விசாரணை என்ற பெயரில் பிரியங்கர ஜயரத்னவை ஓட ஓட விரட்டுகிறார்களாம்! | தினகரன் வாரமஞ்சரி

விசாரணை என்ற பெயரில் பிரியங்கர ஜயரத்னவை ஓட ஓட விரட்டுகிறார்களாம்!

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே ஜனாதிபதி வேட்பாளர் பற்றி சூடான விவாதம் தொடங்கி விட்டது. விவாதிகக்ப்படுகிறது. அடுத்த தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க வேண்டும் என சு.க. முக்கிய அமைச்சர்கள் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை நிராகரிக்காத நிலையில் அவரும் இதனை விரும்புவதாகவே அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. அவரின் தேவைப்படி தான் இந்த விடயம் திடீரென முன்வைக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு தடவையே போட்டியிடுவதாக அறிவித்து விட்டு இப்படி பல்டி அடிக்கிறாரே என்று அவருக்கு உதவிய சிவில் அமைப்புகள் கடும் கோபத்தில் இருக்கின்றனவாம். இதேவேளை 2020 ஜனாதிபதிக் கனவில் உள்ள சில அமைச்சர்களும் இந்த எதிர்பாராத திருப்பதினால் ஆடிப் போயிருக்கிறார்களாம்.
எது எப்படியோ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவினால் போட்டியிட முடியாது என்பதால் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த மஹிந்த அணி திட்டமிட்டுள்ளது. பிரமிப்பூட்டும் ஒருவரை தமது அணி நிறுத்தும் என உதய கம்மம்பில ஏற்கனவே கூறியுள்ளார்.
புத்தகம் எழுதும் விமல்
சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டால் சிறையிலிருந்து கொண்டு புத்தகம் எழுதியதுண்டு. அவை உலகப் பிரபலமடைந்து சரித்திரம் படைத்துள்ளன. தனது அமைச்சின் கீழுள்ள பொறியியல் கூட்டுத்தாபனத்திலிருந்த 40 வாகனங்களை உறவினர்களுக்கும் அடியாட்களுக்கும் கொடுத்த குற்றச்சாட்டில் கைதான வீரவங்க சிறையில் இருந்தபடி புத்தகம் எழுதுகிறாராம்.
இந்தத் தகவலை அவரை பார்ப்பதற்காகச் சென்ற பிரதி அமைச்சர் சுமேதா ஜி. ஜெயசிங்க தான் அம்பலப்படுத்தியிருக்கிறார். 25 பக்கங்களுக்கு மேல் எழுதி விட்டாராம்!
எதிர்வரும் 24 வரை இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்னும் இருவாரங்களுக்கு விளக்கமறியலை நீடிக்க வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் நக்கலாக கூறியுள்ளராம்.
இதேவேளை விமல் வீரவங்சவின் கைதின் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை பறிக்க அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
இன்று (22) விமல் வீரவங்கவின் கடசி மாநாடு நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்பதை தடுத்தாயிற்று. அடுத்து 24 ஆம் திகதி திறைசேரி முறி குறித்த பாராளுமன்ற விவாதம் நடைபெறுகிறது. அதிலும் விமலுக்கு பங்கேற்க முடியாது. இதனைவிட மஹிந்த அணியின் முக்கிய மாநாடு 27 ஆம் திகதி நடத்தப்படுகிறது. விளக்கமறியல் நீடிக்கப்பட்டால் இதிலும் அவரால் பங்கேற்க முடியாது போகும்.
பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்கள் விமல் வீரவங்சவின் உறவினர்களுக்கும் ஒருசில சகாக்களுக்கும் வழங்கும் ஆவணங்களில் ஐ.தே.க. எம்.பி. அ.தே.க. மாரசிங்கவும் அன்றிருந்த பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்னவும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கசிகிறது. இந்த ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைக்க மஹிந்த அணி தயாராவதாக பேச்சு அடிபடுகிறது.
அதிர்ஷ்டம் மாறியது
அதிர்ஷ்ட லாபச்சீட்டின் விலையை நிதி அமைச்சு 10 ரூபாவினால் அதிகரித்திருந்தது. இதற்கு எதிராக லொத்தர் சீட்டு முகவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இது தொடர்பில் பல சுற்று பேச்சுக்கள் நடந்தாலும் எதுவும் பயனளிக்கவில்லை. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் காரசாரமாக பேசப்பட்டது. பிரதமருடன் நீதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுவிஸ்லாந்து சென்றுள்ள நிலையில் தான் இந்த விடயம் அமைச்சரவையில் ஆராயப்பட்டது. ரவி கருணாநாயக்கவின் முடிவை அமைச்சர்கள் பலரும் விமர்சித்தார்களாம். வர்த்தமானி மூலமே அதிர்ஷ்டலாப சீட்டின் விலையை கூட்ட முடியும். நிதி அமைச்சரின் முடிவு சட்ட விரோதமானது என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 ரூபாவாக உள்ள லொத்தர் சீட்டு விலையை 30 ஆக அதிகரிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார்.
வில்பத்து விவகாரம்
