பிரயோசனமில்லாத விவாதம்... சு.க தரப்புக்கு சாதகமாக இருக்குமாம்! | தினகரன் வாரமஞ்சரி

பிரயோசனமில்லாத விவாதம்... சு.க தரப்புக்கு சாதகமாக இருக்குமாம்!

இந்த வாரம் 6 ஆம் திகதி பிணை முறி மற்றும் பாரிய மோசடி தொடர்பான விவாதங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முதலில் 20, 21 ஆம் திகதிகளில் தான் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சிலர் திருடர்களை பாதுகாக்க முயல்வதாகவும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை நடத்துமாறும் ஜனாதிபதி சவால் விட்டிருந்தார். இதனையடுத்து 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் அறிவித்திருந்தார்.

ஆனால், 7 ஆம் திகதி நள்ளிரவு தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைவதால் 8 இல் விவாதம் நடத்துவது உகந்ததல்ல என தேர்தல் ஆணைக்குழு தலைவர் கூறியிருந்தார். இது பற்றி ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை கட்சித்தலைவர் கூட்டம் நடைபெற்றது. 8 ம் திகதிக்கு முன்னர் இருநாட்கள் விவாதம் நடத்த வேண்டும் என சுதந்திரக் கட்சி சார்பில் பங்கேற்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்க,ஜே.வி.பி பிரதிநிதி விஜித ஹேரத்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி மஹிந்த அணியின் தினேஷ் குணவர்தன ஆகியோர் கோரியிருந்தனராம்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டவாறு 20, 21 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த வேண்டும் என சபை முதல்வர் கிரியெல்ல குறிப்பிட்டாராம்.

அதற்கு முதல்நாள் நடந்த ஐ.தே.க கூட்டணி கட்சிகளின் (ஐ.தே.மு) கூட்டத்தில் தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்த கூடாது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.இந்த நிலைப்பாட்டையே கிரியெல்ல இங்கு முன்வைத்தார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக தேர்தல் ஆணையாளர், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 5,6 ஆகிய திகதிகளில் விவாதம் நடத்துவது உகந்ததல்ல என கூறியிருந்தார். கட்சித் தலைவர் கூட்டத்திற்கும் அழைக்கப்பட்டிருந்த அவர், 8 ஆம் திகதி விவாதம் நடத்தினால் ஊடகங்களினூடாக அதனை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். அதனால் 5, 6 இல் நடத்துவது குறித்து ஆராயுமாறு கோரினார்.

ஆனால், அமைச்சர்கள்.எம்.பிகள் பிரசார பணிகளில் உள்ளதால் அடுத்த வார முதற்பகுதியில் விவாதம் நடத்துவது சாத்தியமில்லை. 8 ஆம் திகதி விவாதம் நடத்துவதானால் தேர்தலை ஒத்திவைக்க ​நேரிடும் என கிரியெல்ல கூறினாராம் தேர்தலை பின்போடும் யோசனையை நிராகரித்த விஜித ​ஹேரத், 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதம் நடத்த வேண்டும் என்றார். இதனை ஆமோதித்த தினேஷ் குணவர்தன 8 ஆம் திகதிக்கு முன்னர் இரு தினங்களாவது விவாதம் நடத்த வேண்டும் என்றாராம்.

10 ஆம் திகதிக்கு முன்னர் உகந்த எந்த நாளில் விவாதம் நடத்துவதற்கும் நாம் தயார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார். மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டதால் கட்சித் தலைவர் கூட்டத்தில் விவாத திகதி முடிவாகவில்லை. பிரதமருடன் பேசி திகதி அறிவிப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார்.

பிரதமருடன் தொலைபேசியில் பேசிய சபாநாயகர் கூட்ட விபரங்களை விளக்கினாராம். இதனையடுத்து 6 ஆம் திகதி 10.00 மணி முதல் மாலை வரை நடத்த பிரதமர் விருப்பம் தெரிவித்தாராம்.

ஆனால், ஒருநாள் மட்டும் விவாதம் நடத்தும் முடிவை ஜனாதிபதி விரும்பவில்லை.இது பற்றி கடுமையாக விமர்சித்துள்ள அவர் இந்த விவாதத்தினால் எந்தப் பயனும் இல்லை என சாடியிருந்தார். இந்த விவாதம் சு.கவுக்கு சாதகமாக இருக்கும் என அவரின் தரப்பு நம்புவதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

ரவியை அகற்றும் நாடகம்?

ரவி கருணாநாயக்கவை கட்சி உபதலைவர் பதவியில் இருந்து அகற்றப் போவதாக கடந்த நாட்களில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால், தேர்தலுக்கான நாடகம் என மஹிந்த அணியும் சு.கவும் நம்புகின்றன.பிணை முறி விவகாரம் ஐ.தே.கவுக்கு பாதகமாக உள்ளதாக பரவலாக கூறப்படும் நிலையில் அவரை கட்சி உப தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தேர்தலின் பின்னர் நியமிக்க தயாராவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பி​ணை முறி விவாதம் நடத்தப்படும் தினத்தில் அவரை கைது செய்து 11 ஆம் திகதி விடுவிக்க திட்டம் உள்ளதாக பந்துல குணவர்தன எம்பி பகிரங்கமாக குற்றஞ் சுமத்தியிருந்தார். ஆனால் தன்னை பகடைக்காயாக வைத்து கட்சி காய் நகர்த்துவதாக ரவி கருணாநாயக்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கவலை தெரிவித்திருந்தாராம். உப தலைவர் பதவி பறிப்பு தேர்தலுக்கான நாடகம் எனவும் அவர் கூறியிருந்தாராம்.

