காணி உறுதியுடன் வீடுகள் | தினகரன் வாரமஞ்சரி

காணி உறுதியுடன் வீடுகள்

பன். பாலா      

மலையக மக்களின் காணிப்பிரச்சினை சம்பந்தமாக எவருமே போதிய கரிசனைக் காட்டுவதில்லை என்பது பொதுவான அவதானிப்பு. இதனை மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி பாராளுமன்றத்தில் பேசிவந்திருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினை சம்பந்தமாக ஊடகங்களில் பேசப்பட்ட அவளவுக்கு மலையக மக்களின் காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக பெரிதாக பேசப்படுவதில்லை. எனினும் மலையக மக்களின் காணிவிடயத்தில் கொள்கை அடிப்படையிலான தீர்மானம் ஒன்றின் மூலம் வீடமைப்பு மற்றும் ஜீவனோபாயத்திற்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது வலுவான கோரிக்கையாக வலியுறுத்தப்படவேண்டியது முக்கியமாகின்றது.

தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு இலங்கையில் 150 வயது. பெருந்தோட்ட மக்ளுக்கு இங்கு 200 வருட வரலாறு. எனினும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இற்றைவரை மூன்று நான்கு தலைமுறையினராய் தோட்டங்களில் வாழ்ந்து வரும் தொழிலாளர் சமூகத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டம் என்பது மிகவும் பிரதானமானது என்பதே அவதானிகளது பார்வையாகும்.

ஆனால் இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதுவுமே மனிதாபிமான ரீதியிலாவது இதனைக் கையாள முன்வரவில்லை.

இந்நாட்டின் பொருளாதாரத்துக்குத் தோள் கொடுத்து வரும் இவர்கள் கலாசார பண்பாட்டு விழுவிமியங்களுக்கூடாக செல்வாக்குச் செலுத்தும் நிலையில் இவர்களது இருப்பிட உரிமை, வாழ்வாதாரம் என்பவற்றைப் பாதுகாப்பதான பொறுப்புக் கூறல்களை எவருமே ஏற்கத் தயாரில்லை என்பதே யதார்த்தம்.

தற்போதைய அரசாங்கம் ஓரளவு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்து வருவதை மறுப்பதற்கு இல்லை. இதனடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்நகர்வில் ஏற்பட்டுள்ள மந்தகதி போக்கு அதிருப்தியை உண்டு பண்ணவே செய்கின்றது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி மலையக மக்களின் வீடமைப்புக்காக காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அங்கீகாரம் பெற்றது. எனினும் இந்நடைமுறை தேசிய கொள்கைத் திட்டம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தப்படாமையால் மலையகத்தின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா மக்களும் அதன் பயனை அடைய முடியாத சிக்கல் நிலையே நிலவுகின்றது.

ஏனெனில் தோட்டங்களைப் பொறுப்பேற்றுள்ள கம்பனி தரப்பு ஒரு நடைமுறையைக் கையாள்கிறது. இதே நேரம் அரசின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் வரும் அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை , எல்கடுவ பிளான்டேஷன் என்பன வேறு ஒரு நடைமுறையையும் கையாள்கின்றது.

எனவே அரசாங்கத்தின் நலனைக் கருதியதாக இருந்தாலும் அது அதிகாரிகள் மட்டத்தில் போகும் போது நோக்கம் சீர்குலைந்து போவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் சகல மக்களும் சமவாய்ப்பைப் பெறமுடியாமல் போகின்றது. 100 நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிலருக்கு வழங்கப்பட்ட 7பேர்ச் காணிக்கான சட்டப்பூர்வமான உரிமம் கூட வழங்கப்படாமல் இருக்கின்றது.

ஆரம்பித்த நேரத்தில் பெரிதும் பேசப்பட்ட இத்திட்டம் பின்னர் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. இதே நேரம் ஆட்சிக்கு வரும் சகல அரசாங்கங்களும் அவ்வப்போது பெருந்தோட்டக் காணிகளை அரச கட்டுமாணங்களுக்காகவும் பெரும்பான்மையின மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவும் சுவீகரிக்கும் போக்கு தொடரவே செய்கின்றது.

இதே வேளை நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள பெருந்தோட்டக் காணிகளை வெளியார் கையகப்படுத்திக் கொள்ளும் வணிக முயற்சிகள் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. 200 வருடகாலமாக வாழ்ந்து வரும் தோட்ட மக்களின் வீடமைப்புக்காக காணி வழங்குவதில் பல்வேறு முட்டுக்கடைகளைப் போடும் தோட்டக்கம்பனிகள் வெளியாரைப் பொறுத்தவரை தாராள போக்கினையே கடைப்பிடிக்கின்றன.

பெரும்பாலும் அரசின் ஆலோசனைகளை கம்பனி நிர்வாகங்கள் பொருட்படுத்துவது கிடையாது. 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு, கூட்டு ஒப்பந்தத்துக்கூடான சம்பள நிர்ணய விடயங்களில் அரசாங்கத்தின் அழுத்தத்தைக் கூட இவை அலட்சியப்படுத்ததேவ செய்தன. இங்கு அரசியல் தலையீடு என்பது கம்பனிகளுக்குச் சார்பாகவே முடிவதை அவதானிக்கலாம்.

