கண்டி தலதா மாளிகையில் பேணப்படும் இந்து மத சம்பிரதாயங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கண்டி தலதா மாளிகையில் பேணப்படும் இந்து மத சம்பிரதாயங்கள்

தலதா மாளிகையில் நடைபெற்ற கார்த்திகை விழாவின் போது...

சி.கே.முருகேசு

கண்டியின் நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து நடாத்தும் இந்த ஆடி மகோற்சவம் சிவன் கோவிலில் காப்புக்கட்டுதலுடன் ஆரம்பமாகி புனித சின்ன பேழையும், தேவலாயங்களின் திருவாபரணங்களும் நகர் வீதி வலம் வருதலும் தவில், – நாதசுரம், கரகம், காவடி, முதலான தமிழர்களின் பாரம்பரியக் கலைகளுடன் கூடியதாக இவ்வாடி (எசல) பெருவிழா வருடாந்தம் கொண்டாடப்படுகின்றது.

கண்டி புனித தலதா மாளிகை; புத்த பகவானின் புனித தந்தம் எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகையால் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் பௌத்த மக்களின் பெரு மதிப்புக்குரிய புனித பீடமாக கருதப்படுகின்றது.

தென்னிந்திய மதுரை நாயக்கர்களின் வருகைக்கு முன்னரேயே கண்டி பிராந்தியத்தில் இந்துமத சம்பிரதாயங்கள் சிறப்பாக பேணப்பட்டு வந்துள்ளதோடு தென்னிந்திய தமிழர்கள் கண்டியில் புடவை, ஆபரண வர்த்தகங்களில் ஈடுபட்டிருந்தனர். கறுவா, ஏலக்காய், சாதிக்காய், கராம்பு மற்றும் கொட்டைப்பாக்கு வியாபாரத்தில் தென்னிந்தியர்களாகிய இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தனர். கண்டியைச் சூழவுள்ள பகுதிகளில் இவர்கள் வசித்து வந்தனர்.

பதினான்காம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட அகிலோகேஸ்வரம் என்னும் நாத தேவாலயம் அந்தணர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அக்காலம் முதல் இந்து சம்பிரதாயங்கள் கண்டியில் வழக்கில் இருந்து வந்துள்ளன.

அனுராத செனவிரத்தின எழுதிய தலதா வருண நூலில் கண்டி தலதா மாளிகையில் இன்றும் பேணப்பட்டுவரும் இந்துமத சம்பிரதாயங்கள் பற்றி விளக்கமாக எடுத்தாண்டுள்ளார்.

வருடாந்தம் நான்கு பெருவிழாக்கள் தலதா மாளிகையில் இடம்பெறுகின்றன. ஏப்ரல் மாதத்தில் நிகழும் சித்திரைப் புத்தாண்டு வைபவம், தொன்மைமிக்க கலாசார பாரம்பரியங்களுடனான ஜூலை – ஆகஸ்ட் மாத்ததில் நிகழும் எசல (ஆடி) பெரஹரா, நவம்பர் மாதத்தில் நிகழும் கார்த்திகை தீப வைபவம், ஜனவரி மாதத்தில் புத்தரிசிப் பொங்கும் வைபவம் ஆகிய நிகழ்வுகள் ‘சத்தர மங்கல்ய’ என அழைக்கப்படுகின்றன என இவர் குறிப்பிடுகிறார்.

16ஆம் 18ஆம் நூற்றாண்டுகளின் கண்டி அரசர்களினால் பொதுமக்களின் பூரண பங்குபற்றுதலுடன் இவ்விழாக்கள் இடம் பெற்றதாக சரித்திரச்சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது. எனினும் இலங்கையில் இப்பூஜைவழிபாடுகள் புதிதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுன்றி நூற்றாண்டுகளாக படிப்படியாக மாற்றம் கண்டு புனித தலதா மாளிகை வைபவங்களின் ஓர் அங்கமாக இந்த இந்து கிரியைகள் பேணப்படுவதாக கூறப்படுகின்றது.

வண. எச். சாராணந்த தேரரின் ‘சிங்கள தலதா வங்சய’ என்னும் 1916ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலில், ‘இத்தகைய விழாக்களும் தெய்வங்களை வேண்டி நடத்தப்படும் பூஜைகளும் சிங்களவர்களால் அவர்களது ஆதி தாயகமாகிய வடமேற்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை. சிங்களவர்கள் பௌத்தமதத்தைத் தழுவிய பின்னரும் மேற்படி சம்பிரதாயங்களில் சில பெளத்த வழிபாடுகளாக மேற்கொள்ளப்பட்டன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சித்திரை மாதம்

கண்டி இராசதானியின் ஸ்ரீ தலதா மாளிகை, நாத தேவாலயம் விஷ்ணு தேவாலயம், கத்தரகம தேவாலயம், பத்தினி தேவாலயம் என்பனவற்றில் பௌத்த, இந்து மத சம்பிரதாயங்கள் பேணப்பட்டு வந்துள்ளன.

