மாற்று அரசியலொன்றுக்கு கனிந்து வரும் 'களம்' | தினகரன் வாரமஞ்சரி

மாற்று அரசியலொன்றுக்கு கனிந்து வரும் 'களம்'

கருணாகரன்

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? இந்தக் கேள்விகளை 1970 களில் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். அதற்கு முன்பு எங்களுடைய தாய்மாரும் தந்தையர்களும் இந்தக் கேள்விகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இப்பொழுது எங்களுடைய பிள்ளைகள் இந்தக் கேள்விகளோடு மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால் நாளைய நம் சந்ததியும் இந்தக் கேள்விகளோடு அலையப்போகிறது என்றே தோன்றுகிறது.

ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்த பிறகும் இந்த இரண்டு எளிய கேள்விகளுக்குக் கூடப் பதிலைக் காணமுடியாத நிலையில்தான் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. அந்த அளவுக்கே தமிழ்ச்சமூகத்தின் அரசியற் செயற்பாடுகளும் அரசியல் அறிவும் விவேகமும் உள்ளன.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் அதிகமான கால அரசியல் செயற்பாடுகளில் நானும் இணைந்திருக்கிறேன். இந்தக் காலப் பகுதியில் பல்வேறு வகையில், பல சக்திகளுடனும் இணைந்தும் ஆதரவளித்தும் சிறிய அளவிலேனும் இடையீடுகளைச் செய்ய முயன்றிருக்கிறேன். என்னைப் போன்ற பலர் இதையும் விட அதிகளவான காலம் முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். பெரும் பங்களிப்புகளையெல்லாம் செய்திருக்கிறார்கள். இப்போது தமிழர்களுடைய தலைமைத்துவப் பொறுப்பிலிருக்கும் இராஜவரோதயம் சம்மந்தன், மாவிட்டபுரம் சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, வீரசிங்கம் ஆனந்தசங்கரி போன்றவர்கள் நாற்பதாண்டுக்கும் கூடுதலான கால அரசியற் செயற்பாட்டையும் அனுபவத்தையும் கொண்டவர்கள்.

இவர்களை விட வேலுப்பிள்ளை பாலகுமாரன், கே. பத்மநாபா, உமா மகேஸ்வரன், சிறி சபாரத்தினம், வேலுப்பிள்ளை பிரபாகரன், விசுவானந்ததேவன், இ. இரத்தினசபாபதி எனப் பல தலைவர்கள் வினைத்திறன் மிக்க ஆயுதப்பேராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். தங்களுடைய சிந்தனையினாலும் செயற்பாடுகளாலும் இவர்கள் தமிழ்ச்சமூகத்தில் பெரும் நம்பிக்கை நாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்னொரு புறத்தில் எஸ்.ஜே.வி செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னலம்பலம், திருச்செல்வம், நாகநாதன், வன்னியசிங்கம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சுயாட்சிக்கழகம் நவரத்தினம், மு.சிவசிதம்பரம், செல்லையா இராசதுரை என்றொரு பெரிய அணி நீண்டகாலமாகத் தமிழ் அரசியலில் முயற்சிகளை எடுத்திருந்தது. இவர்களில் அநேகர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்தவர்கள். ஆகவே அந்தப் பிரதிநிதித்துவத்தின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு அப்பால் இன்னொரு பக்கமாக இடதுசாரிகளும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முயற்சிகளையும் தமிழ் மக்களுக்கான அரசியலையும் முன்னெடுத்தனர். இடதுசாரிகளுக்குரிய ஆதரவைப் பெருவாரியாக தமிழ்ச்சமூகம் வழங்கவில்லை என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டியது. இருந்தபோதும் இடதுசாரிகளிடத்திலே பல அணிகளும் பல்நோக்கு நிலைகளோடு செயற்பட்டன. பல்வேறு வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் தமிழ் அரசியலும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சிறிய அளவிலேனும் முன்னகர்ந்ததில்லை.

எனவேதான் “ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?” என்ற கேள்விகள் விடை காணப்பட முடியாத நிலையில், எரியும் நெருப்புத் துண்டாக நமக்கு முன்னே இன்னும் அனல் கக்கிக் கொண்டுள்ளன.

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு அழுத்தமடைந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக – இன விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான போராளிகள் தங்களுடைய உயிரைக் கொடுத்துப் போராடியிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதை விட சொத்திழப்பு, வாழ்க்கை இழப்பு, உடல் உறுப்புகளின் இழப்பு, அடையாள இழப்பு என மதிப்பிடவே முடியாத இழப்புகளைத் தமிழ்ச் சமூகம் சந்தித்திருக்கிறது.

