முகத்தை காயப்படுத்தும் முகநூல் துஷ்பிரயோகம் | தினகரன் வாரமஞ்சரி

முகத்தை காயப்படுத்தும் முகநூல் துஷ்பிரயோகம்

​ேபால் வில்சன்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு பேனா நட்பு வாலிபர்களை மிகவும் ஈர்ந்திருந்தது. பத்திரிகை, சஞ்சிகைகளில் பேனா நண்பர் குறித்ததான விபரங்கள் அவர்களின் படம், முகவரி, அவர்களின் பொழுதுபோக்கு போன்ற விபரங்களுடன் வெளியிடப்பட்டது. ‘எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா’ என்ற ரீதியில் இந்த நட்பில் சில மாணவர்களும் மூழ்கியிருந்தனர். வாலிபர்கள் கெஞ்சிவர, கன்னியர்கள் கொஞ்சிவர கூடியதாக இந்த நட்பு மேலோங்கி வந்திருந்தது. இந்த பேனா நட்பினூடாக திருமணம் வரையும் சென்ற சம்பவங்களும், விவாக ரத்து உருவாகிய சம்பவங்களும் உண்டு. காலப்போக்கில் சமூக வளைத்தலங்கள் வருகையினால் பேனா நட்புக்கு முடிவு வந்தது. வாசிப்பும், எழுத்தும் அடியோடு கைவிடப்பட்டது.

இமெயிலின் வருகையும், கைபேசியின் வருகையினாலும் புதிய நட்புகளாக இமெயில், கைபேசி இந்த இடத்தினை பூரணமாக நிரப்பியது. இதனால் வாலிப காதலை கலாய்க்க நல்ல வாய்ப்பாகவும், சந்தர்ப்பமாகவும் மாறியது. யாஹு இணையத்தளம் October 8, 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுமார் மாதந்தம் 225 மில்லியன் பாவனையாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் கையடக்க பேசி பாரிய மாற்றத்தை உருவாக்கினாலும், முகம் தெரியாத உறவாகிய முகநூல் பாவனை இன்று வாலிபர்களை ஈர்த்து தனக்குள் ஒரு இராஜ்யத்தையே உருவாக்கியுள்ளது. முகநூல் (Face book) 2004 பெப்ரவரி 4 ஆம் திகதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் பாவனையாளர் மாதாந்தம் 2 பில்லியனாக (1,968,000,000) இருக்கின்றனர். www.facebook.com or www.fb.com இதன் முகவரியாகும்.

முகநூல் பாவனையில் ஏற்பட்ட சிற்சில துஷ்பிரயோகத்தினால் சிறுவர்கள் முகநூலில் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில பாடசாலை மாணர்கள் முகநூலில் உலா வந்தாலும் சில பாடசாலைகள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த முகநூல் இலங்கையின் நல்லாட்சி உருவாகவும் வழிவகை செய்து பரப்புரைகளும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்து, லிபியா அண்மைய புரட்சியில் டிவிட்டரின் (Twitter) பங்களிப்பு அபரிதமானது. LinkedIn, Instagram, WhatsApp, Viber, Facebook Messenger, YouTube, WeChat உட்பட பல சமூக வலைத்தளங்கள் பலகோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றினூடாக தங்களின் நட்பை மேம்படுத்துகின்றனர். சிலர் சுயலாபத்திற்காகவும் இவற்றில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் தங்களது பெருமைகளையும் படங்களையும் பதிவிறக்கம் செய்து காட்சிப்படுத்துகின்றனர்.

இதே நேரத்தில் வலைத்தளங்களுக்குள் சென்று ஹெக் செய்து இணையத்தை செயலிழக்கச் செய்யும் சம்பவங்களும் உண்டு. இது இணையத்தள குற்றவியல் செயற்பாடாகும். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தை மாணவன் ஒருவன் ஹெக் செய்து செயலிழக்கச் செய்தான். பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையை மேற்கொண்டு, நபரை கைது செய்தனர். அவன் பாடசாலை மாணவன் என்ற ரீதியில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார்.

