மட்டு மாவட்டம்; பாரிய அபிவிருத்திக்கு வித்திட்டுள்ள பொருளாதார நிலையம் | தினகரன் வாரமஞ்சரி

மட்டு மாவட்டம்; பாரிய அபிவிருத்திக்கு வித்திட்டுள்ள பொருளாதார நிலையம்

ச.தியாகராசா

புதிய தேசிய நல்லிணக்க அரசின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டடத்துக்கென்று தனிப்பட்ட ரீதியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென முதன் முதலாக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதியாகும். அதைப்போல் இவ்வாண்டுக்கான பாதீட்டில் மூன்று பொருளாதார மத்திய நிலையத்தினை வடகிழக்கில் ஏற்படுத்துவதற்கு வரவுசெலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டும், கிழக்கு மாகாணத்துக்கு ஒன்றுமாக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மையப்பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளமையினால் இம் மாவட்டத்தினை தெரிவுசெய்தமை சாலப் பொருத்தமானதாகும். இதற்காக ரூபா 30 கோடி (300 மில்லியன்) முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியினையும் மட்டக்களப்புக்கு கொண்டுவந்தமை இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களிலும் மிகப் பெரிய விவசாய கிராமமாக களுதாவளைக் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் இப் பொருளாதார மத்திய நிலையத்தினை ஏற்படுத்தியமை தேசிய நல்லிணக்க அரசின் உண்மைத் தன்மையினைக்காட்டுகின்றது.

வறுமை மிக்க மாவட்டம்

மட்டக்களப்பு

இலங்கையின் வறுமை 8.9 வீதமாகக் காணப்பட்ட மட்டக்களப்பின் வறுமை 20.3 வீதமாக(2010) காணப்பட்டது. இது இலங்கையில் வறுமையில் மட்டக்களப்பு முதலிடமாகும். போர் ஓய்ந்த பிற்பாடு மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில்(2013) முல்லைத்தீவு(28.8) முதலிடத்திலும், மட்டக்களப்பு(19.4) நான்காம் இடத்தில் காணப்பட்டது. இதனை கவனத்தில் கொண்ட அரசு பொருளாதார மத்திய நிலையத்தினை கிளிநொச்சியிலும், மட்டக்களப்பிலும் ஏற்படுத்தியமை ஒரு தூர நோக்கான சிந்தனையாகும்.

மட்டக்களப்பு மாவட்டமானது ஒரு விவசாய மாவட்டமாகும். இங்குள்ள மக்களில் 80 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் உள்ளார்கள். அத்துடன் 70வீதத்துக்கு மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளவர்களாக உள்ளனர். இம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையற்றவர்களா உள்ளார்கள். இவர்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான ஆரம்ப திட்டமாக இது காணப்படுகின்றது.

உப உணவு உற்பத்தியாளர்களுக்கான வரப்பிரசாதம்

அரசு ஓரளவு நெல் உற்பத்தியாளர்களின் பிரச்சனையினை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பில் மேற்கொண்டது. ஆனால் சிறு உற்பத்தியாளர், மரக்கறி உற்பத்தியாளர், மீன்பிடி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திக்கான சரியான விலையினை பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது. இதன் காரணத்தினால் விவசாயிகள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கினாா்கள். கடந்த பல வருடகாலமாக விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்திக்கான சரியான விலையினைப் பெற்றுத் தருமாறு பல கோரிக்கையினை தமிழ் அரசியல் கட்சிகளிடம் இட்டபோதும் இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவில்லை. களுதாவளைக் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு வழங்கி வருகின்றார்கள். ஆனால் இதன் விலையினைத் தீர்மானிப்பவர்கள் வியாபாாிகளாகவே காணப்படுகின்றாா்கள். தற்போது ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூபா 140 (கல்முனை) காணப்பட இது தம்புள்ள சந்தையில் ரூபா 250வாக உள்ளது. இதன் காரணத்தினால் விவசாயிகள் ரூபா 100 இழக்கின்றார்கள். எனவே, இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தின் மூலம் தனியுரிமை (Monopoly) மறுக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தருவதனால் போட்டித் தன்மை ஏற்பட்டுபோட்டிச் சந்தை (Competitive Market) உருவாகும். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்திக்கான சிறந்த விலையினைப் பெற்றுக் கொள்வார்கள். அத்தோடு நட்டம் அடைவது தடுக்கப்பட்டு மேலதிக உற்பத்திக்கான தூண்டலாக இப் பொருளாதார மத்திய நிலையம் வழிவகுக்கும்.

போருக்குப் பின்னர்

பயனாளிகள்

பயனடையும் திட்டம்

மட்டக்களப்பில் போர் ஓய்ந்தபின்னர் பாரிய நிதியீட்டத்துடன் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவை அனைத்தும் கட்டுமான திட்டமாக காணப்பட்டது. இதன் மூலம் பயனாளிகள் நேரடியாக நன்மையடையவில்லை. இதற்கான நிதி வெளிநாட்டு உதவியாகவும் அல்லது வெளிநாட்டு கடனாகக்காணப்பட்டது. ஆனால், போர் ஓய்ந்த பின்னர் முதன் முதலில் நேரடியாக பயனாளிகள் நன்மையடையும் திட்டமாக இத் திட்டம் காணப்படுகின்றது. எமது பகுதியில் பயன்படுத்தப்படாத பல வளங்கள் காணப்படுகின்றது. இதன் மூலம் வளப் பயன்பாடு அதிகரிப்பதுடன் உற்பத்தியின் பெறுமதிசேர் தன்மை அதிகரித்து உற்பத்திப் பொருளின் விலையும் அதிகரிக்கும்.

