உதவி மருத்துவனாகும் தேனீக்கள்! | தினகரன் வாரமஞ்சரி

உதவி மருத்துவனாகும் தேனீக்கள்!

நமது மோப்ப சக்தியை விட 100 மடங்கு நுகரும் சக்தி கொண்டவை தேனீக்கள். சில மைல்கள் தொலைவில் இருந்தே குறிப்பிட்ட பூவின் வாசனையை அறிந்து கொள்ளும் திறமை பெற்றவை தேனீக்கள்.

நாய்களின் மோப்ப சக்தியை வெடிகுண்டுகளை, போதை மருந்துகளை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறோம். அதேபோல கூர்மையான மோப்ப சக்தி கொண்ட தேனீக்களையும் பழக்கி பயன்படுத்தலாமா என்ற சிந்தனையின் விளைவு தான் தேனீ பயோசென்ஸார் போர்த்துகீஸ் டிசைனர் சுஸானா ஸோரெஸ் இதை வடிவமைத்தவர். இப்போது தேனீக்களும் மருத்துவர்களின் உதவியாளராக இருக்கின்றன. சுஸானா ஸோரெஸ் தற்போது லண்டன் சவுத்பேங்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பேராசிரியை ஆக இருக்கிறார்.

ஸோரெஸ் இதற்கென பிரத்யோகமாக கண்ணாடி குடுவை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதனுள் அடுக்கடுக்கான கோளங்கள் உள்ளன. ஊது துளை வழியாக செலுத்தப்படும் காற்றை நுகரும் தேனீக்கள் நெருங்கி வருவதையும் அல்லது விலகி ஓடுவதையும் வைத்து அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நுகரும் தேனீக்களுக்கு தண்ணீர் கலந்த இனிப்புகள் கொடுத்து ஊக்குவிக்கப்படுகின்றன. சோதனையின் பிற்பாடு அவை வளர்ப்பு தேன் கூடுகளுக்கு விடுவிக்கப் படுகின்றன.

மனிதனை பாதிக்கும் காசநோய், நுரையீரல்,தோல், கணைய புற்றுநோய், மலேரியா, டெங்கு, சக்கரை நோய்களை பழக்கப்பட்ட தேனீக்கள் இனங்காண்கின்றன.

நோய்களை கண்டுபிடிப்பதற்காக மட்டுமே இவற்றை நான் உருவாக்கவில்லை, மனிதன் இயற்கையோடு இயைந்து இருக்கவேண்டிய அவசியத்தை, நம்மால் உணரமுடியாத இது போன்ற சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதுமே எனது நோக்கம் என்கிறார் ஸோரெஸ். இது சோதனையின் முதல் கட்டம் மட்டுமே மேம்பட்ட கருவியை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் அவர்.

என். வினோ மதிவதனி,

லுனுகலை. 

Comments