பிணைமுறி | தினகரன் வாரமஞ்சரி

பிணைமுறி

தனஞ்சன்

இலங்கையில் அண்மைக் காலமாக மக்களின் மத்தியில் அடிக்கடி பேசப்படும் விடயமாக முறிமோசடி விவகாரம் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியவுடன் உடன் ஏறிய ஒருவாசகமாக திறைசேரி முறிகள் விநியோக விவகாரம் உள்ளது. முறிமோசடி விவகாரம் குறித்து அடிக்கடி சுலோகிக்கின்றவர்களும் சிலாகிக்கின்றவர்களும், முறி விநியோகம் என்றால் என்ன என்பது பற்றி போதிய தெளிவு இல்லாதவர்களாகவே இருக்கக் கூடும்.

முறிகள் விநியோகம் என்கின்றபோது, இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் நினைவில் வருவதுண்டு. எனினும், இந்தக் கட்டுரை முறி விநியோக மோசடியை தெளிவுபடுத்துவதாக அல்லாமல் முறிவிநியோகத்தை தெளிவுபடுத்தும் ஒரு முயற்சியாக எழுதப்படுகிறது.

ஒரு குடும்பமோ ஒரு நிறுவனமோ அல்லது ஓர் அரசாங்கமோ இயங்குவதற்குப் பணம் அத்தியாவசியமான ஒரு காரணியாக உள்ளது. சமூகத்தின் இந்த அனைத்து நிறுவனங்களும் நிதியை எவ்வளவு அத்தியாவசிய காரணியாக கொண்டுள்ளதோ, அந்த அளவிற்கு, நிதிக்கான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் நிலைகள் உருவாவதுண்டு. இதன்போது சமூகத்தின் அனைத்து நிலை நிறுவனங்களுக்கும் ஏதேனும் ஒரு வழிமுறையை கையாள்வது இயற்கையான ஒரு விடயமாகும்.

ஓர் அரசாங்கத்தை நடத்த பொது நிதி அத்தியாவசியமானது. இதற்காக அரசாங்கம் வரிகளை அறவீடு செய்கின்றது. சிலவேளைகளில் அரசாங்கம் முன்னெடுக்கின்ற பொதுத் திட்டங்களுக்கும் அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கும் போதுமான நிதி இல்லாத ஒரு சூழல் ஏற்படும் வாய்ப்புகள் நிச்சயம் ஏற்படுவதுண்டு. இந்த நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அரசாங்கம் சில வழிமுறைகளைக் கையாளவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

இதன்போது ஓர் அரசாங்கம் மக்களிடம் அறவிடும் வரிகளை அதிகரித்தல் அல்லது புதிய வரிகளை அறிமுகம் செய்தல், பணம் அச்சிடல் மற்றும் கடன் பெறுதல் ஆகிய மூன்று வழிமுறைகளை கையாள வேண்டிய நிலை உருவாகின்றது. வரிகளை அதிகரித்தல் அல்லது புதிய வரிகளை அறிமுகம் செய்தல் என்பது அந்த அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கும் இருப்பிற்குமான சவாலை உருவாக்கிவிடக் கூடும். எனவே அரசுகள் அவ்வாறான வழிமுறைகளைத் தவிர்த்து விடுகின்றன.

பணம் அச்சிட்டு வெளியிடுதல் என்பது நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு வழிமுறையாகும். பணம் அச்சிடுவதன் மூலம் நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிக்கு முகம் கொடுக்கும். எனவே, ஓர் அரசாங்கம் தாம் முகம் கொடுத்துள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்குக் கடன் பெற்றுக்கொள்வதே சிறந்த வழிமுறையாக அமையும். அவ்வாறு உள்நாட்டில் இருந்தோ வெளிநாட்டில் இருந்தோ கடன் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறை திறைசேரி முறி விநியோகம் அல்லது திறைசேரி உண்டியல் விநியோகம் என்று சொல்லலாம். அதாவது, ஒரு நாட்டை நடத்துவதற்கு தேவைப்படுகின்ற நிதியை அரச உடமைகளின் ஆவணங்களைப் பணயமாக வைத்துக் கடன் பெற்றுக்கொள்ளப்படும்.

