களையெடுப்பு ஆரம்பம்; அருந்திகவின் பதவிநீக்கம் நாடகமா? | தினகரன் வாரமஞ்சரி

களையெடுப்பு ஆரம்பம்; அருந்திகவின் பதவிநீக்கம் நாடகமா?

 இப்னு ஷம்ஸ்  

மஹிந்த ஆட்சி மாறி இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இன்னும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தான் நீடிக்கிறதா என்று நினைக்குமளவிற்கு மஹிந்த அணியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் நீடித்து வருகிறது. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவது மந்தகதியிலே நடந்தது. மறுபக்கம் ஐ.ம.சு.மு. மற்றும் சு.க.வுக்கு எதிராக செயற்பட்டவர்களின் கொட்டத்தை அடக்கவும் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

ஜனவரியில் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில் களையெடுப்பை ஆரம்பித்திருக்கிறார். ஜனாதிபதியும் சு.க தலைவருமான மைத்திரிபால சிறிசேன.

அரசாங்கத்தை விமர்சித்தாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச நீக்கப்பட்டார். ஐ.தே.கவின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி இவரை பதவி நீக்கியிருந்தார்.

இதேவேளை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த சுசில் பிரேம் ஜெயந்த், அருந்திக பெர்ணாந்து போன்றோரை பதவியில் இருந்து தூக்குமாறு கடந்த நாட்களில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சு.க தரப்பிலன்றி ஐ.தே.க பின்வரிசை எம்.பிகள் தான் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள். இந்த நிலையில் தான் பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாந்து அமைச்சு பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு அடக்கி வாசிக்குமாறு கட்சி முக்கியஸ்தர்கள் பல தடவை எச்சரித்திருந்தார்கள். ஆனால் 18 பேருடன் அரசில் இருந்து வெளியேறப்போவதாக அவ்வப்போது அறிக்கை விட்டு வந்தார் அருந்திக.

அவரை வெளியேற்றியதில் ஐ.தே.கவினர் சந்தோசப்பட்டாலும் சு.க தரப்பு இதனை விரும்பவில்லையாம். அதேநேரம் தங்கள் தரப்புக்கு மற்றொருவர் சேர்வதாக கணக்குப் போட்டார்கள் பொதுஎதிரணியினர்.

அரசியல் அரங்கில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் மிக பரபரப்பானதாக இருக்கும் என சிலர் ஆருடம் கூறியிருந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் ஐ.தே.க அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, விஜேதாச ராஜபக்ச ஆகியோர் பதவி இழந்தார்கள். இதனை சமப்படுத்தும் வகையில் சு.க பிரதி அமைச்சர் ஒருவர் பலியிடப்பட்டிருப்பதாக சு.க முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால் அருந்திக பெர்ணாந்து நீக்கப்பட்டது வெறும் கண்துடைப்பு தான் என தற்பொழுது பேச்சடிபடுகிறது. ஏனென்றால் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் கடந்த செவ்வாய்க் கிழமை நீக்கப்பட்டவர். அன்று இரவு ஜனாதிபதி தலைமையில் நடந்த சு.க பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. ஆனால் மறுநாள் காலை அருந்திக ஜனாதிபதியை சந்தித்தார். அது மட்டுமன்றி அன்று ஒருகொடவத்தை மோட்டார் வாகன பொறியியல் பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்பு விழாவிலும் ஜனாதிபதியுடன் பங்கேற்றிருந்தார். விழா முடிந்த பின்னர் அவர் ஜனாதிபதியுடன் ஒரே காரில் பயணித்தாகவும் தெரிகிறது. மஹிந்த அணியுடன் சேர இருந்தவர் எவ்வாறு தன்னை பதவி நீக்கிய ஜனாதிபதியுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டார் என்ற சந்தேகம் பரவலாக பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

காலை ஜனாதிபதியின் இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்த அருந்திக தான் சு.கவை விட்டும் எங்கும் போக மாட்டேன் என்றும் ஒன்றிணைந்த எதிரணியுடன் சேரப்போவதில்லை எனவும் உறுதியாக கூறினாராம்.

