பத்திகள் | தினகரன் வாரமஞ்சரி

பத்திகள்

ராமண்ணே

“போன கிழமை நாங்கள் ரோல்போல் விளையாட்டைப் பத்தி பேசினமென்ன உந்த ரோல்போல் விளையாட்டு எண்டா என்னவெண்டு நிறையப் பேர் விசாரிச்சவையாம்.”

“எனக்கும் நீங்கள் சொல்லித்தான் உப்பிடி ஒரு விளையாட்டு இருக்குதெண்டு தெரிஞ்சுது.”

“ரோல்போல் என்ற உந்த விளையாட்டை இந்தியாவில பூனாவைச் சேர்ந்த ராஜூ டவாடே என்ட விளையாட்டு ஆசிரியர்தான் அறிமுகப்படுத்தினவர். கிட்டத்தட்ட பாஸ்கட்போல் போலதான் உதுவும். ஆனா சறுக்கு உருளைச் சப்பாத்து போட்டுக் கொண்டுதான் உதை விளையாடவேணும். உது ஹேன்ட்போல், பாஸ்கட்போல், ரோலர் ஸ்கேட்டிங் எண்ட மூன்றையும் கலந்து விளையாடுற ஒரு விளையாட்டு. சுமார் 25 நாடுகளில விளையாடுற உந்த விளையாட்டு ஒரு இந்திய கண்டுபிடிப்பு.”

“உது நிறையப் பேருக்கு தெரியாது என்ன?.”

“உந்த ரோல்போல் விளையாட்டின்ட முதலாவது உலக கிண்ண சுற்றுப்போட்டி 2011 ல இந்தியாவின்ட பூனா நகரத்தில நடந்தது. இரண்டாவது உலக கிண்ண போட்டி 2013ல கென்யாவில விளையாடினம். மூன்றாவது உலக கிண்ண போட்டி 2015ல திரும்பவும் இந்தியாவின்ட பூனாவில நடந்தது. இப்போ நான்காவது உலகக் கிண்ண போட்டி இந்த மாசம் 18 ஆம் திகதியில இருந்து 23 ஆம் திகதி வரையில பங்களாதேசில நடக்குது. 56 நாடுகள சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்கினம்”

“எங்கட பெடியளும் பெட்டையளும் விளையாடினமென்ன.?”

“உதைதான் சொல்ல வாரன். உந்த ரோல்போல் விளையாட்டு இப்ப இலங்கையிலயும் பிரபலமாகிக் கொண்டு வருகுது. இலங்கையில தேசிய மட்டத்தில மன்னார் அணிதான் இரண்டாவது இடத்தை பிடிச்சிது. உந்த அணியில திறமையா, விளையாடிய மூன்று மாணவியள் பெண்களின்ட ரோல்போல் தேசிய அணியிலயும் இடம் பிடிச்சிருக்கினம். யோ.திவ்யா, ஏ.திவ்யா இருவரும் மன்னார் சித்திவினாயகர் பாடசாலையிலும் எஸ்.அன்டோலின் என்ட மாணவி சென்ட் கேவியர் பாடசாலையிலும் படிக்கினம். இவையள் தான் ரோல்போல் தேசிய அணியில் இடம்பிடிச்ச மன்னார் மாணவியள். இவையள பாராட்டி வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் உவையளுக்கு துவிச்சக்கர வண்டியள பரிசளிச்சவர். உது சின்னராசு மன்னார் மாவட்டத்துக்கு மட்டுமில்ல எங்கட வடமாகாணத்துக்கே பெருமை சேர்க்கிற விடயம்.”

“பின்ன உலகக் கிண்ண போட்டியில இடம் பிடிக்குறதெண்டா லேசுப்பட்ட விஷேயமே..”

“உலக கிண்ண போட்டியில விளையாடுற அணியில இடம் பிடிக்கிறது எல்லா பெடியருக்கும் பெட்டையருக்கும் முடியிற விடயமில்ல. ஆனா எல்லோரும் தமக்கு தெரிஞ்ச வகையில தமக்குள்ள இருக்கிற திறமைய காட்ட வேணும். கண்டியோ போட்டியில வெற்றி பெற வேண்டிய விஷயத்தில மட்டுமில்ல சமூகத்துக்கு நல்லது செய்யிற விடயங்களிலயும் எங்கட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து செயற்பட வேணும்.