தமிழ் வருடம் சித்திரை மாதத்துடன் ஆரம்பமாகிறது. சூரிய பகவான் மீன ராசியிருந்து மேட ராசிக்குள் பிரவேசிப்பதன் மூலம் பழையன கழிந்து புதியன தோன்றி சுபீட்சம் மலரும் புது வருடம் பிறப்பதாக இந்துக்களின் நம்பிக்கையை பௌத்த சிங்களவர்களும் முழுமையாக ஏற்கின்றனர். இப்பண்டிகையின் ஆரம்பம், இந்திய மக்களின் வழிவந்ததென்பதை சிங்கள வரலாற்றாசிரியர்கள் தெளிவுபட கூறிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரொபட் நொக்ஸ், மற்றும் ஜோன் டேவி ஆகியோரின் நூல்களில் கண்டி தலதா மாளிகையில் சித்திரைப் புதுவருட வழிபாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிகழ்ந்து வந்தததாக தெரிவிக்கப்படுகின்றது. மாளிகையின் சோதிடர் ‘நெக்கத் மொஹொட்டால் மூலம் புது வருடப்பிறப்புக்கான நேரம் கணிக்கப்பட்டு புத்தாண்டு சம்பிரதாயங்களுக்காக சுபநேரங்கள் குறிக்கப்பட்டு நான்கு தேவாலயங்களுக்கும் கண்டியைச் சூழவுள்ள விகாரைகளுக்கும் அறிவிக்கப்படும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

இதன் பிரகாரம் புத்தாண்டு உதயம், மருத்துநீர் தேய்த்துக் குளித்தல், அடுப்பு மூட்டுதல், பூஜைகள், உணவு சமைத்தல் முதலிய சம்பிரதாயங்களுக்கான நேர அட்டவனை இந்து – பௌத்த வழிபாட்டுத்தலங்களுக்கு ஒரே விதமாகவே வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான பத்து கிராமங்களில் வசிப்பவர்கள் மாளிகை வளாகத்தைத் துப்புரவு செய்து அலங்கார வேலைகளை மேற்கொள்வர். தலதா மாளிகைக்கென நியமிக்கப்பட்டுள்ள மட்பாண்ட வினைஞர்கள் புத்தம் புதிய மட்பாண்டங்களைத் தயாரித்துக் கொடுப்பர்.

நாத தேவாலய என அழைக்கப்படும் சிவன் கோவில் வளாகத்தில் அரிய மூலிகைகளைக் கொண்டு மருத்துநீர் தயாரிக்கப்படும். கண்டி மன்னர்களின் காலத்தில் இம் மருத்துநீர் ஆயிரக்கணக்கான பாத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சூழவுள்ள விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

இவ்வாறு புனித தலதா மாளிகையில் இந்து சமய சம்பிரதாயங்களுடன் பௌத்த மத குருமார்களால் சித்திரைப் புத்தாண்டு களைகட்டுகின்றது.

 

ஆடி மாதம்

பன்னிரண்டு மாதங்களில் ‘பீடை மாதம் என இந்துக்களால் கருதப்படும் கோடைமாதம். இம்மாதத்தில் நற்கருமங்கள் எதனையும் இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புது மணத் தம்பதிகளைக் கூட ஒதுக்கி வைத்துவிடுவர். தற்காலத்திலும் பாடசாலைகளில் கோடை விடுமுறைக்காலமாகவே ஆடி விளங்குகின்றது.

அளவுக்கதிகமான வெப்பமும் வறட்சியும் தாண்டவமாடுவதும் நோய்ப்பிணிகளினாலும் பஞ்சத்தினாலும் மக்கள் அவதியுறும் காலமாக ஆடியைக் கருதுகிறார்கள். எனவே வறட்சி நீங்கி மழைபொழிந்து பூமி குளிரவும், வயலும் வரம்பும் உயரவும் நெல் உயர்ந்து குடி உயரவும் வேண்டி இறைவனைப் பிரார்த்திப்பதில் மக்கள் ஈடுபடும் காலம் ஆடி மாதம். இலங்கையில் வடக்கே நல்லூர் முருகன் கோவில் முதல் பல்வேறு ஆலங்களிலும், தெற்கே கதிர்காமத்திருத்தலம் மேற்கே முன்னேஸ்வரமும் கிழக்கே பல்வேறு இந்து கோவில்களிலும் வருடாந்த உற்சவங்கள் இம்மாதத்தில் நிகழ்த்தப்படுவது நாட்டில் வறட்சி நீங்கி பயிர் செழிக்கவும் மக்கள் சுபீட்சம் அடைவதற்காகவுமேயாகும்.

