முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்துக்கு தீங்கிழைக்க மு.கா ஒருபோதும் துணைபோகாது | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்துக்கு தீங்கிழைக்க மு.கா ஒருபோதும் துணைபோகாது

நேர்காணல் -: எம்.ஏ.எம். நிலாம்

கேள்வி : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பயணப் பாதையில் சமீப காலமாக ஒரு குழப்பகரமான நிலை தோன்றி இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : வடக்கு, கிழக்கில் அன்று தமிழ் அரசியல் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டு ஆயுதங்களை சுமந்த இளைஞர்கள் அச்சமூகத்தின் தலைவிதியை மாற்றுவதற்காக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களது அந்த மாற்றத்திற்கான கவர்ச்சியில் அள்ளுண்ட முஸ்லிம் இளைஞர்களும் அந்த தமிழ் இளைஞர்களுடன் இணைய முற்பட்ட வேளையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கென்று ஒரு தனித்துவ அரசியல் இயக்கமோ அல்லது தலைமைததுவமோ இல்லாததை உணர்ந்த இளம் சட்டத்தரணியான எம். எச். எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கான தனித்துவம் கொண்ட அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை தோற்றுவித்தார்.

எதிர்கால சிப்பிகளாக இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்குடன் சிந்தித்து அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை உருவாக்கி முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்திற்குள் காலடி வைப்பதனை தடுத்தார். இதன் காரணமாக அன்றைய இளைஞர்கள் வழி தவறுவதிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுப்பதில் அன்றைய இளைஞர்கள் தலைவர் அஷ்ரபோடு இணைந்து கட்சியின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை செய்தார்கள். தலைவர் அஷ்ரப்பினால் சிறப்பாக வழிநடாத்தப்பட்ட இளைஞர்களுள் நானும் ஒருவன். சம்மாந்துறையில் 1984 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அப்போது தமிழ் ஆயுதக் குழுக்களின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து நானும் என்னோடு சேர்ந்து எட்டு இளைஞர்களும் முஸ்லிம் காங்கிரஸை சம்மாந்துறை மண்ணிலே ஆரம்பித்தோம். முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை செய்த மண் சம்மாந்துறையாகும். தலைவர் அஷ்ரபினை பெற்றெடுத்த மண் சம்மாந்துறையாகும்.

முஸ்லிம்களையும், முஸ்லிம் இளைஞர்களையும் கூறுபோடுவதற்கும், முஸ்லிம் காங்கிரஸை துண்டு துண்டாக உடைப்பதற்கும் சதிகள் அன்றும் இடம்பெற்றன. இன்று இக்கட்சியின் ஊடாக அரசியல் முகவரியைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு பல்வேறு சதி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளைய தலைவர்களான இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அமானிதமான இந்த சமூகத்தை எத்தகைய சோதானைகள் வரினும் அவற்றை எதிர்கொண்டு, துணிந்து நின்று, சாதிக்கத் தெரிந்த இளைஞர்களாக வளர்த்தெடுப்பதும் களம் கொடுப்பதும் இந்தக் கட்சிக்கான ஒரு இதய சுத்தியுடன் கூடிய விசுவாசமுள்ள ஓர் இளைஞர் படையை உருவாக்குவதுமே எனது இலக்காகும். இதற்காக இந்தக் கட்சியின் கீழ் அணி திரளுமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இந்த நிலைக்கு உயர்த்தியர்கள் இளைஞர்கள் தான் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடைவதில் முன்னிலையில் திகழும் இந்த இயக்கத்துக்கு இளைஞர்களின் சக்தி இன்றியமையாதது. முஸ்லிம்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அவசியமாகும் வெறும் பசப்பு வார்த்தைகளுக்கு இடம்கொடுக்காது இந்த இயக்கத்தை பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

நமது சமூகத்தின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கமே நமக்கான பெரும் சக்தியாகும். இந்த இயக்கத்தின் கீழ் அணிதிரள்வதன் மூலமே நமது ஒன்றமையின் வெளிப்பாட்டைக் காண முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு முதலும் இறுதியுமான தெரிவு நமது தற்போதைய தலைமைத்துவமான றவூப் ஹக்கீம் அவர்களும் அவரது வழி காட்டலின் கீழ் அமைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுமே. எனவே இந்த இயக்கத்தின் கீழ் சகல இளைஞர்களும் ஒன்றிணைந்து வெற்றிச் சரித்திரம் படைக்க அணிதிரள்வோம்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்தில் முதுகெலும்பாக முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும் புத்திசாரியத்துடனும் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் இந்த இயக்கத்தினை பலவீனப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தையும் பலவீனப்படுத்தலாம் என்ற சதித்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் தலைவர் அஸ்ரஃப் உருவாக்கிய இப்பேரியக்கத்தை பலப்படுத்த அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைய வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரியையும், அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் இந்தக் கட்சிக்கெதிரான முகாம்களில் இருந்து கொண்டு பலவீனப்படுத்துகின்ற துரோகத்தனமான அரசியலையும் மீண்டும் மாமூல் அரசியல் செய்கின்றவர்களுக்கு எதிராகத்தான் மிக நேர்மையாக முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டியுள்ளது.

கேள்வி : கிழக்கில் ஆலவிருட்சமாக படர்ந்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக புதிய தலைமைததுவத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முயற்சி அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதைக் காண முடிகிறதே?