“உதைத்தான் நானும் சொல்லுறனான்”

“போன கிழமை நடந்த ஒரு விடயத்தை சொல்லுறனான். கேட்டுக் கொள்ளன். கோப்பாயில கைதடிக்கு போற பாதை இருக்கல்லோ. உந்த பிரதேசத்தில நிறைய குப்பையளையும் கழிவுப் பொருட்களும் வீசப்படுது. உந்த பிரதேசத்தில இருக்கிற இளைஞர்களுக்கு திடீரென்டு ஒரு யோசனை வந்து போட்டுது. யாரோ ஒருவருக்குத்தான் உந்த ஒருவருக்குத்தான் உந்த யோசின உதிச்சுக்கிடக்குது. அவர் மத்தைவையிட்ட உதை சொன்னவராம். உது மத்தைவைக்கும் பிடிச்சுப் போட்டுது. ஒன்டா சேர்ந்தவை குப்பையளையும் கழிவுகளையும் சுத்தம் செய்தினம். உந்த இடத்தில வைத்தியசாலை கழிவுகள்தான்; தான் கொட்டிக்கிடந்தது. உதை அப்புறப்படுத்தி இடத்தை சுத்தம் செஞ்சி இளைஞர்கள் நல்ல பெயர் வாங்கிப் போட்டினம். இளைஞரை பாராட்டியவை வைத்தியசாலை தரப்பினரிட்டதான் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துப் போட்டினம்.”

“எங்கட வல்வெட்டித்துறை பெடியள் பட்டம் செய்யிறதில கெட்டிக்காரன்கள் என்பது தெரியுமோ உனக்கு?”

“ தெரியாமலென்ன ரெண்டு மாசத்துக்கு முன்ன வல்வெட்டித் துறையில பட்டம்விட்டு ஷோ காட்டினவையில்ல நானும் போய் பார்த்தனான்.”

“உந்தப் பெடியள் இப்ப கொழும்பிலயும் ஷோ காட்டியிருக்கினம்”

“கொழும்பிலயும் பட்டம் விட்டினமோ.?”

“ஓம் சின்னராசு அழகழகா 20 பட்டங்களை செஞ்சு வல்வெட்டிப் பெடியள் கொழும்புக்கு எடுத்துச் போனவையாம். நேரே கோல்பேஸ் போய் பட்டங்களை விட்டிருக்கினம். அன்றைய தினத்தில அங்க வந்த ஏராளமான கொழும்பு காரர்களோட எங்கட வல்வை ஆட்களும் சின்னது, பெரிசு என பல வகையான அழகிய பட்டங்களை பார்த்து சந்தோசப் பட்டிருக்கினம்.”

“செய்வினம் பெடியள் வலுகெட்டி. உதைவிட நல்லதையெல்லாம் செய்வினம். நாங்கள் சொல்லிப் போட்டமென்ன, இனி நடப்பதை பாருங்கோ?”

“ உது மட்டுமில்ல சின்னராசு. எங்கட விதானையார் போன வாரம் கிளிநொச்சி போனவராம். அங்க கிளிநொச்சி பாடசாலையொன்டில் இல்ல விளையாட்டுப் போட்டி நடந்ததாம். உதில் மாணவர்கள் இல்ல குடில ஒன்டை மயில் போல செஞ்சி அலங்கரிச்சிருந்தவையாம். அதின்ட படத்தையும் எனக்கு காட்டினவர். என்ன கிறியேற்றிவிட்டி. திரைப் படத்தின்ட செட் போல கிடந்தது கண்டியோ. எங்கட மாணவர்களிட்ட திறமை இருக்குது கண்டியோ. தட்டிக் கொடுத்து ஊக்குவிச்சமென்டா அவை எங்கயோ போய்த்தான் நிற்பினம்”

“எங்கட பெடியளும் பெட்டையளும் வலு திறமைசாலிகளண்ணே. அவையள யாரும் ஊக்குவிக்குறதில்ல ஒரு சிலரின்ட குறையள சொல்லி இளைஞர்களை பழிக்கினம். உதை விட்டுப்போட்டு நல்லதை செய்யுங்கோ என்டு சொல்லி கொஞ்சம் கரிசனை காட்டினமென்டா வடக்குக்கே பெருமையென்ன.”

