ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்துக்கு எதிரே குட்டையும் குளமுமாக ஒரு வீதி! | தினகரன் வாரமஞ்சரி

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்துக்கு எதிரே குட்டையும் குளமுமாக ஒரு வீதி!

தகவலும் படங்களும் : ஆர். ரஞ்சன்

ஹட்டன் நகரில் வலய கல்வி காரியாலயத்திற்கு செல்லும் வீதி மழைக்காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் குளம்போல ஆங்காங்கே மழைர் தேங்கி நிற்பதால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிறிய மழைக்கும் வீதியெங்கும் வெள்ள நீர் வடிந்தோடுவதுடன் சில இடங்களில் குளம் போல் நீர் தேங்கிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்தப் பாதை வழியாகவே ஸ்ரீபாத ஆரம்ப பிரிவு பாடசாலைக்கும் செல்ல வேண்டியுள்ளது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் இந்த சேற்று நீரில் இறங்கித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளையும் சுமந்துகொண்டு மறு கையில் குடையைப் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. வலயக்கல்விக் காரியாலய அதிகாரிகள் காலை வேளையிலேயே பாதணிகளினுள் சேற்று நீரை உள்வாங்கிக்கொண்டே மாலை வீடு திரும்பும் வரை அப்படியே இருப்பதால் பாதங்களில் பல தொற்றுக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பாதை வழியாக வாகனங்கள் வரும்போது ஒதுங்குவதற்கு இடமும் இல்லை அப்படியே புற்களின் பக்கம் ஒதுங்கினால் வாகனங்கள் சேற்று நீரை வாரி இறைத்து விட்டு செல்வதாக இந்த சின்னம் சிறு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த சேற்று நீருடன் பாதணிகளை அணிந்து கொண்டு பிற்பகல் வீடு திரும்பும் வரை அப்படியே இருப்பதால் கால் பாதங்கள் அரிப்பெடுத்து புண் ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் சம்பந்தப்பட்டவர்களின் கண்களில் படவில்லையா அல்லது கண்டும் காணாதது போல் இருக்கின்றனரா? இந்த மாணவர்களின் கல்வி மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டேனும் மழைநீர் வழிந்தோடக்கூடிய விதத்தில் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்வார்களா? என பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர். 

Comments