இதேநேரத்தில் உலக ரீதியாக ஹெக் செய்தலும், சைபர் தாக்குதலும் இடம்பெற்று வருகின்றனர். சைபர் தாக்குதலினால் அநேக வலைத்தளங்கள் செயலிழக்கச் செய்வதுடன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளுக்கு இது ஒரு சவாலான விடயமாகவும் காணப்படுகின்றனது.

சமூக வலைத்தளங்கள் நன்மைக்கு பயன்பட்டாலும் சிற்சில ஆசாமிகள் மத விரோத குரோத சிந்தனைகள், இன ரீதியான மோசமான வார்த்தை பிரயோகங்கள், கருத்து பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இவ்வலைத்தளத்தை பலரும் பார்வையிடுகின்றனர் என்ற சிந்தனை மேலோங்க வேண்டும். நன்மையானதை தமது சுயநலத்திற்காக தீமையானதை பகிரலாகாது. இது தனிநபர் கௌரவத்தை பாதிக்கும் செயல் என்பதை இணையத்தள பாவனையாளர் அறிந்திருக்க வேண்டும்

இன்றும் சிலர் மனித விழுமியங்களுக்கு அப்பால் சென்று தமது ஆசைகளையும், அந்தரங்கத்தில் நடப்பவைகளை காட்சிப்படுத்தலுக்கும் கொண்டு வருகின்றனர். இதேநேரத்தில் நீல படங்கள் தங்களது கையடக்கபேசியில் சேமிப்புசெய்தல், பார்வையிடுதல் அல்லது பிரிதொருவருக்கு காண்பித்தல் என்ற ரீதியில் முறைப்பாடு செய்தால் பொலிஸார் அந்நபரை கைது செய்து குற்றவியல் சட்டப்பிரகாரம் நடவடிக்கை எடுப்பார்.

கடந்த காலங்களில் முகநூல் மற்றும் வலைத்தளங்களினூடாக உங்களுக்கு அன்பளிப்பு கிடைக்கின்றன. சுங்கம் அல்லது இறக்குமதி வரிக்காக இவ்வளவு தொகை இந்த கணக்குக்கு அனுப்பிவைக்கும்படி அல்லது கிரடிட் கார்ட் இலக்கத்தை கோருவர். இதனை நம்பி பணம் அனுப்பியவர்கள் நிலை பரிதாபமானது. அத்துடன் எமது நாட்டு பணம் காரணமின்றி இன்னொரு நாட்டுக்கு சென்றடைகின்றன. அதன் பின் அந்த முகவரி விலாசமின்றி மறைந்துவிடும். ஐயோ பரிதாபம் பணத்தை இழந்தவர் நிலை. இதன் பின்பு பாதுகாப்பு நிலையங்களுக்கு சென்றால் என்ன பிரயோசனம். இப்படியான மோசடி குற்றத்திற்காக இதுவரை 15 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதேபோல் முகநூல் வலைத்தளத்தினூடான உருவாகும் காதல் கல்யாணத்தில் முடிந்த விடயமும் உண்டு. அதேநேரத்தில் காதல் என்ற பாசத்தில் தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களும் உண்டு. இதனூடாக தங்களது தேவைகள் பூர்த்தியானதும் தனது கணக்கை மூடிவிடுவதால் அந்நபரை கண்டுபிடிப்பது மிகவும் அரிதான காரியமாகுகின்றன. சிலருக்கு மிரட்டல்களும், அச்சுறுத்தலும் கொடுக்கும் நிகழ்வுகள் வலைதளத்தினூடாக நடைபெறுகின்றன.

இப்படியான செயற்பாடுகளை குறித்து காவற்துறைக்கு அறிவிக்க முடியாத நிலையும் உண்டு. காரணம் முகவரியின்மையே ஆகும்.