“சில வருஷங்களுக்கு முன்னால எங்கட பெடியரும் பெட்டையளும் சோர்ந்து போய்த்தான் கிடந்தனர் அவையளின்ட மறைஞ்சி கிடந்த திறமையள காட்ட முடியாம இருந்தது. ஆனால் இப்ப சின்னராசு அனைத்து வழிகளிலும் இருந்த கதவுகள் திறந்து போட்டினம். உதால லோக்கல் டி.வி.களில் இளைஞனே உன்னால் முடியும் நிகழ்சியில ஒரு வடபகுதி இளைஞர் ஒரு காலால் நடனமாடி சபையினர ஆச்சரியத்தில ஆழ்த்திப் போட்டார். வானொலியில் அடையாளம் நிகழ்ச்சியில பெடியரும் பெட்டையரும் அருமையாக பாடினம். இன்னும் சிலர் குறும்படம் செஞ்சி கலக்கினம். உள்ளுரில மட்டுமில்ல தமிழக ரியலிட்டி ஷோக்களிலயும் எங்கட ஆக்கள் பாடுகினம், ஆடுகினம், அவுஸ்திரேலியாவில கூட நடன நிகழ்ச்சி நடத்தி பார்க்கிறவைய பரவச மூட்டினம்.”

“எல்லா இடத்திலயும் கொடி கட்டினம் என்டு சொல்லுங்கோவன்.”

“ஓம் சின்னராசு ஒரு சமூகத்தின் சொத்து என்டு அந்த சமூகத்தில இருக்கிற இளைஞர்களைத்தான் சொல்லேலும். அந்த சமூகத்தின்ட முன்னேற்றத்திற்கு அவைதான் பொறுப்பு. அவையின்ட கையிலதான் சமூகத்தின்டயும், நாட்டின்டயும் எதிர்காலம் கிடக்கு. அவை நினைச்சினமென்டா மனசு வச்சினமென்டா சமூகத்தின்ட மதிப்பை உயர்த்தி நாட்டையும் பெருமைப்படுத்தேலும்.”

“இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென்ன”

“சரியாச் சொன்னனீ. இன்டைய இளைஞர்களை பொறுப்பு உள்ளவர்களா ஆக்க வேணுமென்டா சுய கட்டுப்பாடு பொறுப்புகள தைரியமா ஏற்றுக்கொள்ளுதல், சிந்திச்சு சரியான முடிவெடுத்தல், ஒரு குழுவாக இணைந்து செயப்படுதல் போன்ற தலைமைத்துவ பண்புகளை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேணும். உது ஆசியர்களுக்கும் படிச்சவையளும் செய்ய வேண்டியது இளைஞர்களை சரியா வழிப்படுத்தினம் என்டா எல்லாம் வெற்றிதான்.”

“வழிப்படுத்திறதோ? ஒன்டும் விளங்கேல்ல”

“வழிப்படுத்திரதென்டா இளைஞர்கள் எப்படியெல்லாம் நடக்கவேணும் என்டதை தீர்மானிகிறது எண்டு சொல்லேலும். அவையின்ட மனசில நல்ல எண்ணங்கள விதைக்க வேணும் சின்னராசு. நல்ல புத்தகங்கள் வாசிக்கச்செய்ய வேணும்.. புதிய தொழில்நுட்பங்கள அவைக்கு அறிமுகப்படுத்த வேணும்.பொருளாதாரத்தின்ட அவசியம், விளையாட்டின்ட தேவை, ஆங்கிலத்தில தேர்ச்சி, அதோட ஒழுக்கம், பணிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை சரியா பின்பற்றல் எல்லாம் பக்குவமா சொல்லிப் போட்டமென்டா அவையள் பிடிச்சிக் கொள்ளுவினம். அது மட்டுமில்ல இளைஞர்களின்ட மனசு எதையும் டக்கென்டு பிடிச்சிக்கொள்ளும். என்ட படியா அவையோட பழகிறவை நல்லவர்களா இருக்கிறதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேணும்.” 

 

 

Comments