வடமாகாண சபை பெண் அமைச்சரிடம் | தினகரன் வாரமஞ்சரி

வடமாகாண சபை பெண் அமைச்சரிடம்

ந.பரமேஸ்வரன் 
 

கடந்த வாரம் ஞாயிறு தினகரனுக்கு வடமாகாண பெண் அமைச்சரும், வடமாகாண மகளிர் விவகார, புனர்வாழ்வு அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் வழங்கிய நேர்காணலில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு பாடநூல்களில் இடம்பெற வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இந்த விடயத்தை யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாக தெரிய வருகிறது.

தினகரன் பத்திரிகையில் இந்த விடயத்தை பார்த்ததும் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்கள் ஆற்றும் உரை தான் ஞாபகத்திற்கு வந்தது. இலங்கையில் பாடநூல்களில் ஒரு விடயம் இடம்பெற வேண்டுமானால் அதனை தீர்மானிப்பது கல்வியமைச்சரே. வடமாகாண கல்வியமைச்சராக கூட இல்லாத ஒருவர் எப்படி பாடநூல்களில், பாடத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்?கல்வி ஆலோசனைக்குழுவுக்கு பாடநூல்களில் அல்லது பாடத்திட்டத்தில் மாற்றங்களை செய்வதற்கு அல்லது சிபாரிசு செய்வதற்கு அதிகாரமுள்ளது. திருமதி அனந்தி சசிதரன் கல்வி ஆலோசனைக்குழுவிலோ அல்லது பாடநூல் வெளியீட்டுச்சபையிலோ உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாக இதுவரை எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை; இனிமேல் அவ்வாறு கல்வி ஆலோசனைக்குழுவிலோ அல்லது பாடநூல் வெளியீட்டுச்சபையிலோ உறுப்பினராக திருமதி அனந்தி சசிதரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் எதுவித தகவலுமில்லை; நிலைமை இவ்வாறாக இருக்க ஒரு உயர் கல்விக்கூடம் அழிக்கப்பட்ட நினைவு நிகழ்வில் இவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு உரையாற்றுவது பார்வையாளர்களை முட்டாளாக்கும் விடயம்.

முன்னர் புலிகள் இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரலாற்று பாடநூல்களில் தமிழர்களின் வரலாறு ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை அல்லது மூடி மறைக்கப்பட்டுள்ளது எனக்கூறி தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாம் தனியான ஒரு வரலாற்று பாடநூலை தயாரித்து பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து. தாம் தயாரித்த வரலாற்று பாட நூலையும் மாணவர்களுக்கு போதிக்குமாறு ஆசிரியர்களை அறிவுறுத்தினர்.

வடமாகாண கல்வியமைச்சும் புலிகளின் கல்விக்குழு தயாரித்தது போன்று ஒரு வரலாற்று பாடநூலை தயாரித்தால் அதில் வேண்டுமானால் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பாடநூல்களில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட விடயத்தை சேர்த்துக்கொள்வது ஒருபுறமிருக்க எரிக்கப்பட்ட நூலகம் மீண்டும் புனரமைக்கப்பட்டு திறப்பதற்கான திகதியும் குறிக்கப்பட்டிருந்த நிலையில் நூலகத்தை திறக்க விடாமல் புலிகள் தடுத்தார்கள் என்ற விடயத்தையும் அனந்தி பாடநூல்களில் சேர்த்துக்கொள்வாரா? ஏனென்றால் வரலாற்றை எழுதுபவர்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நடுநிலையாக நின்று காய்தல் உவத்தலின்றி வரலாற்றை எழுத வேண்டும். அப்போது தான் அது உண்மையான வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படும். எழுத்தாளன் என்பவன் துலாக்கோல் போல் அல்லது தராசுக்கோல் போல் எந்தப்பக்கமும் சாயாமல் நடுநிலையில் நின்று எழுத வேண்டுமென தெய்வப்புலவர் வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்னரே கூறியுள்ளார்.

