காதலருடன் திருமணமா - நடிகை ஸ்ரேயா விளக்கம்? | தினகரன் வாரமஞ்சரி

காதலருடன் திருமணமா - நடிகை ஸ்ரேயா விளக்கம்?

ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து நடிகை ஸ்ரேயா விளக்கம் அளித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. 'எனக்கு 20 உனக்கு 18' என்ற தமிழ் பட த்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், விஷால், தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. பாலகிருஷ்ணாவுடன் நடித்த கவுதமி புத்ர சாதகர்னி சரித்திர படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்தது.

தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நானே படேகருடன் தட்கா என்ற இந்தி படத்திலும், வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் அவசரப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் அடுத்த மாதம் (மார்ச்) இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் ஸ்ரேயா ரஷ்யா சென்று காதலரின் பெற்றோர்களை சந்தித்து திரும்பியதாகவும், இரு வீட்டு பெற்றோர்களும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் அவர்களது திருமணத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரேயா, அவரது உறவினருக்கு ராஜஸ்தானில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதில் தான் பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தனக்கு திருமணம் என வெளியான தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.