ஓர் உண்மை மனிதனின் ஒப்புதல் வாக்கு மூலம்! | தினகரன் வாரமஞ்சரி

ஓர் உண்மை மனிதனின் ஒப்புதல் வாக்கு மூலம்!

ங்களுக்கு ஏதாவது தவறு நடந்திட்டால், எடுத்த எடுப்பிலேயே அடுத்தவங்களத்தான் குறை சொல்லுவம். எந்தத் தவறெண்டாலும், எங்கட பக்கத்திலை பிழை இருந்தாலும் ஏற்றுக்ெகாள்ளத் தயங்குவம்; நியாயம் கற்பிப்பம்! ஆனால், மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிவு பற்றி; உயிரிழப்பு பற்றி ஒரு தனி மனிதர், "நானும் ஒரு கொலைகாரன்தான்" எண்டு சொல்றார் எண்டால் நம்புவீங்களா? பெயர் வருண சந்திரகீர்த்தி. சீன தொடர்பாடல் பல்கலைக்கழத்தில் இருக்கிறார். அவரின்ர கதையைக் கேளுங்க...

முப்பத்தைஞ்சு வருஷத்திற்கு முந்தி எங்கட வீட்டிலை ஒரு நாய் இருந்தது. பெயர் சண்டியன்.

வீட்டுக்கு ஆரும் வெளி ஆட்கள் வந் திட்டால், சண்டித்தனம் காட்டுவான். அத னால் இந்தச் சண்டியனைக் கட்டிப்போட வேண்டிய நிலை வந்தது. அவனிடம் நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தன. அவனுக்கு ஏதாவது தேவை எண்டால்; வெளியில் போக வேணுமெண்டால், பலமா சத்தம் போடுவான். குரலும் வித்தியாசமா இருக்கும். அவன்ர சத்தத்திலையே தேவை என்னெண்டத நாங்க புரிஞ்சுகொள்ளுவம். அவிழ்த்து விட்டதுமே ஒரே மூச்சில் பக்கத்துத் தோட்டத்திற்கு ஓடுவான்.

எங்களது வீட்டுத்தோட்டம் சுமார் ஒன்றரை ஏக்கர் இருக்கும். ஆனால், அவன்ரை பாரத்தைக் குறைக்கிறத்துக்கு அவனுக்குப் பக்கத்துத் தோட்டம்தாம் பிடிச்சிருந்தது. அந்தத் தோட்டத்தில் யாரும் குடியிருக்காததால, சண்டியன் தன் இஷ்டத்தை நிறைவேற்றி வந்தான்.

ஆனால், நாங்கள் மனிதர்கள். நாம் மிருகத்தின்ர வேலையைச் செய்ய மாட்டம். அப்பிடியான தேவைகளை நாங்க வீட்டுக்குள்ளயே இப்ப முடிச்சுக்ெகாள்ள ஏலும். முந்தியெண்டால், வாளியைத் தூக்கிக்ெகாண்டு பத்தடி பதினைந்தடி தூரத்திற்குப் போக வேணும். இப்ப நல்லா முன்னேறிட்டம். மனிதர்களும் உயர் மிருக இனம்தானே! உயர்ந்த மனத்தைக் கொண்டதாலதான் நம்மை மனிதர் எண்டு சொல்லுறாங்க. வெளிக்கடமைகளை மட்டுமில்லை, எங்கட வீட்டிலை சேர்ற குப்பைகளைக்கூட எங்கட வீட்டுத் தோட்டத்திலையே அப்புறப்படுத்துறதுக்குப் பழகி இருந்தம். ஒருபோதும் எங்கடை குப்பையை மற்றவங்க தோட்டத்திலை கொண்டுபோய் போட்டது இல்லை. ஆனால், இப்ப நாங்க அந்தப் பாரம்பரிய வேலை எதனையும் செய்றதில்லை. காரணம் நாங்கள் முன்னேறிட்டம். எங்களுக்கு இருக்கிற அறிவும் கொஞ்ச நஞ்சம் இல்லையே! வெளிநாட்டிலை நடக்கிற குப்பை விசயங்கள ஃபேஸ் புக்கிலையே பாத்துக்ெகாள்ளுவம். எங்கள மாதிரி இங்கிலீஷ் பேச ஆருக்கு ஏலும்?