மறை ஞானப்பிரகாசர் என அழைக்கப்படும் கத்தோலிக்கத்துறவி யாழ்ப்பாண வரலாற்றை எழுதிய போது, யாழ்ப்பாண மக்களெல்லோரும் பெருங்குரலெடுத்து கதறி அழ போர்த்துக்கீசர் நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்ததாக தனது யாழ்ப்பாணவைபவமாலை மீள்வாசிப்பு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஞானப்பிரகாசர் ஒரு கத்தோலிக்கத்துறவியாயிருந்தும் நல்லூர் கந்தசுவாமி கோயில் இடிக்கப்பட்ட வரலாற்றை அப்படியே படம் பிடித்துக்காட்டியுள்ளார்; இதே போல் அனந்தியும் புலிகள் யாழ்ப்பாண நூலகத்தை திறக்க விடாமல் தடுத்ததை தனது பாடநூலில் சேர்த்துக்கொள்வாரா?

1981ம் ஆண்டு அப்பபோதைய ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இடிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை புனரமைக்கும் பணிகள் 1999ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. 14.2.2003 அன்று புனரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எரிக்கப்பட்ட நூலகத்தை புனரமைத்து திறப்பதை புலிகள் விரும்பவில்லை புனரமைக்கப்பட்ட நூலகத்தை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என புலிகள் வர்ணித்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரியினால் நூலகம் திறந்து வைக்கப்பட இருந்தது. திறப்பு விழாவுக்கு முதல் நாள் யாழ்ப்பாண மாநகரசபைக்கு சென்ற புலிகள் மாநகர முதல்வர் கந்தையனிடமும் ஆணையாளரிடமும் நூலகத்தை திறக்க வேண்டாமென அச்சுறுத்தி விட்டுச்சென்றதுடன் நூலகத்திற்குச்சென்று காவலாளியிடமிருந்து நூலகத்தின் திறப்பையும் பறித்துச்சென்றனர்.

இதனால் முதல்வர் கந்தையன் மிகவும் மனமுடைந்தார். ஒரு வருடத்தின் பின்னர் எதுவித ஆடம்பரமுமின்றி நூலகத்தை திறவுங்கள் என புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பச்சைக்கொடி காட்டினார். 22.3.2004 அன்று நூலக பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைகளால் நூலக வாசல் கதவுகள் திறந்து விடப்பட்டன.

நூலக திறப்பு விழாவுக்கென கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட நினைவுக்கல் மாநகரசபை களஞ்சியத்தில் ஒரு மூலையில் கிடந்தது. யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் ஆட்சிக்காலத்தில் மாநகரசபை களஞ்சியத்திலிருந்த கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட நூலக திறப்பு விழா நினைவுக்கல் தூசி தட்டி எடுத்து வரப்பட்டு நூலக வாசலில் நடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தையும் திருமதி அனந்தி சசிதரன் தனது வரலாற்று பாடநூலில் சேர்த்துக்கொள்வாரா?

இப்போது நூலகத்திற்கு வருகை தரும் உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்களனைவரும் நூலக வாசலில் உள்ள இந்த நூலகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களால் 14.2.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது என்ற நினைவுக்கல்லை புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

இது ஒரு பாரிய வரலாற்று மோசடி. இந்தக்கல்லை அப்புறப்படுத்துமாறு முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் அதை செவிமடுக்கவில்லை. நூலகம் எரிக்கப்பட்ட விடயத்தை பாடநூல்களில் இடம்பெறச்செய்ய வேண்டுமென விரும்பும் அனந்தி சசிதரன் பிழையான வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு வழங்காமலிருக்க நடவடிக்கை எடுப்பாரா? அனந்தி சசிதரனாவது யாழ்ப்பாண நூலக வாசலில் காணப்படும் இந்த நூலகம் திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களால் 14.2.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது என்ற நினைவுக்கல்லை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா? 

 

Comments