தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம் | தினகரன் வாரமஞ்சரி

தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம்

வாசுகி சிவகுமார்

நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் தீர்ப்புச்சொன்னது தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருப்பதனையே காட்டுவதாகக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் இதுவல்ல என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி...

 

வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபையின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைச்சாத்திட்டவர்களில் பலர் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனவே?

அவ்வாறு யாரும் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றியதாக நான் அறியவில்லை. கைச்சாத்திட்டவர்களில் ஒருவர் பின்வாங்கியதாக செய்தி சற்று முன்னர் கிடைத்தது. ஆனால் அச்செய்தியை சரிபார்த்தபோது அது முகநூலில் வெளியிடப்பட்ட பொய்த்தகவல் என்கிற விபரம் கிடைத்தது. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது வட மாகாண சபையின் ஆளும் கட்சியினைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் எடுத்த தீமானம். அதில் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தம் எதுவுமில்லை. அதேபோல தங்கள் நிலைப்பாட்டினை எவரேனும் மாற்றினாலும் அதில் தமிழரசுக் கட்சியின் நிர்ப்பந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 15 பேர், முதலமைச்சர் தவறாகச் செயற்படுகின்றார், எனக் கூறி மாகாண சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தார்கள். முதலமைச்சர் மீது தாம் நம்பிக்கையிழந்திருப்பதாக்க் கூறி அவர்கள், ஆளுனரிடம் கடிதத்தினைச் சமர்ப்பித்திருக்கின்றார்கள். அதில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது அவர்களையே சார்ந்தது. அதில் கட்சியின் தலையீடு, அழுத்தம் எதுவுமில்லை. ஆனாலும் ஆளும் கட்சியின் 15 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினருமாக 21 பேர் முதலமைச்சருக்கெதிரான தங்களது எதிர்ப்பினை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கின்றார்கள். எதிர்க் கட்சித்தலைவரின் நிலைப்பாடு இன்னமும் தெரியவரவில்லை. முதலமைசருக்கு எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கும் 21 பேரினதும் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.

வட மாகாண முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றினைக் கொண்டு வந்து அவரை பதவி விலக்குவதற் கெதிராக வட மாகாணமெங்கும் முழு அளவிலான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெள்ளியன்று முழு வட மாகாணமுமே வெறிச்சோடிப்போயிருந்ததைக், காணக்கிடைத்தது. இது வட மாகாண மக்கள் முதமைச்சருடன் இருக்கின்றார்கள் என்பதைத்தானே உணர்த்துகின்றது?

இதனைக்கொண்டு மக்கள் அவருக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் கடையடைப்பு இடம்பெற்றிருக்கின்றது. சில இடங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஹர்த்தால் மூலமாகவும், கடையடைப்பு மூலமாகவும் தான் சரி. பிழை பார்ப்பதாக இருந்தால் இந்த நாட்டில் எந்தவிதமானதொரு ஆட்சியையும் எவரும் கொண்டு நடத்தமுடியாது. இது சரியானது எது தவறானது எது என்பதனை நிலைநாட்டுவதற்கான தருணமே அன்றி. மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் அல்ல.

முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பதவி விலக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம் தமிழரசுக்கட்சி ஒரு வரலாற்றுத் தவறினைச் செய்கின்றது என்பது பலரது அபிப்பிராயமாக உள்ளதே?

விக்னேஸ்வரனை பதவியில் அமர்த்தியதே தமிழரசுக் கட்சி செய்த வரலாற்றுத் தவறு என்பதாகத்தான் எங்களைப் பலர் விமர்சித்திருக்கின்றார்கள்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டால், தமிழர்கள் தாமே நிர்வாகம் செய்யக் கிடைத்த ஒரேயொரு சந்தர்ப்பத்தினையும் ஒழுங்காக செய்யத் தவறிவிட்டார்கள் என்கிற தோற்றப்பாடு ஏற்பட்டு விடாதா?

அவ்வாறான தோற்றப்பாடு ஏற்படத்தான் செய்யும். அதற்கு பலர் பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முதலமைச்சர் பொறுப்புச் சொல்ல வேண்டும். நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தீர்ப்புச் சொல்கின்ற போதே, தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவரே வந்திருக்கின்றார். அப்படியானால் அவ்வறிவித்தலை விடுத்தபோதே முதலமைச்சர் அதற்கான தார்மீகப் பொறுப்ப்பினை தான் ஏற்று தானும் அன்றைய தினம் பதவி விலகியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயற்பாடாக இருந்திருக்கும். எவரது தலையீடுகளும் இன்றி தானே நியமித்த, நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, தன்னுடைய அமைச்சரவை தோற்று விட்டது என்பதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. வடக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே, அதுவொரு அதிகாரங்கள் இல்லாத சபையாக இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, அவற்றை ஓரளவுக்கேனும் மாகாண சபையின் ஊடாக நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் வட மாகாண சபை அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், 300க்கும் மேற்பட்ட அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.