இப்படியெல்லாம் செய்தும் எந்த வகையிலும் தமிழ் அரசியலை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் இதற்குக் காரணமென்ன? இந்தக் கேள்வியை நாம் எப்படிப் புறக்கணித்துவிட முடியும்? நிச்சயமாக இந்தக் கேள்வியை முன்னிறுத்தி நாம் நம்மையும் நமது கடந்த காலச் செயற்பாடுகளையும் நமது நம்பிக்கைகளையும் அவை அடைந்த தோல்விகளையும் பகுத்தாராய வேண்டும். இதில் தயக்கங்கள் அவசியமற்றவை. நம்மைத் திறந்து ஆராயத் தவறினால், குறைபாடுகளை இனங்கண்டு அவற்றைக் களையத் தவறினால், நிச்சயமாக மேலும் தமிழ்ச்சமூகம் பலவீனப்பட்டே போகும்.

அப்படியென்றால், நமது அரசியல் பார்வையில், இலக்கில், செயற்பாட்டில், அணுகுமுறைகளில், தந்திரோபாயங்களில் எல்லாம் ஏதோ பிரச்சினைகள் உள்ளன என்பதே உண்மையாகும். அதனால்தான் இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும், இவ்வளவு அர்ப்பணிப்புக்குப் பின்னரும், இவ்வளவு கால நீட்சியின் பிறகும் தமிழ் அரசியல் பலவீனப்பட்டிருக்கிறது. வரலாற்றில் போராடும் இனங்களும் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் வெற்றியடைந்ததும் உண்டு. தோல்வியைச் சந்தித்ததும் உண்டு. ஆனால், தவிர்க்க முடியாமல் ஏற்படும் தோல்வியினால் அப்படியே எந்தச் சமூகமும் கட்டுண்டு கிடப்பதில்லை. அப்படி ஒரு சமூகம் தொடர்ந்தும் தோல்வியிலேயே புதைந்து கிடக்கவும் முடியாது. அப்படியென்றால், அது சிந்தனையற்ற சமூகமாக, அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படிக்காத சமூகமாகவே இருக்க வேணும். சிந்தனையற்ற சமூகத்துக்கு எதிர்காலமில்லை. அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்ளாதவர்கள் காலத்தில் முன்னகரவே முடியாது.

இன்றைய நிலையில் ஈழத்தமிழ்ச்சமூகம் அரசியல் அநாதைகளாக மட்டுமல்ல, இனரீதியாகவே தன்னடையாள இழப்புக்கும் ஆளாகியுள்ளது. புலம்பெயர்ந்தவர்களும் புலம்பெயரும் கனவோடுள்ளவர்களும் இந்த அடையாள இழப்பின் முன்வரிசைக்குரியவர்கள். இதைச் சிலர் மறுத்து விவாதிக்கக்கூடும். ஈழத்தமிழர்களுடைய அரசியற் குரலாக இன்று புலம்பெயர் சமூகம் செயற்படுகிறது. யுத்தத்தின்போதும் யுத்தத்திற்குப் பிறகும் அது செய்த அரசியல், பொருளாதாரப் பங்களிப்புகள் அதிகம் என இவர்கள் தமது தரப்பு வாதத்தை முன்வைக்கக்கூடும். இதில் உண்மையுண்டு. ஆனால், இந்த நிலை தொடர்ச்சியாக இருக்குமென்றில்லை. தலைமுறைகளின் மாற்றம் இதை மாற்றிவிடக்கூடிய நிலையே அதிகமாகக் காணப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறையினர் தமிழ்க் குரலோடும் தமிழ் முகத்தோடும் தமிழ் மனத்தோடும் இருப்பர் என்பதற்க எந்த உத்தரவாதங்களுமில்லை. ஆகவே கால நீட்சியில் அடையாள இழப்பிற்கான சாத்தியங்களே அதிகமாக உண்டு. இது மறுக்கவே முடியாத உண்மை.

சிங்கள அதிகார வர்க்கத்தின் மூலமாக – அரசாங்கத்தின் மூலமாக - த் தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன எனக் குற்றம் சாட்டும் தமிழ்ச் சமூகம் தன்னுடைய தவறான அரசியல் சிந்தனையினாலும் செயற்பாட்டினாலும் தன்னடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது. இதுவே உண்மை. இது எவ்வளவு பலவீனமானது?

