காட்டு யானைகளின் ஊடுருவலை தடுக்க தேனீ வளர்ப்பு திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

காட்டு யானைகளின் ஊடுருவலை தடுக்க தேனீ வளர்ப்பு திட்டம்

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி வாழ் பெரும்பிரதேச மக்கள் காட்டுயானைகளின் தாக்கங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் உட்பட்டு வருகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றினைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் மின்சார வேலிகள் ஆங்காங்கே அவ்வப்போது எல்லைப் புறங்களில் அமைக்கப்பட்டு வந்தாலும், அவற்றையும் மீறியும் யானைகள் மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்குள் உட்புகத்தான் செய்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. போரதீவுப்பற்றுப் பிரதேசம் 43 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் களுமுந்தன்வெளி, காந்திபுரம், தும்பங்கேணி, இளைஞர் விவசாயத்திட்டம், திக்கோடை, செல்வாபுரம், நவகிரிநகர், வெல்லாவெளி, பாலையடிவட்டை, சுரவணையடியூற்று, கண்ணபுரம், விளாந்தோட்டம், காக்காச்சுவட்டை, மாலையர்கட்டு, றாணமடு, சின்னவத்தை, மற்றும் ஆனைகட்டிவெளி உள்ளிட்ட பல எல்லைப்புறக் கிராமங்களில்தான் அதிகளவு காட்டுயானைகளின் தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு காணப்படும் இப்பகுதி மக்களின் வீடுளை காட்டுயானைகள் அழித்துச் செல்வதோடு, உணவுக்காக வைத்திருக்கும் நெல்மூட்டைகள், உள்ளிட்ட உணவுப் பொட்களையும் அழித்துவிட்டுச் செல்கின்றன. அத்தோடு, தமது பயிர் செய்கைகளையும், யானைக்கூட்டங்கள் அழிப்பதனால் தாம் வாழ்வாதார ரீதியாகவும் பல இழப்புக்களைச் சந்தித்து வருகின்றோம் என அப்பகுதிவாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாங்கள் எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்து பற்பல இடங்களில் வாழ்ந்து வந்தோம், இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்துள்ளோம். கடந்த யுத்தத்தினால் எமது மக்கள் சகல உடமைகளையும் இழந்துள்ளார்கள். தற்போது காட்டு யானைகள் எம் உறவுகளின் வீடுகளை இரவும் பகலுமாக மாறிமாறி உடைத்து வருகின்றன. இதுவரை எமது பகுதியில் 5 பேருக்கு மேல் காட்டு யானைகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 50 இற்கு மேற்பட்ட வீடுகள் யானைகளினால் முற்றாக உடைக்கப் பட்டுள்ளன. யுத்தத்தினால் துன்பப்பட்ட நாங்கள் தற்போது காட்டு யானைகளினால் துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் நாங்கள் யுத்த காலத்தில் எவ்வாறு இடம் பெயர்ந்தோமோ அது போல் தற்போது காட்டு யானைகளுக்கும் பயந்து இடம் பெயரவேண்டிய நிலைமை ஏற்படும் என கண்ணபுரம் கிராமத்தினைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் க. காந்தன் கூறினார்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த வருடம் (2017) காட்டுயானைகளினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 20 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர், மேலும் வாழ்வாதாரமாக இருந்த அதிகளவு தோட்டங்கள், பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எங்களுக்கு சாப்பிட, குடிக்க ஒன்றும் நாங்கள் கேட்க வில்லை எங்கள் பிள்ளைகளை அச்சமின்றி வாழ்வதற்கு யானைத் தொல்லைகளை இல்லாதொழித்துத் தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம். பலர் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். ஆனால், இதுவரை நடந்தது ஒன்றுமில்லை. இதனால், எங்கள் பிள்ளைகளின் படிப்புத்தான் வீணாகின்றது நிம்மதியாக இரவில் படிக்க முடியாதுள்ளது. இவ்வாறு இந்த நிலைமை நீடித்தால் எமது எதிர்காலச் சந்ததியினரை எவ்வாறு நாம் வளர்த்தெடுப்பது என்றுதான் கவலையாய் இருக்கின்றது. எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

காட்டுயானைகளின் தாக்குதலுக்கும் அட்டகாசங்களுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள படுவான்கரைப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய வெள்ளம், அதனைத் தொடர்து, 1978 ஆண்டு வந்த சூறாவளி, பின் தொடர்ச்சியாகப் பீடித்த கோரயுத்தம், பின்னர் தொடர்ந்து வரட்சி, வெள்ள அனர்த்தம், போன்ற இவையனைத்திற்கும் முகம்கொடுத்து தற்போது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில்“மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோல” தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள்ளும், மக்களின் பயிர் பச்சைகளுக்குள்ளும், புகுந்து அப்பாவி மக்களின் உயிர்களையும், உடமைகளையும் குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கின்ற தொழில்களையும் அழித்து வருவது என்பது மிகவும் வேதனையான விடயமே!