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்ய வேண்டும் என சில சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி இதனை வலியுறுத்தியிருந்தனர். இவர்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிசாதுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சிலர் களமிறங்கியுள்ளனராம். வில்பத்து தொடர்பில் தெரண தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பேட்டி தொடர்பில் அமைச்சர் ராஜித பாராட்டு தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிசாத் சிறப்பாக பதில் கொடுத்துள்ளதாகவும் இனவாத மற்றும் அரசியல் நோக்கிலே இந்தப் பிரச்சினை கையாளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இடையில் சிக்கிய எம்.பி.
வில்பத்து விவகாரம் தொடர்பில் தனியார் தமிழ் தொலைக்காடசியொன்றில் விவாதமொன்று நடைபெற்றது.
விவாதத்திற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அது பற்றி அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி அமைச்சர் ரிசாத் பதியுதீனை விமர்சிப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என ஆரம்பத்திலே தெரிந்து விட்டதாக மக்கள் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவரும் அதில் கலந்து கொண்ட இருவரில் ஒருவருமான மக்கள் காங்கிரஸ் முன்னாள் செயலாளரும் அமைச்சருடன் முறுகலில் இருப்பவர்கள் என்பதலும் இந்த நிகழ்ச்சி ஏன் நடத்தப்பட்டது என்பது தெளிவு என அவர் குறிப்பிட்டார்.
எதிர்பார்த்ததபடி தான் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் நடத்துபவரும் அ.இ.ம.க. முன்னாள் செயலாளரும்தான் அதிகமாக கதைத்தார்களாம். இதில் கலந்து கொண்ட ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பேச வெறும் ஐந்து நிமிடம்தான் வழங்கப்பட்டிருந்ததாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி அவர் தமக்கு நெருக்கமான சிலரிடம் வருத்தப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது. தன்னையும் இதில் அழைத்து தங்களுக்கு தேவையானவற்றை பேசிக் கொண்டதாக அவர் கூறியுள்ளாராம். வழியே போன மின்ன​ைல மடியில் கட்டிக் கொண்ட மாதிரி என சிலர் நக்கலடிக்கின்றனராம். இதே சமயம் முன்னாள் அ.இ.ம. காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீதுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு அமைச்சர் ரிசாதுக்கு நெருக்கமானவர்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனராம். இது பற்றி சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருவதாக தகவல் அடுபடுகிறது.
உள்ளூராட்சி தேர்தல்
எல்லை நிர்ணய அறிக்ைக கையளிக்கப்பட்ட போதும் ஜூன் மாதத்தின் பின்னர் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என அரச தரப்பில் பேச்சடிப்படுகிறது. ஐ.தே.க.வும் சு.க.வும் திட்டமிட்டே இந்தளவிற்கு தேர்தலை பின்போட்டதாக கூறப்படுகிறது. இனியும் பின்போட முடியாததாலேயே எல்லை நிர்ணய அறிக்ைகயை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் இது குறித்த வர்த்தமானி வெளியாகும் என அமைச்சு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மஹிந்த அணியில் கூட்டம்
ஒன்றிணைந்த எதிரணி 27 ஆம் திகதி நடத்தும் மாநாட்டிற்கு பெரிய கூட்டமொன்றை திரட்ட முயற்சி நடைபெறுகிறதாம். இதில் சு.க. அமைச்சர்கள் சிலர் ஏற இருப்பதாக மஹிந்த அணி தரப்பில் கதை பரப்பப்படுகிறது. அதனால்தானாம். ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அமைச்சு பதவியை ராஜினாமாச் செய்தது போன்று விரத்தியில் உள்ள சில அமைச்சர்களை இந்த மேடையில் ஏற்ற பேச்சு நடத்தினாலும் அவை பயனளிக்கவில்லையாம்.
விரக்தி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சு.க. முக்கியஸ்தர்களை பொலிஸ் நிதி மோசடி பிரிவு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு பாரிய மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றுக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் அழைக்கழிப்பதால் பலரும் விரத்தியில் உள்ளனராம். முன்னாள் ஜனாதிபதியின் சகோதரி நிருபமா ராஜபக்‌ஷ சு.க. அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராவதாக இருப்பதாக பேச்சு அடிப்படிகிறது. மறுபக்கம் தான் அமைச்சு பதவியை ராஜினாமா செய்தால் தன்னை சிறுசிறு விடயங்களுக்கும் பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் பயமுறுத்த முயல்வதாக பிரியங்கர ஜயரத்ன எம்.பி. கூறியிருக்கிறார். அமைச்சராக இருந்த போது சாதாரணமாக செய்த உபசரிப்பு போன்றவற்றுக்கே தன்னை விசாரிப்பதாக கூறியுள்ள அவர், இந்த அரசை துரத்தும் வரை போராடப் போவதாகவும் கூறியுள்ளராம்.
பிரியங்கர ஜயரத்ன எம்.பி.யின் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சரான ரங்க பண்டார தற்பொழுது ஜயரத்ன எம்.பியை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். அரசாங்கத்தில் இருக்கும் வரை வாய்மூடியிருக்க அவர் ஜயரத்ன எம்.பி. காணி மோசடியில் ஈடுபட்டதாகவும் அதனை மறைக்கவே அமைச்சு பதவியை கைவிட்டதாகவும் சாடி வருகிறார். இந்த மோசடிக்கு விமல் வீரவங்சவுக்கு தொடர்புள்ளதாம்.
−இப்னு ஷம்ஸ்

Comments