இதற்கான நிதியானது வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டது. இதுமக்களின் பணமாகும். இதற்காக ரூபா 30 கோடி (300 மில்லியன்) முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 கடைத்தொகுதிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் நேரடியாக 500 வேலைவாய்ப்புக்கள் உள்ளது. இதனது பக்க நன்மைகள் பாரியளவில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான திட்டங்கள் மூலம் மக்கள் நேரடியான பயனடையும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் மூலம் மக்கள் விவசாயத்தில் காணப்பட்ட சலிப்புத் தன்மை நீங்கிவிவசாயத்தில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் பாரம் பாரிய விவசாய நடவடிக்கையில் இருந்து நவீனத்துவமான விவசாய நடவடிக்கைக்கு மக்களை மாற்றியமைக்க முடியும். அத்தோடு ஏற்றுமதியினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துக்கு மக்களை இட்டுச்செல்ல இத் திட்டம் வழிவகுக்கும்.

இண ஒற்றுமைக்கான திட்டம்

பொருளாதார மத்திய நிலையமானது கிராமிய அபவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுவதனால். இதற்கான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்அமிர் அலி அவர்கள் தனது முஸ்லிம் பிரதேசத்துக்கு கொண்டு செல்லாமல் முன்னால் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தியின் வேண்டுகோலுக்கு அமைய தமிழ் பிரதேசத்தில் அமைக்கப்பட்டமை இன ஒற்றுமையின் வெளிப்பாடாகும். அதேபோல் பொருளாதார மத்திய நிலையத்துக்கு வருவதற்கும், செல்வதற்குமாக இரு பாதைகளை காபற் இடுவதற்கு கிழக்கின் முதலமைச்சர் ஹாபீஸ் நசீா் அகமட் வாக்குறுதியளித்துள்ளார். இதற்காக 35 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்யவேண்டி ஏற்படும். பொருளாதார மத்திய நிலையம் ஒரு அரசியல் பூச்சாண்டி என்று நினைத்தார்கள். ஆனால் இத் திட்டத்துக்கான அனைத்து பூர்வாங்க செயல்பாடுகளும் நிறைவுபெற்றுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போதுபட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 90 வீதமான தமிழர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அவ்வாறான பாரிய திட்டத்தினை மேற்கொள்வதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் முன் வந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

இரண்டாம் கட்டதிட்டம்

இப் பொருளாதார மத்திய நிலையம் ரூபா 30கோடியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அது 35கோடியினை எட்டியுள்ளது. இந் நிதியானது கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் பாரியதொகையாகும். கிழக்கு மாகாண விவசாய அமைச்சில் பல திணைக்களங்கள் உள்ளது. இதற்கே 30 கோடி ஒதுக்கப்ட்டுள்ள நிலையில், இத் திட்டத்துக்கு தனியே 30 கோடி ஓதுக்கப்பட்டுள்ளமை பொியவிடயம் என கிழக்கின் முதல் அமைச்சர் தெரிவித்தார். இத் திட்டத்தினை மேலும் விஸ்தரிக்கும் வகையில் எதிர்காலத்தில் சர்வதேச நிறுவனங்கள் வரவழைப்பதற்காக பாரிய நவீன கட்டிடதொகுதியினை மேற்கொள்ளும் செயல்திட்டத்தினை அமைச்சு மேற்கொள்ள உள்ளதாகவும். இதற்கான இரண்டாம் கட்டதிட்டம் தீட்டப்பட உள்ளது. இதற்கான நிதியினையும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க உள்ளதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரி வித்துள்ளதாகசோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கினால் பொருளாதார மத்திய நிலையங்கள் கடலினை அண்டிய பிரதேசத்தில் அமைத்துள்ளாா்கள். இன் நாடுகளில் பாாிய விலை கடலினை அண்டிய நிலங்களுக்கே உள்ளது. அதைப்போல் களுதாவளையில் அமையப்பெற்ற பொருளாதார மத்திய நிலையமும் கடலினை அண்டிய பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ளது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு இவ் அமைவிடம் மிகப் பொருத்தமானதாக அமையும்.

எமது பிரதேசம் உலர் வலய பிரதேசமாக உள்ளமையினால் இதற்கேற்ற கால் நடைகளை பாகிஸ்தானில் இருந்து தருவித்து தருவதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். எனவே இத்திட்டத்தினை பார்க்கும்போது உண்மையில் வறுமையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிராம அபிவிருத்தி என்பதற்கான பிள்ளையார் சுழி பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக களுதாவளையில் மேற்கொள்ளப்பட்டமை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதமான ஒன்றாகும். 

Comments