மின்விபத்துக்களை தடுக்க மாற்றுவழி | தினகரன் வாரமஞ்சரி

மின்விபத்துக்களை தடுக்க மாற்றுவழி

ஓகஸ்ட்16 முதல்  13 அம்பியர் பிளக்,  சொக்கட்டுகளுக்கு  மாத்திரமே அனுமதி
மகேஸ்வரன் பிரசாத்  
 

ஓகஸ்ட் 16ஆம் திகதியின் பின்னர் 13 அம்பியர் பிளக் மற்றும் சொக்கட்டுகளையே இறக்குமதி செய்யலாம். அதேநேரம் உற்பத்தியும் செய்யமுடியும்.

பிளக்ஸ் மற்றும் சொக்கட்டுக்களின் தரப்படுத்தலால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்னவே மேற்கொள்ளப்பட்டுள்ள மின்சாரக் கட்டமைப்பில் (வயரிங்) எந்தவித மாற்றத்தையும் செய்யவேண்டியதில்லை. எவ்வித மேலதிக செலவுகளும் ஏற்படாது.

-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு-

மின்விபத்துக்களால் ஏற்படும் உயிரழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த விபத்துக்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றபோதும் தரமற்ற வயரிங்முறை மற்றும் தரமற்ற சொக்கட்டுக்கள் மற்றும் பிளக்குகளின் பாவனை என்பன முக்கிய காரணிகளாகின்றன. மின்சாரத் தாக்குதல்களால் சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 22 ஆகக் காணப்படுகிறது. இதனைக் குறைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாக மின்சாரத் தொழிற்றுறைக்கான ஒழுங்குறுத்துநரான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தேசிய நியமம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களுக்கான தேசிய நியமமாக செவ்வக வடிவத்தைக் கொண்ட 13 அம்பியர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர், மலேசிய உட்பட 29ற்கும் அதிகமான நாடுகள் 13 அம்பியர் செவ்வக வடிவ சொக்கட்டுக்கள் மற்றும் பிளக்குகளையே பயன்படுத்துகின்றன. இதனைக் கருத்தில் பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையடல்களை அடிப்படையாகக் கொண்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செவ்வக வடிவத்தைக் கொண்ட 13 அம்பியர் பிளக்குகள், சொக்கட்டுக்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளது. 5 அம்பியர் மற்றும் 15 அம்பியர் மின்செருகிகளை விட 13 மின்செருகிகள் சிறந்த தொடுகைகளைக் கொண்டவை என்பதாலும், அவை மின் உருகிகளை கொண்டவை என்பதாலும் மின் ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும் என விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நியமம் இலங்கை தர நிர்ணய சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களுக்கான தர நியமத்தை கொண்டுவருவது என்பது ஒரே நாளில் மேற்கொள்ளக்கூடிய விடயமில்லை. உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம். தேசிய நியமம் குறித்த தீர்மானம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி எடுக்கப்பட்டது. இது மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முறை, இவ்வருடம் ஓகஸ்ட் 16ஆம் திகதி வரையான காலப் பகுதியில் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களை இறக்குமதி செய்யவோ அல்லது உற்பத்தி செய்யவோ முடியும். எனினும், இவ்வருடம் ஓகஸ்ட் 16ஆம் திகதிக்குப் பின்னர் 13 அம்பியர் பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களைத் தவிர வேறெந்த சொக்கட்டுக்களையோ அல்லது பிளக்குகளையோ இறக்குமதி செய்யவோ அல்லது உற்பத்தி செய்யவோ முடியாது.

தேசிய நியமத்துக்கு உட்பட்டதான இறக்குமதிகள் இடம்பெறுகின்றனவா என்பதை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் கண்காணிக்கவிருப்பதுடன், உற்பத்திகளை நுகர்வோர் அதிகாரசபை கண்காணிக்கவுள்ளது.

சொக்கட்டுக்கள் மற்றும் பிளக்குகளின் இறக்குமதி பற்றிய கட்டுப்பாடுகளைக் கொண்ட வர்த்தமானி அறிவித்த இம்மாத முற்பகுதியில் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்படவுள்ளது. மறுபக்கத்தில் உற்பத்திகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகார சபையினாலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்கள் 13 அம்பியர் கொண்டவையாக மாத்திரமே இருக்க வேண்டும். உற்பத்தியும் அவ்வாறே இருக்கும்.