அண்மையில் நாவலப்பிட்டி பகுதியில் தோட்டக் காணிகள் வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகளது அழுத்தம் பிரயோகிக்கப்படவே அமைச்சரவைத் தீர்மானங்களைக் கூட அலட்சியப்படுத்துவதில் அதிகாரிகள் தயக்கம் கொள்வதில்லை.

1942இல் கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய தோட்டத்தில் முதன் முதலாக தோட்டக் காணியில் கைவைக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.

1970இல் நுவரெலியா மாவட்ட டெவன் தோட்டத்தில் காணி சுவீகரிப்புக்கான எதிர்ப்புப் போராட்டம் நடந்தது.

இதில் சிவனு இலட்சுமணன் உயிர்த்தியாகம் செய்தார். இன்றும் கூட தமது வாழ்வாதாரத்துக்கு ஏதுவான காணிகள் அபகரிக்கப்படுவதை மக்கள் எதிர்க்கவே செய்கின்றார்கள்.

பெரும்பான்மையின மக்களுக்கு காணி விநியோகிப்பதை எதிர்ப்பது அல்ல இவர்களது நோக்கம்; தமக்கும் காணி வேண்டும் என்பதே இவர்களின் போராட்ட தொனி. எனினும் தோட்ட எல்லைகள், போக்குவரத்து வசதியுள்ள இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு காணிகள் வகைதொகையின்றி பறிக்கப்படுவதை ஆட்சிப் பீடமேறும் அரசாங்கங்கள் ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. இவை நவீன கிராமங்களாக வளர்ச்சியடைய இங்கு வாழ்கின்ற மக்கள் ஓரங்குல நிலத்துக்குத் தானும் உரிமைக் கொண்டாட முடியாதுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளால் விளைச்சல் நிலங்கள் குறைவடையலாயின. மக்களின் வாழ்வாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் வெட்டுக்கள் விழுந்தன.

1992ஆம் ஆண்டுகளில் சுமார் 500000 பேராக இருந்தது தோட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்த தொழிலாளர்களது எண்ணிக்கை. 2012ஆம் ஆண்டளவில் வெறுமனே 230000 ஆக இத்தொகை வீழ்ச்சியடைந்து விட்டது. பிந்திய தகவல்படி இத்தொகை தற்போது இரண்டு இலட்சமாகக் குறைவடைந்திருப்பதாகத் தெரிகின்றது.

இதே வேளை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் வரும் தோட்டங்களில் 12 ஆயிரம் பேர்மட்டுமே தொழில் புரிவதாக தகவல்களை தெரிவிக்கின்றன. மலையக மக்கள் 18 மாவட்டங்களில் செறிந்து வாழ்கின்றார்கள். எனினும் தேசிய ரீதியிலான காணிக்கொள்கைகள் எதுவுமே இவர்களை உள்ளடக்கியதாக வரையப்படவில்லை.

பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 பேர்ச்சஸ் காணி, நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 10 பேர்ச்சஸ் காணி, மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 பேர்ச்சஸ் காணி என வழங்கப்படுவதற்கு தேசிய ரீதியிலான காணிக் கொள்கை வழிவகுக்கின்றது.

இத்துடன் விவசாயம் செய்தவதற்கு 2 ஏக்கர் காணி, தனியொருவருக்கு தொழில் நிமித்தம் 30 வருட குத்தகைக்கு காணி என்றெல்லாம் ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

2006இல் கூட காணி இல்லாதவர்களுக்கு இலவசமாக காணி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது. இவ்வாறு நாட்டு மக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட காணிப்பகிர்வு திட்டங்கள் யாவுமே தோட்ட மக்களை அந்நியப்படுத்தவே செய்தன.

இவையெல்லாம் கருத்திற் கொண்டதாக மேற்கொள்ளப்பட்டதே மலையக மக்களின் வீடமைப்புக்காக உருவாக்கப்பட்ட ‘பசுமை பூமி் திட்டம். 7 பேர்ச் காணி வழங்கும் இத்திட்டத்துக்கு 2015இல் அமைச்சரவை அங்கீகாரம் கிட்டியது. எனினும் இத்திட்டம் நடைமுறைக்கு வருவதில் நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதே போலவே காணி விநியோகத்துக்காக தேசிய கொள்கைத் திட்டமொன்று உருவாக்கப்படுவதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படவே செய்கின்றது.

இதே நேரம் காணிப்பகிர்வு விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினது அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் பற்றி மலையக பிரதிநிதிகள் அடிக்கடி அதிருப்தி தெரிவித்து வருகின்றார்கள்.

பிரதமர் ரணில் ஓரங்குல நிலந்தானும் சொந்தமாக இல்லாத தோட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுப்பது பற்றி பிரஸ்தாபிக்கத் தவறவில்லை.

இதே வேளை அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ள திட்டங்களை அமுதல்படுத்துவதில் அரச அதிகாரிகள் காட்டும் அசமந்தப் போக்குக் குறித்துப் பிரதமர் அவதானம் செலுத்த வேண்டும். 

 

Comments