கண்டியின் நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து நடாத்தும் இந்த ஆடி மகோற்சவம் சிவன் கோவிலில் காப்புக்கட்டுதலுடன் ஆரம்பமாகி புனித சின்ன பேழையும், தேவலாயங்களின் திருவாபரணங்களும் நகர் வீதி வலம் வருதலும் தவில், – நாதசுரம், கரகம், காவடி, முதலான தமிழர்களின் பாரம்பரியக் கலைகளுடன் கூடியதாக இவ்வாடி (எசல) பெருவிழா வருடாந்தம் கொண்டாடப்படுகின்றது.

 

கார்த்திகை மாதம்

1739முதல் 1747வரை கண்டியை ஆட்சி புரிந்த ஸ்ரீ விஜய ராஜசிங்கன் தனது இராசதானியின் சகல மதவழிபாட்டுத்தலங்களிலும், நகரங்களிலும் தீபமேற்றி அலங்கரிக்க வேண்டுமென கட்டளையிட்டதன் மூலம் கண்டி தலதா மாளிகை உட்பட நான்கு தேவாலயங்களிலும் கார்த்திகைத் தீப வைபவம் நடைபெறுவதாக the temporal and apritual conquest of Ceylon என்னும் நூலில் எ!ஸ்.ஜி. பெரேரா குறிப்பிடுகிறார்.

கண்டி இராசதானியின் கடைசி மன்னர்கள் தென்னிந்திய நாயக்கர்களாகும். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் வருடாந்த பாரம்பரிய நிகழ்வுகளில் மிகுந்த அலங்கார வைபவமாக திகழும் கார்த்திகை மாத பௌர்ணமி தின தீப விழா மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னரும் மிகச் சிறப்பாக கண்டி தலதா மாளிகையில் கொண்டாடப்படுகின்றது.

தலதா மாளிகையின் ‘நெக்கத் மொஹொட்டால’ மூலம் சகல தேவாலயங்களுக்கும் சுபநேரம் அறிவிக்கப்பட்டு தலதா மாளிகையிலும் நான்கு தேவாலயங்களிலும் தீபங்கள் ஏற்றப்படும். இதற்குத் தேவையான எண்ணெய் தலதா மாளிகையிலிருந்து விநியோகிக்கப்படும். மன்னர்களினாலே அன்று தீப விழாவுக்கான எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாக ‘சூல வம்சம்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை பௌர்ணமி தினத்தில் தலதா மாளிகைக்குச் சொந்தமான பத்து கிராமங்களில் வசிப்பவர்கள் மாளிகையை அலங்கரித்து தீபாலங்காரம் மேற்கொண்டதும் புனித தலதா மாளிகையின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும். அதனைத் தொடர்ந்து தலதா மாளிகை வளாகத்தைச் சுற்றி சிறிய வீதியுலா (பெரஹெர) நிகழ்த்தப்படும். இவ்வாறு உலக இந்து வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் தீபங்களேற்றி வழிபடப்படும் கார்த்திகை விழா, தலதா மாளிகையிலும் இடம்பெற்று வருவது இந்து – பௌத்த ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகும்.

 

தை மாதம்

உழவர்கள் தமது உழைப்பின் மூலம் பெற்றுக்கொண்ட முதல் நெல்லைக் கொண்டு வெய்யோனாகிய சூரிய பகவானுக்கு நன்றி கூறும் மாதம் தைமாதம். 1707முதல் 1739 வரை கண்டியை ஆட்சி புரிந்த வீரபராக்கிம நநேரந்திர சிங்கனின் ஆட்சி முதல் புனித தலதா மாளிகையில் இத் தைமாதப் பண்டிகை கொண்டாப்படுகின்றது.

எனினும் இத்தகை தைமாத புத்தரிசி படைக்கும் தெய்வ வழிபாடு அனுராதபுர இராச தானியில் நிகழ்ந்துள்ளதாக குமாரதுங்க முனிதாசவின் ‘பரவி சந்தேசயவில்' குறிப்பிடப்படுவதாக அனுராத செனவிரத்தின கூறுகிறார்.

குறுதெனிய என வழங்கப்பட்டுவந்த குண்டசாலையில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான வயல்களிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் புத்தரிசி தலதாமாளிகையிலும் நாத தேவாலயத்திலும் புத்த பகவானுக்கும், தெய்வங்களுக்கும் படையலிடப்படும். இச்சம்பிரதாயம் இந்துக்களின் தைப்பூச தினத்தின் நிகழ்வாகக் கொள்ளலாம்.

Comments