எனினும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு மற்றும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் உள்ள 13 அம்பியர் தவிர்ந்த பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களை விற்பனை செய்வதற்கு 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் சந்தையில் பிளக் அல்லது சொக்கட் ஒன்றை வாங்குவதாயின் அது 13 அம்பியர் கொண்ட செவ்வக வடிவ பிளக்காக அல்லது சொக்கட்டாகவே இருக்கும். இதற்குப் பொருந்தக்கூடிய வகையில் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள சொருகிகள் அமைய வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி தற்பொழுது சந்தையில் உள்ள தரமற்ற மல்ரிசொக்கட்டுக்கள், ரோல் பிளக்ஸ் என்பனவும் அடுத்த வருட ஓகஸ்ட் மாதத்துடன் தடைசெய்யப்படும். இவை சந்தையில் விற்பனை செய்யப்படாதிருப்பதை நுகர்வோர் அதிகாரசபை உறுதிப்படுத்தும். இந்தப் புதிய நியம அறிவிப்பு மின்சார நுகர்வோர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. புதிய நியம அறிவிப்பின் பின்னர் வீடுகளில் உள்ள பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களை பிரதியீடு செய்ய வேண்டுமா என்ற கேள்வி சாதாரணமாக எழுகிறது. அப்படியானதொரு அவசியம் இல்லை என்பதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விளக்கமாகும். வீடுகளில் தற்பொழுது பயன்படுத்தப்படும் 5 அம்பியர் மற்றும் 15 அம்பியர் பிளக்குகள் மற்றும் சொக்கட்டுக்களை அவற்றின் ஆயுட்காலம் முடியும்வரை பயன்படுத்த முடியும். 15 அம்பியர் சொக்கட் மற்றும் பிளக்குகளின் ஆயுட்காலம் முடிவடையும் பட்சத்தில், ஏற்கனவே மின்சாரக் கட்டமைப்பு 15 அம்பியருக்கு ஏற்புடையதாக இருந்தால் அதற்குப் பதிலாக 13 அம்பியரை பிரதியீடு செய்யலாம்.

அதேபோல, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள மின்கட்டமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யத் தேவையில்லை. எனினும், உரிய மின்சாரத்தைக் காவக்கூடிய வயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா, 5 அம்பியருக்குப் பொருத்தமான சுற்றுப் பிரிப்பான்கள் (MCB) பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை பரிசோதிப்பது சிறந்ததாக இருக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

5 அம்பியருக்கான மின்சாரத்தைக் கடத்தக்கூடிய வயர் கட்டமைப்பில் பொருத்தப்பட்டிருந்த 5 அம்பியர் சொக்கட் பழுதடையும் பட்சத்தில் சந்தையிலுள்ள 13அம்பியர் சொக்கட்டை மாற்றீடு செய்யும்போது, அதிலிருந்து 13 அம்பியர் மின்சாரத்தைப் பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்படலாம். அதற்கு தீர்வாக ‘6A MAX’ என்ற விசேட குறியீட்டைக் கொண்ட 13 அம்பியர் சொக்கட்டுக்கள் சந்தையில் காணப்படும். இவற்றைப் பயன்படுத்தினால் அதிகூடிய மின்சாரமாக 6 அம்பியர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேநேரம், புதிய கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு பொருத்தமான வயர்களையும், சொக்கட்டுக்கள் மற்றும் பிளக்குகளையும் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். மின்சாரத் தாக்குதல்கள், மின் ஒழுக்குகளால் ஏற்படும் விபத்துக்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சொக்கட்டுக்கள் மற்றும் பிளக்குகளுக்கு நியமம் கொண்டுவருவது மட்டும் தீர்வாக அமையாது. இவ்வாறான விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு சரியான ட்ரிப் சுவிட்ச்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. 30 மில்லி அம்பியர் கொள்ளளவு கொண்ட ட்ரிப் சுவிட்சை பயன்படுத்துவதன் ஊடாகவே ஒரு மனித உயிரை பாதுகாக்க முடியும். வீடுகளில் 30 மில்லி அம்பியர் ட்ரிப் சுவிட்ச்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளில் 100 மில்லி அம்பியர் ஸ்விட்ச்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இதனை கருத்தில் கொள்ளாவிட்டால் ஆபத்துக்கள் ஏற்படும் என்கிறார் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டுப் பணிப்பாளர். இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மின்சார இணைப்புக்களை ஏற்படுத்துபவர்களின் தவறுகளே பிரதான காரணமாகிறது.

இவற்றை தவிர்க்கும் வகையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளது. நாடு முழுவதிலும் 22000ற்கும் அதிகமான ‘எலக்ரீசியன்ஸ்’ இருக்கின்றனர். இவர்களின் திறமையை பரிசோதித்து அவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படுவது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. 

Comments