அரசாங்கம் ஒன்று கடன் பெற்றுக்கொள்வது என்பது பண்டைய மெசபத்தேமிய நாகரிக காலப்பகுதியில் இருந்து பின்பற்றப்பட்டு வந்தமைக்கான சான்றாதாரங்கள் உள்ளன. கி.மு. 2400 வருடங்களுக்கு முன்னர் மொசபத்தேமிய அரசாங்கம் ஒன்று கடன் பெறுவதாகவும், அதற்கான வட்டியை செலுத்துவதாகவும் அந்த வட்டிக் கொடுப்பனவு தவணையொன்று தவறும் பட்சத்தில் முழுப் பணமும் மீள செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட கல்வெட்டொன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி 1100 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெனிசிய அரசாங்கம் யுத்தத்தைக் கொண்டு நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர நவீன அரசியல் கலாசாரத்தின் எழுச்சிகளுடன் பிரான்சுக்கு எதிரான போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து யுத்தத்திற்கான நிதிப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய, பிரித்தானிய மத்திய வங்கி ஊடாக முறி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக 1997 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஊடாக கடன் பெறப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் பெறப்படுகின்ற கடன்களை பொதுவாகத் திறைசேரி உண்டியல் (ட்ரெசரி பில்ஸ்) மற்றும் திறைசேரி முறிகள் (ட்ரெசரி பொன்ட்) என இருவகைப்படுகின்றன.

திறைசேரி உண்டியல் (ட்ரசரி பில்) என்பது அரசாங்கம் குறுகிய கால அடிப்படையில் கடன்களைப் பெறுவதாகும். அரசாங்கத்திற்கு அவசர நிதித் தேவைகள் ஏற்படுகின்றபோது, 3, 6, 9 மாதகால அடிப்படையில் ஒருவருடத்திற்கு உட்பட்ட வகையில் இந்தக் கடன்கள் பெறப்படுகின்றன.

இவ்வாறு அல்லாமல் நீண்டகால கடன் அடிப்படையில் பெறப்படுவதே திறைசேரி முறிகள் விநியோகம் (ட்ரசரி பொன்ட்) என அழைக்கப்படுகின்றது. இதனை ஒரு வருடத்திற்கு அவசியப்படுகின்ற கால எல்லையின் அடிப்படையில் கடன் காலத்தை நிர்ணயிக்க முடியும். அரசாங்கத்திற்கு நிதித் தேவவை ஏற்படுகின்றபோது, அந்த நிதியைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் மத்தியவங்கியிடம் உள்ளது. இந்தக் கடன்கள் ஏல விற்பனையின் அடிப்படையில் பெறப்படும்.

இதற்காகச் சில நடைமுறைகள் காணப்படுகின்றன. மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களத்தின் ஊடாக முறிவிநியோக ஏலவிற்பனை குறித்து பத்திரிகையின் ஊடாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவேனும் கேள்வி மனுக்கான அறிவித்தல் விடுக்கப்படும்.

இதற்கு இலங்கையில் செயற்படும் 16 முதற்தர வணிக நிறுவனங்கள் தமது விலைமனுக்களை சமர்ப்பிக்கும். (இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைக்கும் முறிகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மேற்கூறிய 16 முதற்தர வணிக நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்ய வேண்டும்.)

நிதித் தரகர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விலை மனுக்கள் மத்திய வங்கியினால் இலத்திரனியல் தொழிநுட்பத்தின் உதவியுடன் கடன் தரப்படுத்தல் செய்யப்படும். அந்த முறிகள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிறுவனங்கள் தெரிவுசெய்யப்படுகின்றது.

அவ்வாறு தெரிவுசெய்யப்படுகின்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறப்படுகின்றது. இந்த கடனுக்கான வட்டி வீதம் ஒன்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட வட்டி வீதம் ஆறு மாதங்களுக்கு அல்லது 1வருடத்துக்கு ஒரு தடவை என செலுத்தப்படும். இதனை ஆங்கிலத்தில் கூப்பன் ரேட் என அழைப்பர்.

இதற்கான நடைமுறையை மேலும் எளிமையாக தெளிவுபடுத்துவதானால், 3 வருடத்தில் மீள செலுத்தும் வகையில் 10 சதவீத வட்டிக்கு, ஆயிரம் ரூபாய் உங்கள் வியாபார நிறுவனத்திற்கு கடன் கோருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

உங்களது ஆயிரம் ரூபாய் என்ற கடன் தொகை பத்து பங்குகளாக பிரித்து, அந்த பங்கு ஒன்றின் பெறுமதியை(முக பெறுமதி (Face Value) நூறு ரூபாய் என்று கொள்வோம்.