இம்முறை உள்ளூராட்சித் ​தேர்தலில் ஜே.வி.பி வடக்கு கிழக்கிலும் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம் காத்தான்குடியில் நடைபெற்ற ஜே.வி.பி பிரசார கூட்டத்தில் கட்சித் தலைவர் அநுர குமார,சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள். சுனில் ஹந்துன்னெத்தி கூட்டத்தில் உரையாற்றுகையில் வேறு ஒலிபெருக்கிச் சத்தத்தினால் இடையூறாக இருந்தது. ஆராய்ந்ததில் பக்கத்தில் வெற்றிலைக் கட்சி கூட்ட ஒலிபெருக்கி இவர்களின் கூட்டமேடைக்கருகில் கட்டப்பட்டிருந் ததாம். இது பற்றி ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவித்திருந்தும் எதுவும் நடந்திருக்கவில்லையாம். இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸாரையும் அழைத்துச் சென்ற சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டு மீண்டும் கூட்டத்தில் பேசினாராம்.

காத்தான்குடி அரசியல் நிலை பற்றி ஜே.வி.பி வேட்பாளர்களுடன் கட்சித் தலைவர் பேசுகையில் அங்கு பலம்பெற்றுள்ள அரசியல் தலைவர் பற்றியும் பேசப்பட்டதாம். அவர் வெறும் 'ஹிஸ்' என நக்கலடித்த அநுரகுமார எம்.பி, சிங்களத்தில் ஹிஸ் என்றால் வெறுமை என கூறி சிரித்தாராம்.இவரின் அடாவடி பற்றி பாராளுமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக எச்சரித்தாராம் அவர்.

ஏறாவூரில் சிவப்பிற்கு திரண்ட கூட்டம்

ஜே.வி.பி பிரசார கூட்டங்கள் வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் நடந்தன. இங்கெல்லாம் கூட்டத்திற்கு முன்னர் மேடை அமைக்கப்பட்டிருக்கவில்லையாம். ஆனால் உடன் தயாராகும் மேடைகள் 12 நிமிடங்களில் ஜே.வி.பி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. மக்களை பிரமிக்க வைத்ததாம். ஜே.வி.பி தலைவரின் உரைக்கு இங்கு நல்ல வரவேற்பிருந்ததாம். அதனால் அவர் ஒன்றரை மணிநேரம் வரை பேசினாராம். மக்கள் ரசித்து கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல். பெரிய கூட்டம் திரண்டாலும் தேர்தல் முடிவில் வேறு கட்சிக்குத் தான் வாக்களிப்பார்கள் என்ற யதார்த்தத்தை பற்றி ஜே.வி.பி தலைவர்கள் தமக்கிடையில் பேசிக் கொண்டார்களாம்.

சிறுமியை மறக்காத நாட்டுத் தலைவர்

உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சித் தலைவர்களுக்கு ஓய்வின்றி பிரசாரகூட்டங்களில் பங்கேற்க நேரிட்டுள்ளது. இதன் போது, குடும்பம், உறவுகள் எல்லாம் மறந்திருக்கும். கடந்த வாரம் பதுளையில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி, கூட்டம் முடிந்த பின்னர் அவசர அவசரமாக வேறு பயணமொன்று செல்ல தயாரானார். வழமையாக நீண்ட கால கட்சி முக்கியஸ்தர்கள், தலைவர்களின் வீடுகளுக்கும் அவர் செல்வதுண்டு.

ஆனால் இம்முறை அவர், தான் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியொன்றை நிறைவேற்றவே சென்றார். பெரியவர்களுக்கு வழங்கும் வாக்குறுதியை கூட நிறைவேற்றாத இக்காலத்தில் சிறுமி ஒருத்திக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே அவர் சென்றிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் தன்னை சந்திக்க வந்த அமானி எனும் 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பதுளை வந்தால் வீடு வருவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

பெற்றோரை அழைத்துக் கொண்டு முன்அனுமதி எதுவும் இன்றி எதிர்பார்ப்போடு வந்து ஜனாதிபதியை சந்தித்திருந்த அமானி,பதுளை வந்தால் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து விட்டு தனது வீட்டுக்கு வருமாறு அவள் அன்புக் கட்டளை விடுத்திருந்தார்.

பிரசார கூட்டம் முடிந்து மாலை வேளை ,அமைச்சர் நிமல் சிறிபாலவுடன் அவளின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதியை அமானி வெற்றிலை கொடுத்து சிங்கள முறைப்படி வரவேற்றாள். ஜனாதிபதி வர இருப்பது முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் தனது நண்பிகள், உறவுக்கார சிறுமிகளுக்கும் அவள் அழைப்பு விடுத்திருந்தார்.

புன்முகத்துடன் ஜனாதிபதியை அமர வைத்து உங்களுக்கு பயணம் களைப்பாக இருந்ததா என்றெல்லாம் அவள் பிஞ்சுக் குரலில் கேட்க ஜனாதிபதிக்கு சிரிப்புத் தான் வந்தது.

சிறுவர்களுடன் அன்பாக உரையாடிய ஜனாதிபதி அவர்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடவும் தவறவில்லை. ஜனாதிபதிக்கு தனது பெயர் பொறித்த நினைவுச் சின்னமொன்றை வழங்கிய அமானி, அவரை வழியனுப்பி வைத்தாராம். கொழும்பு வந்தால் தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, மன நிறைவுடன் புறப்பட்டார்.

பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பாரிய கூட்டத்தை கண்டதை விட அன்பான சின்னஞ்சிறிசுகளுடன் குதூகலித்த அந்த 20 நிமிடங்கள் அவருக்கு மன நிறைவை தந்திருக்கும். 

Comments