பதில் : முஸ்லிம் காங்கிரஸை காட்டிக் கொடுத்து அதன் முகவரி தேடும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இது இன்று நேற்று உருவானதல்ல. மறைந்த எமது தலைவரின் காலத்தில் கூட மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டதொன்றாகும்.

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் மேடையேற்றுகின்ற நாடகமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய தருணத்தில் கட்சியைக் காட்டிக் கொடுத்து சுயநல அரசியல் செய்ய முற்படுவோர் விடயத்தில் சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்து எமது அரசியல் இருப்பையும், தனித்துவத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடிய ஒரே கட்சி முஸ்லிம் காங்கிரஸாகும். அதன் தலைமைததுவத்தால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

கிழக்கு முஸ்லிம்கள் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி சமுதாயம் முஸ்லிம் காங்கிரஸை மேலும் பலப்படுத்துவது தான்.

அதாவுல்லாவோ, பஷீர் சேகுதாவுதோ, ஹஸன் அலியோ அல்லது கிழக்குக்கு வெளியே இருந்துவரும் ரிஷத் பதியுதீனோ இதனைச் சாதிக்க முடியாது. மு.கா. தலைமைத்துவம் இந்த நல்லாட்சியில் கண்களைக் கட்டிக்கொண்டு மூலையில் முடங்கிப் போகவில்லை. எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டுமோ அதனை சாதுர்யமாக காய்நகர்த்தி செயற்படுவதில் எமது தலைவர் தூரநோக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

வெறுமனே ஏமாறுகின்ற சமுதாயமாகவோ ஏமாற்றப்படுகின்ற இனமாகவோ முஸ்லிம்கள் இருக்க முடியாது. தனித்து நின்று எதனையும் எம்மால் வென்றெடுக்க முடியாது. புத்திக்கூர்மையுள்ள தலைமைததுவத்தின் கீழ் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் மட்டுமே எமக்கான வெற்றியை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினார்கள். எமக்கெதிரான சக்திகளை கட்டுப்படுத்த முடியும். இனவாதிகளை வெற்றிகொள்வதற்கு முதலில் சகோதர இனத்தவர்களின் மனங்களை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.

கேள்வி : முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளை முறியடிக்க மு.கா. தலைமைத்துவம் உரிய நடவடக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதே?

பதில் : இது முற்றிலும் தவறானதும், பொய்யானதுமாகும். ஆரம்பம் முதலே முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட துரோகத்தனங்களுக்காக அச்சமின்றி குரல் கொடுத்த ஒரே தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமாகும். அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தவறான முடிவுகளை எடுத்ததுமில்லை எடுக்கப் போவதுமில்லை. விவகாரத்தை ஆழமாக ஆராய்ந்து அவதானித்து எங்கு ஆணி அடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் அடித்து காரியசித்தியுடன் செயற்பட்டு வருகின்றார். கண்களை மூடிக்கொண்டு போய் சுவரில் மோதும் செயற்பாடுகளில் அவர் ஈடுபடமாட்டார்.

முஸ்லிம் எம்.பிக்கள் 21 பேரும் கூடிப் பேசி ஜனாதிபதி,

பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசிய போதிலும் அவர்களால் தரப்பட்ட பதில் எமக்குத் திருப்பதியளிப்பதாகக் காணப்படவில்லை. சில வேளை பெரும்பான்மைச் சமூகத்தை ஆத்திரப்பட வைக்காமல் மறைமுக காய்நகர்த்தல் முறையில் இவ்விடயங்களை கையாள அரசு முயற்சிப்பதாகக் கூட இருக்கலாம். பொறுமையுடன் இருந்தே இதனை அவதானிக்க வேண்டியுள்ளது.

கேள்வி : எதிர்வரக்கூடிய கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கை தமிழர் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என கருணா அம்மான் அழைப்பு விடுத்திருக்கிறாரே?

பதில் : தமிழ்ச் சமூகம் ஒன்றுபடுவதில் எமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது. எந்த இனமும் ஒற்றுமைப்படுவது வரவேற்கக்கூடியதுதான். மாறுபட்ட இனங்களும் ஒன்றுபடுவது மேலும் வரவேற்கக் கூடியதே.

ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற வெறியுடன் இணைவது என்பது சுயநல நோக்கம் கொண்டதாகும். கருணா அம்மான் மீண்டும் அதிகாரத்துக்க வர கனவு காணுகின்றார். அவரது சுயநலனுக்காக தமிழ்ச் சமூகம் ஒருபோதும் விலை போகமாட்டாது. கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் ஒரு சதியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். மூத்த தமிழ்த் தலைவர்கள் நேர்மையாகச் சிந்திக்கின்ற வேளையல் சில புல்லுருவிகள் இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முனைகின்றன. இதற்கு தமிழ் மக்களோ, முஸ்லிம்களோ இடமளிக்கக் கூடாது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு அதிகாரத்துக்கு வரும் அதற்கு தமிழ் மக்களின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும். தமிழ் – முஸ்லிம் உறவு நீடித்து நிலைக்க நாம் இனம், மதம் கடந்து ஒன்றுபட்டு வாழும் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வோம். இந்த நம்பிக்கையுடன் எமது பயணத்தை தொடர்வோம்.

Comments