இந்தப்பங்குகளைக் கொள்வனவு செய்வதன் மூலம், கடன் வழங்க முன்வருகின்றவர்களை ஏ பி சி டி என வைத்துக்கொள்வோம்.

இவர்கள் நான்கு பேரும் தம்மால் கொள்வனவு செய்ய முடிந்த பங்குகளையும், அந்த பங்கிற்கு தமக்குத் தேவையான வட்டி வீதத்தையும் கூற வேண்டும்.

அவ்வாறு கூறப்படுகின்ற வட்டி வீதமானது முகப்பெறுமதியான 100 ரூபாயில் இருந்து கழிக்கப்படும்.

அதாவது ஏ என்பவர் ஒரு முகப்பெறுமதிக்கான வட்டி 5 வீதம் என கோருவாராயின், அவர் கோரிய பங்கொன்றின் பெறுமதியான 100 ரூபாவில் இருந்து ஐந்து ரூபாவை கழித்து அந்த பங்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, பி என்பவர் தாம் கொள்வனவு செய்கின்ற பங்குகளுக்கான வட்டியை 4 சதவீதம் என கோருவாராயின், அவருக்கான பங்கொன்றின் முகப்பெறுமதி 4 ரூபாவால் குறைவடையும்.

இதனை ஒரு அட்டவனையில் காண்போம்.

நபர் / கொள்வனவு பங்கு/(100ரூபாய்) / வட்டி வீதம் / முகப் பெறுமதி (ரூ)

ஏ 5 3% 97

பீ 4 4% 96

சீ 5 5% 95

டீ 1 2% 98

இந்த அட்டவனையின் பிரகாரம் ஏ என்பவரிடம் இருந்து பங்கு விற்பதன் மூலம் நீங்கள் ஒரு பங்கிற்கு 97 ரூபாய் பெற்றுக்கொள்ள முடிவதுடன், வருடாந்தம் குறைந்த வட்டியான 3 சதவீத வட்டியையே வழங்க வேண்டியிருக்கும்.

பி என்பவருக்கு பங்கொன்றை விற்பதன் மூலம் நீங்கள் ஒரு பங்கிற்கு 96 ரூபாய் பெற்றுக்கொள்ள முடிவதுடன் வருடாந்தம் 4 சதவீத வட்டியை செலுத்த வேண்டியிருக்கும்.

இதேவேளை சீ என்பவருக்கு 95 ரூபாய்க்கு பங்கை விற்பனை செய்வதுடன் வருடாந்தம் 5 சதவீத வட்டியும், டி என்பவருக்கு வருடாந்தம் 2 சதவீத வட்டியும் செலுத்த நேரிடும்.

எனவே இந்த நால்வரில் உங்களுக்கு சாதகமானவர்களுக்கு பங்குகளை விற்பனை செய்வீர்கள்.

அதாவது மேற்கூறிய நால்வரில் சீ யைத் தவிர்த்து ஏனைய மூன்று பேருக்கு உங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்து உங்களுக்குத் தேவையான பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

சீ யிடம் நீங்கள் பணத்தைப் பெற்றால் உங்களுக்குத் தேவையான கடன் தொகையை முடிந்தவரை பூர்த்திசெய்ய முடியாது. அதே​ேவளை, ஐந்து சதவீத அதிக வட்டியும் முதலை மீள செலுத்தும்போது, ஐந்து ரூபாய் என்ற மேலதிக தொகையையும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பெறப்படுகின்ற கடனுக்கு நீங்கள் அவரவரது வட்டி வீதங்களின் அடிப்படையில் வருடாந்த அடிப்படையில் வட்டியைச் செலுத்த வேண்டும். அதேவேளை, நீங்கள் பகிர்ந்தளிக்கின்ற பங்குகளுக்கான முகப் பெறுமதியை அவர்களுக்கு மீளச் செலுத்த வேண்டும். அதாவது ஏ என்பவரிடம் இருந்து பெற்ற 97 ரூபாய் கடனை நீங்கள் 100 ரூபாயாக மீளச் செலுத்த வேண்டும். இது போன்ற ஒரு நடைமுறை ஒன்றே மத்திய வங்கியின் முறி விநியோகத்தின் ஊடாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

Comments