இப்பிரதேசம் காட்டு யானைகள் வாழும் பிரதேசம் இல்லை மாறாக மக்கள் குடியிருக்கும் பிரதேசமாகும், யானைகள் வாழும் பிரதேசம் சரணாலயம் ஆகும். எனவே இங்குள்ள மக்கள் குடியிருப்புக்களிலுள்ள காட்டுயானைகளை வெடிகள் வைத்தோ அல்லது மின்சாரவேலிகள் அமைத்தோ தடைசெய்வது என்பதற்கு மேலாக இவைகளை பிடித்துக் கொண்டு யானைகள்வாழும் சரணாலயங்களில் விடுவதுதான் சாலச் சிறந்த விடயமாகும். மக்கள்வாழும் குடியிருப்புக்களுக்குள் காட்டுயானைகள் வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இவைகளைப் பிடித்து சரணாலயங்களில் விட்டால் யானைவேலி அமைப்பது என்பது அவசியமில்லை.

தற்போது நாட்டில் மக்கள் குடியிருக்கவும் பயிர் செய்கைகளுக்கும் தொழிற் பேட்டைகளுக்குமாக பல்வேறு தேவைகளை மையப்படுத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காடுகளிலுள்ள யானைகள் உணவை தேடி கிராமங்களுக்குள் செல்கின்றன இருந்த போதிலும் மின்சார வேலிகள் அமைக்கும் செயற்பாடு நடைமுறையிலுள்ளன. ஆனாலும் இத்திட்டதினால் யானைகளின் தொல்லைகளைக் குறைக்கலாமே தவிர முற்றுமுழுதாக ஈடுசெய்ய முடியாது எனத் தெரியவருகின்றது.

இருந்த போதிலும், காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகாமலிருக்க ஆபிரிக்க நாடுகளில் யானைகள் வரும் வழியில் வரிசையாக உயர்ந்த பனை மரங்களை வளர்த்தல், முட்கள்ளிமரங்களை நடுதல், மற்றும் தேனி வளர்த்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இவற்றுள் ஒரு பரீட்சார்த்தமாக காட்டு யானைகள் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அதிகம் ஊடுருவும் கிராமமான யானைகட்டியவெளி எனும் கிராமத்தில் அடிக்கடி யானைகள் வரும் இடத்தை மக்களுடாக அடையாளப்படுத்தி அப்குதியில் 500 மீற்றர் துாரத்திற்கு கேபிள் கம்பி பொருத்தி அதில் 20 மீற்றர் இடைவெளியில் துாண்கள் அமைத்து அதிலே சிறிய நிழல்பந்தலிட்டு, அவற்றினுள், தேன் கூட்டு பெட்டிகளைப் பொருத்தும் செயற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளது.

இந்த செயற்றிட்டதினுாடான இரண்டு விதமாக யானைகளைக் கட்டுப்படுத்தலாம். ஒன்று தேன் பூச்சுகளின் இங்... இங்... இங்... என்ற ஒரு வித இரைச்சல் யானைகளின் காதுகளுக்குப் பொருந்தாது இதனால் வரும் யானை திரும்பிச் செல்லும். இரண்டாவது யானை குறிப்பிட்ட 500 மீற்றர்துார இடைவெளியில் ஏதாவது ஒரு இடத்தினால் கடக்க முற்படும் வேளையில் யானையின் உடம்பு அந்த கேபிள்கம்பியில் பட்டவுடன் அனைத்து தேன்கூடுகளும் அசைந்து தேன்பூச்சுக்கள் யானைகளைத் தாக்கும். இதனால் யானை மிரண்டு திருப்பி ஓடிவிடும். இந்த இரண்டு செயற்பாடுகளினாலும் யானைகள் கிராமத்திற்குள் வருவது நிறுத்தப்படும். என நம்பப்படுகின்றன.

இச் செயற்றிட்டத்தினால் யானைகட்டியவெளி கிராமத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒரு அங்கத்தவர் வீதம் 20 நபர்களைத் தெரிவு செய்து குறித்த தேன் கூடுகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடத்தில் வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை சுத்தமான தேனையும் அவர்கள் அதிலிருந்து பெற்று அவர்கள் வருமானத்தையும் ஈட்டமுடியும். இதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு வழங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை திட்டமிட்டுள்ளது.

வ. சக்திவேல் 

Comments