தமிழரசுக் கட்சி சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படுகின்றதென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றதே? மாகாண சபை நிர்வாகத்தினைக் கூட தமிழர்களால் சரிவர ஆற்ற முடியாதென்ற சிங்கள அரசின் பிரசாரங்களுக்கு தமிழரசுக்கட்சி முண்டு கொடுக்கின்றதா?

அவ்வாறு இல்லை. வடக்கு மாகாண சபை அப்படியானதொரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றது. அது வடமாகாண சபையின் தோல்வி. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதான கட்சியென்ற வகையில் தமிழரசுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் அந்த மாகாண சபையினை நாங்கள் யாரிடத்தில் பொறுப்புக் கொடுத்தோமோ, குறிப்பாக வட மாகாண சபையின் முதலமைச்சர் அந்தத் தோல்விக்குப் பொறுப்புக் கூறவேண்டியவராக இருக்கின்றார்.

வட மாகாண சபை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டு ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்து விட்டநிலையில், வடமாகாண சபையின் வினைத்திறன் பற்றி அதன் தோல்வி பற்றி பல்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ பெரும்பான்மை வகிக்கும் தமிழரசுக் கட்சியோ அதனை ஒழுங்காக இயங்கச்செய்வதில் எந்தவிதமான தலையீடுளையும் மேற்கொள்ளவில்லை?

அது கட்சி சார்ந்த ஒரு நிர்வாகம் இல்லை. அரசியல் தலையீடு என்பது ஒரு நிர்வாக அலகினுள் இருக்கக்கூடாது. அவ்வாறிருந்தால் அது ஒரு நல்லாட்சியின் பண்பாக அமையாது. எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களது ஆட்சியாக இருந்தாலும், அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்குத்தான் அந்தப் பொறுப்பு உள்ளதே தவிர, கட்சியின் தலையீடென்பது வேண்டத் தகாததாகவே அமையும். பொறுப்பான ஒருரைத் தெரிவுசெய்து., அவரது தலைமையிலும் அவரது தலைமையிலான அமைச்சரவையிடமும் ஒப்படைத்ததன் பின்னர் அவ்வாறான தலையீடுகள் எவற்றையும் கட்சிசெய்யவே இல்லை. அமைச்சரவை நியமனத்திலும் கூடுதலான சுயாதீனம் முதலமைச்சருக்கே கொடுக்கப்பட்டது. அவ்வுரிமை சட்ட ரீதியாகவும் முதலமைச்சருக்கே உள்ளது.

வட மாகாண முதமைச்சரை பதவி விலக்கவேண்டும் என தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட முடிவானது, தமிழரசுக் கட்சியின் மீதும், அதன் தலைமையிலான ஆட்சியின் மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விடாதா?

ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நாங்கள் ஊழலை மறைக்கச் செயற்படுகின்றோம் என்றவாறான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு நேரெதிரான நிலைப்பாடே உண்மையானதாகும். ஆரம்பம் முதல் ஊழலை மறைக்க செயற்பட்டவர் வட மாகாண முதலமைச்சர்தான். ஒரு அமைச்சருக்கு எதிராக அனேக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை விசாரிக்கவென விசாரணைக் குழுவொன்றினை நியமித்து, சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதென்பது, உண்மையை திசை திருப்பச் செய்யப்பட்ட காரியம்தான். விசாரணை அறிக்கையிலும் ஐங்கரநேசன் மட்டும்தான் ஊழல், இலஞ்சம், பணமோசடி, என்பவற்றில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். குருகுலராஜா மீது சுமத்தப்பட்டிருப்பது, அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு. ஆனாலும் குருகுலராஜா எமது உறுப்பினர் என்பதால் அவரை பதவி விலகுமாறு நாங்கள் கோரியிருந்தோம். அவர் தான் ஒரு குற்றவாளி அல்லவென்றார். 'நீங்கள் ஒரு குற்றவாளி அல்லாவிட்டாலும். விசாரணை அறிக்கையில் உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், பதவியை இராஜினாமா செய்யுங்கள் என்றோம்’ அவர் செய்யவில்லை. தவறோ சரியோ, விசாணைக்குழுவைத் தெரிவுசெய்தவர் முதமைச்சர்தான். விசாணைக்குழுவின் அறிக்கையை இரண்டு கிழமைகள் அவர் மறைத்து வைத்திருந்தார். அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும், தனக்குச் சார்பானோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் எல்லோரையும் விலக்கியுள்ளார். நான்கு பேரையும் நீக்குவது பற்றி எல்லா உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். ஆனால் இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவருடன் மட்டும் கதைக்கவில்லை. அப்போதுதான் சம்பந்தன் ஐயா முதமைச்சருடன் தொடர்புகொண்டு ஏன் இவ்வாறானதொரு நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டார். விசாரணைக்குழுவின் அறிக்கையில் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதும் நடவடிக்க எடுத்திருக்கின்றீர்களே என்று கேட்டுள்ளார். அப்போது முன்னர் நான்கு அமைச்சர்ளையும் நீக்குமாறு 16 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு தன்னிடம் அறிக்கை சமர்ப்பித்ததை முதலமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார். ஆனால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதானால் அப்போதேயல்லவா எடுத்திருக்க வேண்டும்? குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசாணைக்குழு நியமிக்கப்பட்டு, அவ்விசாரணைக்குழு இருவரை அவர்களது குற்றச்சாட்டுக்களில் இருந்தும், விடுவித்த பின்னர், எல்லோர் மீதும் நடவடிக்கை எடுப்பது எவ்வாறு பொருத்தமானதாய் அமையும்?