இவ்வளவு நீண்ட, பெரிய போராடத்தை முன்னெடுத்த தமிழ்ச்சமூகம் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாத நிலையிலே தேங்கிக் கிடக்கிறது. அரசியலில் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியில், பண்பாட்டில், சமூகப் பாதுகாப்பில், கல்வியில் எல்லாம் அடுத்தாக என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தான் அணிந்து கொள்கின்ற ஆடைகளையே உற்பத்தி செய்ய முடியாத அளவுக்குத் தள்ளப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகம் மானத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் சிலர் இன்னும் வீரப்பிரதாபங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு இந்த உலகத்திலே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிலர் குருட்டு நம்பிக்கைகளின் பின்னே அலைந்து கொண்டிருக்கின்றார்கள். பலருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

இதனால்தான் தமிழ் அரசியலில் ஒரு மாற்றுத் தலைமையின் அவசியத்தைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த மாற்றுத் தலையைக் கூட புதிதாகத் தேடுவதை விட, புதிய முறையில் தேடுவதை விடப் பழைய மாதிரிகளுக்குள்ளேயே தேடுகிறது தமிழ்ச்சமூகம். இப்படிச் செய்வதன் மூலமாக எந்தப் புதிய மாற்றங்களும் ஏற்படாது. எந்த நன்மைகளும் கிடைக்காது. இந்த இடத்தில்தான் சிந்திப்போரின் பொறுப்புகள் அதிகமாக உள்ளன.

பொதுவாகவே இன்றைய உலக ஒழுங்கில் இந்தமாதிரித் தேக்கமடைந்திருக்கும் அரசியலை அல்லது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குப் புத்திஜீவிகள், அரசியற் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதுண்டு. இதைத் தந்திரோபாயமான முறையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டளார்கள் என்று வெள்ளை மைபுசி அடையாளப்படுத்த முற்படுகிறது அதிகாரவர்க்கம். இந்த அதிகாரவர்க்கம் உள்நாட்டில் நேரடியாகத் தலையீடுகளைச் செய்யாது. மறைமுகமாகவே இதைச் செய்யும். இது சர்வதேச அளவிலான ஒரு ஏற்பாடு. ஆகவே இதுவும் ஒரு ஏமாற்றே.

இவ்வாறு தொலைதூரத்தின் தொண்டர் அமைப்புகள், வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவி அனுசரணையோடும் அங்கீகாரத்தோடும் உருவாக்கப்படும் சிவில் செயற்பாட்டாளர்கள் மக்களின் மெய்யான பிரச்சினைகளின் நிலைநின்று மெய்யான அரசியலை முன்னெடுப்பதில்லை. பதிலாக மெய்யான அரசியலை முன்னெடுப்பதற்காகக் குறித்த சமூகத்திலோ குறித்த நாட்டிலோ உருவாகும் மெய்ச் சக்திகளை ஓரம்கட்டி விட்டுத் தமக்கிசைவான சக்திகளை முன்னிலைப்படுத்த முற்படுகின்றன. அவ்வாறு முன்னிலைப்படுத்தப்படும் அரசியற் சக்திகள் மக்களுக்கு அந்நியமாகவே செயற்படும். இத்தகைய ஒரு ஆபத்தான நிலையைத்தான் இன்றைய தமிழ்ச்சமூகமும் எதிர்கொண்டுள்ளது.

தற்பொழுது மாற்று அரசியல் ஒன்றுக்கான களவெளி கனிந்துள்ளது. மாற்றுத் தலைமையைக் குறித்த தேடல் மனவெளியும் உருவாகியிருக்கிறது. இதைக் கண்டடைவதற்கு ஒரு அரசியல் துணிவும் அரசியல் ஞானக் கண்ணும் தேவை. நெற்றிக் கண்ணைத் திறக்க வேண்டிய வரலாற்றுத் தருணமும் வாழ்க்கைச் சூழலும் இது.

இதை எப்படி முன்னெடுப்பது என்பதை நிதானமாகச் சிந்திக்க வேண்டும் தமிழ்ச் சமூகம். வெறும் உணர்ச்சிகரமான வாதங்களுக்குள் சரியாக நடக்க வேண்டிய உரையாடலைப் புதைத்து விடக்கூடாது. நடத்துகின்ற விவாதங்களை வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல முற்பட வேண்டும். பகை விவாதங்களாக மாற்றி எதிர்மறைத் தேக்கத்துக்குட்பட்டுவிடுவது நல்லதல்ல. இது விழிப்பும் பொறுப்பும் கொள்ள வேண்டிய காலம்.

இனியும் தோல்வியின் புதைகுழிக்குள் வீழ்ந்து கிடக்க முடியாது. 

Comments