நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வாய்ப்பளிக்கும் இரவு நேர வர்த்தகம் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வாய்ப்பளிக்கும் இரவு நேர வர்த்தகம்

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறையாக தற்போது நாட்டின் சுற்றுலாத்துறை விளங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று, அதனையடுத்து நாட்டில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் எமது நாட்டின் சுற்றுலாத்துறை மிக மோசமாக வீழ்ச்சியடைந்தமை அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலை காணப்பட்ட போது வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை அடிப்படையில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டது.

அதனையடுத்து நாடு தற்போது பொருளாதார நிலையில் சற்று தலை தூக்கி இயல்பு நிலையை அடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தின் காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை மகிழ்ச்சியான விடயம்.

அவ்வாறு பல நாடுகளிலுமிருந்தும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எமது நாட்டுக்கு பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் துறை இதுவென்பதால் அவ்வாறு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முறையாக வழிநடத்துவது மிக அவசியமாகிறது.

அந்த வகையில் நமது நாட்டில் அவர்கள் சுதந்திரமாக நாட்டின் எப்பகுதிக்கும் தமது பயணங்களை முன்னெடுப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சில கடுமையான சட்டங்களை தளர்த்துவது போன்றவை இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அத்துடன் எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அவர்கள் கொண்டு வரும் பணத்தை இங்கு செலவழிக்காமல் அதனை மீளவும் அவர்களது நாட்டுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்கும் வகையில் இங்கு அதற்கான வசதி வாய்ப்புகளை அவர்களுக்கு செய்து கொடுப்பது மிகவும் முக்கியமானது.

எமது நாட்டில் வாழ்கின்ற மக்களைப் போன்று வெளிநாட்டிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இரவு 9 மணிக்கோ அல்லது பத்து மணிக்கோ நித்திரைக்குச் செல்வதில்லை.

ஏனைய நாடுகளில் அவர்கள் அனுபவிக்கும் இரவுப் பொழுது போக்குகள் எமது நாட்டிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு தற்போது நடைமுறையில் இல்லாமை பெரும் குறைபாடு என்பதுடன் சுற்றுலாப் பயணிகள் மூலமாக எமது நாட்டுக்கு கிடைக்கும் பெருமளவு வருமானமும் அதனால் இழக்கப்படுகிறது என்பது உணரப்பட வேண்டும்.

நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் எம்மால் ஈட்டிக் கொள்ளக்கூடிய வருமானம், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக அவர்கள் எதிர்பார்க்கின்ற இரவு வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அது தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தி வருகின்றார்.

கடந்த வாரமும் பாராளுமன்ற அமர்வில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அதனை முன்னேற்றுவது தொடர்பில் சிறந்த கருத்துக்களை அவர் முன் வைத்தார். அதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறும் அவர், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கான இரவு வர்த்தகம், எமது நாட்டில் கஞ்சா பயிர்ச் செய்கையை ஊக்குவித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலமாக அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற அவரது கருத்துக்கள் சிந்திக்கத் தக்கவை.

அதேபோன்று, அரசாங்கமானது காலத்துக்குக் காலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்கும் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகமாகி சட்டபூர்வமான மதுபானத்தை கொள்வனவு செய்வதில் மதுபான பிரியர்கள் காட்டும் ஆர்வம் குறைந்து வருகின்றது.

அந்த வகையில் அரசாங்கத்துக்கு மதுபான விற்பனை மூலம் கிடைக்கின்ற வரி வருமானம் குறைந்து செல்வதையும் அவதானிக்க முடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உரையாற்ற எழும்போதே சபையில் பாரிய மாற்றம் ஏற்படும். அவரது வாயைக் கிளறும் வகையில் பலர் அடிக்கடி எழுந்து அவரைக் குழப்புவதும் அவரது கருத்துகளுக்கு எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்பதும் சர்ச்சைகள் உருவாவதும் சபையின் வழமையாக இடம்பெறும் ஒன்று.

குறிப்பாக அவரது உரையில் கஞ்சா வளர்ப்பு, இரவு வர்த்தகம் போன்ற விடயங்கள் வரும் போதெல்லாம் இத்தகைய நிலை சபையில் உருவாகும். அது சர்ச்சையாக அமைந்தாலும் சபையை குதூகலப்படுத்துவதாக அவை அமைந்து விடுவதைக் குறிப்பிட முடியும்.இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் அவர் ஆற்றிய உரை இது,

"சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்குப் பின்னர் உறங்குவதற்காக எமது நாட்டுக்கு வருவதில்லை. இரவில் அவர்களுக்கான, அவர்களது தேவைக்காக பெற்றுக் கொள்ளப்படுகின்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாதிருப்பதாலேயே எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 10 மணிக்குப் பின்னர் உறங்கிவிடுகின்றார்கள்.

உண்மையில் சுற்றுலாத்துறை முன்னேறிய நாடுகளில் இவ்வாறு இடம் பெறுவதில்லை

மாலைதீவு போன்ற நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட திட்டங்கள், நடைமுறையில் காணப்படுகின்றன. இப்போதுள்ள நிலைமையிலேயே தொடர்ந்தும் எமது நாடு முன்னோக்கி செல்லுமானால் இதுவரை காலம் எமக்கு கிடைத்த மோசமான பெறுபேறே இனியும் கிடைக்கும்.

சுற்றுலாத்துறை வருமானத்தை பொறுத்தவரை இரவு நேர பொருளாதாரம் மிக முக்கியமானதாகும்.

இலங்கையும் உலக நாடுகளுடன் தொடர்புபடும் செயற்திட்டங்கள் அவசியமாகும்.

எழில் நிறைந்த அழகான எமது நாட்டை இப்படி இரவில் பூட்டி வைப்பதால் எவருக்கும் எந்தவித பலனும் கிடையாது. உலக நாடுகளில் சுற்றுலாத்துறை மூலமாக 70 வீத இரவு நேர பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது.

அது தொடர்பில் நாம் பல்வேறு திட்டங்களை ஆலோசித்து வந்துள்ள நிலையில் பலயோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்.

இரவு 10 மணிக்குப் பின்னர் சுற்றுலா ஹோட்டல்களில் மதுபான விற்பனை பகுதிகள் மூடப்படுகின்றன. ஏன் அவற்றை மேலதிக நேரமாகத் திறந்து வைக்க முடியாது?. இந்த நிலை மாற்றம் பெற வேண்டும்.

அதேவேளை மதுபானங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக அன்றாடம் எமது நாட்டவர்கள் உபயோகப்படுத்தும்

சாராயத்தின் விலை மிக அதிகமாக உள்ளதன் காரணத்தால் மக்கள் சட்டவிரோதமான வகையில் கசிப்பு காய்ச்சி அதனை அருந்துவதுடன் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படும். இதனால் கலால் திணைக்களத்திற்கு வருமானமே இல்லாத நிலை ஏற்படலாம்.

அதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கமானது சட்டபூர்வமான மதுபானத்தின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேபோன்று இரவுப் பொருளாதாரத்தை அமுல்படுத்தாவிட்டால் சுற்றுலாத்துறையில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது." என்பதாக அவரது உரை அமைந்தது. உண்மையில் அவரது யோசனைகள் நடைமுறைக்கு வருமானால் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு அதன் மூலம் பெரும் பங்களிப்பு வந்து சேர்வதுடன் சுற்றுலாத்துறை மூலமான வருமானமும் அதிகரிக்கும் என்பது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நல்லது என்பதே எமது தாழ்மையான கருத்து.

 

Comments