ஏன் தமிழரசுக் கட்சித் தலைவருடன் இது குறித்துப் பேசவில்லையென சம்பந்தன் ஐயா முதமைச்சரிடம் கேட்டபோது தன்னிடம் அவரது தொலைபேசி இலக்கம் இல்லையென்றிருக்கின்றார் முதலமைச்சர். ஆனால் பின்னர் மாவை சேனாதிராஜாவுடன் இது பற்றிப் பேசியிருக்கின்றார். அப்போது, நீங்கள் நியமித்த நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்கினால் நீங்களும் சேர்ந்தே பதவி விலகவேண்டும் என்று மாவைசேனாதிராஜா பதிலளித்திருக்கின்றார். ஆனால் இறுதி முடிவெடுக்கும் முன்னர் மீண்டும்தொடர்புகொள்வதாக மாவைசேனாதிராஜாவுக்கு உறுதியளித்தும் அது எதனையும் செய்யாது, ஏன் மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் கூடப்பெறாமல் மறுநாள் மாகாண சபையில், ஐ​ங்கரநேசனின் தன்னிலை விளக்கத்தின் பின்னர் தன் தீர்ப்பினை அறிவித்திருக்கின்றார். அதனால்தான் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தனே விசாணைக்குழுவினையும் நியமித்து அக்குழுவின் அறிக்கை​யை மதிக்காமல் தானே தன்னிச்சையாக முடிவெடுத்தமை உறுப்பினர்கள் அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. மோசடி, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கெதிராக தனியாக நடவடிக்கை எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடவடிக்கை எடுத்து குற்றத்தின் வலுவினைக் குறைக்கக் கூடாது. அதுதான் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு. அதனாலேயே நம்பிகையில்லாத் தீர்மானம்கொண்டு வருவதற்காக ஆளும் கட்சியில் இருந்து 15பேர் கையொப்பமிட்டிருக்கின்றார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 பேர் தமக்கும் முதமைச்சரில் நம்பிக்கை இல்லையென ஆளுனரிடம் கடி​தத்தினைக் கையளித்திருக்கின்றார்கள். ஆளும் கட்சியின் ஏனைய 15 உறுப்பினர்கள் தமக்கு முதலமைச்சரில் நம்பிக்கையிருப்பதாக கடந்த வியாழனன்று ஆளுநரிடம் கடிதத்தினை கையளித்திருக்கின்றார்கள். முதலமைச்சர் மீதான நம்பிக்கை தொடர்பில் ஆளும் கட்சி இரண்டாக பிளவு பட்டிருக்கின்றது. முதலமைச்சர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரா அல்லது விலகவேண்டுமா என்பதனை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டுவந்திருக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு முதமைச்சர் செவிசாய்ப்பாராக இருந்தால்?

உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தமை, அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தமை என்பனவற்றுக்கு காரணம், குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்ளையும் குற்றவாளிகளுடன் சேர்த்து நடவடிக்க எடுத்தமைதான். அதனை முதலமைச்சர் மாற்றியமைப்பாராக இருந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீள்பரிசீலனை செய்யத் தயார் என எமது உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். தனது தீர்ப்பினை முதலமைச்சர் மாற்றுவாராயின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ்பெறுமாறு தமது உறுப்பினர்களுக்கு அறிவுரை கொடுப்பேன் என்று சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார். முதலமைச்சரின் தீர்ப்பானது சாதாரண நீதி, நியாயங்களுக்கு அப்பாற்பட்டது என்பதற்கப்பால், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் முரணானது. அமைச்சர் ஒருவரை இடைநிறுத்தும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கில்லை. அதிகார வரம்பு மீறல் என்று மற்றவர்ளை நோக்கி அவர் கைகாட்டுகையில் தானும் அதனை தற்போது மீறியிருக்கின்றார். ஐந்து அமைச்சுக்களையும் தானே பார்த்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றார்.

அதற்கும் எந்தவிதமான சட்ட ஏற்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. முதலமைச்சர் ஓர் எதேச்சாதிகாரியாக நடப்பதற்கான சட்ட அதிகாரம் சிறிதும் இல்லை. எனவே ஏனையவர்களைவிட முதமைச்சராலேயே அதிகளவிலான அதிகார வரம்பு மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

Comments