவை சந்திக்க வைத்த கதையெல்லாம் தமிழகம் அறியும். இதோ- இவர்களது அடுத்த கவன ஈர்ப்பு? ‘போங்கடா நாங்க பொங்கலடா..’
தஞ்சை மற்றும் கடைமடை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் உயிரை போக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்க, நிமிஷங்கள் ஒவ்வொன்றும் ரணமாக கழிந்து கொண்டிருக்கிறது விவசாயி வாழ்வில். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் சோகப் பொங்கலாகிப் போன நிகழ்வை, வழக்கம் போல இலங்கையில் இருந்தே கவலை கொண்டு கண்ணீர் வடித்திருக்கிறார் அஸ்மின்.
வழக்கம் போல ‘கவர்ச்சிக் கூட்டணி’ இணைந்துவிட்டது. இந்த சோகத்தை பாடலாகவே உருவாக்கிவிட்டார்கள் இருவரும். கேளுங்கள் உள்ளம் அழும். உதடுகள் அழும். விவசாயிக்காக இன்னும் நாலு சொட்டு கண்ணீர் விழும்! 

Comments