அருந்திக மஹிந்த தரப்புடன் இணைந்தால் எதிர்காலம் நாசமாகும். அந்த கும்பல் உள்ளவர்களை வேட்டையாடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சு.க முக்கியஸ்தர்கள் சிலர் அவரை எச்சரித்ததாக தெரியவருகிறது.

இதேவேளை 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்த மஹிந்த அணியுடன் ஒட்டியுள்ள தென் மாகாண அமைச்சர் வீரசுமன வீரசிங்க மற்றும் மேல் மாகாண சபை ஆளும் தரப்பு பிரதான அமைப்பாளர் குணசிறி ஜெயநாத், சபை முதல்வர் சுனில் ஜெயமினி, சபை பதில் தலைவர் மெரில் பெரேரா ஆகியோரும் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். எதிர்வரும் வாரங்களில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான மேலும் பலர் பதவிகளில் இருந்து தூக்கி வீசப்பட உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.

இதேவேளை, பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அருந்திக பெர்ணாந்துவுக்கு சில வாரங்களில் வேறு ஒரு பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட இருப்பதாக கட்சி செய்திகள் தெரிவித்தன. ஜனாதிபதி கலந்து கொண்ட ஒருகொடவத்தை நிகழ்வில் இது பற்றி அமைச்சர் சந்திம வீரக்கொடி நாசுக்காக கூறியிருந்தார்.

பூச்சியமாக மாறிய 18

இதேவேளை, ஐ.தே.க – சு.க ஒப்பந்தம் முடிவடைவதோடு (செப்டம்பர் 2) அரசில் இருந்து வெளியேறுவதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அறிக்கை விட்ட சு.க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது போர்வாளை மீண்டும் உறைக்குள் செருகியுள்ளனராம்.

அருந்திக பெர்ணாந்துவின் பதவி நீக்கத்துடன் அவர்கள் சற்று அடக்கி வாசிக்க திட்டமிட்டுள்ளதாக சு.க முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சு.க பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் விலகுவதாக சொன்ன அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டார்களாம். கட்சியை மறுசீரமைப்பது குறித்தும் எதிர்கால கட்சி முன்னேற்றங்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக கூறியிருந்த அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் போன்றோரும் தமது மாவட்டங்களில் கட்சியை புனரமைக்கும் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்களாம் கட்சி புனரமைப்பின் போது கடுமையான முடிவுகளை எடுக்கப் போவதாக ஜனாதிபதி இங்கு கூறியுள்ளார்.

வாராந்தம் சு.க எம்.பிகளை சந்தித்து கட்சி விடயங்கள் பற்றி பேச வேண்டும் என இங்கு யோசனை முன்வைக்கப்பட்டதாம். ஜனாதிபதியின் அண்மைக்கால முன்னெடுப்புகளால் மைத்திரி அணி சற்று ஆடிப்போயுள்ளதாம்.

மைத்திரி தாத்தாவை பிரமிப்பூட்டிய குட்டிச் சிறுமி

ஜனாதிபதி ஒருவரை சந்திப்பதென்றால் சாதாரண விடயமல்ல. அதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். இந்தக் கெடுப்பிடிகள் போவாதென்று பலரது அனுமதியும் பெற்றாக வேண்டும். ஆனால் 3 வயதான குட்டிப் பெண் ஒருத்தி எந்தப் பிரச்சினையும் இன்றி ஜனாதிபதியை சந்தித்தது மட்டுமன்றி அவரின் மடியில் ஏறி அமர்ந்து அனைவரையும் பிரமிப்புக்குள்ளாக்கியுள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் மெதிரிகிரிய மிரிஸ்ஹேன கிராமத்திற்கு சென்றிருந்தார். இங்கு நடந்த விழாவில் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்திருந்த குட்டிச் சிறுமி பற்றித்தான் பலரும் பேசினார்கள்.