அதனால, இப்ப நாங்க முன்னேற்றமான முறையிலைதான் வேலை செய்வம். எங்கடை குப்பையை பக்கத்து வீட்டுத் தோட்டத்திலை போடுவம்; நாங்க வரி செலுத்திறதாலை நகர சபை, அரசாங்கம் அப்பிடிச் செய்ய வேணும் எண்டு உறுதியா சொல்லுவம். குப்பை என்றது நாற்றமடிக்கிறது. அதைத் தூர விலக்க வேணும்தானே! கொழும்புக் குப்பையைக் கொழும்பிலை வைச்சிருக்க ஏலாது! கம்பஹா குப்பையை கம்பஹாவிலை வைச்சுக்ெகாள்ளவும் முடியாது! கண்டிக் குப்பையைக் கண்டியிலை வைச்சிருக்க ஏலாது! தூரத்திற்கு அனுப்ப வேணும். எங்கடை கண்ணுக்குத் தெரியாத இடத்திற்கு அனுப்ப வேணும். அப்பத்தான் எங்கடை வீட்டை அழகா வைச்சுக்ெகாள்ள ஏலும். நினைச்சமாதிரி அழகா வாழ ஏலும்!

இதை வீடுகள்ல உள்ள நாங்க மட்டுமில்லை, உலகத்திலை ஆருக்கும் சளைக்காத படித்த பண்டிதர்கள் உள்ள பல்கலைக் கழகங்களப் பாருங்க.

ஆர் எண்டாலும் குப்பையைத் தூர வைக்கத்தான் பாக்குறாங்க. எந்த முட்டாள்தான் குப்பையைப் பக்கத்திலை வைச்சுக்கொள்ள விரும்புவான்? துறைமுகம், சுங்கம், மத்திய வங்கி, உச்ச நீதிமன்றம், பாராளுமன்றம் எல்லாமே அப்பிடித்தான். இதுதான் முறைமை. எங்கட குப்பையை எங்காச்சும் கொண்டுபோய் போட வேணும்! நானும் கொஞ்ச காலம் வெள்ளவத்தையில் இருந்திருக்கிறேன். அப்ப என்ர குப்பையும் மீத்தொட்டமுல்லைக்குத்தான் போய் இருக்கும். மாதம்பிட்டி குப்பை மேட்டை உருவாக்கிறத்துக்கும் என்ர பங்களிப்பு இருந்திருக்கும். எப்பிடியோ மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிஞ்சு விழுந்து நிறையபேர் செத்துப்போயிட்டாங்க. நாங்க இராப்பகலா செய்தி பார்க்குறம்.

 எத்தனைபேர் செத்தார்கள் என்றத அறியவேணும்! அதுமட்டுமில்லை, மக்கள் ஏசுகிறார்கள். சிலர் அந்த அரசாங்கத்தைத் திட்டுறாங்கள், சிலர் இந்த அரசாங்கத்தைத் திட்டுறாங்கள்! அவர் இவரை, இவர் அவரை. இப்படி மாறி மாறிப் பேச்சு நடக்குது! ஆனால், எனக்குத் தெரியும், மக்கள் இறந்ததுக்கு நானும் ஒரு காரணம்! நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்த வினைதான் குப்பை மேடு சரிவுக்குக் காரணம்! நாம் குப்பையை கொண்டு போய் வேறு இடத்திலை போட்டதைப்போல, யார் யாரையெல்லாமோ திட்டித்தீர்த்து நாங்கள் செய்த பாவத்தைக் கழுவ முடியாது! இந்த உண்மையை நாங்கள் ஒத்துக்ெகாள்ளவே வேண்டும்"

மனச்சாட்சி உள்ள எவரும் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ளுவாங்க. நீங்களும் அப்பிடித்தான் எண்டு நினைக்கிறன். வெளிநாடுகள்ல குப்பையை அகற்றுறத்துக்கு எப்படியெல்லாம் நடவடிக்ைக எடுக்கிறாங்க.

அதெல்லாத்தையும் தேடிப்பார்த்தாவது ஏதாவது செய்யுங்கடா என்கிறார் இந்தப் பச்சை மனிதன்! 

Comments