இலங்கையின் சில வலைத்தளங்கள் காரணமின்றி சில நபர்களினால் ஹெக் செய்யப்பட்டால் இதனை குறித்த முறைப்பாடுகள் Computer Emergency Readiness Team எனும் Sri Lanka CERT/CC இல் முறைப்பாடு செய்யலாம். இந்த பிரிவுகளின் கண்காணிப்புக்குள்ளும் ஈர்க்கப்படும் என்று அதிகாரி குறிப்பிட்டார்.

TRC அதிகாரி கபில கமகே குறிப்பிடுகையில், வலைத்தளங்கள் குறித்ததான முறைப்பாடுகளை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முறையிடலாம். அதற்கான தேடல்கள் மேற்கொள்ளப்படும் என்றார். அத்துடன் வலைத்தளங்கள் சுதந்திரமாக மக்கள் பிரவேசிக்கக் கூடியது. அவர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கலாம். அது அவர்களுடைய விருப்பமாகும். ஆனால் சுதந்திரத்திற்கும் எல்லையுண்டு என்றார்.

இணையத்தள துஷ்பிரயோக முறைப்பாடுகள் குறித்ததான முறைப்பாடுகளை பொலிஸ் கணனி குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்ய வேண்டும். இவர்களே சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள். வலைத்தள மோசடிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது.

அதேநேரத்தில் தற்கொலை, வேண்டாத சம்பவங்கள் வலைத்தளங்களூடாக பகிரப்படுவது தவிர்க்க வேண்டிய விடயங்களாகும். இதனைக் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் பெரும்பாலும் பலராலும் முகநூலையே பயன்படுத்துகின்றனர். இந்த முகநூல் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டிய முகத்தை தீமைக்கு பயன்படுத்தப்படுதலை தடுக்க வேண்டும். முகத்தாலே முகங்களை காயப்படுத்தலாமா என்ற சிந்தனையுடன் செயற்பட வேண்டும். முகநூலில் தங்களது முகத்திற்கு பதிலாக பிறிதொருவரின் முகத்தை காட்சிப்படுத்தும் போலித்தனத்தையும் கைவிடப்படல் வேண்டும்.

முன்பு கணனியூடாகவே வலைத்தளங்களுக்கு செல்ல வேண்டும். இப்போது, கையடக்க தொலைபேசியூடாகவே இணையத்தளங்களுக்கு சென்று தனது தேடுதலை செய்ய முடியும்.

சர்வதேச ரீதியில் முகநூல் பயன்பாட்டாளர்களே அதிகமானவர்.

ஒரு சிலர் முகநூல் நட்புக்காக Like செய்வதும், Comment பண்ணுவதில் தங்களது பொன்னா நேரத்தை வீணடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன. ஒருவர் முகநூலூடாக சென்று தமது கருத்துக்களை Share பண்ணுவதில் ஈடுபடும் போது தனது உலகத்தையே மறந்துவிடுகின்றனர்.

அத்துடன் ஒரு சிலர் நடுநிசியிலும் தூங்காமல் முகநூலில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் தங்களது தூக்கத்தையும் இழந்து சரீர உபாதைக்குள்ளாகுகின்றனர். அத்துடன், சமூக இணையளத்தளங்கள் ஒரு புற்றுநோய் போன்றது. இதுவும் ஒருவித போதையாகும் என்பதை சிலர் மறந்துவிடுகின்றனர்.

அநேக வாலிபர்களுக்கு கைமணிக்கட்டில் வலி என்ற ரீதியில் வைத்தியசாலையில் சென்று பரிசோதிக்கும் போது, அவர்கள் தொடர்ச்சியாக கைபேசியை பயன்படுத்தியதினால் ஏற்படும் விளைவு என்று அறியப்படுகிறது.

நேரம் பொன்னானது. எமது காலத்தையும் நேரத்தையும் சீரான விதத்தில் பயன்படுத்தி, காலத்தை வெல்ல வேண்டும். உலகம் ஒரு கிராமமாகியுள்ளது என்ற சிந்தனையில் கிணற்று தவளைகளாக மாறாமல் இருக்கும் வரை... 

Comments