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களின் பிள்ளைகளுக்கு தான் ஜனாதிபதியுடனோ அமைச்சர்களுடனோ நெருக்கிப்பழக வாய்ப்புக்கிடைக்கும். விழாக்களில் அவர்களின் பிள்ளைகளுக்குதான் அருகில் செல்ல இடம் கிடைக்கும். ஆனால் மெதிரிகிரியைச் சேர்ந்த தினுல்யா சனாத்ரி எனும் சிறுமி தனது பலநாள் கனவை அன்று நிறைவேற்றி அனைவரையும் பிரமிப்பூட்டியிருக்கிறார்.

வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படத்தை கண்டால் சிறுமி அதனை ரசித்துப் பார்ப்பாராம். சிரித்தவாறு பலவிடயங்களை தனது பொக்கைவாயால் கூறுவாராம். தனக்கு மைத்திரி தாத்தாவை பார்க்க வேண்டும் என அடிக்கடி தந்தையிடம் கூறி வந்திருக்கிறார் தினுல்யா.

ஜனாதிபதி மிரிஸ்ஹேனவிற்கு வர இருப்பது பற்றி தினுல்யாவின் தந்தை அன்றைய தினம் கூறியிருக்கிறார். தான் மைத்திரி தாத்தாவை பார்க்க வேண்டும் என சிறுமி நச்சரிக்கவே வேறு வழியின்றி விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவளின் தந்தை, ஜனாதிபதியை சந்திக்கும் நம்பிக்கை அவருக்கு துளியும் இருக்கவில்லை.

அவர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற போது விழா ஆரம்பித்திருந்தது ஜனாதிபதியும் வந்திருந்தார். ஆனால் செல்ல முடியவில்லை. ஏனென்றால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தனக்கு மைத்திரி தாத்தாவிடம் செல்ல வேண்டும் என சிறுமி அடம்பிடித்தார். ஆனால் அவளின் தந்தையினால் கூட்டத்தை தள்ளிக் கொண்டு முன்னே செல்ல முடியவில்லை. வேறு பழியின்றி இடுப்பிலிருந்து மகளை கீழே இறக்கிவிட்டுள்ளார். சனத்துக்கு மத்தியில் புகுந்து மேடைக்கருகில் தைரியமாக சென்ற சிறுமியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துனர். சிறுமியை கண்ட ஜனாதிபதி அவருக்கு வழிவிடுமாறு கையசைக்க ஏறிக் கொண்டிருக்கிறாள் தினுல்யா.

மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிதிகளை பொருட்படுத்தாமல் நேரே ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்டதும் மேடையில் இருந்தவர் மட்டுமன்றி கூட்டத்தில் இருந்தவர்களும் சிறுமியின் செயலை கண்டு பிரமிப்படைந்தார்கள். ஜனாதிபதியின் மடியில் இருந்தவாறு அவருடன் கொஞ்சி விளையாடிய சிறுமியை ஜனாதிபதி மடியில் ஏற்றி அமரவைத்துக் கொண்டார்.

சற்றுநேரம் கழிந்த பின்னர் அருகில் இருந்த அமைச்சர் அமரவீர சிறுமியின் கன்னத்தை அன்பாகக் கிள்ளி! ஜனாதிபதியுடன் அமர்ந்தது போதும் தானே போய் வாருங்கள் என்றாராம்.

ம்ஹூம்... சிறுமி ஒரேயடியாக அதனை மறுத்து ஜனாதிபதி தாத்தாவின் முகத்தையும் கூட்டத்தையும் மாறி மாறி பார்த்தவாறு தன்பாட்டில் இருந்துவிட்டார்.

சுமார் 20 நிமிடங்கள் வரை ஜனாதிபதி தாத்தாவுடன் அமர்ந்திருந்த சிறுமி, விழா முடிந்த பின்னரே தந்தையுடன் வீடு திரும்பினாராம்.

மைத்திரி தாத்தாவை காண ஆவலாக இருந்தேன். அவரை கண்டதும் ஓடிச் சென்றேன். என்னை கூப்பிட்டு மடியில் வைத்துக் கொண்டதாக சிறுமி தனது மழலை மொழியில் தாயிடம் பெருமையாக கூறினாராம். 

Comments